Friday, December 9, 2022
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 29/08/2016

ஒரு வரிச் செய்திகள் – 29/08/2016

-

kashmir-2செய்தி: காஷ்மீர் வரலாற்றிலேயே அதிக காலம் நீடித்த ஊரடங்குச் சட்டம் 51 நாட்களுக்குப் பிறகு, புல்வானா நகரம், ஸ்ரீநகரின் சில பகுதிகள் தவிர காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் நீக்கப்பட்டிருக்கிறது.

நீதி: ஊரடங்குச் சட்டம் நீண்ட நாட்கள் நீடித்தது அரசின் அடக்குமுறைக்கு கிடைத்த சிறுமை, அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடிய மக்களுக்கு பெருமை!

—————————————————-

ramdev-ad
பதஞ்சலி பொருள் விளம்பரத்தில் சிலுவை!

செய்தி: சுதந்திரதினத்தையொட்டி பாபா ராம்தேவின், பதஞ்சலி மருந்துகளுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு – விதேசி – பொருட்கள் இந்திய மக்களுக்கு ஊறு விளைவிக்கிறது என்று காட்டுவதற்கு சிலுவையை விதேசி ஆக்கிரமிப்பின் குறியீடாக பயன்படுத்தியதை கிறித்தவ மக்கள் எதிர்த்திருக்கின்றனர்.

நீதி: உத்தரகண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள பதஞ்சலி யோக பீட அறக்கட்டளை, திவ்ய யோக மந்திர் அறக்கட்டளை, பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற ‘கிறித்தவ’ நாடுகளிலிருந்து பணம் வருகிறது. அதன்படி இந்த விதேசி ஆக்கிரமிப்புக்காக பாபா ராம்தேவை சிலுவையில் அறைவதா, திரிசூலத்தில் சொருகுவதா?

————————————————

makesh-sharma
சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா

செய்தி: இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் குட்டைப் பாவாடையை அணியாமலும், இரவு நேரத்தில் வெளியே சுற்றாமல் விடுதிகளிலேயே தங்குமாறும், சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூட்டமொன்றில் பேசியிருக்கிறார்.

நீதி: சுற்றி வளைக்காமல் இந்தியர்கள் காமவெறியர்கள், இந்தியாவின் இரவுகளில் பாதுகாப்பு இல்லை என்று நேரடியாக பாரதத்தின் பெருமைதனை எடுத்துரைக்கலாமே?

————————————————————-

panamaசெய்தி: “பனாமா பேப்பர்ஸ்” எனப்படும் ஊழலின் படி பனாமா நாட்டின் மொசாக் ஃபொன்சேகா சட்ட நிறுவனத்தோடு தொடர்புடைய இருபது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான அந்நியச் செலவாணி மேலாண்மை சட்ட மீறல் குறித்து விசாரிக்குமாறு அமலாக்கத்துறையை இந்திய ரிசர்வ வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

நீதி: பனாமா ஊழல் வெளிவந்து சில மாதங்கள் முடிந்துள்ளதால், குற்றவாளிகளின் தடயங்கள், ஆதாரங்கள் புதைக்கப்பட்டிருக்கும். விசாரணையின் ‘அதி வேகத்திற்கு’ இதுவே காரணம்!

————————————————————-

kashmirசெய்தி: 51 நாட்களுக்குப் பிறகு ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் காஷ்மீரில் வாழ்க்கை சுலபம் இல்லை. ஸ்ரீநகரிலிருந்து 80 கி.மீ தூரத்திலிருக்கும் சச்சல்தாரா கிராமத்தில் மக்கள் வீடு வீடாக உணவுப் பொருட்களை சேகரித்து இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கின்றனர்.

நீதி: காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய அரசு ஊரடங்குச் சட்டம் போட்டு பேல்லட் குண்டுகளை வீசுமா இல்லை அரிசிப் பைகளை வழங்குமா?

————————————————————-

செய்தி: ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற சிந்து, சாக்ஷி மாலிக், மயிரிழையில் பதக்கத்தை தவற விட்ட தீபா கர்மாகர், பயிற்சியாளர் கோபி சந்த் ஆகியோருக்கு பிரபல கிரிக்கெட் வீரரும், ரியோ ஒலிம்பிக்கின் நல்லெண்ணத் தூதருமான சச்சின்  டெண்டுல்கர், பி.எம்.டபிள்யூ கார்களை பரிசளித்தார்.

நீதி: ஐம்பது இலட்ச காரை ஆளுக்கொன்றாய் கொடுத்து விட்டால், மற்ற விளையாட்டுக்களை கொன்று போட்ட முதலாளிகளின் கிரிக்கெட் வில்லத்தனம் மறக்கப்படும் என்று நினைக்கிறார், சச்சின்!

