Tuesday, December 10, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅரசியல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம் : மக்கள் அதிகாரமே மாற்று !

அரசியல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம் : மக்கள் அதிகாரமே மாற்று !

-

தேர்தல்களை ஒருபோதும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டு விட்டது. பணப்பட்டுவாடாவில் மட்டுமல்ல; வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முதற்கொண்டு தேர்தல் செயற்போக்கின் எல்லாக் கூறுகளிலும் எந்த வகையிலான முறைகேடுகளையும் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்று தேர்தல் ஆணையமே கைவிரித்துவிட்டது. ஆனாலும், ஜனநாயகம் என்ற மெகா மோசடியை மக்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே அவர்கள் தேர்தல்கள் மீது இன்னமும் நம்பிக்கைகொள்ளும் வகையில் பல பொய்களைப் பரப்புகிறார்கள். தமிழ்நாட்டில்தான் தேர்தல் முறைகேடுகள் உச்சநிலையை எட்டியிருக்கிறது, மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை என்று நம்பச் சொல்லுகிறார்கள். முக்கியமாக தேர்தல் ஆணையத்தின் தலைமையில் கார்ப்பரேட் ஊடகங்களுமும் அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் கூலி அறிவுஜீவிகளும் இந்தப் புளுகைப் பரப்புகிறார்கள்.

திருப்பூரில் பாதுகாக்கப்பட்ட கண்டெய்னர்கள்
தேர்தல் ஆணையம் அம்மா ஆணையமாக நடந்து கொண்டதற்கு திருப்பூரில் பாதுகாக்கப்பட்ட கண்டெய்னர்களே சாட்சி.

சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம், வாக்குச் சேகரிப்பு சட்டப்படியே தண்டனைக்குரிய தேர்தல் முறைகேடு இல்லையா? நீதிக் கட்சிக் காலத்திலேயே சாதியத் தேர்தல் முறைகேடு நடக்கவில்லையா? உத்தமர்கள் நேருவும் காமராஜ நாடாரும் மன்னர்கள், ஜமீன்தார்கள், பண்ணையார்களை வைத்து சாதியத் தேர்தல் முறைகேடுகளைச் செய்யவில்லையா? பா.ஜ.க. – சிவசேனா கட்சிகளும் கூட்டணியும் சாதி, மதவெறியை அடிப்படையாகக் கொண்டவையில்லையா? ஆனால், இவை தேர்தல் முறைகேடுகள் என்று தடுக்கப்படவே இல்லை. பால் தாக்கரேயின் மதவெறிப் பிரச்சாரம் குற்றச் செயல் என்று அறிவித்த உச்ச நீதிமன்றமே அவரைத் தண்டிக்கவே இல்லை. சாதி, மதவெறிக் கலவரங்கள் நடக்காத, கொங்கு மண்டலம் போன்ற பகுதிகளிலெல்லாம் சாதி, மத ஆதிக்கம், கொடூரங்கள் இல்லை என்று கருத முடியுமா? எவ்வித எதிர்ப்பும் காட்டாது மக்கள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள் என்றுதான் பொருள். அதுபோலத்தான் சாதி, மத அடிப்படையில் மட்டுமல்லாது, பணப்பட்டுவாடா உட்படப் பலவிதத் தேர்தல் முறைகேடுகளும் நாட்டில் எங்கும் நிறைந்திருக்கின்றன என்பதுதான் உண்மை!

வடநாட்டின் பல மாநிலங்களில் தலித்துகளும் இசுலாமியர்களும் வாக்குச் சாவடிக்குள் போகவே முடியாது; அடித்து விரட்டப்படுகிறார்கள். படித்த மேதாவிகள், ஒழுக்க சீலர்கள் நிறைந்த ஊடகங்கத்திற்கே இலஞ்சம்கொடுத்து செய்திக்குப் பணம் (PAID NEWS) என்ற பிரச்சினை பூதாகரமாக வளர்ந்துவிட்ட நிலையில், எம்.எல்.ஏ., எம்.பி.,களுக்கே ஓட்டுக்குப் பணம் என்றாகிவிட்ட நிலையில், வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் போன்ற முறைகேடுகள் என்பது இங்கு மட்டுமே நடப்பது என்று புளுகித் தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். தேர்தலுக்கான பறக்கும்படை, அதிகாரிகளின் திடீர் சோதனை, பலகோடி அளவுக்குப் பணம் பறிமுதல் என்று தினமும் பரபரப்புக் காட்டுகிறார்கள்.

