privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர் : இந்தியா தோற்றுவரும் யுத்தம் !

காஷ்மீர் : இந்தியா தோற்றுவரும் யுத்தம் !

-

காஷ்மீரில் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த தளபதிகளுள் ஒருவரான புர்ஹான் வானி, ரம்ஜான் பண்டிகை முடிந்த மறுநாளே – ஜூலை 8 அன்று இரவில் அரசுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 22 வயதான, காஷ்மீர் இளைஞர்களிடையே செல்வாக்கு கொண்ட புர்ஹான் வானியைக் கொன்றதைப் பெரும் வெற்றியாக அறிவித்த மோடி அரசு, அக்கொலையையடுத்து காஷ்மீரில் வெடித்துக் கிளம்பிய மக்களின் போராட்டங்களை அடக்கமுடியாமல் தோற்றுப் போய் நிற்கிறது.

புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலம்
இரண்டு இலட்சம் காஷ்மீரிகள் கலந்து கொண்டதாகச் சொல்லப்படும் புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலம்

புர்ஹானி வானி கொல்லப்பட்ட மறுநாள் தொடங்கி கடந்த இருபது நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த பத்து மாவட்டங்களை ஊரடங்கு உத்தரவுக்குக் கீழ் கொண்டுவந்து, மக்கள் நடமாட்டத்தைத் தடைசெய்த பிறகும்; தொலைக்காட்சி, கேபிள், இணையம், கைபேசி, சமூக வலைத் தளங்கள் உள்ளிட்ட நவீன தொடர்புச் சாதனங்களை அனைத்தையும் முடக்கிய பிறகும்; காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் மீது சட்டவிரோத தடை விதித்து, அவற்றை முடக்கிய பிறகும்; ஏறக்குறைய ஐம்பது காஷ்மீரிகளை சிறிய ரக குண்டுகளால் (pellet guns) சுட்டுக் கொன்ற பிறகும்; இக்குண்டுகளால் தாக்கப்பட்டோரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமது கண்பார்வையை இழந்து, குருடர்களாக ஆக்கப்பட்ட பிறகும்; ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் காயப்படுத்தி, அவர்களை முடமாக்கிய பிறகும்; பல நூறு பேர் கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் இந்திய அரசுக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய காஷ்மீர் மக்களின் போராட்டம் தணிந்துவிடவில்லை.

புர்ஹான் வானி
புர்ஹான் வானி

இந்திய இராணுவத்தின், துணை இராணுவப் படைகளின் குண்டுகளை விட காஷ்மீரத்து இளைஞர்களின் கைகளில் உள்ள கற்கள் வலிமையானவை என்பதை காஷ்மீர் பள்ளத்தாக்கு உலகுக்கு எடுத்துக் காட்டி வருகிறது. ஒப்பீட்டுரீதியாகச் சொன்னால், பாலஸ்தீன மக்கள் யூத இனவெறி இசுரேலிய அரசுக்கு எதிராக நடத்திய இன்டிஃபதா போராட்டத்தைப் போன்றதொரு போராட்டத்தை காஷ்மீரத்து இளைஞர்கள் இந்து பாசிச இந்திய அரசுக்கு எதிராக நடத்தி வருகிறார்கள்.

புர்ஹான் வானியின் இறுதிச் சடங்கிலும் ஊர்வலத்திலும் தடையை மீறி இரண்டு இலட்சம் பேர் கலந்து கொண்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அதேபொழுதில், இரண்டொரு மாதங்களுக்கு முன்பு காஷ்மீரின் முதல்வர் பதவியில் இருந்தபொழுதே மரணமடைந்தத முஃப்தி முகம்மது சயீதின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை ஐயாயிரம்தான்; மலைக்கும் மடுவுக்குமான இந்த வேறுபாடு காஷ்மீர் மக்களின் அரசியல் உணர்வை    பிரதிபலிக்கிறது.

