privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?

கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?

-

அன்புள்ள ஐயா,

என் பெயர் தட்சிணாமூர்த்தி. நான் பாரத ஸ்டேட் வங்கி பவானி கிளையில் கல்விக் கடன் எடுத்திருந்தேன். அதே சமயத்தில் எனக்கு இன்சுரன்ஸ் பாலிசி ஒன்றும் இருந்தது. கல்விக் கடன் செலுத்தவில்லை என்றால் இன்சுரன்சிலிருந்து கழித்துக் கொள்வோம் என்று வங்கியில் இருந்த மேடம் அப்போது சொன்னார்கள். ஆனால், இப்போது எனது கல்விக் கடனுக்கான வங்கிக் கணக்கு ரிலையன்ஸ் கம்பெனிக்கு மாற்றப்பட்டு விட்டது. ரியலைன்ஸ் நிறுவனத்தின் புலியகுளம்(கோவை) கிளையில் இருந்து எனக்கு தினசரி தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. என்னை டார்ச்சர் செய்கிறார்கள். கெட்ட வார்த்தைகளால் ஏசுகிறார்கள். கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், என்னையும் எனது குடும்பத்தினரையும் கைது செய்து டார்ச்சர் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நான் எனது கடனை மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிச் செலுத்து விடுவேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்”

பிப்ரவரி 24, 2016.

கல்விக்கடன் நன்றி படம்: தி இந்து
கல்விக்கடன்
நன்றி படம்: தி இந்து

ஸ்டேட் வங்கி தனது கல்விக் கடனை 55 சதவீத தள்ளுபடியில் ரிலையன்சுக்கு விற்ற செய்தி நாளிதழ்களில் கண்கள் சென்றடையாத மூலை முடுக்குகளில் அச்சாகி ஓய்ந்து விட்டது. அது தொடர்பான வேறு செய்திகள் ஏதும் கிடைக்குமா என்று தேடிய போது complaintboard.in என்கிற இணையதளத்தில் மேற்கண்ட அபயக் குரலை காண முடிந்தது. அதே இணையதளத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு மாணவர்கள், இளைஞர்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தியிருந்ததையும் வாசிக்க முடிந்தது.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பெரும்பாலும் வங்கி நடைமுறைகள் குறித்தோ, நுகர்வோர் பாதுகாப்பு குறித்தோ அறியாத அப்பாவிகள். பெரும்பாலானோர் முதல் தலைமுறை பட்டதாரிகள். மாதத் தவணை, வட்டி போன்றவை எவ்வாறு கணக்கிடப்படுகின்றது, அசலுக்கும் வட்டிக்கும் உள்ள இடைவெளி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது, திருப்பிச் செலுத்துவதற்கான விதிமுறைகள், அப்படித் திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நேரும் என்பவையெல்லாம் இவர்கள் அறியாதவை. எப்படியும் கடன் வாங்கி பட்டம் பெற்று விட வேண்டும் – படித்த உடனே சில பத்தாயிரம் சம்பளத்தில் வேலை கிடைத்து விடும் – பின், மாதாந்திரம் கடனைத் திருப்பிச் செலுத்தி விட வேண்டும் என்பதே இவர்களின் குறைந்தபட்ச திட்டம்.

ஆனால், எதார்த்தம் என்ன?

கல்விக் கடனைப் பொறுத்தவரை நாடெங்கும் வங்கிகளால் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடனில் 40 சதவீத கடன்கள் தமிழகம் மற்றும் கேரள மாநில மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக சுமார் பத்து லட்சம் மாணவர்கள் 17,000 கோடிகளுக்கு மேல் கடன் பெற்றுள்ளனர். கேரளத்தில் 9,865 கோடி மதிப்பிலான கல்விக் கடன் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள இத்தொகையில், தமிழகத்தில் 1,875.56 கோடிகளும் கேரளத்தில் 1,038 கோடிகளும் வாராக் கடன்கள் என குறிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில் கடந்தாண்டு மட்டும் கடனைத் திரும்பக் கேட்டு ரிலையன்சின் ரவுடிகள் தொல்லை கொடுத்ததால், நான்கு செவிலியர்களும் 17 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேரள மாநிலத்தில் கடந்தாண்டு மட்டும் கடனைத் திரும்பக் கேட்டு ரிலையன்சின் ரவுடிகள் தொல்லை கொடுத்ததால், நான்கு செவிலியர்களும் 17 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் புற்றீசல் போல பெருகியுள்ள பொறியியல் கல்வித் தொழிற்சாலைகளின் ஆள் பிடிக்கும் ஏஜெண்டுகளே வங்கிகளிடம் கல்விக் கடன் பெறும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து விடுகின்றனர். நான்கிலிருந்து ஐந்து லட்சங்கள் வரை கடனாகப் பெறும் மாணவர் ஒருவர், அதை ஐந்தாண்டு காலத்திற்குள் திருப்பிச் செலுத்த மாதத் தவணையாக சுமார் ஒன்பதாயிரம் ரூபாய்களைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். பொறியியல் படித்த அனைவருக்கும் படித்தவுடன் வேலை கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் சென்னை பெங்களூரு போன்ற வெளியூர்களில் சொற்ப சம்பளத்திற்கே கிடைக்கின்றன.

