Wednesday, June 29, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி சிதம்பரம் : புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு பொதுக்கூட்டம்

சிதம்பரம் : புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு பொதுக்கூட்டம்

-

ன்பார்ந்த மாணவர்களே!

nep-notice-1காவிமயம், கார்ப்பரேட்மயம் இரண்டும் சேர்ந்த ஒட்டுரகம்தான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை (2016). இது இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், இந்திய கலாச்சார ஒற்றுமைக்கும் சமஸ்கிருதத்தின் பங்களிப்பை கணக்கில் கொண்டு சமஸ்கிருதத்தை கற்றுத் தருவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறுகிறது. இது முற்றிலும் பொய். இதன் நோக்கமே பார்ப்பனர்கள் வேதம் மட்டுமே ஓத பயன்படுத்தக் கூடிய சமஸ்கிருதத்தை ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை திணிப்பதே; தாய்மொழிவழிக் கல்வியை மறுப்பதே; இதற்கேற்பதான் ஐவர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஜே.எஸ்.ராஜ்புத் எனும் ஆர்.எஸ்.எஸ்காரர். மற்றவர்கள் அனைவரும் அரசு செயலர்கள். இந்தக் குழுதான் புதிய கல்விக் கொள்கையை தீர்மானிக்கும். இது எப்படி இருக்கிறது என்றால் ‘கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையிலும் நெய் வழியும்’ என்பது போல உள்ளது.

மேலும் தரம் என்ற பெயரில் 5-ம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு அதற்குமேல் கல்வி இல்லை என்கிறது புதிய கல்விக் கொள்கை. அவர்களுக்கு திறம் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுமாம். அதாவது, படிப்பில் பின்தங்கும் ஏழை மாணவர்களுக்கு இனி 5-ம் வகுப்புக்கு மேல் கல்வி இல்லை என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். அதையும் தாண்டி சிலர் பத்தாம் வகுப்பு வரை சென்று விட்டால் அவர்களுக்கு Part-A, Part-B என்று இரண்டு பிரிவுகளை முன்வைக்கிறது. முதல் பிரிவில் அறிவியல், கணிதம், மற்றும் ஆங்கிலப் பாடங்கள் இடம் பெறும். இரண்டாம் பிரிவில் தொழிற்கல்வி இடம் பெறும். பத்தாம் வகுப்பிற்கு பிறகு தொழிற்கல்வி போக விரும்பும் மாணவர்கள் Part-B எனும் இரண்டாம் பிரிவை தேர்ந்தெடுக்கலாம் என்று கூறுகிறது. மாணவர்களை தரம் பிரிப்பதிலும், தொழிற்கல்விக்கு துரத்துவதிலுமே குறியாக உள்ளது. அதாவது, இரண்டாம் ‘பிரிவு பள்ளி மாணவர்களுக்கு பாதி நேரம் படிப்பு மீதி நேரம் அவனவன் அப்பன் தொழிலை செய்ய வேண்டும்’ என்பதே. இதைத்தான் பார்ப்பன நரி ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக் கல்விமுறை என்கிறோம். இப்பொழுது புரிகிறதா இவர்களின் நோக்கம் என்னவென்று?

மற்றொருபுறம், ஒட்டுமொத்தக் கல்வித் துறையும் தனியார்வசம் ஒப்படைக்க வழிவகை செய்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை. உலகளவில் உள்ள 200 வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவவும், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கல்வித் துறையில் முதலீடு செய்யவும் ஊக்குவிக்கப்படும். கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணம், நன்கொடை, உள்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக் கூடாது. இதற்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்கிறது. மேலும் இணைய சேமிப்புக் கிடங்குகளான MOOC (பிரம்மாண்டமான திறந்த இணையவழி பாடங்கள்) மூலம் பாடங்களை உருவாக்குல், கல்வியை கணினிமயமாக்கி ‘Digital India’ திட்டம் மூலம் கல்வி நிறுவனங்களை இணைத்தல், ஆன்லைனில் படிப்பு, தேர்வு நடத்த வேண்டும் என்கிறது. இதன் மூலம் கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பதையும், அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இந்த புதிய கல்விக் கொள்கை.

nep-notice-2இது ஏழைமாணவர்களின் கல்வி உரிமையை மறுப்பது மட்டுமல்ல, கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைப்பதை மறுக்கிறது. மாணவர்களை கல்லூரி வாயிலில் போலீசு பூத் வைத்து கண்காணிப்போம் எனக் கூறி மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முற்றிலுமாகப் பறிக்கிறது. இதன்மூலம் மாணவர்களின் போராட்ட குணத்தை அறுத்தெரியத் துடிக்கிறது, இந்த புதிய கல்விக் கொள்கை. இது மட்டுமல்ல, கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்குக் கொண்டு செல்வதன் மூலம் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிறது. முக்கியமாக, உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்க அன்று ஆங்கிலேயர்கள் மெக்காலே கல்வித் திட்டத்தை புகுத்தியதைப் போல இந்து, இந்தி, இந்தியா எனும் பார்ப்பனிய தேசியத்தை கட்டுவதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்தத்தான் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தையும், தேர்வு முறையையும் கொண்டு வருகிறது மோடி அரசு.

மொத்தத்தில் இது நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு கல்வியை மறுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் சதித்திட்டம், சூத்திரனுக்கு எதுக்கடா கல்வி? எனும் பார்ப்பனிய மனுதர்மமும் காசு இல்லாதவனுக்கு எதுக்கடா கல்வி? எனும் மறுகாலனியாக்க கல்விக் கொள்கையும் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டதே இந்த புதிய கல்விக் கொள்கை. இதை நம்மீது திணிக்க அனுமதிக்க முடியாது.

புதிய கல்விக் கொள்கை 2016!
கார்ப்பரேட் மூளை! பார்ப்பனிய யுக்தி!

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக பேரணி-பொதுக்கூட்டம்
மாலை 5 மணி செப்டம்பர் 25, 2016 ஞாயிறு போல்நாராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம்

நிகழ்ச்சி நிரல்
தலைமை : தோழர் மணிவாசகன், செயலாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருதை
முன்னிலை : வழக்கறிஞர் சி. செந்தில், சிதம்பரம், இணைச் செயலாளர் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்

சிறப்புரை
புலவர் பொ.வேல்சாமி, தஞ்சாவூர்
திரு ரமேஷ், அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி – சென்னை
வழக்கறிஞர் சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிதிரள்வோம்!

  • இந்தித் திணிப்பை எதிர்த்து களம் கண்டு விரட்டியடித்த வீரஞ்செறிந்த மாணவர் போராட்டத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். இந்தப் புதிய கல்விக் கொள்கை (2016) திணிப்பையும் முறியடிப்போம்.
  • தாய்மொழிக் கல்வி, சமத்துவமான, அறிவியல் பூர்வமான, இலவச கட்டாயக் கல்வி எனும் உரிமையை நிலைநாட்ட இன்றே களமிறங்குவோம்!
  • இந்துத்துவா கொள்கையையும், மறுகாலனியாக்கத்தையும் ஒன்றாகச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகமான புதிய கல்விக் கொள்கையை (2016) முறியடிப்போம்!
  • சமஸ்கிருத – வேதகலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-யின் இந்து ராஷ்டிரக் கனவை தகர்த்தெறிவோம்!

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க