privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்காவிரி : செப்டம்பர் 16 முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வோம் !

காவிரி : செப்டம்பர் 16 முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வோம் !

-

1. மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட
செப்டம்பர் 16 அன்று நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் அனைவரும்
பங்கேற்று வெற்றி பெறச் செய்வோம்!

buses-torched
கர்நாடகாவில் எரிக்கப்பட்ட பேருந்துகள்

பலநாடுகளைக் கடந்து செல்லும் நதிகளில் தண்ணீர் பங்கீட்டு உரிமை எந்தப்பிரச்சினையும் இல்லாமல் சர்வதேச நீதிமன்றம், சர்வதேச நதிநீர்க் கொள்கை அதை கண்காணித்து அமுல் படுத்த பொதுவான அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை என தீர்க்கப்படுகின்றது. இருநாடுகளும் பேசி ஏற்றுக்கொண்ட ஒப்பந்தம் அல்லது உத்தரவுகளை ஒரு நாடு மீறினால் பொருளாதாரத்தடை, கடன் கொடுக்க மறுப்பது, இராணுவ நடவடிக்கை போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும்.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் கர்நாடகா மீது நடவடிக்கை எடுக்க மைய ரீதியான பொது அமைப்பு இல்லை. தற்போதுள்ள மைய அரசு கர்நாடகாவின் ஆட்சி அதிகாரத்தை நோக்கமாக வைத்து ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. மைய அரசு காவிரி பிரச்சினையில் மட்டுமல்ல மீத்தேன், கெயில், கூடங்குளம், நியூட்ரினோ, கழிவுகளை கொட்டுவது போன்ற பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தை ஓரவஞ்சனையாக நடத்துகிறது.

நதி உற்பத்தியாகின்ற இடத்தில் இருந்து கடலில் கலக்கும் வரை உள்ள நிலப்பகுதி மக்களுக்கு, அந்த மாநிலங்களுக்கு அந்த ஆற்று நீரின் மீது உரிமை உண்டு. எங்களுக்கே பற்றாக்குறை என்ற கர்நாடகாவின் நாடகத்தை யாரும் எப்போதும் ஏற்கமுடியாது. வெள்ள காலங்களில் அதனின் பாதிப்புகளை கடைமடைப் பகுதியான தமிழகம் தான் எதிர்கொள்கிறது.

ஒரு தெருக்குழாயில் வரும் தண்ணீரை தண்ணீரின் இருப்புக்கு ஏற்றவாறு அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு வீட்டின் முன் குழாய் உள்ளது என்பதாலேயே நீர் முழுவதும் அந்த வீட்டுக்குத்தான் சொந்தம் என்று உரிமை கோர முடியாது. இந்த அடிப்படையை உணராத கன்னட இனவெறியர்கள் குறுகிய அரசியல் லாபத்திற்காகவும் பிழைப்பு வாதத்திற்காகவும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாமல் கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களை தாக்குகிறார்கள், வாகனங்களை கொளுத்துகிறார்கள். தற்போது நடக்கும் கலவரத்தை கர்நாடக பிஜேபி – ஆர்.எஸ்.எஸ்தான் நடத்திவருகின்றது என்பது முக்கியமானது. இதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.

இயற்கை வளங்களை, மனிதவளங்களை கனிம வளங்களை, உடனடி லாபத்திற்காக சூறையாடுவதில் கொள்ளையடிப்பதில் மைய, மாநில அரசுகள் ஒற்றுமையோடு பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக தனியார்மய தாராளமய கொள்கையை அமல்படுத்துகின்றன. நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கான, இயற்கை வளங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொலை நோக்குத்திட்டம் இந்திய அரசிடம் இல்லை. மாநில அரசிடமும் அத்தகைய திட்டம் ஏதும் இல்லை.

நிலவுகின்ற அரசுக்கட்டமைப்பும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை , சட்டவிதிகளை அமல்படுத்த முடியாமல் தோற்று போய்விட்டது. ஆறுகளில் ரசாயன – மருத்துவக்கழிவுகளை கொட்டுவது, ஆலைக்கழிவுகளை, சாக்கடைகளை கலக்க விடுவது, மணற்கொள்ளையை முன் நின்று நடத்துவது, ரியல் எஸ்டேட் , மாபியாக்களுக்கு நீர்நிலைகளை பட்டா போட்டு கொடுப்பது, கிரானைட், தாதுமணல் கொள்ளைக்கு கூட்டாளியாக செயல்படுவது, காடுகள் மலைகளில் பன்னாட்டு கம்பெனிகளின் சுற்றுலாத்தலங்கள் அமைப்பது என முன் நின்று செய்கின்றது. இதற்கு எதிராகப் போராடும் மக்களை போலீசை வைத்து அடக்கி ஒடுக்க முயல்கின்றது.

தனியார்மய – தாராளமய என்ற மறுகாலனிய நாசகார கொள்கையை ஏற்றுக்கொண்ட, அதை அமல் படுத்துகின்ற ஓட்டுச்சீட்டு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களையும் நீர் ஆதாரங்களையும் பாதுகாக்கின்ற மக்கள் போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். இந்தப் புரிதலோடு தற்போதைய காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நமக்கான தண்ணீர் பங்கீட்டை ஊன்றி நின்று விடாப்பிடியாகப் போராடி வென்றே தீரவேண்டும். அதே நேரத்தில் நீர் மேலாண்மையை மேம்படுத்தி பாதுகாக்க தமிழகத்தில் ஏரிகள் , குளங்கள் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு மணற்கொள்ளையை அடியோடு ஒழித்துக்கட்டி ஆக்கிரமிப்புக்களை அகற்றி நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். அதுதான் நிரந்தரத்தீர்வு.

