Tuesday, June 18, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பி.வி.ஆர் சினிமா - அபராதம் வசூலித்த மக்கள் போராட்டம்

பி.வி.ஆர் சினிமா – அபராதம் வசூலித்த மக்கள் போராட்டம்

-

ரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்குறவங்க நாங்க. ஏப்ரல் 14 – அலுவலக் விடுமுறைங்கிறதால ஜங்கிள் புக் (Jungle Book) படம் பார்க்கலாம்னு நாங்க டிக்கெட் முன்பதிவு பண்ணியிருந்தோம்.

வேளச்சேரியில் அமைந்துள்ள PVR Cinemas
வேளச்சேரியில் அமைந்துள்ள PVR Cinemas

காலைல 9.15க்கு காட்சி. நண்பர்கள் எல்லாரும் முன்னாடியே போயிட்டாங்க. நான் எப்பவும் போல கொஞ்சம் லேட். படம் போடறதுக்கு முன்னாடி போகனும்னு வேக வேகமாக தியேட்டருக்குப் போனேன். மணி சரியா 9:20. படம் இன்னும் போடல. ’அப்பாடான்னு’ சீட்ட பாத்து ஒக்காந்து மூச்சு வாங்கினேன்.

பசங்க கிட்ட கேட்டேன் ”ஏன்டா இன்னும் படம் போடல? நான் வேற விழுந்தடிச்சுகிட்டு ஓடி வந்தேன்…கொஞ்சம் மெதுவா வந்திருக்கலாம் போலிருக்கு!”ன்னேன். ”இல்லடா… படம் இப்ப போட்ருவாங்க”னு பசங்க சொன்னாங்க.

அது குழந்தைங்க படம்…அதுவும் லீவு நாள் வேறங்கறதனால தியேட்டர்ல நெறைய குட்டி வாண்டுகளோட கூட்டம். அதுவும் பெரும்பாலனவங்க வேற மாநிலத்த சேர்ந்தவங்க (நம்ம தமிழ் மக்கள்தான்   ’தமிழ் புத்தாண்டு’ கொண்டாட கோவில் வரிசையில நின்னிகிட்டு இருப்பாங்களே!). குழந்தைகளுக்காகதான் அவங்க காலைல எழுந்து எல்லா வீட்டு  வேலையும் முடிச்சிட்டு வந்திருபாங்க போல…சுட்டீஸ் கூட்டம் ஒரே கலை கட்டிச்சு.  குழந்தைங்களோட கண்ணுல உற்சாகம்.

மணி 9:40 ஆயிடுச்சு…இன்னும்  படம் போடல. குழந்தைங்கெல்லாம் துறுதுறுன்னு அங்கயும் இங்கயும் அலஞ்சிகிட்டு இருந்தாங்க. எல்லோரும் போயி தின்பண்டம் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. ”பாப்கார்ன் வாங்கவா, பப்சா, ஐஸ்கிரீமா”ன்னு ஒரே சலசலப்பு.

தி. ஜங்கிள் புக் - திரைப்படம்
தி ஜங்கிள் புக் – திரைப்படம்

நாங்க  முன்கதவுகிட்ட நிக்கிற ஊழியர் ஒருத்தர்கிட்ட போயி ”சார் என்ன பிரச்சனை…ஏன் இன்னும் படம் போடல”ன்னு கேட்டோம். அவரு ”ஒரு சின்ன டெக்னிகல் பிரச்சினை சார்….இன்னும் 5 நிமிஷம் சார்”ன்னு சொன்னாரு. சரின்னு திரும்ப சீட்டுக்கு வந்து உக்காந்தோம்.

