privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை விரட்டுவோம் - செய்தி - படங்கள்

மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை விரட்டுவோம் – செய்தி – படங்கள்

-

மோடி அரசின் சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பிற்கு எதிரான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கண்டன ஆர்ப்பாட்டம்

1. சென்னை

rsyf-sanskrit-protest-chennai-3மஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக்குவது, சமஸ்கிருதப் பள்ளிகளைத் துவங்குவது, என்று இந்துத்துவ கருத்துகளை புகுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும், மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து 29-06-2016 அன்று காலை 11.30 மணி அளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னை மாநகர செயலாளர் தோழர் ராஜா, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிக் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் திரு. ஆர். சிவகுமார். வேல் டெக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் சாந்தி, மதுரவாயல் அரசுப் பள்ளி மாணவர் ஆகாஷ், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். த. கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.

rsyf-sanskrit-protest-chennai-1தோழர்களின் கண்டன முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது. முதலில் உரையாற்றிய பேராசிரியர் திரு. சிவகுமார், “1960 களில் இந்தியை திணிக்க முயன்றபோது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்த்துப் போராடி, இந்தித் திணிப்பை முறியடித்தனர். இன்று சமஸ்கிருத மொழியில் தான் அறிவியல் உள்ளது என்று சொல்லி பிள்ளையார் பிறந்த கதையையும், கெளரவர்கள் பிறந்த கதையும் கூறிவருகின்றனர். இப்படிப்பட்ட மொழியை தான் கண்டிப்பாக படித்தாகவேண்டும் என்று மோடி அரசு திணிக்கிறது. உண்மையில் இதைப் பார்த்து உலகில் உள்ள எல்லா அறிவியலாளர்களும், ஆய்வாளர்களும் மத்திய அரசைப் பார்த்து காறித் துப்புகின்றனர். இருந்தாலும் சமஸ்கிருத்த்தை திணித்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. இது ஒட்டுமொத்தமாக நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும். மாணவர்கள் இளைஞர்களால் மட்டுமே இதனை முறியடிக்க முடியும்” என்றார்.

rysf-chennai-sanskrit-protest-6அடுத்தாக பேசிய, பேராசிரியர் சாந்தி, “சமஸ்கிருதம் ஆண்டாண்டு காலமாக பெண்களை இழிவுபடுத்துவதாக தான் உள்ளது. பெண்கள் என்றால் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு அடிமைகளாகத் தான் இருக்க வேண்டும், படிக்கக் கூடாது, வெளியுலக அறிவைப் பெறக் கூடாது என்று தான் இந்த சமஸ்கிருத பண்பாடு கூறுகிறது. புதிய கல்விக்கொள்கை சொல்ல வருவது, பெண்கள் இனி வீட்டுக்குள் இருந்து வீடியோ மூலமும் டி.டி.எச் மூலமும் படித்துக் கொள்ளலாம், என்று சொல்கிறது. இதன் அர்த்தம் பெண்கள் வெளியே வரக் கூடாது, வெளியுலக பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளக்கூடாது, புதிதாக கற்றுக் கொள்ளக்கூடாது, என்று பெண்களை மீண்டும் பிற்போக்கு அடிமைத்தனத்துக்குள் தள்ளுவதையே நோக்கமாக வைத்துள்ளது. மோடி அரசின் இந்த கயமைத் தனத்தை மாணவர்கள், இளைஞர்கள் எதிர்த்து முறியடிக்க வேண்டும்” என்று கூறினார்.

மதுரவாயல் அரசுப் பள்ளி மாணவர் ஆகாஷ், “மாணவர்களுக்கு சமஸ்கிருதம் என்ற ஒரு மொழி இருப்பது கூட தெரியவில்லை. கோவிலில் மணியாட்டும் பார்ப்பனியர்களுடைய பாஷை, என்றால் தான் தெரிகிறது. இந்த மொழி சொல்லும் பண்பாடு, ஒருவர் எத்தனை மனைவி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பது போன்ற பல கேவலமான விசயங்களை தான் சொல்கிறது. நம்முடைய தாய் மொழியை அழித்து, இப்படிப்பட்ட இழிவான மொழியை நம்முடைய தாய் மொழியாக்க நினைத்தால் நாம் எப்படி சும்மா இருக்க முடியும். இந்தித் திணிப்பை எதிர்த்து எப்படி பள்ளி மாணவர்களும் கூட களமிறங்கி போராடி இந்தியை விரட்டி அடித்தனரோ அதைப் போன்று நாமும் போராட வேண்டும்” என்று கூறினார். இறுதியாக, “பார்ப்பனர்கள் ஆட்டுவது கோவில் மணி, அவர்களுக்கு அடிக்க வேண்டும் சாவு மணி” என்று பேசி முடித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

