Monday, March 27, 2023
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் - பாகம் 3

தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் 3

-

7. திருச்சி (செய்தி, படங்கள்)

மே -1 2016 தொழிலாளர் தினத்தன்று திருச்சியில் புதிய ஐனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தோழமை அரங்குகளுடன் இணைந்து பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மூன்று நாள் தொடர் போராட்டத்துக்கு பின் பேரணிக்கு அனுமதி கொடுத்த திருச்சி காவல்துறை பேரணி துவங்கும் போது, “பேரணியில் முழக்கம் போடுவதற்கு மைக் செட் பயன்படுத்தக் கூடாது வெறும் வாயில் முழக்கம் போட்டுக்கொள்ளுங்கள்” என அடாவடித்தனம் செய்தது. தோழர்களின் விடாபடியான போராட்டத்தால் காவல்துறை பின் வாங்கியது.

விண்ணதிரும் முழக்கங்களோடு திருச்சி மரக்கடையில் பேரணி துவங்கியது. தஞ்சை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் இராவணன் பேரணிக்கு தலைமையேற்று மே நாளின் மகத்துவத்தைப் பற்றியும் மே நாள் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி அவர்கள் வென்றெடுத்த உரிமைகளை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்கு ஒப்படைப்பது நமது கடமை எனவும் பேசி பேரணியை துவக்கி வைத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பேரணியின் முன்வரிசையில் பறையோசை முழங்க, தலைவர்களும் வழக்குரைஞர்களும் நடைபோட, அதன் பின்னால் அறுவாள் சுத்தியலை ஆணும் பெண்ணும் ஏந்தியபடி செல்ல, பாட்டளிவர்க்க ராணுவத்தின் மிடுக்கு நடையுடன் செஞ்சட்டை அணிந்த வீரர்கள் செல்ல, அவர்ளின் அடியொற்றி பெருந்திரள் தொழிலாளி வர்க்கமும் தோழமை அமைப்புகளின் தோழர்களும் செல்ல சாலையின் இருபுறமும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேரணி அமைந்தது. இறுதியில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் பேரணி முடிவுற்று ஆர்ப்பாட்டம் துவங்கியது.

செங்கொடியும் முழக்கப் பதாகைகளும் முன்வரிசையில் நிற்க்க பறையோசையுடன் கூடிய விண்ணை முட்டும் முழக்கங்களுடன் துவங்கியது ஆர்ப்பாட்டம்.

தோழர் சுந்தரராசு
தோழர் சுந்தரராசு `

பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் சுந்தரராசு அவர்கள் தலைமையேற்று,

“தொழிலாளி வர்க்கம் உதிரம் சிந்தி பெற்றெடுத்த 8 மணி நேர வேலை நாள் என்பது முதலாளிகளின் லாப வெறிக்கு போதவில்லை என்பதால் இப்போதெல்லாம் 15, 16 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறான் தொழிலாளி. வேலை செய்ய மறுத்தால் வேலையை பறித்து தொழிலாளியை பட்டினிபோட்டு கொலை செய்கிறான் முதலாளி. பணி நிரந்தரம் இல்லை. எதிலும் காண்ட்ராக்ட் மயம் தினிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்கு முடிவுகட்ட பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரள்வதுதான் ஒரே தீர்வு” என உரையாற்றினார்.

தோழர் ஜீவா
தோழர் ஜீவா

திருச்சி ம.க.இ.க. மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா பேசுகையில்,

“மே தினம் என்பது ஓய்வு நாள் அல்ல அஜீத்தின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காகவோ அல்ல. தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் சுரண்டலுக்கு முடிவு கட்டியநாள். 8 மணி நேர வேலை என்பதை வென்றெடுத்த தினம். இவை இன்று பறிபோகின்றன. இதனைத் தடுப்பதற்கு இளைஞர்கள் போராட முன்வர வேண்டும். இதற்காக நாம் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும்” என அறைகூவினார்.

மக்கள் அதிகாரத்தின் தோழர் ஓவியா பேசுகையில்,

தோழர் ஓவியா
தோழர் ஓவியா

“ஜனநாயகத்தின் 4 தூண்கள் எதுவும் உழைக்கும் மக்கள் யாருக்கும் பயன்படுவதில்லை. எனவே இதை யாரும் நம்ப வேண்டிய தேவையும் இல்லை என கேரளாவின் தேயிலை தோட்ட பெண் தொழிலாளிகளின் வீரமிக்க போராட்டமும் மக்கள் அதிகாரத்தின் டாஸ்மாக்கை மூடும் போராட்டமும் மக்கள் தனக்கான உரிமையை தானே நிலைநாடடிக்கொள்வதுதான் ஒரே வழி. நேற்றுவரை லஞ்ச ஊழலில் ஊறித் திளைத்த அதிகாரிகள் தான் இன்று தேர்தல் அதிகாரியாகவும் பறக்கும் படையாகவும் வலம்வருகின்றனர். இவர்கள் எப்படி தேர்தலை நியாயமாக நடத்த முடியும். மக்கள் தான் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்” என உரையை முடித்தார்.