* * *

இந்திய அரசாலும், காஷ்மீரத்துக்கு வெளியே உள்ள, குறிப்பாக, வட இந்திய மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த தேசியவாதிகளாலும் தீவிரவாதி, பயங்கரவாதி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவன், பாக். கைக்கூலி என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்ட இளைஞன் மீது காஷ்மீரத்து மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அன்பையும் பெருமதிப்பையும் பொழிகிறார்கள் என்றால், அதற்கான காரணம் என்ன என்பதை அறிவுள்ள எவனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், காஷ்மீர் மக்கள் நடத்திவரும் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி எழுதியிருக்கும் துக்ளக் சோ,இப்போது நடக்கும் இந்தப் போராட்டத்திற்குக்கூட, போராட்டக்காரர்களுக்கு நாளொன்றுக்குத் தலா ஐநூறு ரூபாய் தரப்படுவதாகவும், காஷ்மீருக்குத் தேவை அறுவை சிகிச்சைதான் என்றும்கூறிமக்கள்போராட்டத்தைகொச்சைப்படுத்தியிருப்பதுடன்அரசு பயங்கரவாதத்திற்கு வக்காலத்தும் வாங்கியிருக்கிறார்.

"பெல்லட்" குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீரிகள்.
“பெல்லட்” குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீரிகள்.

“ஈழத்திலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும்; ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்ற கோரிக்கை எந்த அளவிற்கு நீதியானதோ, நியாயமானதோ, அது போலத்தான், “காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும்; இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” எனக் கோருவதிலும் அரசியல் நியாயம் உள்ளது. 1947- இல் ஜம்மு-காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டபோது, பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒத்துக்கொண்டதோடு, அதனை ஐ.நா.மன்றத்திலும் கையெழுத்திட்டு எழுதிக் கொடுத்தது இந்திய அரசு. காஷ்மீர் பள்ளத்தாக்கு முசுலீம்கள் இந்திய அரசிடம் புதிதாக எதையும் கோரவில்லை. “நீங்களே ஒப்புக்கொண்டபடி பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்” என்ற வரலாற்று நியாயத்தைத்தான் கோருகிறார்கள்.

“உலகிலேயே காஷ்மீர் பள்ளத்தாக்குதான் மிக அதிக எண்ணிக்கையில் இராணுவம் குவிக்கப்பட்ட பகுதி” என்கிறார், மனித உரிமை பற்றிய சர்வதேச தீர்ப்பாயம் என்ற அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளரும் சமூகவியல் பேராசிரியருமான சட்டர்ஜி. இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளைச் சேர்ந்த 6,71,000 சிப்பாய்கள் துப்பாக்கி சனியன்களோடு காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார், அவர். இந்த எண்ணிக்கையின்படி பார்த்தால் பதினைந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவச் சிப்பாய். இதற்கு அப்பால், பொது பாதுகாப்புச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் எனப் பலவாறான ஆள்தூக்கி கருப்புச் சட்டங்கள் அம்மாநிலத்தில் நடைமுறையில் உள்ளன.

"பெல்லட்" குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீரிகள்.
“பெல்லட்” குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீரிகள்.

போலீசோ, இராணுவமோ ஒருவரைச் சந்தேகித்தாலே போதும், அவரை இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றிச் சிறையில் அடைப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது, பொது பாதுகாப்புச் சட்டம். நினைத்த நேரத்தில் யாரையும் சுட்டுக் கொல்லவும், யாருடைய வீடு புகுந்து தேடவும், அவர்களது சொத்துக்களைச் சூறையாடி அழிக்கவும் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் வரம்பற்ற அதிகாரத்தை வழங்கியிருப்பதோடு, அவர்கள் நடத்திய மோதல் படுகொலை போலியாக இருந்தால்கூட, அதற்காக அரசுப் படையினர் மீது வழக்குப் பதிவு செய்யமுடியாதபடி சட்டப் பாதுகாப்பையும் அளித்திருக்கிறது, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்.