rsyf-sanskrit-protest-chennai-2இறுதியாக பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன், “இன்று இந்தி படித்தால் தான் வேலை, சமஸ்கிருதம் படித்தால் தான் வேலை என்று கூறுகின்றனர். ஆனால் வட மாநில தொழிலாளர்கள் பல பேர் இங்கு வருகின்றனர். அசாம், ஒரிசா, பீகார் இந்த மாநிலங்களில் அவர்களுடைய தாய்மொழியை அழித்து அவர்கள் இந்தி படித்ததன் விளைவு அவர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர். எதார்த்தத்தில் இந்தி படித்தால் தான் வேலை என்பது உண்மை இல்லை. முதலில் சமஸ்கிருதத்தை அழித்த்தும் இந்த பார்ப்பனர்கள் தான். காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துவது, பேசினால் நாக்கை அறுப்பது, வேதத்தைக் கண்ணால் பார்த்தால் கண்களைக் குருடாக்குவது என்று கொடூரமான முறையில் சமஸ்கிருத்த்தை அழித்தனர். இன்று வெறும் 15000 பேர் கூட பேசாத, வழக்கில் இல்லாத செத்த மொழியை தூக்கிவைக்க காரணம், அவனுடைய சாதிய பண்பாட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே. எப்படி இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பல்வேறு கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் போராடினார்களோ, அதே போல் இன்று உள்ள சூழலில், இந்த சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து நாம் தான் போராடியாக வேண்டும்” என்று பேசி முடித்தார்.

மழையையும் பொருட்படுத்தாமல், இறுதிவரை போராட்ட்த்தை நடத்தி, சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, இந்தி எதிர்ப்பு போராட்ட்த்தைப் போன்று மீண்டும் ஒரு போராட்ட்த்தை முன்னெடுக்க மாணவர்கள், இளைஞர்களை அறைகூவி அழைக்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்தேசிய இனங்களின்
அடையாளங்களை அழிப்பதே
பார்ப்பன பாசிச மோடி அரசின்
சமஸ்கிருத திணிப்பு!
வேதகலாச்சார திணிப்பு!

செத்த மொழிக்கு மகுடமாம்!
ஆரிய மொழிக்கே அரியணையாம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி
பார்ப்பன பாசிச கும்பல்
கள்ளுக் குடித்த குரங்கைப் போல
அதிகார போதையில் ஆட்டம் போடுது!

வேத-வைதீக கலாச்சாரத்தை
பார்ப்பனீய சாதித் தீண்டாமையை
ஆபாச குப்பைகளை
புராண – இதிகாச கட்டுக் கதைகளை
பிஞ்சு மனசில் நஞ்சை விதைக்க
சமஸ்கிருதம் கட்டாயப் பாடம்

டாடா, பிர்லா, அம்பானி போன்ற
தரகு அதிகாரவர்க்க முதலாளிகளுக்கும்
பன்னாட்டு முதலாளிகளுக்கும்
பாதம் தாங்கி சேவை செய்யவே
ஆர்.எஸ்.எஸ்-ன் அகண்ட பாரதம்!

இந்து – இந்தி – இந்தியா எனும்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யின்
இந்து ராஷ்டிரக் கனவைத்
தகர்த்தெறிவோம் தகர்த்தெறிவோம்!

கல்வியைக் காவிமயமாக்க
புதிய கல்விக் கொள்கை!
கிழித்தெறிவோம் கிழித்தெறிவோம்
புதிய கல்விக் கொள்கையைக்
கிழித்தெறிவோம் கிழித்தெறிவோம்!

திராவிட – தமிழ் மொழிக்கும்,
தமிழின பண்பாட்டிற்கும் எதிரியே
ஆரிய – சமஸ்கிருதமும்
வேத கலாச்சாரமும்!