தோழர் ராஜா
தோழர் ராஜா

சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் கௌரவத் தலைவர் தோழர் ராஜா பேசும் போது,

“போலிகளின் இரு (CITU, AITUC ) தொழிற்சங்கங்களும் தொழிலாளிக்கு செய்யும் துரோகங்களை பட்டியலிட்டார். தா.பாண்டியனின் ஜெயா துதிபாடலையும், முதலாளிக்கு சேவை, பாட்டாளிக்கு பட்டினி, இவைதான் மோடியின் ஆட்சி. எனவேதான் சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் பாதை நமது பிரச்சினையை தீர்க்காது. இதனை தூக்கியெறிய வேண்டும். இதற்கு புரட்சிதான் தீர்வு” என தனது உரையை முடித்தார்.

தோழர் நிர்மலா
தோழர் நிர்மலா

பெண்கள் விடுதலை முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் நிர்மலா பேசுகையில், “வேலை செய்யும் ஆலைகளிலும் அரசுப்பணிகளிலும் தனியார் தொழிற்சாலையிலும், நிறுவனங்களிலும் வேலை செய்யும் பெண்கள் பாலியல் ரீதியான சுரண்டல், உழைப்பு சுரண்டலென இருவகைகளில் சுரண்டப்படுகின்றனர். இதனை மாற்றக்கூடிய வலிமை கம்யுனிஸ்ட்டுகளிடம் மட்டுமே உள்ளது” என குறிப்பிட்டார்.

ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் கோபி பேசும் போது,

தோழர் கோபி
தோழர் கோபி

“கால்டாக்சி, தனியார் பேருந்துகளின் போட்டிகளுக்கு மத்தியில் ஆட்டோ தொழில் செய்வது முடியாத காரியமாக உள்ளது. இதற்கிடையில் மாநகராட்சி அதிகாரிகளின் அடாவடித்தனம், போலீசின் பொய் வழக்கு இதனையெல்லாம் தொழிலாளியின் ஒன்றிணைந்த போராட்டத்தாலும் பு.ஜ.தொ.மு வின் சிறப்பான வழிகாட்டலினாலும்தான் முறியடிக்க முடிந்தது. எனவே துரோகத்தை ஒழித்து தொழிலாளிக்காய் பாடுபடும் பு.ஜ.தொ.மு. வில் இணைவீர்” என தொழிலாளிகளுக்கு அறைகூவல் விடுத்தார்.

அனைத்து தரைக்கடை வியாபரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர்.பழனிச்சாமி பேசுகையில்

தோழர்.பழனிச்சாமி
தோழர்.பழனிச்சாமி

“முன்பெல்லாம் வயதானவர்கள் பிழைப்பு நடத்த தரைக்கடை போடுவார்கள். இன்றோ கிராமப்புறத்தில் டிகிரி படித்த மாணவர்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் தரைக்கடை போட்டு பிழைப்பு நடத்துகின்றார்கள்.

ஒருபக்கம் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்காக தரைக்கடைகள் அழிக்கப்படுகின்றது. இன்னொருபுரம் உள்ளுரில் உள்ள சாரதாஸ், மங்கள்-மங்கள் போன்ற பெரும் நிறுவனங்கள் பொது இடத்தை ஆக்கிரமித்து கார் பார்க்கிங் அமைக்கிறார்கள். தனது கடைமுன்னால் 3 அடி கடைபோட வேண்டுமா மாத வாடகைக் கொடு என மிரட்டுகின்றார்கள். இதற்காக போலீசை வைத்து தரைக்டைகளை அப்புறப்படுத்துகின்றனர். தரைக்கடை வியாபாரிகள் மீதான தாக்குதலுக்கு எதிராக எந்த ஓட்டுக்கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் பேசவில்லை. எனவே அவர்களுக்கு ஏன் ஓட்டுபோட வேண்டும்” என வினா எழுப்பினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் பேசுகையில்,