மணி பத்தாச்சு, இதுக்கு மேலயும் முடியாதுன்னு திரும்ப அந்த ஊழியர்கிட்ட போயி கேட்டோம். அவருக்கு சரியா பதில் சொல்ல தெரியல. ”யாரயாவது வரச்சொல்லுங்க…படமும் போட மாட்டிங்கிறீங்க….பதிலும் சொல்ல மாட்டிங்கிறீங்க”ன்னு சொன்னோம். அவரு சரின்னு சொல்லிட்டு எங்கேயோ போனாரு…

நாங்க பேசிக்கிட்டு இருக்கறத பாத்துட்டு எங்ககிட்ட வந்து மக்கள் ”என்ன ஆச்சு ஏன் இன்னும் படம் போடல”ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. ”கொஞ்ச நேரத்தில படம் போடலியின்னா டிக்கட் காச திருப்பி குடுக்க சொல்லுங்க”ன்னு சில பேரும், ”டிக்கெட் காச மட்டும் திரும்ப கொடுத்தா பத்தாது… வண்டி பார்கிங் காசு ஆன்லைன் புக்கிங் காசு ஸ்நாக்ஸ் காசு  எல்லாத்தையும் திருப்பி தரனும்”னு சில பேரும் சொன்னாங்க. நாங்க ”சரி… நாம எல்லாத்தையும் சேர்த்து கேட்கலாம்”ன்னு சொன்னோம்.

டிக்கெட் காசு ரூ.120/- தவிர; ஆன்லைனில் புக்கிங்குக்கு ரூ.30/-; பார்கிங் ரூ.20/-; ஸ்நாக்ஸ் ரூ.100/-; அப்டின்னு கிட்டத்தட்ட எல்லாருமே ரூ.300/-க்கும் மேல் செலவு செஞ்சிருப்பாங்க…

கொஞ்ச நேரத்துல கருப்பு பேண்ட், வெள்ள சட்ட போட்ட ஒருத்தர் வந்தாரு. மேனேஜர் போலிருக்கு. அவர் வந்து ”சார் டெக்னிகல் பிராப்ளம். ஜங்கிள் புக் போட முடியாது…தெறி படம் போடுறோம் பாருங்கன்னு சொன்னாரு. உடனே தியேட்டர்ல எல்லாரும் கத்த ஆரம்பிச்சுட்டாங்க. சத்தம் அதிகமாயிடுச்சு. மேனேஜர் யாராவது ஒருத்தர் பேசுங்கன்னு சொன்னார்.

சரின்னு நான் ஒருத்தன் மட்டும் அவர்கிட்ட பேச ஆரம்பிச்சேன்.

நேரம்: 10.30AM

நான்: சார் ஜங்கிள் புக் பார்க்கத்தான் இங்க பல பேரு குடும்பத்தோட குழந்தைங்கள கூட்டிகிட்டு வந்திருக்காங்க. இதுல நெறைய பேரு தமிழ்நாட்ட சேந்தவங்க இல்ல…வேற மாநிலத்த சேந்தவங்க. அவங்களுக்கு தமிழ் வேற தெரியாது…

மேனேஜர்: அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது சார். தெறி தான் போட முடியும்.

நான்: படம் போட முடியலன்னா முன்னமே நீங்களா வந்து சொல்லியிருக்கனும். நாங்க வந்து கேட்டபிறகு 50 நிமிடம் கழிச்சு சொல்றீங்க. இப்ப மணி பத்தரை…கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் லேட். தெறி பார்க்க முடியாதுனு பலரும் சொல்றாங்க.

மேனேஜர்: வேற என்ன பண்ணனும்னு சொல்லுறீங்க.

நான்: (மக்கள்கிட்ட கலந்து பேசிட்டு) இவ்வளவு நேரம் எங்கள காக்க வச்சது உங்க தப்பு. இப்பவும் நாங்களா வந்து கேக்கலன்னா இன்னும் எவ்வளவு நேரம் வெயிட் பண்ண வச்சிருப்பீங்களோ. தப்பு உங்க மேலங்கறதுனால, நாங்க கேட்குறது 2 விசயம்:

  1. தமிழ் ரசிகர்களுக்கு: டிக்கெட் கட்டணம் + ஆன்லைன் புக்கிங் கட்டணம் + Snacks பணம் + பார்கிங் பணம் + தெறி படம் (கட்டணம் இல்லாமல்) போடுங்க வேற்று மாநிலத்தவருக்கு மேலே சொன்னபடி பணமும் Jungle Book படம் ஒரு நாள் போடுங்க (கட்டணம் இல்லாமல்).
  1. இல்லேன்னா அனைவருக்கும் பொதுவாக மேல சொன்ன எல்லாக் கட்டணமும் தந்துட்டு இன்னொரு நாள் Jungle Book படம் போடுங்க. நாங்க எல்லாரும் வந்து பாக்குறோம்.

