Friday, August 12, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா நரேந்திர மோடியின் சவடால்களும் சலாம்களும்

நரேந்திர மோடியின் சவடால்களும் சலாம்களும்

-

சென்னை-வடபழனியிலுள்ள கமலா திரையரங்குக்குப் போனால், காலஞ்சென்ற அத்திரையரங்கின் உரிமையாளர் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், நடிகர் -நடிகையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை சுவரெங்கும் தொங்கவிட்டு, தன்னை அதிமுக்கியப் பிரமுகராக விளம்பரப்படுத்திக் கொண்டதை யாரும் பார்க்கலாம். அவருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஏதோ சர்வதேசத் தலைவராகிவிட்டதைப் போல காட்டிக் கொள்ளும் பிரதமர் மோடிக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.

அணுசக்தி விநியோகக் குழும காமெடி
அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் இணைய சீனா முட்டுக்கட்டை போடுவதாகவும், எனவே சீனப்பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டுமென்றும் டெல்லி – ஜந்தர்மந்தரில் இந்துசேனா நடத்தும் ஆர்ப்பாட்டம்.

ராவ் பகதூர், திவான் பகதூர் – என தனது விசுவாசக் கைக்கூலிகளுக்கு அன்று வெள்ளைக்காரன் பட்டம் கொடுத்ததைப் போல, மோடி கும்பலின் சுயவிளம்பர அற்பத்தனத்தைப் புரிந்து கொண்ட அமெரிக்க வல்லரசும், மோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைந்த கூட்டத்தில் உரையாற்ற வைத்து, அதற்குப் பலத்த கைதட்டல் கொடுத்து வரவேற்று, மோடிக்குப் பிடித்த செல்பியை பல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் நின்று எடுத்துக் கொள்ள வைத்துவிட்டு, காயலாங்கடைக்கு அனுப்ப வேண்டிய தனது 6 அணு உலைகளை ரூ.2.8 லட்சம் கோடிக்கு இந்தியாவின் தலையில் கட்டியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரலில் அமெரிக்க இராணுவத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர் இந்தியாவுக்கு வந்தபோது, இந்தியத் துறைமுகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (LEMOA) போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் போதெல்லாம், பதவி முடிவடையும் சமயத்தில் அதிபராக உள்ளவர் சர்வதேச அளவில் சில ஒப்பந்தங்களைப் போட்டு சாதனை புரிந்துவிட்டதாகக் காட்டிக் கொள்வதென்பது வாடிக்கை. இதன்படியே ஒபாமாவும், “அமெரிக்காவின் முக்கியமான இராணுவக் கூட்டாளி” என்ற தகுதியை இந்தியாவுக்கு அளித்து, “21-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள உலகக் கூட்டாளிகள் -1” எனும் தலைப்பிட்ட இந்திய – அமெரிக்கக் கூட்டறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளார். ஒபாமாவின் இந்த அறிக்கை இன்னும் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக, ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டுக் கூட்டமைப்பில் (MTCR) இந்தியா உறுப்பு நாடாக இணையவும், அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG) இந்தியா இணைவதற்கும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இவற்றைக் காட்டி, மோடியின் ஆட்சியில் இந்தியா, அமெரிக்காவின் முதன்மை ராணுவக் கூட்டாளியாகிவிட்டதைப் போலவும், அமெரிக்க வல்லரசு தனது அரசியல்-ராணுவக் கூட்டாளியான பாகிஸ்தானை முற்றாக ஓரங்கட்டிவிட்டதைப் போலவும், இனி பாகிஸ்தானும் சீனாவும் வாலாட்ட முயற்சித்தால், அவற்றை நசுக்கத் தயாராக உள்ளதைப் போலவும் உதார்விட்டு மோடி கம்பெனி கூத்தாடியது. தன்னை துணிச்சலான பிரதமராகக் காட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் கடந்த ஏப்ரலில் இந்தியாவின் தர்மசாலாவில் சீன எதிர்ப்பாளர்கள் நடத்திய ஒரு கருத்தரங்கில் பங்கேற்க, சீனாவிலிருந்து பிரிவினை கோரும் உய்குர் பிராந்தியத்தின் தலைவர்களுள் ஒருவருக்கு மோடி அரசு விசா வழங்கி, சீனாவுக்குப் பதிலடி கொடுக்கத் துணிந்துவிட்டதாக மோடி கம்பெனி தண்டோரா போட்டது. பின்னர், விசா வழங்கிய மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா எச்சரிக்கை விடுத்ததும், நகரம் திரைப்படத்தில் உதார் விட்டு காலில் விழும் வடிவேலு காமெடியைப் போல, உடனே மோடி அந்தர் பல்டி அடித்து விசாவை ரத்து செய்துவிட்டார்.