தமிழினமே திரண்டெழு!
இந்தித் திணிப்பை முறியடித்த
மாணவர் சமூகமே திரண்டெழு!
ஆரிய – பார்ப்பன படையெடுப்பை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

2. திருச்சி

த்தியில் மோடி அரசு ஆட்சியில் அமர்ந்ததிலிருந்தே கல்வி – பண்பாட்டில் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து மதவெறி கருத்துக்களை புகுத்துவது, சாதி – மதக்கலவரங்களை தூண்டிவிடுவது, கல்வி நிறுவனங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மத்திய பல்கலைக் கழகங்களின் முக்கிய பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்-காரர்களை நியமிப்பது, எதிர்க்கும் மாணவர்களை ஒடுக்கும் வகையில் போலீசை ஏவி தேசதுரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை போடுவது, தீன்நாத் பத்ரா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் அம்பிகளை வரலாற்றாசிரியர்களாக நியமித்து வரலாற்றை திரித்து புரட்டுவது என தன்னுடைய பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை அரங்கேற்றிவருகிறது.

rsyf-sanskrit-protest-trichy-posterஅதன் ஒரு பகுதியாக இந்த கல்வியாண்டு (2016 – 17) முதல் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மூன்றாவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. தமிழ் உட்பட இந்தியா முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் பேசக்கூடிய 20-க்கும் மேற்பட்ட தேசிய மொழிகளை – தாய் மொழியை – படிப்படியாக அழித்து, சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கும் ஆர்.எஸ்.எஸ்-சின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையிலும், அரசின் தனியார்மய – தாராளமய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறான மக்கள் போராட்டங்களை திசை திருப்பும் வகையிலும் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்குகிறது மோடி அரசு. இதை எதிர்த்து தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளின் உரிமையை நிலைநாட்டும் வகையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதையொட்டி, திருச்சியில் 28-06-2016 மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

rsyf-sanskrit-protest-trichy-6ம.க.இ.க மையக் கலைக்குழுவின் பறையிசையுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

தலைமையுரையாற்றிய பு.மா.இ.மு மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் செழியன், “மோடி ஆட்சிக்கு வந்தபின்பு ஆர்.எஸ்.எஸ்-காரர்களை நியமித்து வரலாற்றை திருத்தி எழுதுவது, நாட்டையே பார்ப்பனமயமாக்குவதன் ஒரு பகுதியாக தான் இன்று சமஸ்கிருத திணிப்பைக் கொண்டு வருகிறார்கள். மறுபக்கம், காட்ஸ் ஒப்பந்தம் என்ற பெயரில் கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து வியாபாரமாக்குவது, நாட்டின் இயற்கைவளங்கள் அனைத்தையும் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு அடகு வைக்க ஏதுவாக இந்துமதவெறிக் கலவரங்களை தூண்டிவிடுகிறது” என மோடி கும்பலை அம்பலப்படுத்தினார். “இந்தி திணிப்பிற்கு எதிராக போராடியது போல சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக போராட முன்வர வேண்டும்” எனக் கூறினார்.

rsyf-sanskrit-protest-trichy-5கண்டன உரையாற்றிய திராவிடர் கழகத்தின் மாநில மாணவரணி துணைச் செயலாளர் தோழர் அஜிதன், பார்ப்பனியம் எவ்வாறு நம்மை சாதி ரீதியாக பிளவுபடுத்தியுள்ளது என்பதையும், அன்று பெரியார் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது போல இன்று சமஸ்கிருதத்தை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது என்பதையும், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகள் இருக்கும் போது சமஸ்கிருதத்தை எதிர்க்க காரணம் நம்மை சூத்திரன் என்று இழிவுபடுத்தியது, பெண்ணடிமைத்தனத்தை உருவாக்கியது சமஸ்கிருத மொழி. இது மொழித் திணிப்புமட்டுமல்ல பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு என விளக்கிப் பேசினார்.

rsyf-sanskrit-protest-trichy-4பு.மா.இ.மு-வின் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் குமார், “இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பேசக்கூடிய பல மொழிகள் இருக்கும் போது 3000 பார்ப்பனர்கள் பேசக் கூடிய மொழியை நம் மீது திணிக்கக் காரணம் ஆர்.எஸ்.எஸ்-ன் ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சார இந்து ராஷ்டிர கனவை நிறுவவே. சமஸ்கிருதம் கற்பிப்பது வஞ்சகத்தையும், துரோகத்தையும் மட்டுமே. நம்மை வேசி மகன் என்றும், நம் தாய் மொழியை வேசி மொழி என்றும் இழிவுபடுத்தியது ஆங்கிலமல்ல சமஸ்கிருதம் தான். எனவே தான் நாம் அதை தீவிரமாக எதிர்க்கிறோம். சமஸ்கிருதத் திணிப்புக்கெதிராக போராட அனைவரும் முன்வர வேண்டும்” எனக் கூறினார்.

