Monday, March 27, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்திவாலான அமைப்பிற்கு தேர்தல் ஒரு கேடா ?

திவாலான அமைப்பிற்கு தேர்தல் ஒரு கேடா ?

-

தோற்றுப்போனது அரசுக் கட்டமைவு! தேர்தல்கள் தீர்வைத் தராது!

மிழக மக்கள் முன் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க., மக்கள் நலக் கூட்டணி என நீளும் பட்டியலில் எந்தவொரு கட்சியும் மக்களின் முழுநம்பிக்கைக்குரியதாக, மாற்று எனக் கூறுவதற்குத் தகுதியுடையதாக இல்லையென்றாலும், அக்கட்சிகளுக்குள்ளேயே நல்லக்கண்ணு போன்ற நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தோ, அல்லது போட்டியிடும் வேட்பாளர்களிலேயே படித்தவர்களாக, செயல்துடிப்புமிக்கவர்களாக, சாதி, மதம், பணத்திற்கு மயங்காதவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்து அனுப்பினால், அரசு நிர்வாகத்தை ஊழலற்றதாக, மக்களுக்குச் சேவை செய்யக்கூடியதாக மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையை முதலாளித்துவ அறிவுத்துறையினர் விதைத்து வருகின்றனர். ஓட்டுக் கட்சிகள் சீரழிந்து போய்விட்டன; அதிகாரிகள் மட்டத்திலும் ஊழல் மலிந்துவிட்டது. ஆனாலும், இந்த அரசுக் கட்டமைப்பைத் தேர்தல்கள் மூலமும், லோக்பால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற சட்ட சீர்திருத்தங்களின் மூலமும் சீர்படுத்திவிட முடியும். இதைத்தவிர வேறு மாற்று இல்லை என அவர்கள் வாதிடுகின்றனர்.

வாக்களிப்பு ஊர்வலம்
100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை முன்னிறுத்தி தேர்தல் கமிசன் தமிழகமெங்கும் நடத்திவரும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஊர்வலம்

அவ்வாறு சீர்படுத்திவிடக் கூடிய நிலையில் இந்த அரசுக் கட்டமைப்பு இருக்கிறதா அல்லது அரசும் அதன் உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது எதிர்நிலை சக்திகளாக மாறி, நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத சுமையாகிப் போய்விட்டதா என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக ஆட்சியாளர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் உரியது. அக்கடமைகளை நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்துதான், ஓட்டுக்கட்சிகள் தேர்தல்களில் வென்று, அதிகாரத்தில் அமர்கின்றன. அதிகார வர்க்கமும் அக்கடமைகளை நிறைவேற்றும் பொருட்டுதான் நியமிக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் தொடங்கி கிராம நிர்வாக அலுவலர் வரையிலான அதிகார வர்க்கத்திற்கும் போலீசிற்கும் நீதிபதிகளுக்கும் இக்கடமையை நிறைவேற்றத்தான் அதிகாரமும் சம்பளமும் சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கற்கள் விற்பனையில் நாம் காண்பதென்ன? வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் கொள்ளை! அதற்குத் தலைமைச் செயலர் தொடங்கி தலையாரி வரை, முதலமைச்சர் தொடங்கி உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் வரை அதிகாரவர்க்கமும் ஆட்சியாளர்களும் துணை நிற்பதையும்; இக்கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறு கோரியவர்கள் கொல்லப்பட்டதையும் சிறையில் அடைக்கப்பட்டதையும்; கிரானைட் கொள்ளையை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் மிரட்டப்பட்டதையும், அவர் சுடுகாட்டில் படுத்துக் கிடந்த அவலத்தையும் தமிழகம் மட்டுமல்ல, நாடே பார்த்தது.