கரூர் - அய்யம்பாளையம்
கரூர் – அய்யம்பாளையத்திலுள்ள அ.தி.மு.க. அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் குடோனில் நடந்த கண்துடைப்பு ரெய்டு. (உள்ளே) அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடா தளபதியாகச் செயல்பட்ட கரூர் அன்புநாதன்.

ஆனால், இக்குற்றங்களுக்காக எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டார்கள்; எவ்வளவு பேர் தண்டிக்கப்பட்டார்கள் என்று யாரும் கவனிப்பதில்லை. எல்லாம் வெறும் நாடகம்; ஜனநாயகம் என்ற மோசடி மக்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக நடத்தப்படுவன. தேர்தல் நடத்துவதற்காக வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்கள் மக்கள் உரிமைகளைப் பறித்து ஒடுக்குவதற்கும் ஊடகங்களின் துணையோடு வெற்றுக் கெடுபிடிகள், பரபரப்பு எற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன.

தேர்தல் முறைகேடுகள் எல்லாமும் தேர்தல் ஆணையம் உட்பட அனைத்து அதிகார மையங்களுக்கும் தெரிந்தே, அவற்றின் உடந்தையோடுதாம் நடக்கின்றன. தேர்தலை நடத்துவது மட்டுதான் எமது வேலை; பணப்பட்டுவாடா, பறிமுதல் உட்பட தேர்தல் முறைகேடுகள் பிரச்சினைகளைக் கையாளுவதற்கான அதிகாரமும் ஆள்பலமும் கிடையாது. பிரச்சினைகள், புகார்கள் எதுவானாலும் கோர்ட்டுக்குப் போங்கள் என்று வேறுபக்கம் கைகாட்டுகிறது. தேர்தல் நிகழ்வுப் போக்குகள் தொடங்கிய பிறகு, எல்லாம் தேர்தல் ஆணையத்தின் கீழ் வந்துவிடுகின்றன; கோர்ட் தலையிட முடியாது என்று நீதித்துறை கைவிரித்து விடுகிறது. ஆளுக்கு ஆள் கைகாட்டிவிட்டு நியாயம் கேட்டுப் போகிறவர்களை அலைக்கழித்து பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும், இறுதியில் நீதி-நியாயத்துக்கு எதிராகவும் தமது ஆதாயத்துக்கும் ஏற்ற வகையில் நடப்பதும் அதிகார வர்க்கத்துக்கு இயல்பானதுதான். அது சட்டத்தின், விதிமுறைகளின் சந்துபொந்துகளை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறது. தில்லுமுல்லுகள் செய்வதும், பிடிபட்டால் அவற்றை மூடிமறைப்பதும் நழுவிக்கொள்வதும் தப்பித்துக்கொள்வதும் அதிகார வர்க்கத்தின் கைவந்த கலை. நீதிமன்றமும் ஓர் அதிகாரவர்க்க அமைப்புதான். வெளிப்படைத் தன்மையும் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடும் இல்லாது, ஒளிவு மறைவான செயல்பாடுகள் கொண்டவர்கள்தான் இந்த அதிகார வர்க்கத்தினர். இவர்களின் உடந்தையோடுதான் ஓட்டுக் கட்சிகள் எல்லாத் தேர்தல் முறைகேடுகளையும் செய்கின்றன.systemic-crisis-caption-1