மேனேஜர்: அதெல்லாம் முடியாதுங்க

நான்: அப்படினா இங்க இருக்குற யாரும் வெளிய போகமாட்டாங்க

மேனேஜர்: (கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு…) வெயிட் பண்ணுங்க வந்துடறேன்… (கொஞ்ச நேரத்துல மேனேஜர் போலீச கூட்டிக்கிட்டு உள்ள வர்ராரு; இதப் பாத்ததும் மக்கள் கோபத்துல கத்த ஆரம்பிச்சுட்டாங்க)

நான்: இப்ப எதுக்கு போலிச கூட்டிகிட்டு வந்தீங்க?

மேனேஜர்: என்னோட பாதுகாப்புக்காக (போலீஸ் வந்தவுடனே PVR ஆட்கள்லாம் ரொம்ப திமிரா பேச ஆரம்பிச்சுட்டாங்க. போலீச அவங்க அடியாள் மாறி வச்சிருக்காங்க போல!)

நான்: நாங்க என்ன உங்கள திட்டுனமா? கைய நீட்டுனமா?

மேனேஜர்: இல்லை

நான்: நியாயமா அமைதியான முறையிலதான பேசிட்டு இருக்கோம். அப்புறம் எதுக்கு போலிச கூட்டிகிட்டு வந்தீங்க? அவங்கள போக சொல்லுங்க அப்பத்தான் பேசுவோம் (அப்டின்னு சொல்லிட்டு எல்லோரும் சீட்ல போயி ஒக்காந்துட்டோம்)

போலீஸ்: டேய் நீங்கலாம் ஓவரா போறீங்க உங்கள எப்படி கவனிக்கனும்னு எனக்கு தெரியும் (அப்டின்னு சொல்லிட்டு வெளியே போயிட்டாங்க)

கூட்டத்தில் ஒரு முதியவர்: தம்பி நீங்க பேசுறதுதான் சரி. நாங்க இருக்கோம் நீங்க பேசுங்க…

மேனேஜர்: ரூல்ஸ்படி படமும் போட முடியாது, பணமும் தரமுடியாது.

கூட்டத்தில் ஒருவர்: ரூல்ஸ்படி படம் போட முடியாட்டி 20 நிமிடத்தில் சொல்லிருக்கணும் சொன்னீங்களா? 50 நிமிடம் கழிச்சு நாங்க எல்லாம் வந்து கேட்ட பின்னாடி தானே சொன்னீங்க. உங்க ரூல்ஸ்ச நீங்களே மதிக்கல. இது மட்டும் சரியா?

நேரம்: 11:15AM

நான்: 2 மணி நேரமாச்சு குழந்தைங்க எல்லாம் நல்லா தூங்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க சொன்னதுல ரெண்டுல ஒன்னு சொல்லுங்க சார்.

மேனேஜர்: எங்க நிலைமைல இருந்து யோசிங்க சார்.

நான்: ரசிகர்கள் தாமதமா வந்தா படத்த மறுபடியும் மொத இருந்து போடுவீங்களா?

மேனேஜர்: அது எப்படி சார் முடியும்?

நான்: நாங்க இங்க 300 பேருக்கு மேல இருக்கோம் உங்க ஒருத்தர் பத்தி நாங்க எதுக்கு யோசிக்கணும் நீங்கதான் எங்க நிலைமைல இருந்து யோசிக்கணும் நீங்க மட்டும் ரசிகர்கள் நிலைமயில இருந்து யோசிக்க மாட்டிங்க. நாங்க மட்டும் உங்கள பத்தி யோசிக்கணுமா? ஏற்கனவே 2.30 மணி நேரம் ஆச்சு. போலிச கூட்டிகிட்டு வந்து மிரட்டுறீங்க. சீக்கிரம் ஒரு முடிவு சொல்லுங்க.

