Saturday, March 22, 2025
முகப்புசெய்திமீஞ்சூர்: குடியால் மகனை இழந்த பெண்கள் போராட்டம் - படங்கள்

மீஞ்சூர்: குடியால் மகனை இழந்த பெண்கள் போராட்டம் – படங்கள்

-

டாஸ்மாக் கடைக்கு பூட்டு, போராடிய மக்கள் மீது டாஸ்மாக் காவலர்கள் தாக்குதல்!

index2மீஞ்சூர் அருகே உள்ள நாப்பாளையம் என்ற பகுதியில், பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எதிரெதிரே உள்ள இரு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து அந்த பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். மூன்று முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே கடந்த 2.5.2016 அன்று அப்பகுதி மக்கள் மற்றும் டாஸ்மாக் எதிர்ப்பு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருந்தனர். அதில் 5 ம் தேதிக்குள் கடையை மூடாவிட்டால், நாங்களே இழுத்து மூடுவோம் என்று தெரிவித்து இருந்தனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட வில்லை. எனவே அப்பகுதி மக்கள், டாஸ்மாக்  எதிர்ப்பு குழுவினர் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இணைந்து அங்குள்ள இரு டாஸ்மாக் கடைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பறை அடித்துக் கொண்டு கடையை நெருங்கினர். அதற்கு முன்பே டாஸ்மாக் காவலர்களான போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். 20 அடிக்கு முன்பே திரண்டு வந்த மக்களை தடுத்து நிறுத்தினர். எனினும் கடையை இழுத்து மூடினால் தான் இங்கிருந்து செல்வோம் என்று விடாப்பிடியாக மக்கள் போராட்டம் நடத்தினர்.

index17தொடர்ந்து டா|ஸ்மாக் காவலர்கள் மக்களையும் தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோரை தாக்கி கைது செய்தனர். தொடர்ந்து பெண்கள் அக்கடைக்கு பூட்டு போட முயன்றுள்ளனர். அதைக் காணப் பொறுக்காத போலீசு  அவர்களைத் தடுத்து பூட்டுப் போட முயன்ற பெண்களை தாக்கி அராஜகமாக கைது செய்துள்ளது. பெண் காவலர்கள் இல்லாத நிலையில் ஆண் போலீசே பெண்களையும் தாக்கியுள்ளனர்.

ஒர் பெண் தோழரை ஆண் போலீசு ஒருவர் கன்னத்தில் அறைந்துள்ளார். மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்ட போலீசை எதிர்த்து சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களும் களத்தில் இறங்கினர். கடையை நெருங்க விடாமல் கயிறு கட்டி போலீசார் தடுப்பு அமைத்தனர். இதனால் பெண்கள் போலீசுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். ஒரு பெண், எனது 15 வயது மகன் இந்த டாஸ்மாக் கடையால் இறந்துவிட்டான், கடையை மூடாமல் இன்னும் வேடிக்கை பாக்குறீங்க என்று கடுமையாக திட்டினார். “நீங்கள் மக்கள் போலீசா? இல்லை டாஸ்மாக் போலீசா? என்று தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு போலீசால் பதில் சொல்லமுடியவில்லை.இருந்தும் போலீசு எதற்கும் தளராமல் போராடும் மக்களை, தோழர்களை தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருந்தனர்.

மக்களும் போலீசின் தாக்குதல் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் ஒரு பக்கத்தில் கடையை நெருங்க விடாமல் போலீசு தடுத்துக் கொண்டிருக்கும் போதே, அடுத்த பக்கத்தில் 50 க்கும் மேற்பட்ட தோழர்களும், மக்களும் இணைந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பானது. அப்பகுதி மக்களும் பெண்களும் தொடர்ந்து போராடி இரு கடைகளையும் பூட்டு போட வைத்துள்ளனர். இன்று ஒரு நாள் மட்டுமல்ல எப்போதும் இந்த கடையை திறக்க விட மாட்டோம்; அப்படி மறுபடி திறந்தால் அப்போதும் போராடுவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

index8தங்களது நியாயமான கோரிக்கைக்காக போராடிய மக்கள் மீது அராஜகமாக தாக்குதல் நடத்திய இந்த டாஸ்மாக் காவலர்கள் நடத்திய தாக்குதலைப் பார்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர் ஒருவர், ”தினமும் எங்க அப்பா குடித்து விட்டு அடிக்கிறார். படிக்க முடியவில்லை. எனக்கும் போலீசாக வேண்டும் என்ற ஆசை இருக்கு, ஆனால் இப்படி கடையை திறந்து வைத்தால் எனது ஆசை எப்படி நிறைவேறும். எங்க வீட்டுக்கு வந்து பாருங்க அப்போ தான் டாஸ்மாக் கடையால் எங்க குடும்பம் படும் கஷ்டம் தெரியும்! அதுக்காக தான் போராடுறோம்! கடைய மூடுங்க முதல்ல!..”  என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். இப்படி பள்ளி மாணவர்களும், பெண்களும், மக்களும் போராடவிடாமல், கடையை பூட்ட விடாமல் தடுக்கும் டாஸ்மாக் காவலர்களிடம் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் நின்றனர். போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் மக்களைக் கைது செய்துள்ளனர்.

மீஞ்சூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழு மக்களும், மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தில் போலீசு நடத்திய தாக்குதலில், தோழர் உதய குமார் காயமடைந்துள்ளார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தகவல்: மக்கள் அதிகாரம், மீஞ்சூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க