Tuesday, March 31, 2020
முகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் கோவை : உயிருக்கு பாதுகாப்பில்லாத மண்ணில் எப்படி வாழ முடியும் ?

கோவை : உயிருக்கு பாதுகாப்பில்லாத மண்ணில் எப்படி வாழ முடியும் ?

-

ந்து முன்னணி கட்டப்பஞ்சாயத்து ரவுடி சசிகுமார்  கொலையையொட்டி காவிக் குரங்குகள் போட்ட வெறியாட்டத்தை வினவில் அம்பலப்படுத்தியிருந்தோம். இதன் தொடர்ச்சியாய் கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து விவரங்களை சேகரித்தும்  தைரியமளித்து வந்தனர். அது குறித்த தொகுப்பு…

துடியலூர் என்பது கோவை மாநகரின் வடக்கு எல்லை. மாநகராட்சியின் முதல் வார்டு துடியலூர் தான். அதன் கவுன்சிலர் வத்ஸலா பாஜக வைச் சேர்ந்தவர். கொடுத்த கடனை கேக்க வீட்டுக்கு வந்தவரை வத்ஸலாவும் அவரது கணவரும் சேர்ந்து வீட்டிலேயே அடித்து இரண்டு நாள் கழித்து அந்த நபர் மாரடைப்பில் இறந்ததாகவும், அதற்கு காரணம் இவர்கள்தானென்றும் ஒரு வழக்கு பதிவாகி தற்போது விடுதலை அடைந்துள்ளனர். இது வத்ஸலா’வின் கடந்த கால அரசியல் வரலாற்றில் ஒரு அத்தியாயம். ABBA எனப்படும் பிராமணர் சங்கங்களின் மாநாடுகள் செயற்குழுக்கள் நடக்கும் இடம் துடியலூர்தான்.

பெரியநாயக்கன் பாளையம் சித்ராக்கா எனும்  சித்ரா இக்கலவரத்தின் முன்னணிப் படைகளுக்கு தலைமை தாங்கியவர்களுள் ஒருவர். இவரது கணவர் காளிதாஸ் அக்வாசாப் டெக்ஸ்மோ பம்ப் கம்பெனியில் வேலை செய்தவர். சி.ஐ.டி.யு வில் எஞ்சியினியரிங் பிரிவில் இருந்தவர். சித்ராக்கா சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி மோசடி செய்து பணத்தை வைத்து வழக்குகளை உடைத்து பின்னர், பாதுகாப்புக்காக அரசியலில் இணைந்த ஒரு கிரிமினல். கிரிமினல் நதிகளின் கடலான ஆர்.எஸ்.எஸ் ஸி-ல் பக்தி மற்றும் விநாயகர் சதுர்த்திக்கான விளம்பரங்கள் மூலம் ஐக்கியமாகி மதவெறி நாற்றத்தை துடியலூர் தாண்டி  பெரியநாயக்கன் பாளையம் பகுதி முழுக்க கிளப்பி ஒரு பஞ்சாயத்து தலைவராவது ஆகிவிட வேண்டும் என்பதே அம்மணியின் திட்டம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கோவை அரசு மருத்துவமனையில் துவங்கிய சசிக்குமாரின் பிண ஊர்வலம் துடியலூர் மின்மயானம் வரை நடந்தது. இந்த வன்முறை வெறியாட்டத்தின் கிளைமாக்ஸ் துடியலூர் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. துடியலூர் பகுதிக்கு சுமார் 3:00 – 3:30 வாக்கில் வந்த ஊர்வலம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கடைகளை நொறுக்குவது, ஆபாசமாக முழக்கமிடுவது, கடைகளுக்கு தீ வைப்பது, போலீஸ் ஜீப்புக்கு தீ வைப்பது எனத் தொடர்ந்து 5 மணி அளவில் காவல்துறை தடியடி நடத்த துவங்கிய 10 நிமிடங்களில் அந்த இடம் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தது. இதை முதலிலேயே செய்திருக்கலாம் என பொதுமக்கள் பலரும் ஆத்திரமாக பேசினர்.

