முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்நிம்மதியான தூக்கம் தூங்கி பல வருசமாச்சு !

நிம்மதியான தூக்கம் தூங்கி பல வருசமாச்சு !

-

news paper workers (8)
அதிகாலையில் செய்தித்தாள்களின் விநியோக வேலை துவக்கம்!

விடியலைத் தவறவிடும் சோம்பேறி திலகங்கள் அறியாத ஒன்று காலையின் அழகு. இளங்கதிரவனுக்கு முந்தைய பனியொளியில் ஆரம்பிக்கிறது ஒரு நகரத்தின் வாழ்க்கை. இரவுப் பணி முடிந்து வரும் தொழிலாளிகள், ஊழியர்களையும், படப்பிடிப்பு வேலைக்காக அதிகாலை வரும் சினிமா – தொலைக்காட்சி தொழிலாளிகளையும் ஒருங்கே அரவணைக்கும் தேநீர்க் கடைகள். கூடவே சென்னை நகரெங்கும் ஆங்காங்கே மூடப்பட்ட கடைகளின் வாயிலிலே தினசரி கட்டுக்களை அடுக்கி பிரித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள்.

காலையில் நீங்கள் வாசிக்கும் செய்தித் தாட்களை பெற்று பிரித்து கலந்து நடந்து உங்களிடம் சேர்க்கிறார்கள் இவர்கள்.

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியில் வசிக்கிறார் முருகானந்தம். வயது 41. இருபது வயதிலேயே தினசரி விநியோக வேலையை செய்து வருகிறார். இந்த இருபதாண்டுகளில் பல முக்கிய செய்திகள், நிகழ்வுகள் எல்லாம் இவர் மூலமாகவே இப்பகுதிக்கு சென்று சேர்கிறது. ஆயினும் அவரது வாழ்வில் என்ன முக்கியம்?

Muruganandam
முருகானந்தம் – 20 வருடம் – இரண்டு வேலை – ஒரு சைக்கிள் !

உங்களப் பத்தி சொல்லுங்களேன்?

பேரு E.முருகானாந்தம்; சொந்த ஊர் திருவண்ணாமலை. ரெண்டு புள்ளங்க இருக்காங்க, வீட்டுல வேலைக்கி எதுவும் போகல. 1996-ல இங்க 200ரூவா சம்பளத்துக்கு வந்தேங்க! அப்பால பாரீசுல ஒரு ஸ்டீல் கம்பெனில வேலைக்கு சேந்தேன். இன்னமும் அங்கதான் வேலைக்கு போயிட்டுருக்கேன். 4000 ரூவா சம்பளம் தர்றாங்க.

காலைல 3.30 மணி, அதிகம் போச்சுனா 4 மணிக்கு எந்திரிப்பேன்; பல்லு தொலக்கி மூஞ்சி கைகால் கழுவிட்டு சைக்கிள எடுத்துட்டு நேரா இங்க(வள்ளுவர் கோட்டம் பேருந்து நிலையம்) வந்துருவேன். டீ, காபி  குடிக்க மாட்டேங்க, அதுக்கு நேரமும் இருக்காது. புள்ளங்களுக்கு வேற தொந்தரவா இருக்கும்.

அட்வான்சு கட்டுனாத்தான் பேப்பர் தருவாங்க; அதுக்கு 1000-த்தி சொச்சம் கட்டனும். 300 பேப்பருங்க தெனமும் போடுறேன். இதுல தமிழ், இங்கிலீசு பத்திரிக்கைங்களும் இருக்கு. நியூஸ்பேப்பர வாங்கி பிரிச்சு அடுக்கி வெக்கிறதுக்குள்ள 6 மணி ஆயிடும். 300 பேப்பரையும் போட்டு முடிக்க 1½ மணியிலிருந்து 2 மணி நேரம் ஆயிடும். 8 மணிக்கு வீட்டுக்கு வந்தா வூட்டுக்காரம்மா புள்ளங்கள குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து ரெடியா வெச்சுருப்பாங்க. அவுங்கள இழுத்தாந்து ஸ்கூலாண்ட விட்டுட்டு குளிச்சு முடிச்சு சாப்புட்டுட்டு சைக்கிள எடுத்தா பாரிசுக்கு 10 மணிக்குள்ள போயிடுவேன். அங்க வேலைய முடிச்சிட்டு திரும்பி வீட்டுக்கு வர 9, 10 மணியாயிடும்.