தேர்தல் நிகழ்வுப்போக்குகள் தொடங்குவதற்கு முன்பாகவே பல லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கைக்கு எதிரான வழக்கிலேயே இரண்டுங்கெட்டான் தீர்ப்பு வழங்கி உயர்நீதி மன்றம், மழுப்பி, தேர்தல் தில்லுமுல்லுக்குப் பச்சைக்கொடி காட்டியது. அப்போதிருந்து எத்தனை தேர்தல் தில்லுமுல்லுகளுக்குப் புகார்கள். அத்தனையையும் அநீதி, அநியாய அடிப்படையில் சமாளித்து போலீசு, நீதிமன்ற, தேர்தல் ஆணைய அதிகார வர்க்கமும், மத்திய – மாநில ஆளும் கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து மீண்டுமொரு ஜனநாயகக் கூத்தை நடத்தி முடித்திருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக ஆளும் கட்சியின் கூட்டாளியாகவும் கையாளாகவும் செயல்பட்ட போலீசு மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள்தாம் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள். அதுபோன்று பறக்கும் படைகளும் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டன. பல அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் புகாரளித்தனர். கண்துடைப்பாக சிலர் மாற்றப்பட்டனர். ஆனால், அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செயலற்ற பொம்மைகளாக வைக்கப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அம்மாவின் விசுவாசிகள் கைப்பற்றிக்கொண்டு, ஆளுங்கட்சித் தொண்டர்களோடு கைகோர்த்துகொண்டு ஒருதலைப்பட்சமாக வேலை செய்தார்கள். வேட்பாளர் தேர்வு முதற்கொண்டு அம்மாவின் தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள், தொகுதிகளுக்குக் கோடிகோடியாக பணக் கடத்தல், பண விநியோகம் மற்றும் பணம் பட்டுவாடா வரை முன்னாள் இந்நாள் உளவுத்துறை அதிகாரிகள் ஆளுங்கட்சியின் செயற்குழுவைப் போன்று நிர்வாகப் பணிகளைச் செய்தனர்.

நரேந்திர மோடியின் பிரச்சாரக் கூட்டம்
2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது, உ.பி.யில் ராமர் கோவில் விவகாரத்தைக் கிளறிவிடும் நோக்கில், ராமர் உருவப் படத்தின் பின்னணியில் நடத்தப்பட்ட நரேந்திர மோடியின் பிரச்சாரக் கூட்டம்.

இவையும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, பதவியேற்பு ஆகிய அனைத்தும் ஜனநாயகத்தின் போலித்தனத்தையே பறைசாற்றின. தேர்தல் நிகழ்வுப்போக்குகள் தொடங்கியதிலிருந்து ஆளுங்கட்சி அரங்கேற்றிய கிரிமினல் பெறுக்கி அரசியல் அராஜகங்கள், தேர்தல் முறைகேடுகள், கரூர் அன்புநாதன் வீடு-கிடங்குகள், எழும்பூர் சகோதரர்கள் அறைகள், பொள்ளாச்சி மருத்துவர் மாளிகைகள், திருப்பூரில் மூன்று கண்டெய்னர்கள் ஆகியவற்றில் கோடிகோடியாகக் கள்ளப்பணம் கைப்பற்றப்பட்டும் அரசியல் குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டதும், 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசம், பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் 100-க்கும் குறைவான வித்தியாசம் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை இழுபறியாக இருந்தபாதே ஜெயலலிதாவை பிரதமர் வாழ்த்தியது; அரசு அதிகாரிகள் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசிபெறத் தயாராக வரிசைகட்டியது; எதிர்த்தரப்பு வெற்றிபெற்றுவிடும் என்ற நிலையில் இருந்த தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையையும் முடிவுகள் அறிவிப்பதையும் நிறுத்தி வைத்ததும் எதிர்த்தரப்பினர் போராட்டத்தில் குதித்த பிறகே முடிவை அறிவித்ததும் நடந்தன; தபால் வாக்குப்பதிவுகளில் தடை, வாக்குப் பதிவிலும் எண்ணிக்கையிலும் இயந்திரங்கள் பழுது, அழியும் மை, வோட்டர்களாக வெளிமாநில ஆட்கள் – இவ்வளவு தடையையும் தாண்டி, ஆளுங்கட்சியுடன் நேரடியாக மோதிய தொகுதிகளின் மொத்த வாக்காளர்களில் கூடுதலானவர்கள் ஆளும் தரப்பைவிட எதிர்த்தரப்பையே ஆதரித்தனர்; என்றாலும், ஒரு அரசியல் குடைக்கவிழ்ப்பைப்போல, தேர்தல் முடிவுகளை ஆளும் தரப்பு தனது பணபலமும் அதிகாரபலமும் கொண்டு சாதித்துக் கொண்டது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலே கார்ப்பரேட் பிரச்சாரம், பணபலம் ஆகியவற்றை எதிர்த்தரப்பும் முன்னிருத்தியதால் கணிசமான அளவு வெற்றிபெற முடிந்தது.