துடியலூர் முதன்மைச் சாலைக்குமோ அல்லது அந்த மின்மயானத்துக்குமோ சம்பந்தமே இல்லாமல் உள் பகுதிகளில் இருக்கும் இஸ்லாமியர் கடைகளை வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். அதிலும் வத்ஸலாவின் முதல் வார்டில் இருக்கும் இஸ்லாமியர் வீடுகளை விட இரண்டாவது வார்டில் இருக்கும் இஸ்லாமியர் வீடுகள் அதிக தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது. ஒன்றாவது வார்டு கவுன்சிலர் வத்ஸலா மீதான கொலைக் கேஸிற்காக அவரை டிஸ்மிஸ் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளின் கடை, வீடுகள் அதிக நேரம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் போன் பண்ணி, “தைரியம் இருந்தா கடைக்கு வா” “உன் கடையைத் தான் உடைக்கிறோம்” என ஒவ்வொருவரையும் கூப்பிட்டுள்ளார்கள். “இவங்க கடை வீட்டை என்ன வேண்ணா பண்ணுங்க கேஸை முழுக்க நான் பாத்துக்கறேன் என வத்ஸலா அக்கா கொடுத்த உறுதிதான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்கிறார்கள்.

பிணம் விழுந்து நான்கு நாள் கழித்து அஸ்தி கரைக்க நாங்க மேட்டுப்பாளையம் போகிறோம் என காவிக் குரங்குகள் கூற, அதற்கு காவல்துறை அவர்கள் குடும்பம் மட்டும் போனால் போதும், மேட்டுப்பாளையமெல்லாம் வேணாம்., உங்களுக்கு 30 கிலோமீட்டரெல்லாம் பாதுகாப்பு கொடுக்க முடியாது, கம்முனு பேரூர் போங்க என போலீஸ் கூறியதாகவும், அங்கே தண்ணியில்லை (நொய்யல்) என இந்த கும்பல் மறுக்க போலீஸ் தனது செலவில் தண்ணீர் ஏற்பாடு பண்ணித் தருவதாக கூறி பேரூர் அனுப்பியிருக்கிறது. இதையொட்டி மீண்டும் நாங்க பந்த் பண்ணுறோம் என அவர்கள் வதந்தியை துவக்க அது இங்கு இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாங்கள் சந்திக்க சென்ற பாதிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய கடைக்காரரின் குடும்பம் எங்கோ வெளியில் செல்வதற்காக தயாராகி அமர்ந்திருப்பது போல தெரிந்தது. கிளம்பும் நேரத்தில் வந்துட்டோமா என வினவ, “இல்லைங்க,ஒரு ஃபங்சனுக்கு கிளம்பலாம்னு தான் இருந்தோம் இன்னிக்கு ஏதோ அந்தாளோட அஸ்தி கரைக்க போறாங்களாமா…? பந்த்னு சொன்னாங்க, அதான் போகாம அப்படியே உக்காந்துட்டோம்.” எனக் அவர்கள் கூற, முதல் பதிலே அவர்களின் அவல நிலையை பளிச்சென காட்டுகிறது. அதிலும் 35 வருடங்களாக குடியிருக்கும் தெருவில், ஊரில், தனது ஊரைச் சேர்ந்தவர்களால் தனது வீடுகளும் கடைகளும் அடையாளம் காட்டப்பட்டு வன்முறைக்குள்ளாகி தற்போது எந்நேரமும் ஒரு திகிலில் அச்சுறுத்தலின் கீழே வாழும் நிலை.