தோழர் காளியப்பன்
தோழர் காளியப்பன்

“1886-ம் ஆண்டு சிக்காகோ நகரில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்பதை தொழிலாளிகள் தம் இன்னுயிரைக் கொடுத்து வென்றார்கள். இத்தகைய மகத்தான மே நாளை தோழர் லெனின் போராட்ட நாளாக அறிவித்தார். இந்தியாவில் காலனியாட்சி நடந்த போது தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்தெடுக்க முயன்ற போது காலனியாட்சிக்கு எதிராக தோழர் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். அதன்பின் காங்கிரஸ் தொடங்கி இன்றுள்ள பி.ஜே.பி வரை அனைத்துக்கட்சிகளும் பன்னாட்டுக் கம்பெனிக்கு ஆதரவாக கார்ப்பரேட் கம்பெனி கொள்ளைக்கு ஏதுவாக தனியாரமய – தாராளமய – உலகமயக் கொள்கைகளை போட்டி போட்டு அமுல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் கேரளாவில் தேயிலை தோட்ட பெண்தொழிலாளிகள் போராட்டம் துரோக தொழிற்சங்கங்களின் முகத்திரையை கிழித்து முதலாளித்துவ சுரண்டலுக்கு மரண அடி கொடுத்தது. சமீபத்தில் பெங்களுரில் ஆயத்த ஆடைதயாரிக்கும் லட்ச்சக்கணக்கான தொழிலாளர்கள் மூன்றே நாளில் எந்தத் தொழிற்சங்கத்தின் தலைமையும் இல்லாமல் தன்னியல்பாக போராடி பி.எஃப் பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கு மத்திய அரசு போட்ட தடையை உறுதிமிக்க போராட்டத்தால் உடைத்தெறிந்தார்கள். இத்தகைய உறுதிமிக்க சமரசமற்ற போராட்டத்திலிருந்து பாடம் கற்போம்.

விவசாயம், நெசவு, சிறு தொழில், சிறு வணிகம் அழிக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகின்றது, இத்தகைய சூழலை முதலாளிகள் கூட்டம் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளிகளை அற்பக் கூலிக்கு கசக்கி பிழிகின்றான். அனைத்து துறைகளிலும் புதிய வடிவத்தில் காண்டிராக்ட் மயத்தை புகுத்துகிறான்.

மனித உழைப்பை சூறையாடும் அம்பானி, டாடா, பிர்லா, அதானி மற்றும் அன்னிய பன்னாட்டு கொள்ளை கும்பலுக்கு மோடியும், லேடியும் போட்டி போட்டுக்கொண்டு சேவை செய்கின்றனர். இதனை எந்த IAS,IPS அதிகாரிகளும் தடுப்பதற்கில்லை. இவர்களை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாதிபேர் கிரிமினல்கள். தே.மு.தி.க பிரேமலதா போன்ற கந்து வட்டி பேர்வழிகள், இவர்கள் எப்படி மக்களுக்காக போராடமுடியும். எனவே தேர்தல் பாதை நமது அன்றாட பிரச்சினைகளை தீர்க்காது. மக்களை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடாது. கல்வி, மருத்துவத்துறையில் நடக்கும் வியாபாரத்தைத் தடுக்காது. முதலாளிகளின் லாபவெறியால் 10- ஆண்டுக்கு ஒருமுறை சரிந்துவிழும் முதலாளித்துவ பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது.

தோழர் மணலிதாஸ்
தோழர் மணலிதாஸ்

மரணப் படுக்கையில் கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நலிவடைந்த முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை வாரிவழங்கினால்தான் சாத்தியமென இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இது எவ்வளவு பெரிய மோசடி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு, அழுகிநாறும் அரசுக்கட்டமைப்பை மக்கள் அதிகாரத்தின் மூலம் அப்புறப் படுத்திவிட்டு மக்களே ஆழ்வதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும்” என தனது உரையை முடித்தார். தோழரின் பேச்சை கேட்ட ஒரு போலீசார் தன்னை அறியாமல் கைதட்டி ரசித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தோழர் மணலிதாஸ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் இடைஇடையே போடப்பட்ட முழக்கங்கள், ம.க.இ.க.மையக் கலைக்குழுவின் புரட்சிகர பாடல்களும், தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் புரட்சிகர உணர்வை ஊட்டும் வகையில் அமைந்தது.

செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி

8. கோவை

கோவையில் மே தினப் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரிய போது “முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்ய மாலை வருகிறார். எனவே நீங்கள் காலையில் நடத்திக் கொள்ளுங்கள்; மாலையில் தர முடியாது” என்றனர். “ஜெயலலிதாவை வேண்டுமானால் வழக்கம் போல் வெயிலில் நடத்தச் சொல்லுங்கள். நாங்கள் மாலையில் தான் நடத்துவோம்” என உறுதிபடக் கூறிவிட்டோம்.

