Thursday, January 28, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு !

மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு !

-

tn-policeகொடூரமான சித்திரவதைகள், கொட்டடிக் கொலைகள், பாலியல் வன்முறைகள் – என பயங்கரவாத அட்டூழியங்களைத் தொடர்ந்து செய்துவரும் வன்முறைக் கும்பலாக ஏற்கெனவே தமிழக போலீசு அம்பலப்பட்டுப் போயுள்ளது. போதை, விபச்சாரம், ஆற்றுமணல், தாதுமணல் கடத்தலுக்குத் துணைபோகும் கிரிமினல் கும்பலாகவும் சீரழிந்து கிடக்கிறது. இவையெல்லாம் போதாதென்று, இப்போது ஹவாலா கொள்ளைக் கூட்டமாக வளர்ந்து புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது, தமிழக போலீசு.

கடந்த ஆகஸ்டு மாதம் 25 -ஆம் தேதியன்று கேரளாநோக்கி சென்ற காரை போலீஸ் உடையில் இருந்த சிலர் கோவை மதுக்கரை செக்போஸ்ட் அருகே வழிமறித்து, காரில் இருந்தவர்களை மிரட்டி கீழே இறக்கிவிட்டுவிட்டு காரை கடத்திச் சென்றனர். அந்தக் காரில் வந்த கேரளத்தின் மலப்புரம் தங்க நகைக்கடை அதிபர் அன்வர் சதா என்பவர், தனது கார் கடத்தப்பட்டதாக கோவை மதுக்கரை போலீசிடம் புகார் கொடுத்தார். பின்னர் இதற்கென ஒரு தனிப்படை அமைத்து, ஆகஸ்டு 27 தேதியன்று அந்தக் காரை பாலக்காடு அருகே போலீசார் கண்டறிந்து மீட்டுள்ளனர்.

ஹவாலா கொள்ளையர்கள்:  கரூர்-பரமத்தி போலீசு ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை போலீசு ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையமு ஏட்டு தர்மேந்திரன்.
ஹவாலா கொள்ளையர்கள்: கரூர்-பரமத்தி போலீசு ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை போலீசு ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையமு ஏட்டு தர்மேந்திரன்.

இது தொடர்பாக மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோரைப் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில், காரையும் அதிலிருந்த ரூ.3.93 கோடி பணத்தையும் கொள்ளையடித்து, அதில் ரூ.1.90 கோடியை தாங்கள் எடுத்துக் கொண்டு மீதியுள்ள ரூ.2 கோடியை தங்களுக்கு வழிகாட்டி உதவி செய்த கரூர் பரமத்தி போலீசு ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை போலீசு ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையம் ஏட்டு தர்மேந்திரன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்டு 2 தேதியன்று கரூரில் ஒரு பால்பண்ணை அதிபர் வீட்டில் நடந்த கொள்ளையைத் துப்பறிய நியமிக்கப்பட்ட தனிப்படையைச் சேர்ந்தவர்கள்தான் மேற்குறிப்பிட்ட மூன்று போலீசாரும். இந்த தனிப்படையினர் கோவைக்குச் சென்றபோது, ஆகஸ்டு 25 அன்று ஹவாலா பணத்துடன் நகைக்கடை அதிபர் அன்வர் சதா செல்வதை கோடாலி சிறீதர் என்ற ஹவாலா ஏஜெண்டு மூலம் அறிந்துள்ளனர். அதன்படியே, தமது விசுவாச கூலிப்படையினரான மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோருக்கு போலீசு சீருடையை அணிவித்து, காரில் கடத்தி வரப்பட்ட ரூ.3.93 கோடியைத் திட்டமிட்டு சுருட்டியிருக்கின்றனர். அந்தக் காரில் இருந்த பணம் ஹவாலா பணம் என்பதாலேயே, கார் உரிமையாளர் அது பற்றி போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை.

கடத்தப்பட்ட காரைத் தேடிச் சென்ற போலீசுக்கு, கார் கடத்தல் மட்டுமின்றி ஹவாலா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதும், தமது துறைசார்ந்த போலீசே இந்தக் கொள்ளையை நடத்தியுள்ள விவகாரமும் தெரிய வந்துள்ளது. இருப்பினும், காரில் இருந்த ஹவாலா பணம் பற்றி இத்தொழிலில் தொடர்புடைய பெரும் புள்ளிகளுக்கும் போலீசு உயரதிகாரிகளுக்கும் தெரியும் என்பதாலும், இந்த வலைப்பின்னலில் உள்ள பல போலீசு உயரதிகாரிகளின் தொடர்புகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதாலும், வேறு வழியின்றி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையைச் சிக்க வைத்துவிட்டு, தாங்கள் கடமை தவறாமல் பணியாற்றுவதாகக் காட்டிக் கொண்டு போலீசு உயரதிகாரிகள் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