சோடா பாட்டில், கல் என அனைத்தையும்கடையிலும் வீட்டிலும் வீசியிருக்கிறார்கள். “எல்லா, உள்ளூர்க்காரனுக தான் ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் அக்கா பிரியாணி எப்ப கிடைக்கும்? எப்ப கிடைக்கும்? னு சிரிச்சிட்டே கேட்டவனுகதான். மொகத்துக்கு முன்னால இப்பிடி பேசிட்டு இப்ப முதுகுல குத்தாராணுக. வாழ விட மாட்டோம்னு சத்தம் போடுறான். பாகிஸ்தான் போங்கன்னு சத்தம் போடுறான்.” அருகிலிருந்த சிறுமியை காட்டி, “இந்த கொழந்த பொட்டு பூவு எல்லாம் வெச்சிக்கிட்டு நிக்குது. ஏம்மானு, கேட்டதுக்கு நாம இந்துன்னு சொன்னா நம்மை விட்டுருவாங்கள்ளம்மா…! அப்டின்னு சொல்லுது. இங்கிருந்த கம்யூனிஸ்டுகாரங்க (CPM) எங்களை அவங்க வீட்டுக்குள்ள போக சொல்லிட்டு, “வெளியே வராதீங்க உள்ளேயே இருங்கன்னு” பாதுகாப்பு கொடுத்தாங்க. இப்ப வரைக்கும் வேற எந்தக் கட்சியும் வரல. இந்த வார்டு கவுன்சிலர் தொகுதி எம்‌.எல்‌.ஏ.னு யாருமே வரல. போலீஸ் ஒருத்தர் கூட வரல. வயசுப் பொண்ணுக, சின்னக் கொழந்தைங்க… இருக்காங்க. வந்து கொள்ளையடிச்சுட்டு போறாணுக. எங்க கடைலயும் பூட்ட உடைக்க முயற்சி பண்ணிருக்கானுக பூட்டு ஸ்ட்ராங்க் ஒடைக்க முடில. மதினா பேன்ஸி அப்பாஸ் பாய்க்கு போன் பண்ணி, டேய், உன் கடையத்தான் ஒடைக்கிறோம். வாடா பாக்கலாம். தைரியம் இருந்தா வாடான்னு சொன்னான். விநாயகர் சதுர்த்தி வசூல்’ல கொடுத்தது பத்தல அவனுகளுக்கு. இன்னொரு பிரச்சினை வரும் பாத்துக்கறோம்னு சொல்லிட்டு போனானுக.”

பக்கத்தில் இருந்த ஒரு காய்லான் கடையில் பேசுகையில், “எட்டு மூட்டை பாட்டிலை தூக்கிட்டு போயிருக்கானுக. அதைத்தான் எல்லா பக்கமும் வீசுறதுக்கு பயன்படுத்தியிருக்கானுக. பிளாஸ்டிக் வேஸ்ட் இருந்தது ஒரு மூட்டை ஐம்பது நூறுதான் வரும் அதையும் தூக்கிருக்கானுக. மீன் கடைல இருந்து ரெண்டு கைலயும் மீனை தூக்கிட்டு போயிருக்கானுக. எல்லா பகுதியிலயும் வந்து முதல்ல கேமராவை தேடி அதை உடைக்கிறானுக. எங்களுக்கு தெரிஞ்சு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் யாரும் அரஸ்ட் ஆகல. எல்லாருமே சேர்ந்து போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கோம்.” அனைத்து பாதிக்கப்பட்டோரையும் இணைத்து எஸ்‌.டி‌.பி‌.ஐ கட்சியினர் போலீசில் புகார் கொடுத்திருப்பதாக சொன்னார்கள்.

“பல கடைகளுக்கு தீ வைக்க முயற்சி செய்திருக்காணுக. நடக்கல. மெயின் ரோட்டில் பி‌.ஜே.பி கொடி கட்டிய கடை மட்டும் பாதுகாப்பா இருக்கு. மற்றவை எல்லாத்தையும் ஒடைக்கிறாங்க. ஓம்னு போட்டிருந்த ஆட்டோ தப்பிச்சது மத்த ஆட்டோக்களை உடைச்சிட்டாங்க. நியாயமான கட்டணம் வாங்கும் மக்கள் ஆட்டோக்களை பி.ஜே.பி ஆட்டோக்காரனுக இந்த கலவரத்தை பயன்படுத்தி அடிச்சு ஒடச்சானுக. சில கடைகளில் காவிக் கொடியை கட்டி கடையை காப்பாத்தியிருக்காங்க.