தொழிலாளர் வர்க்கப் பாரம்பரியம் தியாகம் நிரம்பிய கோவை மாநகரில் சி‌.ஐ‌.டி‌.யு, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி போலிகள் வழக்கம் போல் மே தினத்தின் மகத்துவம் புரியாமல், அவர்களுடைய ஓட்டுப் பொறுக்கும் நிலைமைக்கு ஏற்ப விஜயகாந்தின் தொழிற்சங்கம், ம.தி.மு.க தொழிற்சங்கம் என இணைந்தும், மே தின ஊர்வலம் நடத்தினர். வெளிப்படையாக கம்யூனிஸ்ட் கட்சியிலும், தலைமறைவாக அ.தி.மு.க.விலும் அங்கம் வகிக்கின்ற தா.பாண்டியன் கலந்து கொண்டார். இது ஒன்றே போதும் அவர்கள் நடத்திய மே தினத்தின் அற்பத் தனத்தை புரிந்து கொள்ளலாம்.

நமது மே தின நிகழ்வு பாட்டாளி வர்க்கத்தின் எளிமை அதே சமயம் கம்பீரத்துடன் மாலை 5 மணிக்கு சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் முன்பிருந்து துவங்கியது பேரணி. மாவட்டச் செயலாளர் தோழர் திலீப் கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்‌.ஆ.ர்‌ஐ கிளை தோழர்கள் மோடி, பண்டாரு தத்தாத்ரேயா அருண் ஜெட்லி என முகமூடி அணிந்து காட்சி விளக்கத்துடன் பேரணியில் கலந்து கொண்டனர். ரோட்டில் போவோர் வருவோர் எல்லோரும் நின்று பார்க்கும் அளவுக்கு பேரணி மெதுவாக முன்னேறியது. ஜெயா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அடுத்த ஐந்து கிலோ மீட்டர் தள்ளி கொடீசியாவில் நடந்தாலும் காவல் துறை, உளவுத் துறையினருக்கு அதை விட முக்கியமானது பு.ஜ.தொ.மு நிகழ்ச்சி என முடிவு செய்து கலந்து கொண்டு சிறப்பாக உளவு வேலை செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பேரணி முடிவில் சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மோடி, ஜெயா ஆட்சியை அகற்றாவிட்டால் இந்தியாவில் தொழிலாளர், மாணவர் விவசாயி பெண்கள் என அனைவரும் தூக்கு போட்டு தற்கொலைதான் செய்ய வேண்டும் என காட்சி விளக்க நாடகம் சிறப்பாக நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழர் கோபிநாத் தனது தலைமையுரையில் விவசாயம் சிறுவணிகம் நெசவு என துறைவாரியாக மோடி அரசு தனது கொடுங்கரங்களை நீட்டி உழைக்கும் மக்களை பலியிடுவதை தடுத்து கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவதை வலியுறுத்தி பேசினார்.

பு.ஜ.தொ.மு நீலமலை செயலர் தோழர் பாலன் தனது கண்டன உரையில், “எட்டுமணி நேர வேலையை நாலு மணி நேர வேலையாக மாற்ற வேண்டும். புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதன் மூலமே இதனைச் சாதிக்க முடியும். இதுவே நமது மே தினச் சூளுரை” என முழங்கினார்.

மண்டல சங்கத் தோழர் ஜெகநாதன் தனது கண்டன உரையில், “கோவை நகரின் காற்றில் ஈரப்பதம் உள்ளது. கற்றாழை தாவரத்தை வீட்டில் கட்டி தொங்க வைத்தாலே காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சியே அது வளரும். ஆனால் இப்போது காற்றில் ஈரப்பதம் இல்லை. கற்றாலழையை மண்ணில் நாட்டாலும் வளர மாட்டேங்குது. காரணம் மண்ணிலும் ஈரப்பதம் இல்லை மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ புராதானச் சின்னமாக அறிவித்து இருந்தது. இன்று அது அழியும் நிலையில் உள்ளது. பெண் போலீசார் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அரசுக் கட்டமைப்பு அழுகி நாறுவதன் வெளிப்பாடு இது. எனவே காவல்துறையினர் முதலில் தங்கள் துறையில் தற்கொலை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு வந்து எங்களை கண்காணிக்கலாம்” என நகைச்சுவையாக பேசி முடித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பு.ஜ.தொ.மு தோழர் விளவை இராமசாமி தனது கண்டன உரையில்,

தோழர் விளவை ராமசாமி
தோழர் விளவை ராமசாமி

“எட்டு மணி நேர வேலையை தங்கள் போராட்டத்தின் தங்கள் தியாகத்தின் மூலம் உலகுக்கு வென்று கொடுத்தவர்கள் மே தினத் தியாகிகள்.

