privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வியுரிமை மாநாடு - சம்ஸ்கிருத எதிர்ப்பு - பச்சையப்பன் போராட்டம்

கல்வியுரிமை மாநாடு – சம்ஸ்கிருத எதிர்ப்பு – பச்சையப்பன் போராட்டம்

-

1. விருதை கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு உரைகள் ( தொடர்ச்சி)

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், மக்கள் உரிமை பாதுப்பு மையம் நடத்திய 6-வது கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – 2016 உரைகள்

பேராசிரியர் சாந்தி, சென்னை

“பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதில்லை, டி.வி. சீரியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிள்ளைகளிடம் காட்டுவதில்லை” என்று பெற்றோர்களை சாடினார். “உங்களுடைய பிள்ளைகள் எவ்வாறு படிக்கிறார்கள்? என்று நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கல்வி மட்டுமல்ல அனைத்து விஷயங்களையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளில் இயந்திர மயமாய் மதிப்பெண்ணை நோக்கி ஓடுகிறார்கள் ரோபாட் போல. தனியார் பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும். விளையாட்டு மைதானம் என்பது கிடையாது. ஏன் என்று யார் கேள்வி கேட்க முடியும்? நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்துள்ள அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க மட்டுமே நாற்காலி ஏறியுள்ளார்கள். உங்கள் ஊரில் உள்ள கடைநிலை அரசு ஊழியர் வரை சட்டையை பிடித்து கேள்வி கேட்க உரிமை உள்ளது. சமுதாய மாற்றம் என்பது நம்முடைய வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். நம் பிள்ளைகளை ஆண், பெண் வித்தியாசமின்றி வளர்க்க வேண்டும். அம்மா, அப்பா, சித்தி, அத்தை, அக்கா, என்று நல்ல உறவுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவன் வெளியில் செல்லும்போது, வேறொரு பெண்ணை பார்த்தால் தவறான எண்ணம் தோன்றாது. இயற்கையான சூழலோடு நல்ல விஷயங்களை எளிமையாக கற்றுகொள்ள முடியும். அதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம். அரசுப்பள்ளிகளை கண்காணித்து கல்வித்தரத்தை உயர்த்துவோம். அது அனைவரின் கடமை” என்று சொல்லி அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

virudai-education-conference
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து ஒவ்வொரு மாணவருக்கும், பரிசு, மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

கணேசன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

“பெற்றோர்கள் மனநிலை தன்னுடைய பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என்றுதான் இருக்கிறதே தவிர கல்வியை பற்றி அல்ல” என்றும், “இன்று பள்ளி என்பது சாதி ஏற்றத்தாழ்வுகள் போல பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீட்டில் தனியார்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இட ஒதுக்கீடு, சாதிப் பிரிவினை போல கல்வி இன்று அரங்கேற்றப்படுகிறது. திருச்செங்கோடு, ஈரோடு இடங்களிலே ஓட்டல் வியாபாரம் களைகட்டுகிறது என்கின்றனர் முதலாளிகள். ஏனென்றால் கல்வி ஒரு தொழிற்சாலை போன்று அங்கு நடக்கிறது. பெற்றோர்கள் முட்டி மோதுகிறார்கள். கல்வி முதலாளிகளிடம் கை கட்டி நிற்கிறார்கள். தனியார் பள்ளி என்பது முழுக்க முழுக்க ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது.

ஆனால் கல்வி என்பது ஒரு சேவை மட்டுமே. முழுமையான மனிதனை உருவாக்குவது கல்வி. பகுத்தறிய சொல்லிக்கொடுப்பது கல்வி. சுயசிந்தனையை வளர்ப்பது கல்வி. எனவே தனியார் பள்ளியை புறக்கணித்து பெற்றோர்கள் அரசுப்பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை சேர்த்து கல்வி தரத்தை மேம்படுத்த அனைவரும் போராடுவோம்” என்று பேசியது பள்ளிக்கூடத்தில் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதையும், கல்வியை ஒரு வியாபாரமாக மட்டுமே தனியார் பள்ளி முதலாளிகள் கையாள்வதை அம்பலப்படுத்துவதாக இருந்தது.