மேனேஜர்: (மொதல்ல ”கண்டிப்பாக முடியாது”ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவர் கொஞ்ச நேரம் கழிச்சி) பணம் தர்றோம் ஆனால் படம் போட முடியாது.

மக்கள்: நீங்க எப்படி அடுத்த காட்சி ஒட்டுறீங்கனு பார்க்கறோம் (அப்டின்னு சொல்லிட்டு எல்லாரும் சீட்ல உக்காந்துட்டாங்க. எல்லாரும் ஒரே வாய்ஸ்ல ‘மூவி மூவி மூவீஈஈஈ’ எனக் கத்த ஆரம்பிச்சுட்டாங்க)

இளைஞரும் நண்பர்களும் இருக்குற மக்கள்கிட்ட கலந்து பேசி வேறு ஒரு கோரிக்கை வைத்தனர் மேனேஜரிடம்.

இளைஞர்: சரி சார் மொத்த பணம் + ரூ.50/- அபராதம் ஒரு டிக்கெட்டுக்கு. சரியா?

மேனேஜர்: வெயிட் பண்ணுங்க வர்றேன் (வெளியே போனவரு திரும்பவும் போலீசோடு வர்ராரு).

போலீஸ் SI: (மக்கள் கூட்டத்த பாத்து) ஒழுங்கு மரியாதையா குடுக்குறத வாங்கிகிட்டு வெளியே ஒடீருங்க…இல்லாட்டி வேற மாறி ஆயிடும்.

இளைஞரும் நண்பர்களும்: வேற மாதிரியா, வேற மாதிரினா என்ன சார்? போலீஸ் யாருக்கு வேலை செய்யணும்? மக்கள் பாதுகாப்புக்கு தானே போலீசு, இங்க என்ன PVRக்கு அடியாள் வேலை செய்றீங்க. இங்க என்ன நடந்துச்சுனு தெரியுமா?

கான்ஸ்டபிள்: அதெல்லாம் எதுக்கு கேக்குற. நீதானா, வாடா ஒத்தைக்கு ஒத்த பார்த்துக்கலாம் (அப்டின்னு சொல்லிட்டு காலர் பட்டன கழட்டுறாரு)

நான்: சரி வாங்க பார்த்துக்கலாம்

இதுக்கு நடுவுல என் ஃப்ரண்ட்ஸ், மத்த இளைஞர்கள் ஒரு 6 பேரு (3 ஆண் + 3 பெண்) எல்லா சீட் வரிசையிலும் போயி எல்லாரும் ஒத்துமையா இருக்கணும்னு மக்கள் 3௦௦ பேரையும் ஒன்னு திரட்டினாங்க.

போலீஸ் SI: முன்னாடி நிக்கிறவங்கள போட்டோ எடுய்யா. வெளியே வருவானுகல்ல பார்த்துக்கலாம்.

மக்கள்: அவங்கள மட்டும் ஏன் மிரட்டுறீங்க?. நாங்களும் தான் கேட்கிறோம் (மூவி மூவி மூவி என ஒருவர் கத்த….அனைவரும் மூவீஈஈஈஈஈஈஈ என்று கத்த ஆரம்பித்தனர்)

மேனேஜர்: என்ன செய்யறது?

இளைஞர்: கடைசியா கேட்டத ஒத்துக்கங்க இல்லாட்டி அடுத்த ஷோவும் ஓடாது.