நான் மெட்ராஸுக்கு வந்தப்புறம் பேப்பர் போடுறதுக்காக ஒரு சைக்கிள் வாங்குனேன்; 2015 வரைக்கும் சைக்கிள் தான். பாரீசுக்கும் சைக்கிள்ள தான் போயிட்டு வருவேன். இந்த வருசம் தான் சேத்து வெச்ச காசுலேருந்து ஒரு TVS XL வண்டி ஒன்னு வாங்கிருக்கேன்.

news paper workers (9)மாசத்துக்கு எவ்வளவு சம்பாதிக்கிறீங்க?

பேப்பர் போடுறதுலேருந்து மாசத்துக்கு 2500-லேருந்து 3000 ரூவா வரைக்கும் கெடைக்கும்; அப்பால பாரீசுல உள்ள கம்பெனில மாசம் 4500ரூவா தர்றாங்க

ரெண்டு வேல பாக்குறது கஷ்டமா இல்லயா?

கஷ்டந்தாங்க ஆனா ரெண்டு புள்ளங்க இருக்கு, அதுகல படிக்க வெக்கனும்; அப்பால அதுகளுக்குன்னு ஏதோ கொஞ்சமாவது சேத்து வெக்கனும்ல

பேப்பர் போடுற வேலையைப் பத்தி சொல்லுங்களேன்!

அந்த வேலையை என்னண்ணு சொல்றது! காலைல கொசுக்கடி தான் தாங்க முடியாது; ஆனா இப்பல்லாம் பழகிப்போச்சு, அது பேசாம கடிச்சிட்டிருக்கும்; நாங்க வேலயப் பாத்துகிட்டு இருப்போம். ஆரம்ப காலத்துல பேப்பர பிரிக்கிறது செரமமா இருந்துச்சு. பழகுனதுக்கப்புறம் அது ஒரு வேலயாவே தெரியல; மழைக்காலத்துல தான் ரொம்ப செரமமா இருக்கும். கொசுக்கடி ஒரு பக்கம்; அப்பால பேப்பருங்க நனையாம பாத்துக்கனும், இல்லாட்டி பேப்பர் வாங்குறவுங்க திட்டி தீத்துருவாங்க.

news paper workers (7)சாதாரண நாட்கள்ல  பேப்பர வீட்டு வாசல்ல போட்டுருவோம், ஆனா மழைக்காலத்துல நனையாத எடமா பாத்து போடனும், அதனால நேரம் அதிகம் புடிக்கும். எலக்‌ஷன் அப்புறம் எதாவது முக்கியமான செய்தி வந்துச்சுன்னா செல பேரு வாசல்ல நாங்க எப்ப வர்றோம்னு காத்துக்கினே இருப்பாங்க. லேட்டாச்சுன்னா ஒரே அர்ச்சன தான்.

கலெக்‌ஷனுக்கு எப்ப போவீங்க?

அதாங்க ரொம்ப கஷ்டமான வேலயே! வார நாள் அன்னக்கி போனீங்கனா கோவப்படுவாங்க. வாரக் கடைசியில போனீங்கன்னா கதவத் தொறக்க மாட்டாங்க! சில பேரு அப்பறமா வா-ன்னு சொல்லுவாங்க; சில பேரு வீட்டுல இருந்துகிட்டே ஆள் இல்லன்னு சொல்லச் சொல்லுவாங்க. இப்படியா கலெக்‌ஷன வாங்குறதுக்குள்ள மாசக்கடைசியே ஆயிடும். ஆனா நாங்க இங்க காசு கட்டாம பேப்பர் வாங்கவே முடியாது. இன்னும் சில பேர் வீட்ட காலி பண்ணுறப்ப சொல்லாம கொள்ளாம போயிடுவாங்க! பேப்பர வேஸ்டா போட்டுட்டே இருப்போம்; கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரியவரும்.

ஒடம்புக்கு சரியில்லன்னா என்ன பண்ணுவீங்க?

அதுவா!! இருக்குற வேலையில அதப்பத்தி யோசிக்கக்கூட நேரமில்ல. போற போக்குல அதெல்லாம் எங்க போகுதுன்னே தெரியாது.

news paper workers (10)சரி இந்த பேப்பர் போடுறதுனால இந்த இருபது வருசத்துல என்னதான் சம்பாதிச்சிருக்கீங்க?