ராஜு (மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்)

“விருத்தாசலம் தாலுக்காவில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும் நடத்துகின்ற 6-வது மாநாடு. இதில் வட்டச் செயலாளர் கிடையாது, பிரதிநிதி கிடையாது, ஒன்றிய செயலாளர் கிடையாது. மாவட்ட கவுன்சிலர் கிடையாது செயலாளர் கிடையாது. எல்லாம் 70 வயது ஓய்வு பெற்ற வயதான ஐயா வெங்கடேசன் (மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர்) அவரை தொடர்ந்து ஐயா சிறுதொண்டநாயனார், (நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்) அன்பழகன் (ஓய்வு பெற்ற பத்திரபதிவுத்துறை) இவர்கள்தான் இரவு பகலாக எழுத்திலும், பேச்சிலும், நடவடிக்கையிலும் செயல்பட்டு இந்த மாநாட்டை இங்கு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் பேரணி நடத்த போலீஸ்காரர்கள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் பேரணி நடத்தினால் முழக்கம் போடுகிறீர்கள், மக்களுக்கு கேட்கும். மாநாடு என்றால் ஒரு ஒதுக்குபுறமாக பேசிட்டு போயீடுவிங்க. இந்த வருடமும் இதற்கு முன் வருடமும் உயர்நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக வழக்கு போட்டு உயர்நீதி மன்றம் பேரணி நடத்துங்கள் என அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் பேரணி வைத்தால் அனைவரும் வருகிறார்கள் என காவல்துறைக்கு அச்சுறுத்தல். இங்கு கல்வி பிரச்சனைக்கு போராடுவார்கள் அங்கு டாஸ்மாக் மூடக்கோரி ஆதரவு தருவார்கள். மணல்குவாரி மூட சொல்லி போராடுவார்கள், நகராட்சி ஊழலை எதிர்த்து போராடுவார்கள். இதனால்தான் காவல்துறை அ னுமதி கொடுக்க மறுக்கிறது.

பெற்றோர்கள் அனைவரும் அரசுப்பள்ளியை தவிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். ஒன்று பிள்ளைகள் நல்ல மார்க் வாங்க மாட்டான். மற்றொன்று ஒழுக்கமாக (Discipline) இருக்க மாட்டான், கெட்டு போயிடுவான். சரி, எக்கசக்கமா காசு ஆகுதே என்றால், அது பரவாயில்ல, கடன உடன வாங்கி வருடத்திற்கு 50 ஆயிரம், ஒரு லட்சம் என்று கட்டினால் அத்தோடு தொல்லை விட்டது என்று நினைக்கிறார்கள்.

தனியார் பள்ளி தரம் என்பது உண்மையா? (Discipline) என்றால் என்ன? தனியார் பள்ளியி்ல் படித்தால் நல்ல (Discipline) வரும் என்றால் இப்போது உள்ள ஐ.டி ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், உயர்நிலை அதிகாரிகள் அனைவரும் ஏன் ஸ்டார் ஓட்டலில் சென்றுசாராயம் குடிக்கிறார்கள்? இன்று உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் எல்லாம் தனியார் பள்ளியில் படித்தவர்கள் தான். ஊழலுக்கு துணைபோகிறார்கள். இலஞ்சம் வாங்குகிறார்கள். நேர்மையை விலை பேசுகிறார்கள். கனிம வளத்தை சுரண்ட அனுமதி அளிக்கிறார்கள். மக்களிடம் வந்து பொய் பேசுகிறார்கள். சட்டவிரோதமாக நடக்கிறார்கள். அனைத்தும் இவர்களால்தான் நடக்கிறது. இது தான் Discipline ஆ?