கிரானைட் கொள்ளை சாட்சி
கிரானைட் கொள்ளையின் சாட்சி : சிதைந்து போன நிலையில் காணப்படும் மதுரை மாவட்டம், மேலூர் மாவட்டத்திலுள்ள சர்க்கரை மலை.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தாது மணல் கொள்ளை பற்றி விசாரித்த ககன்சிங் தீப் பேடியின் அறிக்கையை வெளியிடாமல் முடக்கி வைத்திருப்பதன் மூலமும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி மாவட்டங்களில் நடந்த அக்கொள்ளை பற்றிய அறிக்கையை பேடியிடமிருந்து பெற்றுக் கொள்ளாமல், சதித்தனமான முறையில் கிடப்பில் போட்டு வைத்திருப்பதன் மூலமும், அவ்விசாரணைகளைப் பொருளற்றதாக்கிவிட்டது, அ.தி.மு.க. அரசு.

சென்னை உயர்நீதி மன்றமோ அந்நான்கு மாவட்ட அறிக்கையை வெளியிடக் கூடாதென்று வைகுண்டராஜனுக்குச் சாதகமாக முதலில் உத்தரவிட்டது. அதன் பின்னர், ககன்சிங் தீப் பேடியின் விசாரணைக்கு எதிராக வைகுண்டராஜன் தொடுத்த வழக்கில் அவரது விசாரணையை ரத்து செய்துவிட்டு, நீதிபதி குமாரசாமியை ஒத்த வேறொரு அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்து, நீதி கிடைக்கும் என நம்பியிருந்தவர்களின் முதுகில் குத்தியும்விட்டது.

கிரானைட் கொள்ளையிலும் நீதி இதே போலத்தான் வளைக்கப்படுகிறது. தமிழகமெங்கும் நடந்துள்ள கிரானைட் கொள்ளை பற்றி விசாரிக்குமாறு முதலில்உத்தரவிட்ட உயர்நீதி மன்றம், அந்த உத்தரவின் மை காய்வதற்குள்ளாகவே, ‘புத்தி தெளிந்து அவ்விசாரணையை மதுரை மாவட்டத்தோடு சுருக்கிக் கொண்டது.

வைகுண்டராஜன் ஆர்ப்பாட்டம்
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தூத்துக்குடியில் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

மதுரை மாவட்டத்தில் மட்டும் கிரானைட் கொள்ளையால் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சகாயம் குழு, இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறது. சகாயம் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திடம் அளித்து நான்கு மாதங்கள் ஓடிவிட்ட பிறகும் நீதியரசர்களின் நெற்றிக் கண் திறக்கவில்லை. சகாயத்தின் பரிந்துரை பற்றி கருத்துக் கூறுமாறு தமிழக அரசிடம் நீதிமன்றம் கேட்க, தமிழக அரசோ ஒவ்வொரு வாய்தாவின் போதும் கூடுதல் அவகாசம் கேட்க, நீதிமன்றமும் அதற்குத் தலையாட்டி வர, இப்படியாக இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு சென்னை உயர்நீதி மன்றமும் அ.தி.மு.க. அரசும் கண்ணாமூச்சி ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே, மேலூர் மாஜிஸ்டிரேட் மகேந்திர பூபதி, பி.ஆர். பழனிச்சாமியின் மீது தொடுக்கப்பட்டிருந்த 98 வழக்குகளில் மூன்று வழக்குகளை மட்டும் தனியாகப் பிரித்து, அதில் அவர் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளித்திருக்கிறார். மேலும், பி.ஆர்.பி. மீது வழக்கு தொடுத்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நீதிமன்றத்திடம் பொய் சொல்லிவிட்டதாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடுக்க பரிந்துரை செய்திருக்கிறார். இந்த நீதிபதி இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டார். ஆனால், இவரைப் போல இல்லாமல், பி.ஆர்.பி.க்கும் வைகுண்டராசனுக்கும் சாதகமாக நைச்சியமான முறையில் தீர்ப்பளித்துள்ள உயர்நீதி மன்ற நீதிபதிகள் பதவியில் நீடிக்கிறார்கள்.