நடந்து முடிந்த தேர்தல்களில், ஆளும்தரப்பு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது, எதிர்த் தரப்பு அதிகாரபூர்வத் தகுதியைப் பெற்றது என்ற வகையில் இரண்டுமே வெற்றியைக் கொண்டாடுகின்றன. தனது இரகசியக் கூட்டுக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, தனது எதிரிக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றாலும் அது அதிகாரபூர்வ எதிர்க்கட்சி தகுதியைப்பெற்றது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வுக்கு உவப்பும் கசப்பும் கலந்தே கிடைத்தது. திராவிடக் கட்சிகளை எதிர்ப்பது என்ற பெயரில் தமிழர் அடையாளங்களை அழிப்பது என்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. போர்த்தந்திரப் பணியை தலைமேற்கொண்டு செயல்பட்ட பிற கட்சிகள் (மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க; சீமான் கட்சி) எல்லாம் துடைத்தெறியப்பட்டு விட்டன.

systemic-crisis-caption-2இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழக வாக்காளர்களில் பெரும்பாலோர் அரசியல் விழிப்புணர்வு பெறவில்லை என்பதை இந்தத் தேர்தல்கள் மீண்டும் உறுதி செய்துவிட்டன. வாக்களிப்பதற்கு முன்பு கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சியாளர்கள் என்னென்ன செய்தார்கள்; அடுத்த ஐந்தாண்டுகளில் என்னென்ன செய்யப் போவதாக வாக்குறுதிகள் வழங்குகிறார்கள்; அவற்றை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பதைக்கூட தொகுத்துப் பார்ப்பதில்லை. அவ்வாறு வாக்காளர்கள் பார்க்காதவாறு ஊடகங்கள் பரபரப்பூட்டும் அன்றாடச் செய்திகளில் மூழ்கடிக்கிறார்கள்; இப்படிச் செய்வது ஊடகத்தாரின் விற்பனை உத்தியாகவும் ஆட்சியாளர்களுக்கு சேவை செய்வதாகவும் இருக்கிறது.

மூவாயிரமாக இருந்த சாராயக் கடைகளை ஆறாயிரமாகத் திறந்தவர்தான் படிப்படியாக மதுவிலக்கென்றும், 500 கடைகளை மூடுவதாகவும் நேரத்தைக் குறைப்பதாகவும் நாடகமாடுகிறார். சாராயக் கள்ளச்சந்தையை நடத்துகிறார்; பால்விலை, மின்விலையை கிடுகிடுவென உயர்த்திவர்தான் இப்போது (வோட்டுக்காக) குறைப்பதாக நாடகமாடுகிறார். ஊடகங்கள் இதையெல்லாம் சொல்லுவதேயில்லை. இந்த வாக்குறுதிகள் எல்லாம் ஏதோ நேற்றுத் தொடங்கிய கட்சியின் செய்தி அறிவிப்புகள் போல அப்படியே வெளியிடுகின்றன. சாராய போதையிலும் இலவச ஏக்கத்திலும் மூழ்கிக் கிடக்கும் வாக்காளர்களும் இதை நம்புகின்றனர். தேர்தல்களில் மட்டுமல்ல, மக்களை இவற்றில் மூழ்கடிப்பதிலும் இரண்டு கட்சிகளுமே வெற்றி பெற்று விட்டன; அதைத் தடுக்கமுடியாமற்போன மக்கள் தாமாகவே தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள்.

பால் தாக்கரே
இந்து மதவெறியைத் தூண்டிவிட்டுப் பிரச்சாரம் செய்வதை தேர்தல் உத்தியாகக் கொண்டிருந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயே (படம்) உச்ச நீதிமன்றம் கூடத் தண்டிக்கவில்லை