அந்த சம்பளமும் உணவு, வீட்டு வாடகை போன்ற இவர்களது சொந்த வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக இல்லாத நிலையில் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவது இயலாமல் போகிறது. இந்நிலையில் திரும்பி வராது எனத் தாம் தீர்மானித்த சுமார் 875 கோடி மதிப்பிலான கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதன் 45 சதவீத மதிப்பிலான விலைக்கு (55 சதவீத தள்ளுபடியில்) கைமாற்றி விட்டுள்ளது ஸ்டேட் வங்கி. இந்த 45 சதவீதத்திலும் சுமார் பத்து சதவீதம் பணமாக வழங்கியுள்ள ரிலையன்ஸ், எஞ்சிய தொகைக்கு பதினைந்து ஆண்டுகள் கழித்து பணமாக மாற்றிக் கொள்ளத் தக்க வகையிலான உத்திரவாத பத்திரங்களை வழங்கியுள்ளது.

ரிலையன்சின் கடந்த கால யோக்கியதையைக் கணக்கில் கொண்டால், கொடுத்துள்ள உத்திரவாதப் பத்திரங்களை கழிவறைக் காகிதமாகக் கூட மதிக்க முடியாது. இது ஒருபக்கமிருக்க, இந்தாண்டின் துவக்கத்திலிருந்தே நாடெங்கும் ரவுடிகளை பணிக்கமர்த்தத் துவங்கிய ரியலைன்ஸ், அவர்களைக் கொண்டு மாணவர்களையும் பெற்றோரையும் மிரட்டத் துவங்கியுள்ளது. சென்ற ஆண்டு திருவாங்கூர் ஸ்டேட் வங்கியின் கல்விக் கடனை இதே விதமாக விலைக்கு வாங்கிய ரிலையன்ஸ், கேரள மாணவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் ரவுடிகளைக் கொண்டு மிரட்டியது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் அதிர்வுகளைக் கிளப்பியது. கேரள மாநிலத்தில் கடந்தாண்டு மட்டும் கடனைத் திரும்பக் கேட்டு ரிலையன்சின் ரவுடிகள் தொல்லை கொடுத்ததால், நான்கு செவிலியர்களும் 17 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஏழை மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் கடன் நிலுவைக்காக கசக்கிப் பிழியும் ரிலையன்சின் யோக்கியதை என்ன?

கடந்தாண்டு இறுதியில் க்ரெடிட் சூசி (Credit Suisse) என்கிற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த வணிக தர நிர்ணய நிறுவனம் இந்தியாவின் கார்ப்பரேட் கடனாளிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. லான்கோ, ஜேய்பி, ஜி.எம்.ஆர், அதானி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கடனாளிகளின் பட்டியலில் பிரதானமாக இடம் பிடித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்தியாவின் வழங்கப்பட்டு, நிலுவையில் உள்ள கார்ப்பரேட் கடன்களில் சுமார் 27 சதவீதத்தையும் இந்திய வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்த கடன்களில் 12 சதவீதத்தையும் வெறும் பத்து கார்ப்பரேட் முதலைகள் மாத்திரமே வாயில் போட்டுக் கொண்டுள்ளனர். கடந்த எட்டாண்டுகளில் இந்நிறுவனங்களின் கடன்கள் மட்டும் ஏழு மடங்காக உயர்ந்துள்ளது (700 சதவீதம்!).

ஒரு வளரும் நாடாக, நமது வங்கிகளை சில்லறை கடன் சந்தையை நோக்கித் திருப்பி விட்டோமென்றால், யார் தான் பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பார்கள்?
ஒரு வளரும் நாடாக, நமது வங்கிகளை சில்லறை கடன் சந்தையை நோக்கித் திருப்பி விட்டோமென்றால், யார் தான் பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பார்கள்? – அருந்ததி பட்டாச்சார்யா

பட்டியலில் ரிலையன்ஸ் உள்ளிட்டு முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள கார்ப்பரேட்டுகள் திருப்பிச் செலுத்தாத கடனின் மதிப்பு மட்டும் 7.33 லட்சம் கோடிகள். மற்ற தரகு முதலைகள் அடித்துள்ள தேட்டைகளையும் சேர்த்த ஒட்டுமொத்த மதிப்பின் விவரங்கள் நமக்குத் தெரியாது. ஆனால், பெரும்பாலான தரகு முதலாளிகள் தமது நிறுவனங்களின் சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகமான அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்துள்ளனர். இதனால், பொதுத்துறை வங்கிகளின் உண்மையான சந்தை மதிப்பை விட ஒன்றரை மடங்கு அதிக மதிப்பிலான கடன்கள் நிலுவையில் உள்ளன.