கிரானைட் கொள்ளை குறித்த விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றம் தலையிட்டவுடன், குற்றவாளிகள் இனி தப்ப முடியாது என உருவேற்றப்பட்டதெல்லாம் மெல்லமெல்ல நொறுங்கி விழுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன. அதேபொழுதில், கெயில் குழாய் பதிப்பு வழக்கிலோ சாமானிய விவசாயிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளிக்கின்றன. வைகுண்டராஜனும், பி.ஆர்.பழனிச்சாமியும் சட்டவிரோதமான முறையில், குண்டர்களை ஏவி விவசாயிகளின் நிலங்களை அபகரித்துக் கொள்கிறார்கள் என்றால், நீதிமன்றங்கள் சட்டபூர்வமாக, போலீசை ஏவி, விவசாய நிலங்களை அபகரித்துக் கொள்கின்றன. சாமானிய மக்களின் உரிமைகளை, வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு கொண்டதாகக் கூறப்படும் நீதித்துறை, அதற்கு எதிராகத் திரும்பிவிட்டதை இத்தீர்ப்பு வெளிப்படுத்திக் காட்டுகிறது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்
கிரானைட் கொள்ளையை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சுடுகாட்டில் படுக்க வைக்கப்பட்ட அவலம் : அரசு மக்களுக்கு எதிராகத் திரும்பி விட்டதற்கான சான்று.

சாமானிய மக்களின் சொத்துரிமை மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனம் உத்தரவாதப்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் சட்டபூர்வமாக அரசாலும், நீதிமன்றத்தாலும் முற்றிலுமாகப் பறிக்கப்படுகின்றன; அல்லது வெட்டப்பட்டு ஊனமாக்கப்படுகின்றன.

தரம் வாய்ந்த, அனைவருக்கும் பொதுவான இலவசக் கல்வி வழங்கும் தனது கடமையைப் படிப்படியாகக் கைகழுவி வரும் அரசு, இன்னொருபுறத்தில் தனியார் கல்வி வியாபாரிகள் கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களைக் கொள்ளையடிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏஜெண்டாகவும், அக்கும்பலின் அனைத்து கிரிமினல்தனங்களுக்கும் – உரிமம் பெறாமலேயே கல்லூரிகளை நடத்துவது, கட்டுமான வசதிகளைச் செய்து தராமல் மாணவர்களை ஏமாற்றுவது உள்ளிட்டவை – பாதுகாப்பு கொடுக்கும் அடியாள் படையாகவும் மாறி நிற்கிறது. கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் சாவு தொடங்கி கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் கொல்லப்பட்டது வரையில் அரசு-கல்வி வியாபாரிகளின் கூட்டுக் களவாணித்தனத்திற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

அரசு மருத்துவமனைகளில்கூட காப்பீடு திட்டத்தைப் புகுத்தியிருப்பதன் மூலம் பொது மக்களுக்கு இலவச மருத்துவ சேவை அளிப்பதைக் கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும் மருத்துவ சேவையையும் இலாப நோக்கம் கொண்டதாக மாற்றியமைத்திருக்கிறது, அரசு. மருத்துவக் காப்பீடு திட்டம் என்ற போர்வையில் காப்பீடு நிறுவனங்களும், தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் கொழுப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை, உரிய சிகிச்சை அளிக்காமல் நோயாளிகளைச் சாகடிப்பது உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களை மூடிமறைக்கும் கையாளாக அரசு இருப்பதை சென்னை மியாட் மருத்துவமனையில் நடந்த சாவுகள் அம்பலப்படுத்தின.

பொதுமக்களுக்குக் குடிநீரைக்கூடக் கட்டணமில்லாமல் வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. தரமான சேவை கிடைக்க வேண்டுமென்றால், அதற்குரிய கட்டணத்தைப் பொதுமக்கள் வழங்க வேண்டும் எனக் கூறி, அரசு வழங்க கடமைப்பட்டுள்ள அனைத்து சேவைகளையும் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளாக மாற்றிவிட்டனர். கட்டணத்திற்கு மேல் ஒவ்வொரு சேவையின் மீதும் சேவை வரி விதித்து, அரசு வழிப்பறி கொள்ளைக்காரனாக உருமாறி நிற்கிறது.

நியூட்ரினோ திட்டம்
தமிழகத்தின் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்ய முடியாது, சங்கம் அமைக்கும் உரிமை கிடையாது என்றவாறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களாகத் திருத்தப்படுகின்றன. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தொழிலாளர் நலத் துறை, அதன் எதிர்நிலையாக, கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலித் துறையாக மாறி நிற்கிறது.

விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து தனியார் மற்றும் பொதுத்துறை கார்ப்பரேட் நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பலும் அபகரித்துக் கொள்வதற்கு ஏற்றவாறு புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை உருவாக்கி, விவசாயிகளுக்கு எதிரானதாக அரசு உருவெடுத்திருக்கிறது.

பிரதம மந்திரியும், மாநில முதலமைச்சர்களும், காபினெட் அமைச்சர்களும் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் பிரதிநிதிகளாக நடந்து கொள்வதில்லை. மாறாக, அவர்கள் அனைவருமே ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியத் தரகு முதலாளிகள் ஆகியோரின் விருப்பத்தையும் நலன்களையும் நிறைவேற்றிக் கொடுக்கும் ஏஜெண்டாக மாறிவிட்டனர். இந்தக் கைக்கூலித்தனத்தை மறைப்பதற்கு வளர்ச்சி, நல்ல நிர்வாகம் என்ற முகமூடிகளை அணிந்து கொள்கின்றனர்.

அரசு இயந்திரம் ஊழல் மற்றும் கிரிமினல்மயமாகியிருப்பது மட்டுமல்ல, அதனின் பொருளாதாரக் கொள்கையே ஊழல்மயமாகிவிட்டதுதான் தனியார்மய காலத்தின் தனிச்சிறப்பு. எடுத்துக்காட்டாகச் சொன்னால், ஒரு லிட்டர் அம்மா குடிநீர் பாட்டிலைப் பொதுமக்கள் பத்து ரூபாய் கொடுத்து வாங்கும்பொழுது, கோக் நிறுவனம் ஒரு லிட்டர் தாமிரபரணி ஆற்று நீரை மிகச் சல்லிசாக சில்லறை காசுகளுக்கு வாங்கி வரு கிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் நட்டத்தை யாரும் ஊழல் என்று கூறுவது கிடையாது. மாறாக, அதனைத் தொழிற்கொள்கை என்று கௌரவமாக அழைக்கிறார்கள்.

இப்படித்தான் நிலக்கரி, இரும்புத் தாது, அலைக்கற்றை, தாது மணல், கிரானைட் உள்ளிட்ட இயற்கை வளங்களை அரசு அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்த்து வருகிறது. வரிச் சலுகை, வரி விலக்கு என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான அரசின் வரிப் பணம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மொய்யாக எழுதப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட கடன்களை, வாராக் கடன் பட்டியலில் சேர்த்து வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன. விரைவுச் சாலைகளில் சுங்க வரி என்ற பெயரில் வழிப்பறியை கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.

அரசு மற்றும் சட்டத்தின் துணையோடு கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திவரும் இந்தப் பகற்கொள்ளை, தாலுகா ஆபீசில் புழங்கும் இலஞ்சத்தைவிட அபாய கரமானது. இயற்கை வளங்களை, அரசின் வரி வருவாயைச் சூறையாட கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கும் அரசு அதிகாரிகளும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் அதற்குப் பிரதிபலனாக வீசியெறியப்படும் எலும்புத் துண்டைக் கவ்விக் கொள்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் பின்னதற்கு எதிராக மட்டும் கூச்சல் போட்டுவிட்டு, முன்னதைத் தப்ப வைப்பதுதான் நடந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அம்பானி தொடங்கி பி.ஆர்.பி. வரை பல நூறு திடீர் கோடீசுவரர்கள் உருவாகியிருப்பதற்கு, நாம் மேலே குறிப்பிட்டுள்ள கார்ப்பரேட் பகற்கொள்ளைதான்- அதாவது, பொதுச் சொத்துக்களைச் சட்டபூர்வமாகச் சூறையாடுவதுதான் அடிப்படையாக அமைகிறது. டாடா, அம்பானி போன்ற பழைய வகைப்பட்ட தரகு முதலாளிகள், பி.ஆர்.பி., வைகுண்டராசன், ரெட்டி சகோதரர்கள் போன்ற மாஃபியா வகைப்பட்ட புதுத் தரகு முதலாளிகளின் கொள்ளைக்குச் சட்டபூர்வமாக ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் இப்பொழுது அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கத்தின் கடமையாகிவிட்டது.