இன்று தனியார் பள்ளி, கல்லூரி நடத்தாத அரசியல்வாதிகள் யாராவது இருக்கிறார்களா? ஏன் என்றால் கல்வி ஒரு வியாபாரம். தனியார் பள்ளியை ஒழிக்காமல் அரசுப் பள்ளியை வளர்த்தெடுக்க முடியாது. இரட்டைத் தண்டவாளம் போல ஒருநாளும் போக முடியாது. விவசாயிகள் தன்னுடைய விளைச்சலுக்கு இலாபம் இல்லாவிட்டாலும், சொன்ன தொகையை கொடு என்று போராட்டம் நடத்தி விஷமருந்தி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். அவர்களை இந்த அரசாங்கம் கண்டுகொள்ள வில்லை. ஆனால் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு 15% கேட்காமலேயே கட்டண நிர்ணயம் செய்து கொடுக்கிறது இந்த அரசு. தனியார் பள்ளி முதலாளிகள் கொள்ளையடிக்க அரசு வழிவகுக்கிறது. வெளியில் 250 ருபாய்க்கு விற்கப்படும் செருப்பு தனியார் பள்ளியில் 1350 ரூ. என்று விற்கிறார்கள். ஏன் இப்படி விற்கிறீர்கள் என்று எந்த பெற்றோரும் கேட்பதில்லை. உங்களுடைய சுயமரியாதை எங்கே போனது. உங்கள் பிள்ளைகளை பணயக் கைதியாக்கி உங்களிடம் பணம் பறிக்கிறார்களே? ஒவ்வொரு ரூபாய் சம்பாதிக்க நீங்கள் எவ்வளவு பாடுபடுகிறீர்கள்? உங்களுடைய மூளை எப்படி ஊழல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை திரும்பி பார்க்க வேண்டும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் சரியாக சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு தினசரி இரவு 11 மணிக்குமேல் பேப்பர் திருத்தி மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எப்படி ஒரு பிள்ளைக்கு சரியாக சொல்லிக் கொடுக்க முடியும்? கற்பித்தல் என்பது கஷ்டமான வேலையை எளிமையாக எப்படி செய்யமுடியும் என்பதை சொல்லிக் கொடுப்பதுதான். அவ்வாறு கற்றதை பரிசோதித்து மேலும் வளர்க்க வகுக்கப்பட்டதே மதிப்பிடல். அதைத்தான் இன்று தேர்வு என்று மாற்றியுள்ளார்கள். 490 மதிப்பெண் வாங்கியவன் முதல் மாணவன் என்றால், 300 மதிப்பெண் வாங்கியவன் இந்த சமூகத்தில் வாழத் தகுதியற்றவனா?

தவறுகளை தட்டிக் கேட்பதும், தெரிந்து கொண்ட விஷயத்தின் மீது வாதிடும் அறிவை, ஆற்றலை வளர்த்துக்கொள்வதும்தான் கற்றுக்கொண்டதின் அடையாளம். அனுபவத்தை அறிவோடு, கல்வியோடு சேர்த்து மேலும் மேலும் வளர்த்துக்கொள்வதுதான் கற்றல்-கற்பித்தல் என்பது. சிறு கப்பல், சிறு ஏவுகணை, சிறு கார் என்று அனுபவத்தில் படிப்பை இணைத்து ஒட்டுமொத்த சமூகத்தில் மனிதவளம் கொண்டதாக மாறுகிறது. கல்வி என்பது முழு நிறைவான மனிதனை உருவாக்குவதுதான்.