சீன அதிபரை நேரில் சந்தித்த மோடி
சீன அதிபரை நேரில்சந்தித்து, அணுசக்தி விநிகிப்பாளர் குழுவில் இந்தியாவை இணைக்க ஆதரவு தருமாறு கோரும் மோடி.

அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG) இந்தியா இணைவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தாலும், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடுட்டுள்ள நாடுகள் மட்டுமே அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG)உறுப்பினராக முடியும். ஆனால், இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மேலும், அனைத்து நாடுகளும் ஒருமித்து ஆதரவளித்தால் மட்டுமே இக்குழுவில் ஒரு நாடு உறுப்பினராக முடியும். இதனால், இக்குழுவில் இந்தியா உறுப்பினராக வாய்ப்பே இல்லாதபோதிலும், அமெரிக்கா ஆதரவளித்து விட்டதால் இனி யாரும் தடுக்கவே முடியாது போலவும், இக்குழுவில் இணைவதன் மூலம் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக அமெரிக்கா அங்கீகரித்துவிட்டதைப் போலவும், இது மோடியினுடைய வெளியுறவுக் கொள்கையின் வெற்றியாகவும் மோடி கும்பல் கூசாமல் புளுகியது. அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG) இந்தியாவை இணைக்க சாத்தியமேயில்லை என்று தெரிந்திருந்தபோதிலும், கோயபல்சு ஊடகங்களைக் கையில் போட்டுக் கொண்டு ஏதோ மகத்தான சாதனை புரிந்துவிட்டதைப் போல இந்த நாடகத்தைத் திறமையாக நடத்தியது.

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததைக் காட்டி, 48 நாடுகள் கொண்ட இந்தக் குழுவில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதற்கு சீனா, நியூசிலாந்து, அயர்லாந்து உள்ளிட்டட சில நாடுகள் ஆட்சேபம் தெரிவித்தன. மேலும், இந்தியாவைச் சேர்ப்பதாக இருந்தால், இதேபோல விண்ணப்பித்துள்ள பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டுமென சீனா உள்ளிட்ட சில நாடுகள் கோருகின்றன. அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NPT) இந்தியா இணைவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதேயன்றி, இந்தியாவை அதில் உறுப்பினராக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக, மோடி அரசுதான் இக்குழுவிலுள்ள நாடுகளிடம் தன்னையும் உறுப்பினராக்கக் கெஞ்சிக் கொண்டிருந்தது. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுத்தது என்பதைப் போலத்தான் இந்தக் காமெடியும் நடந்தது.

இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் சீனாவுக்குப் பறந்தார். ஆனால் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. உடனே தாஷ்கண்ட் நகரில் நடந்த ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபரை நேரில் சந்தித்து சலாம் போட்டு, ஜூன் 23 அன்று தென்கொரியத் தலைநகர் சியோலில் நடக்கும் அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவின் கூட்டத்தில் இந்தியாவை இணைக்க ஆதரவு தருமாறு மோடி கெஞ்சினார்.

ஆனால் அக்கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக்கும் நிகழ்ச்சிநிரலே இல்லை. மேலும், சீனா உள்ளிட்ட 7நாடுகள் இந்தியாவை இணைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தன. இந்தியாவுடன் “பிரிக்” கூட்டமைப்பில் உள்ள பிரேசில்கூட இந்தியாவை ஆதரிக்கவில்லை. வாய்வழியாக ஆதரவு தெரிவித்த நாடுகளும் கூட்டத்தில் கைவிரித்துவிட்டன. ஆனாலும் குப்புற விழுந்தாலும்இன்னும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, இக்குழுவில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்த இக்குழுவின் உயர்நிலைக் கூட்டம் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கப் போகிறது என்று மீண்டும் இந்தக் கோமாளிக் கூத்தை மோடி கும்பலும் கோயபல்சு ஊடகங்களும் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த குழுவில் சேர மோடி அரசு முட்டிமோதிய கூத்தை காங்கிரசு, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கேலி செய்து, இது மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய தோல்வி என்று பரிகசிக்கின்றன. இதுவரை இந்தியா கண்டிராத அற்பத்தனமான சுயதம்பட்டக் கோமாளி என்று மோடிக்கு சிறப்பு விருது கொடுக்க வேண்டியதுதான் இனி பாக்கியிருக்கிறது.

– குமார்
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க