kovai-hindu-munnai-riots-images-11துடியலூரில் அதிக சேதமடைந்தது ஏ‌.எம் பென்ஸ் எனும் செருப்புக் கடை. அந்த வரிசையில் இருக்கும் நாற்பது கடைகளை விட்டுவிட்டு இந்த கடை முஸ்லீம் கடை என்பதை அறிந்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள். இந்த ஒரு கடைக்கு மட்டும்பல இலட்சம் சேதம். காவலர்கள் முன்னாடியே இது நடந்திருக்கிறது. கமிசனர் முன்னாடியே போலீஸ் ஜீப்பை எரிப்பவர்களுக்கு இது எம்மாத்திரம். சென்னை மொபைல்சிலும் திருட்டு ஏராளமாக நடந்திருக்கிறது. கடைக்குள் திருட வந்த இந்து முன்னணியினர் ஐம்பதிலிருந்து அறுபது பேர் வரை நிற்க வெளியே போலீஸ்காரர்கள்  5 பேர் நின்று கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.

kovai-hindu-munnai-riots-images-14எச்‌.எஸ்‌.ஆர் பிரியாணி கடை நான்கு இலட்சம் ரூபாய் சேதத்தை தாங்கி நின்று கொண்டிருக்கிறது. “ஆர்‌.எஸ்‌.எஸ் காரரை நண்பராக பெற்று என்ன பிரயோஜனம்? ஒண்ணுமில்ல பாய் என்றே எனக்குத் தெரிந்தவர்கள் கூறியவாறே கடையை அடித்து நொறுக்கினார்கள். மனித உயிருக்கு பாதுகாப்பில்லாத இடத்தில் நான் எப்படி உயிர் வாழ முடியும்” என அந்த பாய் கேட்கையில், என்ன சொல்லி தேற்றுவதேன்றே தெரியவில்லை.

அடுத்து மஹாலட்சுமி பேக்கரி. முந்தைய வார்த்தையை திரும்பப் படியுங்கள் அது மஹாலட்சுமி பேக்கரிதான். இந்துக்கடவுளின் பெயரை கொண்ட கடைதான். தினமும் பூசை, சாமி கும்பிடுவது என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்பவரின் கடைதான். என்ன பலன்…?

kovai-hindu-munnai-riots-images-07கடை துவங்கி 2 வருடம் தான் ஆகிறதாம். இன்னும் ஷட்டர் கூட இல்லையாம். இந்தக் கடையும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்., விநாயகர் சதுர்த்தி வசூலுக்கு 2000 கேட்டிருக்கிறார்கள். அதற்கு கடைக்காரர் தயங்கவே அடுத்து 2000 குடு என மிரட்டியிருக்கிறார்கள். 500தான் கொடுத்தாராம். அந்த ஐநூறையும் வாங்கிக் கொண்டு ‘பாத்துக்கறோம்’ எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்கள். அதனால் இந்த கடையையும் நொறுக்கிவிட்டார்கள்.

எவர் பிரஷ் எனும் இன்னொரு இந்து சமூகத்தை சேர்ந்தவரின் கடையையும் அடித்து உடைத்திருக்கிறார்கள். காரணம்., துடியலூர் பகுதி எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு நோட்டீஸ் ஸ்பான்சர் செய்த ஒரே காரணத்துக்காக அவரது கடையையும் உடைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் பா.ஜ.க-வின் கோவை மாவட்ட பொறுப்பாளரான  நந்தகுமாரின் உறவினர் இவர். எனினும் முசுலீம் கட்சிக்கு எப்படி பணம் கொடுக்கலாம் என்று நாள் குறித்து அடித்திருக்கின்றனர்.

