Friday, December 9, 2022
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஆர்.எஸ்.எஸ் மயமாகும் புதுச்சேரி - பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

ஆர்.எஸ்.எஸ் மயமாகும் புதுச்சேரி – பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

-

புதுவை பல்கலைக்கழகத்தில் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு கல்லறை கட்டுவதற்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடுவோம்!

new-education-policy-puduvai-demo-2சூத்திரனுக்கும், பஞ்சமனுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி உரிமையை மறுத்து, அடிமைகளாகவும், வெற்றுச் சதைப் பிண்டங்களாகவும் வைத்திருந்த பார்ப்பனக் கும்பல், உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறுவதைச் சகிக்க முடியாமல், தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாக கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிராக சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்குத் தடை, ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ரோகித் வெமுலா கொலை, டெல்லி ஜெ.என்.யூ.வில் கண்ணையா குமார் மீது தாக்குதல், பூனா திரைப்படக் கல்லூரி, ஜாதவ்பூர் என மாணவர் அமைப்புகளை ஒடுக்குவது என தொடர்ந்து பார்ப்பன பாசிச கும்பல் ஆட்டம் போட்டு வருகிறது. இறுதியாக, புதிய கல்விக் கொள்கை மூலம் மீண்டும் நவீன குலக்கல்வி முறையை கொண்டு வரப் புறப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மாணவர்களின் எழுச்சி மூலம் வால் அறுக்கப்பட்ட போதிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும், கல்வி முறையிலும், தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.

new-education-policy-puduvai-demo-1அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இந்தியாவெங்கும் இந்து மதவெறியர்கள் நடத்தி வரும் தாக்குதல்கள், தலித்கள் மீதான அடக்குமுறை வெறியாட்டங்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் படுகொலைகள் என்று அதிகரித்து வரும் பாசிசக் கொடுங்கோன்மையை அம்பலப்படுத்தி எழுதப்பட்ட நூலை, 28-07-2016 அன்று வெளியிட்டதை எதிர்த்தும், வெளியிட்ட மாணவர் பேரவையின் மீதும், அதற்கு அனுமதி அளித்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் காவிக் குரங்கான பா.ஜ.க-வும், அதன் குட்டியான ஏ.பி.வி.பி–யும் 01-08-2016 அன்று ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூச்சலிட்டனர். (இது தொடர்பாக 03-08-2016 அன்று வினவில் விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது)

new-education-policy-puduvai-demo-3பா.ஜ.க, ஏ.பி.வி.பி குண்டர் படையின் இந்த அட்டூழியங்களைக் கண்டித்து ஜனநாயக முறையில் எங்களது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்புக்குழுவின் கருத்தை சொல்ல 22-08-2016 ஆர்ப்பாட்டம் நடத்த போலிசிடம் அனுமதி கேட்ட போது, பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றி கூட்டங்கள் நடத்த பல்கலைக் கழக நிர்வாகம் தடை வாங்கியுள்ளதாக தெரிவித்தது. ஏ.பி.வி.பி உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுமதி அளித்தது பற்றி கேட்ட போது வாய் திறக்க மறுத்து விட்டது. இறுதியில் பல்வேறு போராட்டம், அலைக்கழிப்பிற்குப் பிறகு பல்கலைக் கழகத்திலிருந்து சுமார் 08 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரப் பகுதியான முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில், மாலை 05.00 மணிக்கு, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முதல் நாள் இரவு தான் அனுமதி அளித்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் அமைப்புக் குழு தோழர் பரத் தலைமை தாங்கினார்.

new-education-policy-puduvai-demo-4தனது தலைமையுரையில், இந்தப் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பாசிச குண்டர் படை, நாடெங்கிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தங்களது களமாக்க தாக்குதல் நடத்துவது, கொலை உள்ளிட்ட பாசிச வெறியாட்டங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. எனவே, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடக்கும் விசயம் என குறுக்கிப் பார்க்க முடியாது. ஆயிரம் ஆண்டுகளாக சூத்திரனுக்கும், பஞ்சமனுக்கும் கல்வியை மறுத்த பார்ப்பனியம், இன்றும் தனது பாசிசத் தாக்குதல்கள் மூலம் ஜனநாயகமாகவும், முற்போக்காகவும் செயல்படும் மாணவர்களையும், தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் கல்வி பயில வரவே கூடாது என மிரட்டும் நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை மூலம், மாணவர்களை கார்ப்பரேட்டுகளின் அடிமையாகவும், சதைப் பிண்டமாகவும் மாற்றும் வேலைகளிலும் இறங்கியுள்ளது. எனவே, இது வெறும் மாணவர் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் பிரச்சினை என்று போராட அறைகூவினார்.