rsyf-sanskrit-protest-trichy-1சிறப்புரையாற்றிய ம.க.இ.க-வின் மாநில இணைப் பொதுச்செயலாளர் தோழர் காளியப்பன், “அன்று மகாபாரதத்திலும், பகவத்கீதையிலும் நடந்த சூழ்ச்சியை இன்று பகிரங்கமாக அரங்கேற்றுகிறது மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் கும்பல். அன்று பார்ப்பன கும்பல் நம்மை சமஸ்கிருதத்தை படிக்கவிடாமல் தடுத்து அழித்துவிட்டு, இப்போது செத்த மொழியை தூக்கிநிறுத்த முனைவதையும், கல்வித்துறையைக் கைப்பற்றுவதன் மூலமும், ஆட்சியதிகாரத்தை தக்க வைக்க இந்து என்ற போலிமத உணர்ச்சியை, மதவெறியை அதனடிப்படையிலான தேசவெறியை, வல்லரசு மயக்கத்தை உருவாக்கி தன் இந்துராஷ்ட்ர கனவை நிறைவேற்றத் துடிப்பதையும் அம்பலப்படுத்தி பேசினார்.

rsyf-sanskrit-protest-trichy-2தன்மானத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் இன்று பட்டப்பகலில் உடுமலை சங்கரை வெட்டியதை வேடிக்கை பார்த்த கொடூரத்தையும், ஓட்டை விலைக்கு விற்கும் தமிழனின் இழிநிலையையும் சுட்டிக்காட்டி சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக போராட முன்வர வேண்டுமென்று அறைகூவல் விடுத்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையும், இந்த அரசுக்கட்டமைப்பே சீர்குலைந்து, தோற்றுப்போய், மக்களுக்கு எதிராக மாறிப்போனதை கூறி, மக்களின் விருப்பம் – அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் தான் அதிகாரிகள். சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக போராடும் அதே சமயம், இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே அதிகார வெறிக்கு முடிவு கட்டும் வகையிலான போராட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறினார்.

rsyf-sanskrit-protest-trichy-3இறுதியாக பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சியின் இடையிடையே பாடப்பட்ட ம.க.இ.க மையக் கலைக்குழுவின் பார்ப்பன எதிர்ப்பு பாடல்கள் பார்ப்பனியத்தை, ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலை அம்பலப்படுத்தும்படியும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மற்றும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களுக்கு உணர்வூட்டும்படி அமைந்தது.

தகவல்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

3. தருமபுரி

  • பல்தேசிய இன அடையாளங்களை அழிக்கவே மோடி அரசின் சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பு
  • திராவிட தமிழ் மொழிக்கும் தமிழின பண்பாட்டிற்கும் எதிரியே ஆரிய-சமஸ்கிருதமும் வேத கலாச்சாரமும்
  • தமிழினமே திரண்டெழு ஆரிய பார்ப்பன படையெடுப்பை முறியடிப்போம்

rsyf-dpi-sanskrit-protest-2ருமபுரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 28-06-2016 செவ்வாய் மாலை 4 மணிக்கு பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு தலைமை தாங்கி பேசும் போது, “தனியார் பள்ளி கல்லூரியின் கட்டணக் கொள்ளைகளுக்கு ஏதுவாக இப்போது கொண்டு வரப்படுகின்றன புதிய கல்விக் கொள்கை, மோடியின் பார்ப்பன கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. அதை முறியடிக்க புரட்சிகர அமைப்பில் இணைந்து போராட வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறைகூவல் விடும் விதமாக பேசினார்.

கண்டன உரையாற்றிய தருமபுரி தி.க. முன்னாள் மாவட்ட தலைவர் தோழர் கிருஷ்ணன் “ஆரியர்களின் மொழியாக சமஸ்கிருதம் இன்றைக்கு பள்ளிகளில் அனுமதிக்கப்படுவது மூலமாக ஒரே பாடத்திட்டமாகவே நிலை நிறுத்திக் கொண்டு அதன் மூலமாக பார்ப்பன கனவுகளை நிலைநாட்டிக் கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டு ராஜாஜி ஆட்சியில் இந்தித் திணிப்பையும் அதை எதிர்த்து மாணவர்கள் போராடியவுடன் அவர் பின்வாங்கியதும், பிற்காலங்களில் இந்தியை திணித்ததை தவறு என்று ஒப்புக் கொண்டதையும் நினைவு கூர்ந்தார். பிறகு இராமலிங்க அடிகளாருடம் சங்கராச்சாரியார் நடத்திய விவாதத்தில் சமஸ்கிருதம் தாய்மொழி என்று கூறியதற்கு ஒரு பெண் தனியாக எப்படி கருத்தரிக்க முடியாதோ அதைப் போல சமஸ்கிருதம் தனியாக இயங்க முடியாது. எனவே தந்தைமொழி தமிழ் என்று கூறியதையும் சுட்டிக் காட்டினார். இன்று சமஸ்கிருத எதிர்ப்பை மரபாக நிலைநிறுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