இப்படி அனைத்துக் கடைகளிலும் திருடியவர்கள் பங்களா தேஷ் முஸ்லீம் என்று எச் ராஜாவும் வட இந்தியர்கள் என்று பொன் இராதாகிருஷ்ணனும் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். இவர்கள் வாந்தியை பொறுக்கித் தின்று அதை அச்சு ஊடகத்தில் எழுத்தாக கக்கியிருக்கிறது தமிழ் இந்து. அது உண்மை எனில் வட இந்தியர்களுக்கு கடைகளின் பெயரை தமிழில் படித்து முசுலீம் கடைகளை மட்டும் எப்படி அடிக்க முடிந்தது? இங்கே ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு முசுலீம்கள் மீதான வெறுப்பு இருப்பது போலவே தொழிலாளிகள் மீதான வன்மமும் இருக்கிறது.

பிணம் வண்டியில் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்னரே டூவீலரில் ஒரு டீம் மெதுவாக வருகிறது. அவர்கள் ஒவ்வொரு கடையாக கை காட்டுகிறார்கள். இந்த கடை, அப்புறம் அந்தக் கடை அதுக்கு பக்கத்துல இருக்கறத விட்டுட்டு அதுக்கு அடுத்த கடை என. பின்னால் நடந்து வருபவர்கள் போய் உடைக்கிறார்கள். போலீஸ் லத்தியோடு காவிக்கு பதில் காக்கிச் சட்டையை போட்டுக் கொண்டு ஊர்வலத்தில் வந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் விடலைகள்.  இளம் கொள்ளிக் கட்டைகள். டே., “ங்கொம்மா” என்பது போன்ற பொருட்செறிவுள்ள மொழிகளில் சுற்றியுள்ள மக்களை விளித்து “நீங்கல்லாம் இந்துன்னா, எங்க பின்னாடி வாங்கடா” என்பது போன்ற அழைப்புக்கள். எல்லோரும் நல்ல மப்பில் மிதந்தவாறே கலவரம் செய்கின்றனர்.

‘வெறும் 2% இருக்கற துலுக்கணுக பின்னாடி எல்லா கட்சிக்காரனுகளும் போறானுக நாளைக்கு வெட்டுனது துலுக்கன்னு உறுதியாகட்டும் இங்க ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீங்க’ என கத்திக் கொண்டே சென்றனர். அலி பாய் எனும் இஸ்லாமியருக்கு சொந்தமான தி சென்னை மொபைல்ஸ் தொடர் கடைகள் கோவையில் மொத்தம் 20 இருக்கின்றன. துடியலூர் கிளையை மொத்தமாக சிதைத்து விட்டார்கள். சிதைத்தது மட்டுமல்லாமல் திருடிக் கொண்டும் சென்று விட்டார்கள். உள்ளே சென்று தடுக்க முயன்ற பெண் காவலரை காதில் ரத்தக் காயம் வரும் வரை தாக்கி வெளியே துரத்தி விட்டார்கள். ரத்தினபுரி பகுதியை சேர்ந்த இந்து முன்னணிக்காரன் ஒருவன் தனது பகுதியில் குடியிருக்கும் இஸ்லாமியர் ஒருவரை முன் விரோதம் வைத்து அவரது வீட்டுக்கு சென்று அடித்து உதைத்திருக்கிறார்கள். வீட்டில் பொருட்களையும் உடைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர் கடை எதுவும் வைத்திருக்கவில்லை.