new-education-policy-puduvai-demo-5பெரியார் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் கோகுல் காந்திநாத், இந்தியா மதச் சார்பற்ற நாடே அல்ல. மத அடிப்படையிலான நாடு தான் என்பதையும், சுதந்திரம் என்பது ஏமாற்று என்பதையும், கொடியின் மூவர்ணத்தை வைத்து விளக்கியதோடு, இந்து தெய்வங்களின் யோக்கியதையையும் சாடினார். பார்ப்பானர்கள், தமது ஆதிக்கத்தை நிலை நாட்டும் வேலைகளில் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். நாம் அவன் சொன்னால் சரியாக இருக்கும் என்று ஏமாளிகளாக இருக்கிறோம் என்றார். இன்றைய அதன் உருவம் தான் புதிய கல்விக் கொள்கை, பெரியார் காலத்தில் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை, இன்று கல்விக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் பார்ப்பனர்கள் கொண்டு வருகிறார்கள். அன்று பெரியாரின் போராட்டம் அதை முடிவுக்குக் கொண்டு வந்தது போல், இன்று நாம் தான் புதிய கல்விக் கொள்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.

new-education-policy-puduvai-demo-6பெரியார் சிந்தனையாளர் இயக்க அமைப்பாளர் தோழர் தீனா, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் ஒரு கருத்தைச் சொல்ல உரிமையில்லை என்றால் இது சுதந்திர நாடா? என்று கேள்வி எழுப்பினார். அவர்வர் தங்களது கருத்தைச் சொல்வது அவர்களின் உரிமை. அதற்கு மாற்றுக் கருத்து இருந்தால், அதை அவர்கள் சொல்ல வேண்டும். இதை விடுத்து தாக்குதல் நடத்துவது என்பதே ரவுடித்தனம் என்றார். குலக்கல்வியின் நவீன வடிவம் தான் புதிய கல்விக் கொள்கை என்றவர், வாளெடுத்தால் தான் பிரச்சினை தீருமென்றால், வாளெடுப்பது தவிர வேறு வழியில்லை என்ற பெரியாரின் கருத்தைக் கூறி நிறைவு செய்தார்.

தோழர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த நபர் வந்து தான் அந்தப் பகுதி பா.ஜ.க-வின் பொறுப்பாளர் என்றும், இந்த கூட்டத்தின் தலைவர் யார்? என்றும் கூட்டம் தொடர்ந்து நடந்தால் கலவரம் நடக்கும் என்றும், இந்த விசயங்களைப் பேசுவதற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என்றும் அருகில் இருந்த எஸ்.ஐ.யிடம், கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். இடையில் எஸ்.ஐ., ஆர்ப்பாட்டத்தின் தலைவரை அழைத்து, ஆர்.எஸ்.எஸ் பற்றியெல்லாம் பேசாதீங்க என்று சொன்னதை, நாம் பேசுவோம் என்று சொன்னதுடன் அதை அம்பலப்படுத்தியும் பேசப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைச்செயலாளர் தோழர் லோகநாதன், விசயங்களைப் பேசக்கூடாது என்று சொன்னால் எப்படி பேசாமல் இருக்க முடியும் என்று கேள்வி பதில் பாணியில் விளக்கும் வகையில் தோழர் பேச ஆரம்பித்தார்.

ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி குண்டர் படை, தொடர்ந்து நாடெங்கிலும், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல்வேறு வகைகளில் முயன்று வருவதை விளக்கி, சந்திரா கிருஷ்ணமூர்த்தி, போலியான ஆவணங்கள், ஆய்வுக் கட்டுரைகள் மூலம் துணைவேந்தராக ஆனதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆதரித்த மோசடிக் கும்பல், இந்துத்துவாவின் பாசிசத்தன்மையை, மோடியின் கொலை வெறியாட்டத்தை ஆய்வு செய்து எழுதிய உண்மையை பொறுத்துக் கொள்ள முடியாமல் தாக்குதல் நடத்துவதைப் பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?