எட்டு மணி நேர வேலை மட்டுமல்ல இந்த முழு உலகமும் உழைக்கும் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என முதலாவது அகிலம் முடிவெடுத்து மே நாளை உலகத் தொழிலாளர் தினமாக எங்கெல்ஸ் அறிவித்தார்.

இதன்படி எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர தூக்கம், எட்டு மணி நேர ஓய்வு என இருந்ததை சர்வதேச அகிலம் எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர தூக்கம், எட்டு மணி நேர அரசியல் என மாற்றி அமைத்தது.

மே நாள் என்பது கொண்டாட்ட நாள் அல்ல மே தின சபதம் எடுக்க வேண்டும். மே தினச் சூளுரை எடுக்க வேண்டும். இது வரை முதலாளித்துவத்தை முறியடிக்க என்ன செய்தோம்; இனிமேல் என்ன செய்ய வேண்டும் என கணக்கு பார்த்துக் கொள்ள வேண்டிய நாள் மே நாள்.

மே நாளுக்கு ஜெயா, கருணாநிதி, ரோசையா, விஜயகாந்த் வாசன் என எல்லோரும் வாழ்த்து சொல்கிறார்கள். இது போலி கம்யூனிஸ்டுகள் ஓட்டுப் பொறுக்க போனதால் வந்த ஒழுக்கக் கேடு. நம்முடைய முதல் மே தின சூளுரை ஜெயாவை மே தின வாழ்த்து சொல்ல அனுமதிக்க கூடாது என்பதாக இருக்க வேண்டும்.

குற்றவாளி ஜெயா இப்போது கொடிசியாவில் காசு கொடுத்து கூட்டம் சேர்த்து பேசிக் கொண்டிருக்கிறார். பாசிஸ்டுகளுக்கு வரலாறு கொடுத்த தண்டனை என்ன? இத்தாலி பாசிஸ்டு முசோலினியை செம்படை தூக்கில் ஏற்றியது, செத்த பிறகு அவன் பிணத்தை எல்லோரும் காறித் துப்ப வேண்டும் என நாலைந்து நாள் தொங்க விட்டார்கள். வெயிலும் மழையிலும் இரவிலும் பகலிலும் தூக்கில் உயிர் போன பிறகும் தொங்கினான். இதனை கேள்விப்பட்ட ஹிட்லரும் நம்மையும் இதே போல்தான் தொங்க விடுவார்கள் என்று பயந்து தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். அனைத்து சர்வாதிகாரிகளுக்கும் இதே முடிவு தான் நேரிடும். ஜெ வுக்கு இதைத்தான் வரலாறு பரிந்துரைக்கும் இதனை உருவாக்க நாம் மே தினச் சூளுரை எடுக்க வேண்டும்.

kovai-may-day-banners-6வர்க்கப் போராட்டத்தை மட்டும் ஏற்றுக் கொள்பவர் மே தின சபதம் எடுக்கும் தகுதியை பெற முடியாது. தொழிலாளர் சம்பளம் போனஸ் வேண்டும் என்பவர் மே தின சூளுரை எடுக்கும் தகுதியை பெற முடியாது. வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் அளவுக்கு வளர்த்துச் செல்பவர் எவரோ அவரே உண்மையான கம்யூனிஸ்டு. கம்யூனிஸ்‌டுகளுக்கு தான் மே தின சூளுரை எடுக்கும் அருகதை உண்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய நமது பயணத்தை வேகப்படுத்த வேண்டும். இதுவே நமது மே தினச் சூளுரை.

இந்த மே தினச் சூளுரையே விவசாயம்-நெசவு-சிறுவணிகம் சிறு தொழில்களை அழித்து காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம் என்பதுதான்.

இப்போது கோவை நகரில் வெயில் கொளுத்துகிறது கோவை நகரம் மட்டுமல்ல தமிழ்நாடே வெயிலில் தவித்துக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ எல்லா மாவட்டங்களிலும் வெயில் சதமடித்துவிட்டது இதற்கு என்ன காரணம்? தானாகவே நடந்து விட்டதா? இல்லை., இதற்கு கார்பரேட் முதலாளிகளே காரணம். ஆந்திராவில் 2015ஆம் ஆண்டு வெயில் கொடுமையால் ஆயிரம் பேருக்கு மேல் மாண்டார்கள். இந்த ஆண்டும் இதுவரை 140 பேர் மாண்டு போனார்கள். கரீம் நகரில் அடுப்பில்லாமல் தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால் வெப்பத்தில் ஆம்லெட் ஆக மாறுகிறது அதைப் போல கோவையையும் நாம் போராடா விட்டால் மாற்றி விடுவார்கள்.