சேதம் குறித்த தகவல் அறிக்கைகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ரோட்டில் ஒரு ஓரமாக பொது மக்களோடு பொது மக்களாக நின்று கொண்டிருக்கும் ஒரு உயரமான சிவந்த நடுத்தர வயது நபரும் அவருக்கு அருகில் சற்று உயரம் குறைவாக நின்றிருந்த இன்னொருவரும் கூட்டத்தில் கலவரம் செய்து கொண்டிருக்கும் சிலரை அருகில் அழைத்து இன்னும் எப்படி இந்த டைரக்ஸன்ல கொண்டு போகணும்னு வழிகாட்டுதல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆர்‌.எஸ்‌.எஸ்.காரர்கள் போல தெரிந்தது என இந்த கலவரத்தை நேரடியாக பார்த்த கடைக்காரர் ஒருவர் கூறினார். உடைத்துக் கொண்டிருந்தவர்கள், அந்த வழிகாட்டுதலின் பின்னர் தான் தீ வைக்க துவங்கினர். தடியடி நடத்திய போலீஸ்‌ முதலில் சுற்றி நின்ற பொது மக்களை தாக்குகிறது. அதன் பின்னர் தான் கலவரக் காரர்களை அடித்தது. காவிகள் காவலர்களை தடுக்கிறார்கள் தாக்குகிறார்கள். தொப்பி வயர்லெஸ் குச்சி போன்றவற்றை பிடுங்கி வீசினர். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கலவரம் தடியடி நடத்தத் துவங்கிய பத்து நிமிடத்தில் பிணம் மின் மயானத்துக்கு சென்று கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தீயணைப்புப் படை, கலவரம் முடிந்த பின்னர் வரும் அதி விரைவுப் படை நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் படை என பூராப் படையும் பின்னர்தான் வந்தன.

தாக்கப்பட்ட கடைகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கலவரத்தை சிறப்பான முறையில் ஒழுங்குப் படுத்த நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான கோவை போலீஸ் கமிசனர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் பெயரில் பல இடங்களில் காவல் துறையினரே கடையடைப்பு நடப்பதற்கு தங்களால் இயன்ற உதவியை செய்து மத வெறிக்கு தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள். காவிகள் போகாத பெரிய கடைகளுக்குச் சென்று “எதுக்கு தேவையில்லாத பிரச்சினை..?, எல்லோரும் கடையை மூடிட்டாங்கள்ல நீங்களும் மூடிருங்க.” என்பது போல் பேசியிருக்கிறார்கள். kovai-hindu-munnai-riots-images-10தொழில் நகரமான கோவையில்., பம்பு உற்பத்தி தொழிலின் கேந்திரமான பகுதியில் நடந்துள்ள இந்த கலவரம் ஆளும் வர்க்கத்துக்கு விருப்பமான ஒன்று. பல்வேறு வகைகளில் அவர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று. சி‌.ஆர்‌.ஐ பம்ப்ஸ் பெஸ்ட் பம்ப்ஸ் என்‌டி‌சி ஆலைகள் முதல் ஏராளமான தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் ஏமாற்றப் பட்டும் சங்கம் துவங்கிய காரணத்தால் மட்டுமே ஒடுக்கப்பட்டும் இருக்கும் கோவையில் போலீஸ் கண்காணிப்பும் சனநாயக உரிமைகள் ஒடுக்குமுறையும் சர்வ சாதாரணம். இன்று வரை 600 நாளைத் தாண்டி இன்னும் சட்டவிரோத கதவடைப்புக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்கள் முதலாளி வீட்டு கல்யாணத்தின் போது போராட்டம் நடத்துவதாக போட்ட போஸ்டருக்கு போஸ்டர் போட்டவர் முதல் ஒட்டியவர் வரை மிரட்டி சங்க முன்னணியாளர்களை முன்னெச்சரிக்கையாக பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி குண்டர் சட்டம் போட முனைகிறது. அதே சமயம் முதலாளி வீட்டு கல்யாணத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.

kovai-hindu-munnai-riots-images-12காவிப் பொறுக்கிகள் சொல்லாமல் கொள்ளாமல் கலவரம் செய்வது காவல் துறைக்கோ உளவுத் துறைக்கோ தெரியாதததல்ல. வர்க்க நேர்மையோடு அறிவித்து போராட்டம் பண்ணும் தொழிலாளர்களை புரட்சிகர அமைப்பின் தோழர்களை சாதாரண பேருந்து சிக்னல் பிரச்சாரங்களுக்கே போலீஸ் ஒடுக்குமுறையை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் ஐந்து வரிகள் கொண்ட போஸ்டருக்கே கேஸ் வாங்கும் நிலை இப்போதைய சூழலில் நிலவுகிறது. இந்த மினி எமர்ஜென்சி நிலையை 1997 கலவரமும் அதைத் தொடர்ந்த குண்டு வெடிப்பும் கோவை மீது சுமத்தியது. இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் இல்லையில்லை இருபதாண்டு தயாரிப்புடன் மீண்டும் தலை தூக்கியிருக்கும் மதவெறி இந்த ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படும் பிரச்சினையை தொழிற்சங்க உரிமை முதல் அனைத்து விதமான ஜனநாயக உரிமைகளையும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். அதாவது ஆளும் வர்க்கம் விரும்பும் செயலை மற்றொருவரின் துணையுடன் வேறொருவரின் மீதான வெறுப்பு மூலம் இதை செய்கிறார்கள்.