பெற்றோர்களே, அரசுப் பள்ளி நமது பள்ளி. நீங்கள் மாதம் ஒரு முறை உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று வகுப்பாசிரியரை சந்தித்து எப்படி படிக்கிறார்கள் என்று கேட்டறிந்து ஒரு நாள் முழுவதும் உங்கள் பிள்ளை வகுப்பில் ஆசிரியர் எவ்வாறு பாடம் நடத்துகிறார் என்று கண்காணியுங்கள். நீங்கள் கண்காணிக்க ஆரம்பித்தால் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தனியார் பள்ளிக்கு சென்று டியுஷன் எடுக்க மாட்டார்கள். லஞ்சம் வாங்க மாட்டார்கள். மற்ற எந்த சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள். அவ்வாறு ஈடுபட்டால் அவர்களை சஸ்பெண்ட் செய்ய ஒரு போஸ்டர் போதும். அதிக செலவில்லை. 1000 ருபாய் போதும். உங்கள் பகுதியிலுள்ள பள்ளியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் (கிளை) என்று போர்டு வையுங்கள். அங்கு நடக்கும் அநீதிகளை தட்டிக் கேளுங்கள். அமைப்பாக திரளுங்கள்.

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்

2. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் மீது காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் நடத்தி வரும் பல்வேறு அடக்குமுறைகளைக் கண்டித்தும், வழக்கறிஞர்கள் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்காக நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 05-07-2016 அன்று காலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Pachiayappa-College-students-struggle-2மாணவர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக போராடக் கூடாது என்பதற்காகவும், அவர்களை ரவுடிகளாக சித்தரிக்கும் வகையிலும் காவல் துறை பல்வேறு அடக்குமுறைகளை மாணவர்கள் மீது ஏவி வருகிறது. கல்லூரி வாயிலில் நின்று ID கார்டை சோதிப்பது, கல்லூரி வளாகத்துக்குள் புகுந்து மாணவர்களை தாக்குவது, கேமரா வைத்து கண்காணிப்பது என்று கல்லூரி மாணவர்களை சிறைக் கைதிகளைப் போல் காவல் துறை நடத்தி வருகிறது.

மேலும் கல்லூரிக்குள் உள்ள விளையாட்டுத் திடலையும் மாணவர்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. கல்லூரியின் மெயின் கேட்டை மூடி, பின்புற வாயில் வழியாகத்தான் வர வேண்டும் என்று மாணவர்களை நிர்jfபந்தித்து, ஒவ்வொருவரையும் சோதனை செய்து அதன்பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கின்றனர். இவற்றைத் தடுக்க வேண்டிய கல்லூரி நிர்வாகமோ, காவல் துறையை போல் நடந்து கொள்கிறது.

திருவேற்காட்டை சேர்ந்த மணி என்ற மாணவர், ஐந்து நாட்கள் தொடர்ந்து கல்லூரிக்கு வராமல் இருந்துள்ளார். அடுத்தடுத்த நாட்கள் அவர் கல்லூரிக்கு வந்த போதும் அவருக்கு வருகைப்பதிவு அளிக்காமல் இருந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவரை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்வதாகவும் கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. மேலும் போலீசை வைத்து விரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவர் விஷம் அருந்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், அம்மாணவரை மீண்டும் கல்லூரியில் சேர்ந்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், கல்லூரிக்குள் போலீசு வந்து மாணவர்களைக் கண்காணிப்பதையும், மாணவர்களை ரவுடிகளாக சித்தரிப்பதையும், மாணவர்கள் மீது போலீசு நடத்தும் அடக்குமுறைகளைக் கண்டித்தும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், 500-க்கும் மேற்பட்டோர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி யை சேர்ந்த மருது தலைமையில், கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே மாணவர்களை பயமுறுத்தும் விதமாக, நூற்றுக் கணக்காண போலீசைக் குவித்து போராட்டத்தை அடக்க முயற்சித்தது. இருப்பினும் காவல் துறையின் இந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கல்லூரி முதல்வர், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி பத்து மாணவர்களை உள்ளே அழைத்துள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும், கல்லூரிக்குள் போலீசை அனுமதிக்கக் கூடாது, விளையாட்டுத் திடலை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர்களுடைய கோரிக்கையைக் கூறியவுடன், மாணவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதைத் தவிர மற்ற எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது, என்று அதை மீறி எதுவும் பேசக் கூட விடாமல், மாணவர்களை வெளியே அனுப்பியுள்ளார். கல்லூரி நிர்வாகம் தங்களுடைய கோரிக்கைகளை ஏற்காததால், தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இணைந்து, போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