kovai-may-day-banners-3மேற்கு தொடர்ச்சி மலையின் குழந்தைகள் நாம். மேற்கு தொடர்ச்சி மலைகள் ஈரமான காற்றை அனுப்பி கோவையை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆக்கியது மேற்கு தொடர்ச்சி மலைகள் சிறுவாணியை நமக்கு அனுப்பி நமது மாநகரத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது அது நொய்யலை அனுப்பி நமது புறநகர் பகுதியை தென்னை வாழைத் தோப்புகளாக்கியது பவானி நதியை அனுப்பி நம்மை பரவசப்படுத்தியது. குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்கிறது. நொய்யல் நதியின் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றவாளிகள் யார்? உள்ளூர் முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் தான். நொய்யல் என்பது கோவையின் பெருமை நொய்யல் காவிரித் தாயின் பெரிய மகள் நல்லது கெட்டதுக்கு பேரூர் போனால் 20 வருடங்களுக்கு முன்னாள் நொய்யல் நாணல் புதர்களினூடாக நாணி நடந்து வருவாள். ஒரு சொம்பில் துணியால் தலைப்பாகை கட்டி மொண்டு குடித்தால் தொண்டைக் குழியில் தேனாக இறங்குவாள். இன்று., நொய்யல் அங்கே அய்யோ நதியை பேரூரில் காண முடியவில்லை. நொய்யல் ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு பார்ப்பனர்கள் காசு வாங்கி திதி கொடுப்பார்கள். பார்ப்பனர்கள் பேரூரில் சங்கமே அமைத்திருந்தார்கள். ஆக கடைசியில் நொய்யலுக்கும் திதி கொடுத்துவிட்டு வேறுபக்கம் போய் விட்டார்கள். நதியை கொன்றவனை நாம் நாசம் செய்ய வேண்டும். இதுவே மே தினச் சூளுரை.

kovai-may-day-banners-1பவானி நதியில் சாயக்கழிவு நீரை கலந்தவன், விஸ்கோஸ் கழிவு நீரை கலந்தவன், மேற்கு தொடர்ச்சி மாலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாங்கி தியானலிங்கம் அமைத்து காட்டை அழிப்பவன் யார்? ஜக்கி வாசுதேவ். ஜக்கி வாசுதேவுக்கு சொம்பு தூக்குவது யார் ? கோவையின் எழுத்தாளர்கள், முதலாளிகள் தாமிரா ரிசார்ட் உரிமையாளர் சிறுதுளி வனிதா மோகன், சின்மயானந்தா மிஷன், காருண்யா தினகரன் இந்த கூட்டம் தான் மேற்கு தொடர்ச்சி மலையை அழித்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களை விரட்டி அடிக்க வேண்டும். இன்றே இப்போதே செய்ய வேண்டும். இல்லையென்றால் நொய்யலை அழித்ததை போல பவானியையும் அழித்து விடுவார்கள் சிறுவாணியையும் இல்லாமல் செய்து விடுவார்கள். சிறுவாணி இல்லாத கோவையை கற்பனை செய்து பாருங்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு இல்லாத, ஈரக்காற்று இல்லாத கோவையை கற்பனை செய்து பாருங்கள் இவை எல்லாம் அழிந்து விட்டால் கரீம் நகரில் நடப்பது போல் கோவை வீதிகளிலும் ஆம்லெட்தான் போட வேண்டும்.

kovai-may-day-23இவையெல்லாம் நடக்காது. கூடுதலாக பயமுறுத்துகிறார் என சிலர் நினைக்கலாம். அவர்களைப் பார்த்து நாம் கேட்கிறோம் தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் நூற்றுக்கணக்கான மில்கள் மூடப்படும் என்று யாராவது நினைத்தீர்களா? ஆனால் மூடப்பட்டு விட்டதே! தலையில் பஞ்சோடும், கையில் வெற்றிலை செல்லத்தொடும் பஞ்சாலைகளில் வேலை முடித்து கோவை நகர வீதிகளை அலங்கரித்த நம் தாய்மார்கள் எங்கே? ஆஃப் நைட், ஃபுல் நைட் பகல் என பஞ்சாலைகளில் வேலை முடித்து அல்லும் பகலும் நடமாடி, டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசி கோவை நகரத்தை தூங்கா நகரமாக்கிய பஞ்சாலைத் தொழிலாளர்கள் எங்கே? இதுவெல்லாம் நடக்கும் என நினைத்தோமா? ஆனால் நடந்து விட்டதே! அது போலத்தான் இனியும் அமைதியாக இருந்தால் போராடாமல் இருந்தால் நகரை நாசமாக்கி விடுவார்கள். நமது முன்னோர்கள், நமது பெற்றோர் நமக்கு மலையையும் நதியையும் காப்பாற்றி நமக்குக் கொடுத்து விட்டு போனார்கள். நாம் நம் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கப் போகிறோம். சிறுவாணி இல்லாத கோவையா தரப்போகிறோம். எனவே இன்றே இப்போதே போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளையும் கார்ப்பரேட் சாமியார்களையும் அடித்து விரட்ட வேண்டும் இதுவே நமது மே தினச் சூளுரை

