privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாபிரெக்ஸிட் – முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவது எப்போது ?

பிரெக்ஸிட் – முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவது எப்போது ?

-

1989-ல் பெர்லின் சுவர் வீழ்ந்த போது, அது முதலாளித்துவ உலகமயமாக்கத்தின் வெற்றியாகவும் சோசலிசத்தின் இறுதித் தோல்வியாகவும் ஏகாதிபத்தியவாதிகளால் சித்தரிக்கப்பட்டது. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் உற்பத்தி மற்றும் சந்தையின் உலகமயமாக்கமும் உலகத்தையே ஒரு கிராமமாக மாற்றி விட்டதால், இனி தேசிய எல்லைகள் தகர்ந்து விழும் என்றும் கூறப்பட்டது. அது உண்மையென்று கருதும் வண்ணம் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் முன்னாள் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பிணைக்கப்பட்டன. இந்தத் திருமணம், அந்நாடுகளின் பொருளாதாரத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்திவிடும் என்றும், கிழக்கு ஐரோப்பா அளிக்கும் மலிவான உழைப்பின் காரணமாகக் கிட்டும் கூடுதல் வருவாய், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கப் பயன்படும் என்றும் மாயைகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், கிழக்கு ஐரோப்பா வளர்ச்சி பெறவில்லை. கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொண்டு சொந்த நாட்டு தொழிலாளர்களைப் புறக்கணித்த காரணத்தினால் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் ஆத்திரம் கொண்டனர். இன்னொரு புறம் பெட்ரோல் பங்குகளில் ஈழத்தமிழ் அகதிகள், டாக்சி ஓட்டுனர்களாக வங்கதேசத்தினர், ஜமைக்காவின் பணிப்பெண்கள், இன்னும் பாலஸ்தீனியர்கள், குர்துகள், கருப்பின மக்கள் என ஏகாதிபத்திய சதியின் பலிகடாக்களான பல்வேறு நாடுகளின் அகதிகள் ஆகக்குறைந்த கூலி தரும் வேலைகளில் அமர்த்தப்பட்டதால், பிரிட்டனின் அடித்தட்டு உழைக்கும் வர்க்கமும் வேலைவாய்ப்பை இழந்தது. மக்கள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை குறைக்க வேண்டும் எனும்படியான ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள், மேற்கு ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் ஏற்கெனவே பெற்றிருந்த உரிமைகளை ரத்து செய்தது.

ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஜெர்மனி, பிரான்சு, பிரிட்டனைச் சேர்ந்த ஏகபோக முதலாளிகள் உலக மேலாதிக்கத்துக்கான போட்டியில் தம்மை வலுப்படுத்திக் கொள்வதற்காக செய்து கொண்ட ஏற்பாடு. எனவே, இது நிதி மூலதனக் கொள்ளையர்களின் இலாபத்தைப் பன்மடங்கு அதிகரித்தது. பிரிட்டிஷ் மேட்டுக்குடி நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. சமூக ஏற்றத்தாழ்வை அதிகரித்தது. இன்னொரு புறம் திக்கற்ற நிலையில் தவித்துக் கொண்டிருந்த பல்வேறு நாட்டு அகதிகள் மற்றும் வேலை தேடி வந்த கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றியது. பிரிட்டிஷ் ஒன்றியத்தில் இணைந்த ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற ஒப்பீட்டளவில் பின்தங்கிய பகுதிகளையும் பொருளாதார ரீதியாகச் சற்றே முன்னேற்றியது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தையும் பரம ஏழைகளையும் நெருக்கடியில் தள்ளியது. உள்நாட்டு சிறு தொழில்களை அழித்தது. எனவே, வெளியேறுவதா, வேண்டாமா என்ற கேள்வி, முதலாளி வர்க்கத்தை மட்டுமின்றித் தொழிலாளி வர்க்கத்தையும் இரு கூறாகப் பிளந்தது. முதலாளி வர்க்கத்தின் மீதான வெறுப்பு, நிறவெறியாக மடைமாற்றம் பெற்றது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு முன், பிரிட்டிஷ் ஒன்றியத்திலிருந்து ஸ்காட்லாந்தும், அயர்லாந்தும் வெளியேறிவிடக் கூடும். ஏற்கெனவே ஒன்றியத்திலிருந்து விலகமுடியாமல் மிரட்டி இருத்தப்பட்டிருக்கும் கிரீஸ் முதல் ஸ்பெயின், போர்த்துகல் உள்ளிட்ட பல நாடுகளிலும் பிரிவினைக் குரல்கள் எழும்பத் தொடங்கும். சியாட்டில் போராட்டம், ஐரோப்பாவின் உ.வ.க எதிர்ப்பு போராட்டங்கள், சப்-பிரைம் நெருக்கடி, வால் ஸ்டிரீட் முற்றுகை என்ற வரிசையில் உலக முதலாளித்துவத்தின் தோல்வியைப் பிரகடனப்படுத்தும் இன்னொரு நிகழ்வே பிரெக்ஸிட். இடிந்து வீழ்ந்த பெர்லின் சுவரின் கற்களைக் கொண்டு தனக்கொரு காப்புச்சுவரை எழுப்புகிறது பிரிட்டன். இது உலக முதலாளித்துவத்தின் தோல்வியைப் பிரகடனம் செய்யும் சுவர்.

– தலையங்கம்
_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________