Tuesday, June 25, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபடுகாயமடைந்த மக்கள் - போராட்டம் தொடரும் - மக்கள் அதிகாரம்

படுகாயமடைந்த மக்கள் – போராட்டம் தொடரும் – மக்கள் அதிகாரம்

-

letter-head

தேர்தலை பொருட்படுத்தாமல் போராட்டம் தொடரும் !
– மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

டாஸ்மாக் சாராயக் கடைகளை மே 5-ம் தேதிக்குள் மூடாவிட்டால் மக்களே அவற்றை மூடுவார்கள் என்று அதிகாரிகளிடம் அறிவிப்பு தந்துவிட்டு, மே 5-ம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி அமைதிவழியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் நடத்தப்பட்ட அனைத்து ஊர்களிலும், பொதுமக்கள் பெருந்திரளாக, குறிப்பாக பெண்கள், அதிக அளவில் பங்கெடுத்துள்ளனர். எல்லாப் பகுதிகளிலும், சாராயக்கடைகள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நீண்ட நாட்களாக மக்கள் போராடிக்கொண்டுதான் உள்ளனர். அவர்கள் அகற்றக் கோரும் டாஸ்மாக் கடைகள் கூட சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கடைகள்தான்.

இவற்றை மூடுவதில் அரசுக்கும் சரி, அதிகாரிகளுக்கும் சரி எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மூடக்கூடாது என்ற முடிவோடு போராடிய அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக சென்னை நொளம்பூர் மற்றும் நாப்பாளையம் பகுதியில் தமிழக போலீசு மூர்க்கத்தனமான முறையில், மக்கள் அதிகாரம் மற்றும் டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முறையான அறிவிப்பினை அந்தந்தப் பகுதி அதிகாரிகளிடம் தந்தபின்னர்தான் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும், மே 5 அன்று – போராட்ட நாளன்று முன்னணியாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தடிகளால் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தி கைது செய்தது, போலீசு. சென்னை மண்டல, மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் இவ்வாறு அடித்து இழுத்துச் செல்லப்பட்டு, பகல் முழுவதும் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு, நடக்கமுடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட தோழர் வெற்றிவேல் செழியன்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அமைதியான வழியில் கடையை மூடு எனக் கோரிக்கை வைத்த நூற்றுக்கணக்கானவர்கள் மீது போலீசு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளது. மதுரவாயலில் சிறுவன் ஒருவன் மயக்கமடைந்து கீழே விழும் வரை தாக்கப்பட்டான். ஆண் போலீசார் போராடிய பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், ஆடைகளைக் கிழித்தும் வக்கிரமான முறையில் நடந்துகொண்டதோடு தரையோடு தரையாக இழுத்துச் சென்று அவர்களைக் கைது செய்தனர். வேனுக்குள் அடைத்த பின்னரும் தடியால் தாக்கிக் காயப்படுத்தினர். இத்தாக்குதலில் முன்னணியாளர்களைக் குறிவைத்து அடிக்க, உளவுப்பிரிவு போலீசும் சீருடையில்லாத போலீசும் ஈடுபடுத்தப்பட்டது. இதில் 24 ஆண்களும் 14 பெண்களும் கடுமையாகக் காயமுற்றுள்ளனர்.

மதுரவாயலில் தாக்கப்பட்டு காயமடைந்தவர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மீஞ்சூரில் போராடிய தோழர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போராடிய வயதான பெண்மணிகளின் கழுத்திலும் முகத்திலும் போலீசு கடுமையாகக் குத்தியுள்ளனர். பல பெண்களின் மார்பகங்கள் மீது கடுமையான தடியடி நடத்தியுள்ளது போலீசு. போராட முன்வந்த பெண்களைக் கேவலமான சொற்களால் திட்டி அவமானம் செய்ததுடன், கைதான பின் அடைக்கப்பட்ட மண்டபத்தினுள்ளேயும் தாக்கி 3 பேரின் மண்டையை உடைத்துள்ளது போலீசு. போராட்டக்காரர்களின் உயிர் உறுப்புகளை லத்திக்கம்பால் ஓங்கி அடித்து துடிதுடிக்கச் செய்துள்ளது. இத்தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் தற்போது அதிகாரத்தில் இருப்பது தேர்தல் ஆணையம்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஜெயலலிதாவின் அதிகாரத்தில் போலீசு அன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தொடுத்த கொலைவெறித்தாக்குதலைப் போலவேதான், இன்றும் “மூடு டாஸ்மாக்கை” என்ற கோரிக்கையை எதிர்கொள்கிறது, அரசு. டாஸ்மாக் சாராய விற்பனை என்பது ஜெயா அரசின் கொள்கை முடிவு மட்டுமல்ல, போலீசு, அதிகாரி வர்க்கங்களின் அதிகாரப்பூர்வ சொத்து போலப் பாவிக்கப்படுகிறது. சொந்தச் சொத்தின் மீது கைவைத்தால் வரும் ஆத்திரத்தோடு போலீசு பாய்ந்து பிராண்டியுள்ளது.

மண்டை உடைக்கப்பட்ட சத்யா

தேர்தல் ஆணையம், தேர்தலை நல்லபடியாக நடத்துவதற்காக தேர்தல் தேதியை ஒட்டி 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை எல்லாம் மூடப் போவதாக சொல்லுகிறது. ஆனால் சாராயத்தால் நாசமாக்கப்பட்டுக் கொண்டுள்ள மக்கள் கண்ணீரோடு, மூடக் கோரிக்கை வைத்தாலோ தடியடியால் எதிர்கொள்கிறது. மக்களின் குரலை- – ஜனநாயக உரிமையை நசுக்கி, குழந்தை என்றும் பெண் என்றும் பாராமல் மக்கள் போராட்டத்தை நசுக்கி, ‘ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறோம்’ எனத் தேர்தலை நடத்துவது ஆபாசமான வக்கிரமான கூத்தாகும்.

குழந்தைகளையும் பெண்களையும் கொலைவெறியோடு தாக்கிய பின்னரும், சட்டத்தை நிலைநாட்டுகிறேன் எனச் சொல்லிக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அருகதை ஏதும் இல்லை. இது ஆளும் கட்சியின் ஏவல் நாய் என அனைத்து கட்சிகளும் ஊடகங்களும் காறித்துப்பி விட்டன. வாக்குக்குப் பணம் தருவதற்காக பல கோடிகளை பதுக்கி வைத்திருந்த அன்புநாதனைப் பிடிக்கத் துப்பு கெட்ட ஆணையம், உரிமையை நிலை நாட்ட வந்த பெண்கள் மீது காவல் துறையை ஏவிவிட்டு பிராண்டுகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்தான் மதுவிலக்கை தேர்தலில் முக்கியமான பிரச்சினையாக கட்சிகளைப் பேசவைத்துள்ளன. டாஸ்மாக் கடைகளை மூடுவதோ, மணல்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பதோ, எப்பிரச்சினையானாலும் மக்களே அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே முடியும் என்பதை இப்போராட்டங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

மக்கள் அனைவரும், தங்களின் வலிமையை சார்ந்து நடத்தும் போராட்டங்களால் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்பதை உணர்ந்து பற்றி டாஸ்மாக் கடைகளை முற்றாக அகற்ற, அதிகாரத்தைக் கையில் எடுக்குமாறு கோருகிறோம்.

மே 5 டாஸ்மாக் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீசார் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க