அதாங்க மாசம் மூவாயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறேன். வீட்டு செலவு அப்பால புள்ளங்களுக்கு துணி மணி அப்படீன்னு கொஞ்சம் வாங்கிப்போட ஒதவுது. ஆனா இதுல சம்பாதிச்சதோட விட்டதுதான் ரொம்ப அதிகம்

புரியலயே??

சொந்தக்காரங்க வீட்டு விசேசத்துக்கெல்லாம் போறதே இல்லங்க. நல்லது கெட்டது எதுன்னாலும் வீட்டுல தான் செல நேரம் தனியாவே போயிட்டு வருவாங்க. சொந்த ஊருக்கே எப்பயாவது தான் போறோம். வாரம் முழுசா வேலை, வாரக்கடைசியில கலெக்‌ஷன் அவ்ளோ தான் வாழ்க்கையே. இதுல நிம்மதியான தூக்கம் தூங்கி பல வருசமாச்சு. ஆனா இத விட்டாலும் வேற வழியில்ல. வேல செஞ்சா காசு வருது; அதனால அப்புடியே வண்டி ஓடிக்கிட்டு இருக்கு……

உங்களுக்கு புடிச்ச நியூஸ்பேப்பர் எது?

அப்படியெல்லாம் எதுவுமே இல்லங்க! எல்லாமே ஒரே மாதிரி தான் நியூஸ் போடுறாங்க! அவுங்க எந்த கட்சிய ஆதரிக்கிறாங்களோ அதப்பத்தி தான் நெறயா நியூஸ் இருக்கும்; வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லங்க!

Sundaram 1சுந்தரம்

63 வயதான சுந்தரம் இந்தப் பகுதியில் மொத்தமாக வாங்கி முருகானந்தம் போன்றவர்களிடம் சில்லறை விலைக்குக் கொடுக்கிறார். தினமும் மாங்காடு பகுதியிலிருந்து வந்து விடுகிறார். 14 வயதில் மாதம் 13 ரூபாய்க்கு வேலையில் சேர்ந்தவர் இன்றுவரை தொடர்ந்து செய்கிறார். அவரிடம் பேசுகையில்…

“நாளேடுகள் விற்பனை அதிகரித்துக் கொண்டே தான் இருக்குது. இங்கே அனைத்து வகையான செய்தித்தாள்களும் கிடைக்கிறது. வடமொழி நாளேடுகள் கூட உண்டு. வார இதழ்கள் விற்பனை தான் கொஞ்சம் மந்தமாகிவிட்டது. ஏனென்றால் ஆன்லைனில் நிறைய பேர் படிக்கின்றார்கள். எந்த அரசியல் கட்சி ஆளுங்கட்சியாக உள்ளதோ அவர்களுக்கு ஆதரவாகத்தான் எல்லா செய்திகளுமே வரும். அதே போல ஏரியாவுக்குத் தகுந்தாற் போல நாளேடுகள் வினியோகிக்கப்படுகின்றன. முன்னாடியெல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிரா எதாவது நியூஸ் வந்துச்சுன்னா, இங்க விடியக்காலையிலே வந்து கூடிடுவாங்க, நியூஸ்பேப்பர் லாரி வந்தவுடனே இறக்கிப்போட்டு எரிச்சுடுவாங்க!

Barath with brother
பரத் சகேதரர்கள் – பள்ளிப் படிப்போடு பேப்பர் விநியோகம்!

பரத்

வபாரத் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் பரத் அவருடைய தம்பி இருவரும் கடந்த 6 மாதங்களாக பேப்பர் போடுகின்றனர். இவர்களுடைய பெரியம்மா மகன் பிரவீன் ராஜ் இவர்கள் இருவரையும் இந்த வேலையில் சேர்த்து விட்டுள்ளார். பிரவீன் ராஜ் அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் B.com படிக்கின்றார். இவருக்கு மாதம் 1650 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. பரத்துக்கு மாதத்திற்கு ரூ.1300-ம் இவருடைய தம்பிக்கு ரூ.1000-ம் கிடைக்கின்றது. பிரவீன் ராஜ் தன்னுடைய போக்குவரத்து மற்றும் இதர சிறு செலவுகளுக்குத் தேவையானதை வைத்துக்கொண்டு மீதத்தை குடும்பத்தில் கொடுத்து விடுகின்றார். 9 ஆண்டுகளுக்கும் மேலாக பேப்பர் போட்டு வருகிறார்.

– வினவு செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க