காஷ்மீரில் 1989 தொடங்கி 2011 முடியவுள்ள இருபது ஆண்டுகளில் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எட்டாயிரத்திலிருந்து இருபதாயிரம் பேர் வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கக்கூடும் என்கிறது அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு. 1989 ஜனவரி தொடங்கி 2016 ஜூன் முடியவுள்ள இருபத்தேழு ஆண்டுகளில் 94,391 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 22,816 பெண்கள் கைம்பெண்கள் ஆக்கப்பட்டுள்ளனர். 10,193 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகிறது காஷ்மீர் ஊடக சேவையகம். காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபூர், குப்வாரா மாவட்டங்களில் 38 இடங்களில் 2,730 அடையாளம் தெரியாத சடலங்கள் அரசுப் படையினரின் நிர்பந்தம் காரணமாகப் புதைக்கப்பட்டிருப்பதை ஐந்தாண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் மனித உரிமை ஆணையமே அம்பலப்படுத்தியது. காஷ்மீர் மக்களின் அரசியல் கோரிக்கைகள் மட்டுமல்ல, இந்தச் சட்டவிரோத அத்துமீறல்களுக்கும்கூட அவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை.

இந்திய அரசின் அடக்குமுறைகளுக்கு அடங்கிப் போகாத காஷ்மீர் மக்களின் வீரம்
இந்திய அரசின் அடக்குமுறைகளுக்கு அடங்கிப் போகாத காஷ்மீர் மக்களின் வீரம்

டெல்லியில் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த நகரப்புறத்து நடுத்தர வர்க்கம், காஷ்மீரத்துப் பெண்கள் மீது அரசுப் படையினர் இழைத்த கொடுமைகளுக்கு எதிராக ஒரு சுண்டுவிரலைக்கூட அசைக்காமல், மௌனமாக அங்கீகரிப்பதை; ஈழத் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்திய அட்டூழியங்களைக் கண்டிக்கவும், எதிர்த்துப் போராடவும் தயங்காத தமிழகம், காஷ்மீரில் இந்திய இராணுவம் நடத்திய அட்டூழியங்களைக் கண்டும் காணாமல் நடந்துகொள்வதை எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்திவிட முடியாது.

* * *

புர்ஹான் வானி தனது 16-ஆவது வயதில் ஏன் தீவிரவாதியானான்? புர்ஹானின் வயதையொத்த காஷ்மீரத்து இளைஞர்கள் புர்ஹானை ஏன் ஆராதிக்கிறார்கள்? குண்டடிபட்டுச் செத்துப்போவோம் அல்லது கண்களை இழந்து வாழ்நாள் முழுக்க குருடனாய்த் திரிவோம் அல்லது தனிக் கொட்டடிச் சிறையில் அடைக்கப்படுவோம் எனத் தெரிந்திருந்தும், அதையெல்லாம் ஒரு பொட்டாகக் கருதாமல், கையில் கற்களோடு தெருவில் இறங்கி இராணுவத்தோடு ஏன் மோதத் துணிகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான காரணங்களை காஷ்மீரில் இந்திய அரசுதான் ஒவ்வொரு  நாளும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதனை பாகிஸ்தானில் தேடி பயனில்லை.

இந்திய அரசின் அடக்குமுறைகளுக்கு அடங்கிப் போகாத காஷ்மீர் மக்களின் வீரம்
இந்திய அரசின் அடக்குமுறைகளுக்கு அடங்கிப் போகாத காஷ்மீர் மக்களின் வீரம்

காஷ்மீரில் 1989-ல் வெடித்த ஆயுதப்போராட்டம் அடுத்த பத்தாண்டுகளில் ஒடுக்கப்பட்ட பிறகு, அங்கே அமைதி திரும்பி விட்டதாகவும், காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களும், அவர்களது எடுபிடிகளும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். 2002, 2008 சட்டமன்றத் தேர்தல்கள் இந்த அமைதிக்கு ஆதாரமாகக் காட்டப்பட்டன. ஆனால், இந்த அமைதி காஷ்மீர் மக்களின் விடுதலை உணர்வை எந்தவிதத்திலும் மழுங்கடித்துவிடவில்லை என்பதை 2008-லும், 2010-லும் நடந்த மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எடுத்துக் காட்டின.

2008-இல் அம்மாநிலத்தை ஆண்டுவந்த காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அரசு, அந்த ஆண்டு வரவிருந்த தேர்தலில் ஜம்மு பகுதி இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, வனத்துறைக்குச் சொந்தமான 39.88 ஹெக்டேர் நிலத்தை அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் அனுபவித்துக் கொள்ள அனுமதித்துச் சட்டம் போட்டது.