kovai-may-day-banners-1இந்திய வனச் சட்டத்தை திருத்தி 10 கோடி ஹெக்டேர் நிலத்தை ரிசர்வ் பாரஸ்டை பராமரிப்புக்கு தனியாருக்கு கொடுக்கப் போகிறான். இயற்கையையும் மனித குலைத்தையும் ஒரு சேர அழிக்கின்ற கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டத்தை இந்த மண்ணிலிருந்தே காலி செய்ய வேண்டும். பேஸ்புக், டிவிட்டர் பின்னூட்டம் நிலைத் தகவல் மூலம் அல்ல. களமாடி சிறை சென்று போராட வேண்டும்.

மத்திய அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை விற்க மோடி அரசு திட்டமிடுகிறது. தமிழ் இந்து ஏப்.25 இல் செய்தி வந்துள்ளது. 77 பொதுத் துறை நிறுவனங்கள் 27,360 கோடி நட்டத்தில் இயங்குகிறது இதில் கோவையில் இயங்கும் 5 என்‌.டி‌.சி மில்களும் அடக்கம்.

விஜய் மல்லையா என்ற ஒருவனின் வாராக்கடன் சுமார் 9,000 கோடி ரூபாய் அம்பானி வைத்திருப்பதோ 40,000 கோடி ரூபாயை நெருங்குகிறது. 2015 மார்ச் வரை 2.67 இலட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் மத்திய அரசுக்கு உள்ளது. (தமிழ் இந்து – செப்.28-15) இதை வசூல் பண்ண துப்பில்லை 27,300 கோடி ரூபாய் நட்டத்துக்காக பொதுத் துறையை விற்பது என்‌.டி‌.சி.யை மூடுவது பச்சை அயோக்கியத்தனம்.

kovai-may-day-banner-8ஆக மக்களுடைய, தொழிலாளர்களுடைய பணத்தை வாரியாக பெற்று முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து விட்டு அதனை வசூலிக்க துப்புக் கேட்ட மோடி கும்பல் பொதுத் துறையை விற்கிறான் இதில் யார் தேசத் துரோகி ? பொதுத் துறையை விற்கிற புரோக்கர் வேலைக்கு உன்னை எதற்கு நாங்கள் ஓட்டு போட்டு பிரதமர் முதலமைச்சர் என்று ஆக்கணும்.

நட்டம் என்று சொல்லி இவர்கள் இதுவரை இவ்த்த விற்கப்போற பொதுத் துறை நிறுவனங்களை இவ்வளவு பெரிய இந்திய அரசை விட திறம்பட நிர்வாகம் பண்ணி ஒரு தனியார் முதலாளி லாபம் கொண்டு வர முடியும் என்றால் என்ன அர்த்தம் ?

இத்தனை அறிவாளிகள், அருண் ஜெட்லி, ஐ‌ஏ‌எஸ் ஐ‌பி‌எஸ் அதிகாரிகளை வைத்து அரசாளுகிற உன்னை விட ஒரு தனியார் சிறப்பாக செயல்பட முடியும் என்றால் என்ன பொருள் ?

அரசு மருத்துவ மனையை தனியாருக்கு கொடுக்கிறாய்; அரசுக் கல்லூரியை தனியாருக்குக் கொடுக்கிறாய்; உன்னோட அரசை விட ஒரு தனியார் லாபகரமாக செயல்படுத்த முடியுது என்றால் என்ன பொருள் ?

ஆக, எந்த ஒரு நிர்வாகத்தையும் உன்னை விட உன் அரசை விட தனியார் சிறப்பாக செய்ய முடியுமென்றால் உன்னை எதுக்கு நாங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். அம்பானிக்கும் அதானிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லி விட வேண்டியது தானே?