————————————————————-

செய்தி: கொல்லப்பட்ட போராளி புர்ஹான் வாணியின் தந்தையான முசாஃபர் வாணி, வாழும் கலை ரவிசங்கரைச் சந்தித்தார்.

நீதி: இந்த சந்திப்பை ஒரு விளம்பரமாய் வாழும் கலை ரவிசங்கர் தனது இமேஜைக்கு பயன்படுத்தலாம். ஆனால் கொலையும், போராட்டமுமாக இருக்கும் காஷ்மீருக்கு ஒரு இந்துத்துவ கார்ப்பரேட் சாமியாரால் என்ன பயன்?

————————————————————-

jhon-kerry
அமெரிக்க வெளியுறவத்துறை செயலர் ஜான் கெர்ரி

செய்தி: அமெரிக்க வெளியுறவத்துறை செயலர் ஜான் கெர்ரி, 29.8.16 திங்களன்று வங்கதேசம் வந்து, இஸ்லாமிய தீவிரவாதிகளின் தொடர் கொலைகளைத் தடுப்பதற்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம், மனித உரிமைகள் குறித்து வங்கதேச அரசுடன் கலந்துரையாட இருக்கிறார்.

நீதி: வங்கதேச ஏற்றுமதி நிறுவனங்களின் மூலம் தொழிலாளிகளை சுரண்டும் அமெரிக்க நிறுவனங்களின் பயங்கரவாதம், பொருளாதார சுரண்டல், மனித உரிமை மீறல் குறித்த பேச்சுக்கள் இதில் உண்டா?

————————————————————-

Penny-Pritzker
அமெரிக்காவின் வணிகத்துறை செயலர் பென்னி பிரிட்ஸ்கர்

செய்தி: அமெரிக்காவின் வணிகத்துறை செயலர் பென்னி பிரிட்ஸ்கர், மூன்று நாள் பயணமாக 29.8.16 திங்களன்று இந்தியா வந்துள்ளார்.

நீதி: நரசிம்மராவ் காலத்தில் ஆரம்பித்து மோடியின் காலம் வரை மொத்த இந்தியாவையே அமெரிக்காவிற்கு விற்றாகி விட்டது. இப்போது எதை விற்கப் போகிறார்கள்?

 

————————————————————-

செய்தி: உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த வணிக அமைச்சர்கள் 2016 அக்டோபரில் நார்வேயில் சந்தித்து, உலக வர்த்தகத்தை மேலும் தாராளமயமாக்கம் செய்வது குறித்தும், உள்நாட்டு தொழிலை பாதுகாக்கும் போக்கு அதிகரிப்பதால் தாராளமயத்திற்கு ஏற்படும் பிரச்சினைகளையும் பேசப் போகிறார்கள்.

நீதி: இந்த செய்தியை மக்கள் மொழியில் கூறுவதென்றால், உலகமயமாக்கத்தின் கேடுகளைக் கண்டு உலகெங்கும் பெருகி வரும் எதிர்ப்புகளை முறியடிக்க, ஏகாதிபத்திய நாடுகள் புதுத் திட்டங்களை போட்டு அமல்படுத்த நார்வேயில் சந்திக்கின்றன.

————————————————————-

செய்தி: சட்டிஸ்கரில் இருக்கும் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு பகுதியான லோகண்டி குடாவில் அமைக்க இருந்த இரும்பு எஃகு ஆலைத் திட்டத்தை  டாடா ஸ்டீல் நிறுவனம் ரத்து செய்து விட்டது.

நீதி: வளர்ச்சிக்கு எதிரானவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் சட்டிஸ்கர் பழங்குடி மக்களை கொல்லும் பாதுகாப்பை படைகளின் நியாயத்தை வரும் காலங்களில் தொலைக்காட்சி நிலைய வித்வான்கள் எடுத்துரைக்க இந்த செய்தி பயன்படும்.

————————————————————-

செய்தி: “இந்தியாவை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் மையமாக்க முடிவு செய்தோம். கடந்த வருடத்தில் மட்டும் 37 செல்பேசி உற்பத்தி நிலையங்கள் வந்திருக்கின்றன என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

நீதி: இந்த 37 நிலையங்களில் கணிசமானவை சீன நிறுவனங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்து பாருங்களேன்! இனி சீனத்து பொருட்கள் இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த விட்டது என்று ஸ்வயம் சேவக் குஞ்சுகளே பேச முடியாது! ஏனெனில் அவை மேக் இன் இந்தியா பொருட்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க