இது என்ன மாமாப்பயல் வேலை என நீங்கள் முகம் சுளிக்காலம். ஆனால், இப்படி ஏற்பாடு செய்து கொடுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள்தான் வளர்ச்சி நாயகனாக பட்டம் சூட்டப்படுகிறார்கள். டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி கொடுப்பது தொடங்கி சகல வேலைகளையும் கண் இமைக்கும் நேரத்தில் செய்து கொடுத்த பிறகுதான் கொலைகாரன் மோடி, வளர்ச்சி நாயகன் ஆனார்; பின்னர் இந்தியப் பிரதமராகவும் முடிசூட்டப்பட்டார்.

போலி கம்யூனிஸ்டுகள் உள்ளட்டு, அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இந்த கார்ப்பரேட் கொள்ளையர்களோடு நெருக்கமாகவோ மறைமுகமாகவோ உறவு வைத்திருக்கிறார்கள். பி.ஆர்.பி.யிடம், வைகுண்டராஜனிடம் காசு வாங்காத கட்சிகள் ஒன்று உண்டா? எனச் சவால் விடுகிறார், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான். எனவே, கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் ஓட்டுக்கட்சிகளின் ஊழல் ஒழிப்பு பல்லவி ஒருவிதத்தில் மோசடியானது, இன்னொரு விதத்தில் சாத்தியமற்றது.

ஊழல் ஒழிப்பு மட்டுமல்ல; தமிழக மக்கள் எதிர்கொண்டுள்ள எந்தவொரு பிரச்சினையையும் – காவிரி, முல்லை பெரியாறு, மீனவர்கள் தாக்கப்படுவது, கூடங்குளம் அணு உலை, நியுட்ரினோ திட்டம், மீத்தேன் மற்றும் பாறை எரிவாயு திட்டம் – ஓட்டுக்கட்சிகளால் தீர்த்துவிட முடியாது. இப்பிரச்சினைகள் குறித்து வாய்ப்பந்தல் போடுவதைத் தாண்டி, இவற்றைத் தீர்ப்பதற்கு ஓட்டுக்கட்சிகளிடம் மாற்று வழிகள் கிடையாது.

நீதிமன்றத்திடம் மனு போட்டோ, மைய அரசிற்குக் கடிதம் எழுதியோ இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பது ஏற்கெனவே நிரூபணமாகிவிட்டது. நீதிமன்றங்களும் அரசுகளும் ஒன்று இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் முட்டுச்சந்துக்குள் சிக்கிக் கொண்டுள்ளன அல்லது மக்களுக்கு எதிராகத் திரும்புகின்றன. மேலும், 1989-ஆம் ஆண்டு தொடங்கி தமிழகத்தில் நடந்து முடிந்த ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு, பிரதான எதிர்க்கட்சியிடம் ஆளும் உரிமை அளிக்கப்படுவது தவறாது நடந்து வந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் நடந்திராத மாற்றங்கள், இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியைத் தோற்கடித்து, அதனிடத்தில் வேறொரு கட்சியிடம் அல்லது கூட்டணியிடம் அதிகாரத்தை அளிப் பதன் மூலம் நடந்துவிடும் என நம்புவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. எப்பேர்பட்ட நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினாலும் மக்களுக்கு எதிராக மாறிவிட்ட இந்த அரசமைப்பைச் சீர்திருத்திவிடவும் முடியாது என்ற நிலையில் வேறு மாற்றுக் களைத்தான் நாம் தேட வேண்டியிருக்கிறது.

தோற்றுப் போய்விட்ட, மக்களுக்கு எதிராகத் திரும்பிவிட்ட இந்த அரசுக் கட்டமைவைத் தூக்கியெறிந்துவிட்டு, அதனிடத்தில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவதுதான், அம்மாற்று. தேர்தல்கள், ஓட்டு குறித்து தொடர்ந்து உருவாக்கப்படும் பிரமைகளையும், அவற்றின் மீதான குருட்டு நம்பிக்கைகளையும் புறந்தள்ளுவதும், கைவிடுவதும்தான் மக்கள் அதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான முதல் படியாகும்.

– குப்பன்
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க