கார்ப்பரேட் தரகு முதலாளிகள் பல லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை வாங்கிக் கொண்டு வங்கிகளுக்கு நாமம் போடும் அதே வேளையில், சிறு கடன்களை வாங்கும் நடுத்தர வர்க்க நுகர்வோரின் கடன்கள் முறையாக திருப்பிச் செலுத்தப்பட்டு வருகின்றன என்கிறார் நிதித்துறை நிபுணர் சித்தார்த் புரோகித். 2014ம் ஆண்டுக் கணக்கின் படி நுகர்வோர் கடன்கள் சுமார் 20 சதவீத அளவுக்கு வளர்ந்திருந்தது. இதன் விளைவாக தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சிஐ வங்கியும் ஆக்சிஸ் வங்கியும், தமது வங்கிகள் கார்ப்பரேட் கடன்களை விட நுகர்வோர் வாங்கும் சிறு கடன்களுக்கே முக்கியத்துவம் அளித்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளன.

தனியார் வங்கிகள் தொடர்ந்து கார்ப்பரேட் கடன்களில் இருந்து தமது கவனத்தை தனிநபர் நுகர்வோர் கடன்களின் பக்கம் திருப்புவதை ஸ்டேட் வங்கியின் சேர்மேன் அருந்ததி பட்டாச்சார்யா கண்டித்துள்ளார்.

லான்கோ, ஜேய்பி, ஜி.எம்.ஆர், அதானி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கடங்காரர்களின் பட்டியலில் பிரதானமாக இடம் பிடித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
லான்கோ, ஜேய்பி, ஜி.எம்.ஆர், அதானி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கடங்காரர்களின் பட்டியலில் பிரதானமாக இடம் பிடித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

”ஒரு வளரும் நாடாக, நமது வங்கிகளை சில்லறை கடன் சந்தையை நோக்கித் திருப்பி விட்டோமென்றால், யார் தான் பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பார்கள்? ஒரு தேசமாக நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே எந்தவிதமான உள்கட்டமைப்பு வசதிகளும் இன்றி தேங்கி நிற்கப் போகிறோமா?” என்று அருந்ததி பட்டாச்சார்யா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அறச்சீற்றத்தின் உட்பொருள், யார் தான் இனிமேல் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் வாரி வழங்குவது என்ற கவலை தான்.

தற்போது ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தான் பதவி நீட்டிப்புப் கோரப் போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக தகுதியுள்ளவர்களின் பட்டியலில் அருந்ததி பட்டாச்சார்யாவின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருபக்கம் பொதுத்துறை வங்கிகள், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியம் போன்ற அமைப்புகளிடம் இருப்பில் உள்ள பல லட்சம் கோடி மக்களின் சேமிப்புப் பணத்தை தரகு முதலாளிகளுக்குத் திருப்பி விடும் அரசு, அது தான் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உகந்தது என்று தோசையை திருப்பிப் போடுகிறது. இவ்வாறு மக்கள் பணத்தை திட்டமிட்டு தரகு முதலைகளின் காலில் காணிக்கையாக்குகிறது ஆளும் கும்பல். இன்னொரு பக்கம் வேலை கிடைக்காததால் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதிக்கும் நடுத்தர வர்க்க மற்றும் ஏழை மாணவர்களின் மேல் ரவுடிகளை ஏவி விட்டு தாக்குதல் தொடுக்கின்றனர்.

இந்நாட்டின் வங்கி, இன்சுரன்சு உள்ளிட்ட நிதி அமைப்புகள் யாருடைய நலன்களுக்குச் சேவை செய்வதற்காக  உள்ளன என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் இது வரை போலியாகவேனும் அணிந்து கொண்டிருந்த “மக்கள் சேவை” என்கிற முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டு  முதலாளிகளின் அடிவருடிகளாக தம்மை வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டு விட்டன. இந்நிலையில் பொதுத்துறை வங்களின் நடவடிக்கைகளை மக்கள் தீர்மானிக்காமல் தீர்வில்லை. முதலாளிகளின் கடனை வசூல் செய்யும் போராட்டங்களும், மக்களுக்கு கடன் வழங்க வைக்கும் போராட்டங்களும் ஒருங்கே நடக்க வேண்டும்.

– தமிழரசன்

மேலும் படிக்க
The ‘bad’ side of education loans
Student loan NPAs: parents to take on recovery firm
Study-loan defaulters get harsh life lesson from ARC
Political parties criticise SBI’s move to hand over study loans recovery to Reliance
RBI Defaulters List: Meet the Top 10
#NotEnough: Ballooning list of India’s top bank loan defaulters: Can RBI, FinMin, SC promise action?
Biggest loan defaulters in India
SBI to sell Rs. 5,000-crore NPAs to asset reconstruction cos
SBI EDUCATION LOAN
Debt continues to weigh down India’s top conglomerates
Start repaying bank loans, Govt tells corporate majors
Rising corporate loan defaults force banks like ICICI Bank and Axis Bank to step up retail lending