தனியார் கல்லூரிகளில் பணம் கட்டி படிக்க வழியில்லாத மாணவர்கள் தான் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை நாடி வருகின்றனர். அவர்களில் பலர் பகுதி நேர வேலைகளுக்கு சென்று தான் படிக்க முடியும் என்ற அவல நிலையில் உள்ளனர். அப்படிப்பட்ட மாணவர்கள் படிக்கும் கல்லூரி என்பது குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத மாட்டுக் கொட்டகைகள் போல் தான் உள்ளது. மாணவர்களுக்கான கலாச்சார விழாக்கள், மாணவர் பேரவை தேர்தல்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை. ஒதுக்கப்பட்ட சேரிகள் போல தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இதை எதிர்த்து போராடும் மாணவர்களை ரவுடிகளாக முத்திரை குத்தி அடக்குமுறைகளை ஏவுகின்றனர்.

இந்த அடக்குமுறைகளை உணர்ந்து அதை உடைக்க, அனைத்துக் கல்லூரி மாணவர்களும் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு, அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

3. சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து விருத்தாசலம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

2016-17 கல்வியாண்டிலிருந்து CBSC மற்றும் ICSE பள்ளிகளில் சமஸ்கிருதம் மூன்றாவது மொழிப்பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என மோடி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. மேலும் புதிய பாடத்திட்டங்கள் என்ற பெயரில் பார்ப்பனிய சாதிய கட்டுமானத்தை உயர்த்தி பிடிக்கும் புராண – இதிகாச ஆபாச குப்பைகளை பாடத்திட்டங்களில் நுழைக்க முயல்கிறது. ஒட்டுமொத்த நாட்டையும் இந்து – இந்தி – இந்தியா எனும் இந்துராஷ்டிரமாக மாற்ற பல்தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்கும் மோடி அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சியே – இந்த சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பு.

rsyf-sanskrit-protest-virudai-1இதைக் கண்டித்தும் விருத்தாசலத்தில் பு.மா.இ.மு சார்பில் 04-07-2016 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தர காவல்துறை ஆய்வாளர், டி.எஸ்.பி, எஸ்.பி என பல நாட்கள் இழத்தடித்தது. டி.எஸ்.பி “எத்தனை பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வரப் போகிறார்கள் யார் யார் என்ன பேசப் போகிறார்கள்” என ஒரு புலனாய்வு நடத்தி முடிந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விருத்தாசலம் நகர செயலாளர் தோழர் மணிவாசகம் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில்

மோடி அரசின் இந்த சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கை என்பது இந்து – இந்தி – இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கத்தை முன்னெடுக்கும் முயற்சியே. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்றில்லாமல் வெறும் 3,000 பேரே பேசக்கூடிய இந்த மொழியை ஆட்சி மொழியாக்க நாட்டின் ஒற்றை மொழியாக மாற்றத் துடிக்கிறது. கோடிக்கணக்கானவர்கள் பேசும் மொழிகள் இருக்கையில் இப்படி அவர்கள் செய்வதன் நோக்கமே அதன்பின் உள்ள பண்பாட்டை திணிக்கவே. அந்த பண்பாடு பார்ப்பனிய சாதிய பண்பாடு ஆகும். ஒரு பக்கம் அண்டை நாடுகளை தன் ஆதிக்கத்தில் கொண்டு வரும் அகண்ட பாரத கலை பிரசாரத்தை செய்து கொண்டே இன்னொரு பக்கம் நாட்டின் மனித வளம், இயற்கை வளம் கனிம வளம் ஆகியவற்றை பன்னாட்டு முதலாளிகளிடம் விற்க வேலைகளை செய்கிறது. இதனால் இவர்களின் உண்மை முகம் என காலிபயங்கரவாதிகளின் தேசம், தேசபக்தி ஆகியவற்றை தோலுறித்து காட்டினார். மேலும் இந்த சங்க பரிவார கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்கள் போராட முன்வர வேண்டும் அறைகூவி அழைத்தார்.