கோவையில் தொழிலாளிகளுக்கு உரிமையில்லை என்பதும், இந்துமதவெறியர்கள் அரசு – போலீசு ஆசியுடன் கலவரம் செய்கிறார்கள் என்பதும் வேறு வேறு அல்ல.  தொழிலாளிகள் ஒன்றிணைந்து ஒரு பெரும் சக்தியாக எழக்கூடாது என்று நினைக்கும் அரசு இத்தகைய இந்துமதவெறியை திட்டமிட்டு வளர்க்கிறது. சூறையாடும் ‘இந்துக்களுக்கு’ அன்று தீபாவளி போனசாக பெரும் ஆதாயம் இருப்பது போலவே அடுத்து வரும் வசூல்களுக்கு அனைத்து வியாபாரிகளும் கட்டுப்படவேண்டும் என்பதை இந்து முன்னணி நிர்வாகிகளின் எதிர்கால ஆதாயமாக குறிப்பிடலாம்.

ஒரு காலத்தில் தொழிலாளிகளின் போர்க்குணத்தை கண்ட கோவை இன்று முதலாளிகளின் பேயாட்டத்தில் சிக்கியுள்ளது. அதனால்தான் முதலாளிகளின் ஏவல்நாய்களான இந்துமுன்னணி போன்ற ஜந்துகள் வெறிபிடித்து அலைகின்றன. தொழிலாளிகள் ஒன்றிணையும் போது காவிக் குரங்குகள் கோவை மண்ணிலிருந்து விரட்டப்படும். அத்தகைய போராட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து நடத்தும்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. வெகுஜன ஊடகத்தில் இல்லாத சிறப்பான கள ஆய்வு கட்டுரை.
  பாதிக்க பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா ? அவர்களுடைய நஷ்டத்திற்கு யார் பொறுப்பு என்கின்ற சட்ட உரிமையை பற்றி யாருக்காவது தெரியுமா ?
  வீடியோவில் இருக்கும் பொது சொத்திற்கு சேதாரம் விளைவிக்கும் ரவுடிகள் கைது செய்யப்படுவார்களா ?

 2. களத்தில் இறங்கி தொகுத்து வினவு வெளியிட்டிருக்கும் ரிப்போர்ட் பிரமிப்பைத் தருகிறது.

  “பெரிதாக செய்யலாம்” என்று எதிர்பார்த்தோருக்கு, இந்து முன்னணி ஆனந்த் தான் கொலைக்குக் காரணம் என்று கூறி காவல்துறை கைது செய்தவுடன் சப் என்றாகி விட்டது.

  முசுலிம்கள் சசிகுமாரை கொன்று விட்டதாக மீடியா முன் இரு வாரங்கள் ருத்ர தாண்டவமாடிய இந்து முன்னணியினர், எச். ராஜா, தமிழிசை ஆகியோர் இப்போது எங்கே? கோவை வன்முறைக்கான இழப்பினை ஈடுகட்டப் போவது இந்து முன்னணியா, பாஜகவா?

  நெடுங்காலம் அக்கம் பக்கம் பழகியவர்களாலேயே ஆள்காட்டப்பட்டு சூறையாட்டப்பட்டுள்ள முசுலிம்கள் இடிந்து போய், மனம் இருண்டு போய் உட்கார்ந்திருக்கின்றனரே? அதை எவ்வாறு ஈடு செய்யப் போகின்றனர்?

Comments are closed.