மீண்டும் மக்கள் விரோத பொறுக்கி அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டிருப்பது, நிலவும் சட்டமன்ற-நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் அரசியல் வரம்புக்குள்ளேயே ஆட்சி மாற்றத்தைச் செய்துவிட முடியும் என்று நம்பிய கட்சிகளின் அணிகளுக்குத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்தியிருக்கிறது. ஆட்சியைப் பிடித்துவிடமுடியும் என்று நம்பியிருந்த எதிர்க்கட்சியே கூடத் திகைத்து நிற்கிறது. ஆளுங்கட்சியின் தேர்தல் தில்லுமுல்லுகளையும் முறைகேடுகளையும் சவால்களையும் எதிர்கொள்ள முடியாமல் ஏற்கெனவே இடைத்தேர்தல்களைப் புறக்கணித்தபோதிலும், மாநிலந் தழுவிய பொதுத் தேர்தல்களில் அப்படி நடக்காது என்று நம்பின. ஆனால், ஆளுங்கட்சியின் தேர்தல் தில்லுமுல்லுகளும் முறைகேடுகளும் உச்சத்தை எட்டின. இனி என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சாதாரணமான, நியாயமான வழிமுறைகளில் தேர்தல்களில் வெல்லவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது தேர்தல்களில் போட்டி என்பது கட்சிகளிடையே, வேட்பாளர்களிடையே, தேர்தல் அறிக்கைகளிடையே இல்லை. யார், எவ்வளவு பணம், கார்ப்பரேட் பிரச்சாரம், அதிகாரபலம் ஆகியவற்றை வைத்துச் சூதாடுவதாகி விட்டது. இதில் மக்களுக்குரியவை, மக்கள் நலனுக்கானவை என்று எதுவும் கிடையாது.

இதெல்லாம் மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு தற்போதைய அரசியல் கட்டமைப்பு நெருக்கடியின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம், நெருக்கடியைக் குறிக்கின்றன. ஆகவே, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் கட்டமைப்புக்கு வெளியே மக்களே தங்கள் பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காண்பதற்கான மக்கள் அதிகாரத்தை நிறுவிக்கொள்ள வேண்டும்.

_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

  1. எனக்கு இரு சந்தேகங்கள்
    //நடந்து முடிந்த தேர்தல்களில், ஆளும்தரப்பு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது, எதிர்த் தரப்பு அதிகாரபூர்வத் தகுதியைப் பெற்றது என்ற வகையில் இரண்டுமே வெற்றியைக் கொண்டாடுகின்றன. தனது இரகசியக் கூட்டுக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, தனது எதிரிக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றாலும் அது அதிகாரபூர்வ எதிர்க்கட்சி தகுதியைப்பெற்றது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வுக்கு உவப்பும் கசப்பும் கலந்தே கிடைத்தது. திராவிடக் கட்சிகளை எதிர்ப்பது என்ற பெயரில் தமிழர் அடையாளங்களை அழிப்பது என்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. போர்த்தந்திரப் பணியை தலைமேற்கொண்டு செயல்பட்ட பிற கட்சிகள் (மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க; சீமான் கட்சி) எல்லாம் துடைத்தெறியப்பட்டு விட்டன.//
    இதில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க உடன் மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமா போன்றவர்கள் போனபார்ட்டிச கட்சியான திமுக போல எந்தக் காலத்திலும் கூட்டணி சேர்ந்தவர்கள் அல்ல. எப்போதுமே தமிழர் என்ற அடையாளத்தை காப்பாற்ற முன்னால் நிற்பவர் திருமா. திராவிட இயக்கத்தின் மீதும் வெறுப்புணர்வை சிறுத்தைகள் வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. எனவே இந்த முடிவு அகவயமான ஒன்றாகத் தெரிகிறதே.. இல்லை இதற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா..

    //இதெல்லாம் மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு தற்போதைய அரசியல் கட்டமைப்பு நெருக்கடியின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம், நெருக்கடியைக் குறிக்கின்றன.//
    மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கையின் சாப்ட் காபி நகல் கிடைத்தால் சரிபார்க்க முடியும். ஏனெனில் நான் பார்த்த பிரிண்ட் காப்பியில் இந்த தலைப்பு இடம்பெறவில்லை. ஒருவேளை இரண்டாம் பதிப்பில் வந்திருக்க வாய்ப்பிருக்கிறதோ.. தெளிவுபடுத்தவும்

  2. காமராசரின் சாதியை வினவு, புதிய சன நாயகம் தேவையில்லாமல் குறிப்பிடுதல் கொள்கைக்கு முறனும் மாறானதும் எனப் புரிதல் மிக எளிதே. ~அறிவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க