காஷ்மீர் இராணுவ ஆக்கிரமிப்பு
இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளைச் சேர்ந்த 6,71,000 சிப்பாய்கள் துப்பாக்கி சனியன்களோடு காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையின்படி பார்த்தால் பதினைந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவச் சிப்பாய்.

இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து காஷ்மீர் முசுலீம்கள் போராடியதையடுத்து, காங்கிரசு கூட்டணி அரசு இச்சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சட்டம் திரும்பப் பெறப்பட்டதை இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக ஊதிப் பெருக்கிய ஆர்.எஸ்.எஸ்.-சிவசேனா கும்பல், காஷ்மீர் தலைநகர் சிறீநகரை இந்தியாவோடு இணைக்கும் ஜம்மு-சிறீநகர் நெடுஞ்சாலையில் தடைகளை ஏற்படுத்தி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியின் மீது சட்டவிரோதமான பொருளாதாரத் தடையை ஏவிவிட்டது.

இந்தத் தடையைஎதிர்த்து”ஜம்மு-காஷ்மீர் பகுதியை, ஆசாத் காஷ்மீரோடு இணைக்கும் சாலைகளைத் திறந்துவிட வேண்டும்; அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்; ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்” ஆகிய மூன்று அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து காஷ்மீர்பள்ளத்தாக்குமக்கள்நடத்தியபோராட்டத்தை ஒடுக்குவதற்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

2010-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து வந்த டுஃபாயில் மட்டூ என்ற சிறுவன் அரசுப் படையினரால் அநியாயமாக, தெருநாயைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் 120 பேர் கொல்லப்பட்டதோடு, அப்போரட்டத்தில் கலந்துகொண்டு, அரசுப் படைகளின் மீது கல்லெறிந்த ஒரே காரணத்திற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்களும், 18 வயதுகூட நிரம்பாத சிறுவர்களும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீரில் ஒருமுறை போலீசு நிலையத்தின் வாசலை மிதித்துவிட்டாலே, அதோடு வாழ்க்கையே முடிந்துவிடும். குற்றஞ்சுமத்தப்பட்டவர்கள், போலீசார் கூப்பிடும்போதெல்லாம், அது இரவோ, பகலோ மறுக்காமல் போலீசு நிலையத்திற்குச் செல்ல வேண்டும். போலீசு நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடக்கும் அவமதிப்புகளை, அடி உதை உள்ளிட்ட சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

காஷ்மீரில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த நிலைமை, காஷ்மீரிகளுக்கு இரண்டு வாய்ப்புகளைத்தான் வழங்கியிருக்கிறது. ஒன்று, அவர்கள் போலீசின்-இராணுவத்தின் ஆள்காட்டிகளாக மாற வேண்டும் அல்லது தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசுப் படைகளின் கொலைவெறியாட்டத்திற்குத் தனது அண்ணனைப் பறிகொடுத்த, அரசுப் படைகளின் சித்திரவதைகளுக்கும் அவமானப்படுத்தலுக்கும் ஆளான புர்ஹான் வானி பின்னதைத் தேர்ந்தெடுத்தார். போராளிஅமைப்புகளிலிருந்துவிலகி, போலீசிடம்சரணடைந்தாலும், அவ்வாறுசரணடையும்இளைஞர்கள்அமைதியாக வாழ்வதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்பதற்கு நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட அப்சல் குரு ஓர்எடுத்துக்காட்டு.