புதுச்சேரியில், காஷ்மீர் பிரச்சினையை ஒட்டி, 300 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் இந்து முன்னணிக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுத்து விட்டு, அதன் மூலம் கலவரத்தை உருவாக்கும் அரசும், மக்களை பாதுகாக்கத் துப்பற்ற போலிசும் பார்ப்பனியத்திற்குப் பங்காளியாக இருப்பது பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் ஆண்டு மலரை வெளியிட அழைத்த போது, முதலில் ஏற்றுக் கொண்டு, பின் பிரச்சினை என்னவென்றே ஆய்வு செய்யாமல், ஒதுங்கிய கவர்னர், முதலமைச்சர் ஆகியோரது பார்ப்பனிய ஆதரவு நடவடிக்கைகளையும், முஸ்லிம் மக்களிடம் சமாதானம் பேசிய கவர்னர், முதலமைச்சர் மற்றும் அரசின் உயரதிகாரிகள், இந்துத்துவ அமைப்புகள் மீண்டும் அதே பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்து கலவரத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும்?

பாஜக. டெல்லி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிரண்பேடியும், காங்கிரசு அரசில் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமியும் மக்கள் பிரச்சினைகளில் அரசியல் செய்யும் நிலையில், இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவு தருவதில் கட்சி, கொள்கை என்ற வேறுபாடில்லாமல் ஒற்றுமையாக செயல்படுவதைப் பற்றி எவ்வாறு பேசாமல் இருக்க முடியும்?

புதிய கல்விக் கொள்கை என்பதே மீண்டும் குலக்கல்வி முறையைக் கொண்டு வரும் மோசடி தான், ஆன்லைன் கல்வி மூலம், ஆசிரியரின்றி கல்வி கற்கும் முறை என்பது, கார்ப்பரேட்டுக்களுக்குத் தேவையான கல்வி கற்று, அவர்களின் அடிமைகளாகவும், மனித விழுமியங்கள், பழக்க வழக்கங்கள், நெறிமுறைகள் அல்லாத வெற்றுச் சதைப் பிண்டங்களாகவும் மக்களை மாற்றுவது பற்றியும், அதற்கு மூல காரணமாக உள்ள பார்ப்பனியத்தையும் அதைச் செயல்படுத்தும் மோடி அரசைப் பற்றியும் எவ்வாறு பேசாமல் இருக்க முடியும்?

இவ்வளவு பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டுமென்றால், இருக்கின்ற அரசின் உறுப்புகள் அனைத்தும், ஒரு புறம் காவி மயமாகவும், மறுபுறம் மக்களுக்கு தேவையற்றதாகவும் மாறியுள்ளதையும், அதற்கு தீர்வு அதிகாரத்தைக் கையில் எடுக்க களத்தில் இறங்குவதே என்பதைப் பற்றியும் பேசாமல் எப்படி இருக்க முடியும்? நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனில் பேசியே தீர வேண்டும் என்று பேசி முடித்தார்.

ஆர்ப்பாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த பாஜக.-பகுதிப் பொறுப்பாளர் என்று சொன்ன நபர், ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், “அடுத்த கூட்டம் நடந்தால் பார்த்துக் கொள்கிறேன்” என்று புலம்பி விட்டு சென்று விட்டார்.

இடைஇடையே போன் செய்து இந்நேரத்திற்கு எவனும் போன் எடுக்காமல் இருக்கின்றனர். அவர்கள் வந்தால் ஒரு கை பார்த்து விடலாம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்த மழை, கொட்ட ஆரம்பித்தது. காவி குண்டர் படை வந்திருந்தால், கொட்டும் மழையில், அவர்களின் கொட்டத்தையும் மக்கள் முன் அம்பலமாக்கி அடக்கி இருக்கலாம்.

தகவல்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – அமைப்புக்குழு,
தொடர்புக்கு : 81244 12013.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க