அதன்பிறகு விருத்தாசலம் மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் இன்று இந்த சமஸ்கிருத திணிக்கும் மோடி அரசின் நடவடிக்கை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பின்பற்றும் செயலே. அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தோற்றம், பயங்கரவாதத்தன்மை, இது இந்நாட்டின் மக்களுக்கு பேரபாயம் என்பதை விளக்கி பேசினார். இதை எதிர்த்து போராடுவது ஜனநாயக சக்திகளின் கடமை என்று அறைகூவி அழைத்தார்.

rsyf-sanskrit-protest-virudai-2அடுத்ததாக திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் முத்து கதிரவன் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில்

மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கை என்பதை மூட நம்பிக்கைகளை பார்ப்பனிய சாதிய வருணாசிரமத்தை பரவச் செய்து மேலும் பலம் பெற்றதாக மாற்றும் அதன் நோக்கமாக பார்க்க வேண்டும். செத்த மொழிக்கும் சிங்காரம் செய்வதன் நோக்கம் அதுவே. இந்த சமூக இழி நிலைமைகளுக்கு காரணமானவற்றை அழித்தொழிக்க வேண்டும். இந்த பணியை தமிழகத்தில் பெரியார் தொடங்கி வைத்தார். அதை மாணவர்கள் போர் குணமிக்க போராட்டங்கள் மூலம் தொடர்ந்தனர். இப்போது மீண்டும் அப்படி ஒரு போராட்டம் அவசியப்படுகிறது. அதற்கு திராவிடர் கழகம் துணை நிற்கும் என்று கூறினார்.

அடுத்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜு கண்டன உரையாற்றினார். அவர் தனது கண்டன உரையில்

rsyf-sanskrit-protest-virudai-1நாட்டில் மக்கள் நேரடியாக பாதிக்கிற எவ்வளவு பிரச்சனை இருக்கையில் சமஸ்கிருதம் என்ற மொழிக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்த வேண்டுமா ? என பலர் கருதுகின்றனர். இந்த சமஸ்கிருதம் கொண்டு வருவது என்பது மக்களின் பண்பாடு, மொழி என்ற பெயரில் அமிலத்தை ஊற்றுவதாகும். உலகில் உள்ள ஏனைய மொழிகளில் எல்லாம் கற்க விஞ்ஞானம், தத்துவம் என ஏதோ ஒன்று உள்ளது. ஆனால் சமஸ்கிருத்தில் இருப்பது பூஜை மந்திரங்களும், மூடநம்பிக்கைகளும் நிரம்பி வழியும் புராணம் கட்டு கதைகளே.

சரி இந்த சமஸ்கிருதம் அனைவரும் கற்க வேண்டும் என்கிறார்களே பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்க்கு பெண் கொடுப்பார்களா ? அதை கற்றால் தில்லை கோயிலில் புஜை செய்ய சூத்திரனை அனுமதிப்பார்களா? அப்புறம் எதற்கு இதை நான் கற்க வேண்டும். மக்களுக்கு தேவையான ஏதாவது இந்த மொழியில் இருக்கிறதா? ஒரு மொழி என்பது அந்த நாட்டினுடைய மக்களின் சொத்து, அனுபவ அறிவு ஆகியவற்றை கொண்டுள்ளது. இவற்றை அழிப்பது ஏற்க முடியாது. 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு அலை அலையாக திரண்டார்கள் அப்படி ஒர போராட்டம் நடப்பதற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்தும் இந்த ஆர்ப்பாட்டம் கூறியதாக நம்புகிறேன்.

ஆர்ப்பாட்டத்தில் உரைகளின் இடையே தோழர்கள் போர்க்குணமிக்க முழக்கங்கள் விண்ணதிரச் செய்தது.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாசலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க