* * *

காஷ்மீர் பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்
தினசரிப் பத்திரிகைகள் வெளிவருவதைச் சட்டவிரோதமாகத் தடை செய்த மாநில அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து சிறீநகரில் பத்திரிகையாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு, வாஜ்பாயி ஆட்சியின் போதும், அதன் பிறகு வந்த காங்கிரசு கூட்டணி ஆட்சியின்போதும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள், ஆலோசனைகள், குழுக்கள் குறித்துப் பிரமாதமாகப் பேசப்பட்டாலும், அவைகளில் ஒன்றுகூட காஷ்மீர் மக்களின் மையமான அரசியல் கோரிக்கையான பொது வாக்கெடுப்பு குறித்துப் பேச மறுத்தன. குறைந்தபட்சம், காஷ்மீர் மக்களுக்கு அரசுப் படைகளால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைப்பதைக்கூட உத்தரவாதம் செய்ய மறுத்தன. குறிப்பாக, காங்கிரசு கூட்டணி ஆட்சியின்பொழுது அமைக்கப்பட்ட, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் திலீப் பட்கோங்கர், கல்வியாளர் ராதா மோகன், முன்னாள் தகவல் அறியும் உரிமை ஆணைய ஆணையர் எம்.எம்.அன்சாரி ஆகியோரைக் கொண்ட மூவர் குழு, காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என ஒப்புக்குச் சப்பாணியான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை அளித்தது. அதனை வெளியிடக்கூட காங்கிரசு அரசுமறுத்துவிட்டது. ஆர்ப்பாட்டம் செய்யும்காஷ்மீர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குப் பதிலாக, சிறிய இரக இரும்புக் குண்டுகள் அல்லது ரப்பர் குண்டுகளைக் கொண்டு சுடுவதையே பெரிய சலுகையைப் போல அறிவித்தது. இந்த துப்பாக்கியால் ஒருமுறை சுடும்பொழுது ஐநூறுக்கும் குறையாத குண்டுகள் மழை போல ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதால், அவர்களின் தலை தொடங்கி பாதம் முடிய உடம்பின் எந்தப் பகுதியும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, சல்லடைக் கண் போலாகிவிடும். நிரந்தர ஊனமாக்கி நடைபிணமாக்கி விடும். உலகிலேயே இந்தக் கேடுகெட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தி வரும் நாடுகள் இரண்டுதான். ஒன்று யுத இனவெறி கொண்ட இசுரேல், மற்றொன்று பார்ப்பன தேசிய வெறி கொண்ட இந்தியா.

puthiya-jananayagam-august-2016-backகாஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்துவது இருக்கட்டும்; அம்மாநிலத்திற்குச் சிறப்புரிமைகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு காகித அளவில் நீடிப்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் ஏற்றுக் கொள்வதில்லை.

காங்கிரசு அப்பிரிவைக் கொல்லைப்புற வழியில் நீர்த்துப் போகச் செய்தது என்றால், இந்து மதவெறிக்கும்பலோ அப்பிரிவை அடியோடு நீக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகவே கொண்டிருக்கிறது. முந்தைய காங்கிரசு அரசால் அமைக்கப்பட்ட மூவர் குழு, அதன் பரிந்துரைகள்,ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுடன் நடத்தப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட கண்துடைப்பு நடவடிக்கைகளைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவை அனைத்தையும் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படும் சலுகையாக ஊதிப் பெருக்கி எதிர்த்தது.

காஷ்மீர் இளைஞர்களுக்கு வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் அளிப்பதன் மூலம் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவிடுவேன் என மார்தட்டினார் மோடி.முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியின்பொழுதே, காஷ்மீரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர உதான் திட்டம், உயர் கல்வி பயிலும் இளைஞர்களுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை உள்ளிட்டுப் பல்வேறு சலுகைகளும், நிதியுதவிகளும் அறிவிக்கப்பட்டன. காங்கிரசு உருவாக்கிய திட்டத்தைத்தான் மோடி அரசு புதிய மொந்தையில் காஷமீருக்கு அளித்தது. 2013-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் உதான் திட்டம், கடந்த மூன்றாண்டுகளில் 6,621 காஷ்மீரிகளுக்குத்தான் வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறது.

வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற மோடியின் வாய்ப்பந்தல் படுதோல்வி அடைந்துவிட்டதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. உண்மையில், இராணுவ ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவது, காஷ்மீரில் இந்து மதவெறியைத் தூண்டி வளர்த்துவிடுவது ஆகியவற்றில்தான் மோடி அரசு அக்கறை கொண்டிருக்கிறது.  அமர்நாத் யாத்திரையைத் தேச பக்த யாத்திரை போலச் சித்தரிப்பது, கிராம பாதுகாப்பு கமிட்டி என்ற போர்வையில் கைக்கூலிப் படைகளை உருவாக்கியிருப்பது ஆகியவற்றோடு, இராணுவ வீரர்களுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிரந்தர குடியிருப்புகளை உருவாக்குவது, காஷ்மீரிலிருந்து வெளியேறச் சென்றுள்ள பண்டிட் பார்ப்பனர்களுக்காகத் தனிக் குடியிருப்புகளை உருவாக்கி, அவர்களை அங்கு குடியமர்த்துவது என்ற திட்டங்களைச் செயல்படுத்த முயன்று வருகிறது, மோடி அரசு.