உன்னாலே முடியலை என்று நீயே சொல்லிவிட்டப் பின்பு ஒதுங்கிக் கொள்வதுதான் உனக்கு மரியாதை, இல்லையென்றால் ஒதுங்க வைக்கும் தொழிலாளி வர்க்கம். அதற்கு ஒரு சின்ன டீஸர் தான் பெங்களூரு தொழிலாளர் போராட்டம். தொழிலாளர்கள் வர மாட்டார்கள் என்று எவனாவது சொன்னால் பளார் என்று அவன் முகத்தில் அடிக்க வேண்டும். பெங்களூர் கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் எப்படி போராட வந்தார்கள்; போராடி வெற்றி கண்டார்கள். உனக்கும் எனக்குமான வருங்கால வைப்பு நிதியை களவாட சட்டம் போட்ட மோடி கூட்டத்தை சட்டையை பிடித்து உலுக்கினார்கள். இதற்கு பதில் சொல் என்று அவநம்பிக்கை வாதிகளைக் திருப்பி கேட்க வேண்டும்.

பெங்களூர் தொழிலாளர் போராட்டம், அதுவும் பெண்கள் நடத்திய போராட்டம். இந்திய தொழிற் சங்க வரலாறு இருண்டு கிடந்தது. அதில் ஒளிக்கீற்றாக உதயமாகி உள்ளது. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மூணார் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆனைகட்டி போராட்டங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

அது போல நாமும் திரண்டு போராடினால் நம் உரிமைகளை பெற முடியும். கார்ப்பரேட் முதலாளிகளை வீழ்த்த முடியும்.

1887-ல் தூக்கில் ஏற்றப்பட்ட மே தினத் தியாகிகளில் ஒருவரான தோழர் அகஸ்டஸ் ஸ்பைஸ் தூக்கு மேடையில் நின்று முழங்கினார்.,

“இன்று நீங்கள் எங்கள் கழுத்தை நெரிக்கலாம் குரலை முடக்கலாம்; ஆனால், எங்கள் மவுனம் ஆற்றல் மிகுந்த சக்தியாக வெளிப்படும் காலம் வரும்”

தோழர் அகஸ்டஸ், உங்கள் மவுனத்தை இங்கே சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் மூலம் மொழி பெயர்க்கிறோம். ஆற்றல் மிக்க சக்தியாக உருமாறி இயற்கையை மனித குலத்தையும் நாசம் செய்கிற முதலாளித்துவத்தை அழிப்போம் என்று சூளுரைக்கிறோம்.”

என்று முடித்தார்.

இறுதியாக பு.ஜ.தொ.மு கோவை மாவட்ட இணைச் செயலர் தோழர் நித்தியானந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

9. மதுரை

கார்ப்பரேட் காட்டாட்சியை ஒழிக்க மே நாளில் சூளுரைப்போம் !

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து மதுரை யா.ஒத்தக்கடையில் மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

தேர்தலை காரணம் காட்டி காவல் துறை பேரணிக்கு மட்டும் அனுமதி கொடுத்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை.

மே நாள் அன்று, காலை 11 மணியளவில் கொளுத்தும் வெய்யிலை பொருட்படுத்தாமல் விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்டது தொழிலாளர் வர்க்கப் படை. பேரணிக்கு பு.ஜ.தொ.மு தோழர் பிரகாஷ் தலைமை தாங்கினார். வி.வி.மு தோழர் போஸ் பேரணியை துவக்கி வைத்தார்.

சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் உணர்வுபூர்வமாக பேரணியில் பங்கேற்றனர். தோற்று, திவாலாகி அழுகி நாறும் இந்த அரசு கட்டமைப்பு முற்றிலும் மக்கள் விரோதமாக மாறிவிட்டதையும், தேர்தல் ஒரு பித்தலாட்டம் என்பதையும் மக்கள் அதிகார அலகுகளை உருவாக்குவதே மாற்று என்பதையும் ஒத்தக்கடை மக்களுக்கு எளிமையாகவும், எழுச்சிகரமாகவும் புரிய வைத்தன பேரணி முழக்கங்கள். அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது.

பேரணி முடிவில் ஆர்ப்பாட்டம் அனுமதி இன்றி நடத்தப்பட்டது. ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் சிறப்புரை ஆற்றினார். 131 ஆண்டுகளுக்கு முன்னர் சிகாகோ தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து பெற்றுத்தந்த உரிமைகளை, இன்று கார்ப்பரேட் கம்பெனிகளும், அவர்களின் கூஜா மோடியும் எப்படி காலில் போட்டு மிதிக்கின்றனர் என்பதையும், விளக்கினார். இனியும் வேடிக்கை பார்க்க முடியாது, இது போராடும் தருணம் என்பதை உணர்த்தும் வகையில் எழுச்சி உரையாற்றினார். பு.ஜ.தொ.மு தோழர் போஸ் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.