செப்டம்பர் 16 வெள்ளி அன்று நடக்க உள்ள முழுஅடைப்பு போராட்டத்தில் மட்டுமல்ல தொடர்ந்து நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் அனைவரும் பங்கேற்று முழு ஆதரவை அளிக்க வேண்டும். காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு போராடுவோம். நாளை தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்

வழக்கறிஞர். சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள்அதிகாரம்

2. பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கன்னட வெறியர்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் உடமைகள், சொத்துக்கள் சேதப்படுத்தி வருகின்றனர். மேலும் தமிழக பேருந்துகளை தாக்கியும், எரித்தும் வருவதுடன், வாகன ஓட்டிகள் தாக்கப்பட்டும் வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் வருகின்ற 16 – செப், 2016 அன்று தமிழகம் புதுவை ஆகிய மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் – அமைப்புகள் ஒரு நாள் கதவடைப்புக்கு (பந்த்) அழைப்பு விடுத்திருக்கின்றன. இந்தக் கதவடைப்புப் போராட்டத்தினை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆதரிக்கிறது.

காவிரி நதியானது கர்நாடகாவில் பிறப்பெடுத்தாலும், தமிழகம், கேரளா மற்றும் புதுவை மாநிலங்கள் வழியாகப் பாய்வதால் மேற்படி 4 மாநிலங்களுக்கும் காவிரி நீரில் உரிமை உள்ளது என காவிரி நடுவர் மன்றம் நதிநீரைப் பகிர்ந்து கொள்வது பற்றி 2007-ல் இறுதித் தீர்ப்பையும் அறிவித்து மத்திய அரசின் அரசிதழிலும் (கெசட்) வெளியிடப்பட்டது.

நடுவர்மன்றத் தீர்ப்பின் படி, மொத்த கொள்ளளவான 740 டி.எம்.சி. தண்ணீரில் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி.யும், கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி.யும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி.யும், புதுவைக்கு 7 டி.எம்.சி.யும் பங்கிடப்பட வேண்டும். ஒரு நதி உருவாகி அது பாய்கின்ற கடைமடைப் பகுதிக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பது சர்வதேச நதிநீர் பங்கீட்டு விதி. ஏனெனில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது திறக்கப்படும் வெள்ள நீரால் இழப்பினை சந்திப்பது கடைமடைப் பகுதி தான். இதன் படி தமிழகத்திற்குத் தண்ணீர் தர வேண்டும் என்பது நியாயமான உரிமை ஆகும்.

தமிழகத்துக்கான பங்கில் சூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி டெல்டா பகுதியின் சம்பா பருவ விவசாயத்துக்கு 100 டி.எம்.சி. தண்ணீர் விடப்பட வேண்டும். ஆனால், வெறும் 35.97 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே விடுவித்ததால் டெல்டா விவசாயிகளது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி உள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் காப்பதற்கு காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை நிலைநாட்டப்பட வேண்டும்.

இவை எதையும் கணக்கில் கொள்ளாமல், கட்சிகளின் எம்.பி.க்கள் முதல் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர்கள் வரை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதால், இவர்கள் பெயரளவிலான போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் இனவெறி அரசியலை முன் வைக்கின்றனர். தேசிய ஒருமைப்பாடு பேசுகின்ற காங்கிரசு, பி.ஜே.பி. கட்சிகளோ மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாடு எடுத்து உழைக்கும் மக்களைப் பலியிட்டு பன்னாட்டு நிறுவனங்களின் தரகர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

பி.ஜே.பி. சங் பரிவார் கும்பலோ கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கும், பார்ப்பனிய எதிர்ப்புப் பாரம்பரியமிக்க தமிழகத்திற்கு எதிராக திட்டமிட்டே இனவெறியைத் தூண்டி வன்முறையை தலைமை ஏற்று நடத்தி வருகிறது. எனவே தான், மத்தியில் ஆளும் பி.ஜே.பி. நதிநீர்ப் பிரச்சினையில் தலையிட மறுத்து வருகிறது. மாநிலத்தில் ஆளும் காங்கிரசோ, தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வன்முறையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தை ஆளும் அதிமுகவோ, தான் பி.ஜே.பி.யின் ‘பி’ டீம் என்பதை நிரூபிக்கும் விதமாக தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக சுண்டு விரலைக் கூட அசைக்காமல் கள்ள மெளனம் சாதிக்கிறது.

தமிழகத்திற்கு உரிய பங்கினைப் பெற்றுத் தரவேண்டிய உச்சநீதி மன்றமோ, நடுநிலை நாடகமாடுவதுடன், இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலே துரோகம் இழைத்து வருகிறது. எனவே, தமிழக உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும்.

மழை வளம் குறைவதும், நிலத்தடி நீர் குறைவது – மாசடைவதும் தனியார்மய, தாராளமய, உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப் படுவதால், உருவானவையே. தனது லாபவெறிக்காக இயற்கை வளங்களைச் சுரண்டி மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கும், அதற்கு துணைநிற்கும் இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்தப் போராடுவதும் அவசியமாகிறது.

இவண்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுச்சேரி