rsyf-dpi-sanskrit-protest-1அடுத்து உரையாற்றிய தருமபுரியைச் சேர்ந்த தமிழ் பற்றாளர் முனி ஆறுமுகம், தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் வளர்ச்சியையும் குறித்து பேசினார். “கல்தோன்றி காலத்து மண் தோன்றிய மூத்த குடி தமிழ்” என்று கூறி இதுதான் இலக்கிய இலக்கணம் முதலில் உடைத்த மொழி. அது சமஸ்கிருதத்துக்கு கிடையாது. அது எழுத்து வடிவம் அற்றது. ஆகவே, ஒரு மாணவர் அவனது தாய்மொழியில் கல்வி கற்பதே அவனது அறிவை வளர்க்கும் என்று தனது கண்டன உரையில் தெரிவித்தார்.

அடுத்து உரையாற்றிய சமூக ஆர்வலர் பச்சையப்பன் சமஸ்கிருதத்தை நாம் ஏன் கற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி அது செத்துப் போன மொழி என்பதோடு “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்ற வள்ளுவனுடைய குறளில் உள்ள தொன்மை சமஸ்கிருதத்தில் இருக்கிறதா? பார்ப்பனியத்தின் உருவான பி.ஜே.பியை அடித்து விரட்டுவோம் என்று சவால் விடுத்தார். 4 வகையான இந்தி மொழி இருக்கிறது, அதை முழுவதும் நீங்கள் கற்றிருக்கிறீர்களா? அத்துணை பார்ப்பனர்களும் அவற்றை சரளமாக பேசுகிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.

rsyf-dpi-sanskrit-protest-posterஅடுத்த உரையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், “இன்றைய உலகைச் சுற்றும் வாலிபன் மோடியின் அதிகார போதையில் ஒட்டுமொத்த பாசிசத்தை நுழைத்து வருவதன் ஒரு பகுதியாகத்தான் இந்த கல்வியாண்டு (2016-17) முதல் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாகக் கொண்டு வந்தது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்த உத்தரவு முற்றிலும் உழைக்கும் மக்களுக்கு கல்வியை கொடுக்கக் கூடாது என்ற இந்து கல்விக் கொள்கையை புகுத்துவதுதான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருதம்தான் தேவ பாஷை, அதனை பார்ப்பனர்கள் மட்டும்தான் கற்க வேண்டும். மற்றவர்கள் இதனைக் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் பேசினால் நாக்கை வெட்டி தண்டனை என்றும் கொடுத்தான்.

இன்று அதனை படிக்கக் கொடுப்பதும் பாசிஸ்டுகளின் தந்திரமே. இந்து மதவெறியர்கள் ஜனநாயகத்தின் எதிரிகள், தங்களை எதிர்த்தவர்கள் மீது அடக்குமுறைகளை தொடுப்பது அவர்களது வாடிக்கை. அதன் பகுதியாக ரோகித் வெமுலா, ஐ.ஐ.டி, ஜே.என்.யு மற்றும் பல எழுத்தாளர்கள் மீது தாக்குதல்கள் என்ற இது தொடர்கிறது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் பு.மா.இ.மு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது என்று கூறி அனைவரும் ஒன்றாக நின்று சமஸ்கிருதத் திணிப்பை எதிர்ப்போம்” என்று அறைகூவி அழைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டம், “சமஸ்கிருதத்தை எதற்காக கற்றுக் கொள்ள வேண்டும்” என்ற கேள்வியை மாணவர்கள் மத்தியில் பரவலாக எழுப்பியுள்ளது. மொழியை, கலாச்சாரத்தை அழிக்கும் சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் பதிய வைத்தது இந்த ஆர்ப்பாட்டம்.

இறுதியாக தோழர் சத்தியநாதன் நன்றியுரை ஆற்றினார்.

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி
8148055539

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க