மேனேஜர்: சரி தர்றோம் (குண்டர்களும் போலிசும் மொறச்சி பாத்துக்கிட்டே வெளியே போயிட்டாங்க)

PVR Cinemas
PVR Cinemas

எல்லாருக்கும் ரூ.50/- அபராதத்தோட மொத்த பணத்தையும் திரும்ப கொடுத்தாங்க. மக்கள் எல்லார்கிட்டயும் ஏதோ சாதிச்சுட்ட மாதிரி ஒரு சந்தோசம். ஒரு அநியாயத்த எதித்து நின்னு ஜெயிச்சா கிடைக்கிற மகிழ்ச்சின்னு புரிஞ்சது.

மக்கள் சில பேரு எங்கிட்ட வந்து”சூப்பர் சார் இதுபோல 2 முறை படம் போடாம எங்கள ஏமாத்தியிருக்காங்க அப்பல்லாம் கோபமா வரும். திரும்பி போயிருவோம். ஆனா இன்னைக்கு படம் பார்க்காம போனாலும் சந்தோசமா இருக்கு இத மறக்க முடியாது” அப்டின்னு பாராட்டினாங்க. PVR வரலாற்றுலேயே இது ஒரு மறக்கமுடியாத சவுக்கடி சம்பவமா இருக்கும்னு நெனைக்கிறேன்.

படம் பார்க்க வந்த ஒரு பெரியவரு PVR ஆட்களப் பாத்து ”உங்க பணத்திமிரையும், ஆணவத்தையும், உண்மை முகத்தையும் கண்டிப்பாக வெளியே சொல்லுவோம்” அப்டின்னு கோபத்தோட சொல்லிட்டுப் போனாரு.

வேற்று மாநிலத்த சேர்ந்தவங்க அந்த மேனேஜர் கிட்ட போய் ”இந்த மாதிரி நாங்க ஒரு நாள் வந்தப்ப படம் போட முடியலன்னு வெறும் டிக்கெட் காசு ரூ.120 மட்டும் குடுத்து வெளிய போங்கனு சொன்னிங்க. இன்னைக்கு நிறைய பேர் சேர்ந்து நின்னு கேட்டவுடன் அபராதம்லாம் தர்றீங்க. ரொம்ப கேவலமா இருக்கு நீங்க பண்றது” அப்டின்னு சொன்னாங்க; மேனேஜர் அவமானத்துடன் பதில் கூற முடியாமல் திருடன் மாதிரி முழிச்சாரு. பாவம் அவரு என்ன பண்ணுவாரு… மொதலாளியோட கையாளு… அவருக்குத்தான் விசுவாசமா இருக்கனும்…இல்லேன்னா அவருக்கு வேலை போயிடும்…

இன்னிக்கு நடந்த சம்பவத்துல பல மாநிலங்கள சேந்தவங்களா இருந்தாலும், பல மொழி பேசுறவங்களா இருந்தாலும், பல மதம் / சாதிய சேந்தவங்களா இருந்தாலும் எல்லாரும் கடைசிவரை ஒத்துமையா இருந்ததனாலத்தான் ஜெயிக்க முடிஞ்சது. ஆனா இந்த எலக்க்ஷன் டைம்ல, பல அரசியல்வாதிங்க ‘தமிழன்’, ’இந்து, ‘சாதிக்காரன்’ அப்டின்னு மக்கள ஓட்டுக்காக பிரிக்க பல முயற்சி செய்யிராங்க. அது எவ்வளவு தப்புன்னு பிராக்டிகலா உணர்ந்தோம்.

படம் பாக்கறப்போ கிடைக்கிற சந்தோசத்தவிட ரொம்ப சந்தோசமா நானும் என் ஃப்ரண்ட்ஸும் தியேட்டர விட்டு வெளிய வந்தோம்.

***

 ”போராட்டமெல்லாம் முடியாது சார். யார் சார் போராட வருவாங்க? நீங்க சொல்லுறதெல்லாம் நடக்குற காரியமா சார்?” இப்படிக் கேட்கிறவர்கள் மேற்சொன்ன சம்பவத்தை அப்படியே அரசியலுக்குப் பொருத்திப் பாருங்கள்.