அதே நேரத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீனின் தளபதியான புர்ஹான் வானி, தான் இறப்பதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில், “எங்களது இயக்கம் அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு எவ்வித ஊறும் விளைவிக்காது. யாத்திரை செல்வது அவர்களின் உரிமை, தங்களது மதக் கடமையை நிறைவேற்றுவதை நாங்கள் மட்டுமல்ல, எதுவும் தடுக்காது” என குறிப்பிட்டுள்ளார். அதே அறிக்கையில், “காஷ்மீர் பண்டிட்டுகள், தமது சொந்த ஊருக்குத் திரும்புவதோடு, காஷ்மீர் முசுலீம்களுக்கு அருகிலேயே பழையபடி வசிக்கலாம்; அதற்கு மாறாக, இசுரேலில் யூதர்களுக்குத் தனிக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் போன்று பண்டிட்டுகளுக்குத் தனிக் குடியிருப்பு ஏற்படுத்தும் முயற்சியை எதிர்க்கவே செய்வோம்” என்று எச்சரித்திருக்கிறார்.

இந்த இளைஞனை நாட்டிற்கு எதிரான ஒரு பெருந்தீமை போலச் சித்தரித்துக் கொன்று போட்டுவிட்டது, மோடி அரசு. அதனைக் கண்டித்தும், தங்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் போராடத் துணிந்த காஷ்மீர் மக்களின் மீது கொடிய “பெல்லட்” தாக்குதலை நடத்தி, கிட்டதட்ட 50 பேரைச் சாகடித்து, நூற்றுக்கும் மேற்பட்டோரின் கண் பார்வையைப் பறித்துக் குருடாக்கி, ஆயிரக்கணக்கானோரைக் கொடுங்காயப்படுத்தி, இந்து தேசிய அரசு பயங்கரவாதம் தனது இரத்தப் பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது. அரியானாவில் தீ வைப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறை வெறியாட்டத்தை நடத்திய ஜாட் சாதிவெறியர்கள் மீதும், முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அமைப்புகள் மீதும் காட்டப்படாத வன்மம், காஷ்மீர் முசுலீம்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கிறது.

அரசுப் படைகள் நடத்திய தாக்குதலால் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குச் சென்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் தலைவர் சுதர்சன் கே.குமார், “இந்த அளவிற்கு கண்களும் பார்வையும் பாதிக்கப்பட்டவர்களைச் சமீபத்தில் நான் எங்குமே பார்த்ததில்லை. ஒரு யுத்தத்தில்தான் இத்தகைய இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும்” எனக் குறிப்பிடுகிறார்.

காஷ்மீரி மக்கள் மீது ஒரு அநீதியான போரைமோடி அரசு நடத்தி வருவதை அந்த மருத்துவரின் வார்த்தைகள் அம்பலப்படுத்துகின்றன. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இந்தப் போர் முடிவின்றி நடந்து வருகிறது. சமீபத்தில் மோடி அரசு மேலும் பத்தாயிரம் சிப்பாய்களை காஷ்மீரில் இறக்கிவிட்டிருக்கிறது. துருப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் காஷ்மீர் மக்களை அச்சுறுத்திப் பணிய வைத்துவிட முடியாது. பொது வாக்கெடுப்பு உள்ளிட்டு காஷ்மீர் மக்களின் அரசியல் கோரிக்கைகளை அங்கீகரிப்பது மட்டும்தான், காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதற்கான நியாயமான,சாத்தியமான வழி. அதற்கு முகங்கொடுக்காமல், நெருப்புக் கோழி மண்ணுக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்வது போல, தேசிய ஒருமைப்பாடு என்ற பார்ப்பனிய கண் கொண்டே காஷ்மீர் பிரச்சினையை அணுகுவதும், தீர்க்க முயலுவதும் மீண்டும் மீண்டும் தோல்வியையே தழுவும் என்பதோடு, அது காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் நம்பிக்கை துரோகமும் அநீதியுமாகும்.

– செல்வம்

_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________