உதாரணமாக சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் ஆயத்த ஆடை தொழிலாளிகள் நடத்திய போராட்டம் மொத்த நாட்டின் தொழிலாளிகளுக்கும் சேர்த்துதான் நடந்தது. அந்தப் போராட்டம்தான் தொழிலாளிகளின் PF பணத்தில் நடக்க இருந்த கொள்ளையைத் தள்ளிப் போட்டுள்ளது.

போராடும் மக்கள்
போராடும் மக்கள்

ஆனால் இன்று அதுபோல் சில அடிப்படை பிரச்சினைகளுக்காகப் போராடும் மக்களை கேவலமாக சித்தரிக்கின்றனர் சிலர். ”பாருங்க சார் குழந்தைகளைக் கூட்டிகிட்டு வந்து போராடுறாங்க, டிராபிக் ஜாம் பண்றாங்க, ஆம்புலன்ஸ் நிக்குது, வேலைக்கு லேட் ஆக்குறாங்க, காசு வாங்கிட்டு

போராடுறாங்க, எல்லாம் பப்ளிசிட்டிக்காக பண்றாங்கப்பா இவங்க” என்பன போன்ற பல்வேறு வார்த்தைகளில் மக்களின் நியாயமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் பெரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ரௌடிகள் தங்களது தலைவியோ, தலைவரோ அடித்த கொள்ளைக்காக தண்டனை தரப்படும்போது செய்யும் ரௌடித்தனங்களையெல்லாம் மௌனமாகக் கடந்து செல்கின்றனர். கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் தார் ரோட்டில் டிராபிக் ஜாம் ஆகி பஸ்ஸிலும், டூ வீலரிலும் மக்கள் புழுங்கித் தவிக்கும் போது ஒரே ஒருவருக்காக, கப்பல் மாதிரி கார்கள் ரோட்டை அடைத்துக் கொண்டு நிற்கும் போதெல்லாம் ஆம்புலன்ஸ் வெயிட் பண்ணுவதைப் பார்த்து மக்கள் கொதிப்பதில்லை. ஆனால், சாதாரண மக்கள் போராடும்போது மட்டும் இந்த நியாவான்களின் நியாய உணர்வு கொதித்தெழுந்து வந்துவிடும். ஆனால், அப்படி அடிப்படைப் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்கள் அப்படி கொச்சைப் படுத்துபவர்களுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள் என்பதை உணருவதில்லை. உதாரணமாக, பெங்களூர் தொழிலாளர்களின் போராட்டம் போராட்டங்களைக் கொச்சைப்படுத்துபவர்களின் PF பணத்தையும் சேர்த்துத்தான் பாதுகாத்துள்ளது (தற்காலிகமாகவாவது).

ஆக, போராட்டங்களின் பயன்களை அனுபவிப்பவர்கள்தான் போராட்டங்களையும் போராடும் மக்களையும் இழிவானவர்களாகப் பார்க்கின்றனர். இரண்டே பக்கம் உள்ள ஒரு போராட்ட நோட்டிசைக் கூட வாசிக்க மனமின்றி கசக்கிக் கீழேபோடும் இது போன்றவர்களுக்கு அந்தத் துண்டுப் பிரசுரம் தயாரிக்க செலுத்தப்பட்ட உழைப்பின் அருமை உணருவதில்லை. இப்படியெல்லாம் செய்பவர்கள் பெரும்பாலும் படித்த அறிவுள்ள நடுத்தர உயர்நடுத்தர வர்க்க மக்கள்தான்.

அப்படிப்பட்ட இந்த மக்களுக்கும் போராடுவதுதான் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை இச்சம்பவம் உணர்த்தியிருக்கும் என்று நம்புவோம்!

போலிசையும், PVR நிர்வாகத்தையும் ஒற்றுமையுடன் இருந்து சிதறடித்த மக்களுக்கும், ”போராட்டமே மகிழ்ச்சி” என உணர வைத்த இளைஞர்களுக்கும், அப்படி உணர வைக்க ஒரு வாய்ப்பை வழங்கிய PVR நிர்வாகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

– ரஞ்சித்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க