ஹவாலா என்ற அரபிச் சொல்லுக்கு பரிமாற்றம் என்ற பொருள். சட்டபூர்வமான வரியைத் தவிர்த்து, வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கு இணையான கட்டமைப்புடன் கிரிமினல் மாஃபியாக்களின் மூலம் சர்வதேச வலைப்பின்னலைக் கொண்டு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பல்லாயிரம் கோடி கருப்புப் பணத்தை தரகர்கள் மூலம் விரைவாகப் பரிமாற்றம் செய்வதுதான் ஹவாலா தொழில். இத்தகையதொரு மிகப் பெரிய மாஃபியா வலைப்பின்னலில் ஒரு சாதாரண போலீசு ஆய்வாளர் தொடர்பு கொண்டிருந்தாகவும், தனது அதிகாரத்தைக் கொண்டு அவர் இக்கொள்ளையை நடத்தியதாகவும் நம்பச் சொல்கிறது தமிழக போலீசு. ஆனால், இந்த ஹவாலா கொள்ளைக்கு தென்மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன. ஆய்வாளர் முத்துக்குமார் ஏற்கெனவே நாகர்கோவிலில் இதே பாணியில் ரூ.63 லட்சம் ஹவாலா பணத்தைக் கொள்ளையடித்ததாகவும், இத்தகவல் கிடைத்ததும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிடுவதற்குள் அதில் ரூ. 23 லட்சத்தை மேலதிகாரிகளுக்காக மறைத்துவைத்துவிட்டு, கைப்பற்றியது ரூ.40 லட்சம்தான் என்று சாதித்ததாகவும் செய்திகள் வருகின்றன.

tn-police-thiefகேரள மாநிலமானது இத்தகைய ஹவாலா பணப் பரிமாற்றங்களுக்கான முக்கிய மையமாக உள்ளது. அங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கருப்புப் பணத்தை அனுப்புவது சுலபமாக இருப்பதால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இத்தகைய ஹவாலா பணக் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. எந்தெந்த செக்போஸ்ட்டின் வழியாக ஹவாலா பணம் கடத்திச் செல்லப்படுகிறது என்பது தமிழக போலீசு உயரதிகாரிகளுக்குத் தெரிந்தேதான் நடக்கிறது. பணக் கடத்தலுக்கு குறிப்பிட்ட செக்போஸ்ட் வழியாகச் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து அதற்கு கமிசன் பெறுவதோடு, ஹவாலா புள்ளிகளின் செல்வாக்கையும் அதிகார பலத்தையும் பொறுத்து சில நேரங்களில் கடத்தப்படும் ஹவாலா பணத்தை போலீசே கொள்ளையடிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்காகவே போலீசு உயரதிகாரிகள் தனிப்படை என்ற பெயரில் போலீசு குழுக்களை அமைத்து நேரடியாகவே கொள்ளையில் ஈடுபடுபடுவதோடு, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையுடன் கூட்டணி கட்டிக் கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைப் பங்குபோட்டுக் கொள்வதாக இத்தொழில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இத்தகைய தனிப்படை போலீசாருக்கு விடுதிகளில் சிறப்பு அறைகள் ஏற்பாடு செய்யப்படுவதும், திட்டமிட்டுக் கொடுத்து வழிகாட்டி உதவிய போலீசு உயரதிகாரிகளுக்குக் கீழ்நிலை போலீசார் கப்பம் கட்டி விருந்துகள் வைத்து குளிப்பாட்டுவதும் நடக்கின்றன. இதனாலேயே தற்போதைய ஹவாலா கொள்ளையில் சிக்கிய இந்த மூன்று போலீசாரும் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

tn-police-captionஒரு கொலையோ, கொள்ளையோ நடந்தால் அதுபற்றி போலீசுக்குக் குடிமக்கள் தெரிவிக்க வேண்டும்; போலீசார்தான் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்; மற்றவர்கள் இதில் தலையிடுவதோ, விமர்சிப்பதோ கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வரம்பற்ற அதிகாரத்துடன் போலீசு துறை இயங்குவதால், அதன் சட்டவிரோத – சமூகவிரோதக் குற்றங்களைப் பற்றி யாரும் வாய் திறக்க முடியவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, கிரிமினல் மாஃபியா கும்பலைவிட மோசமான கொள்ளைக் கூட்டமாகத் தமிழகப் போலீசுத்துறை வளர்ந்து நிற்கிறது.

இதர கிரிமினல் குற்றங்களை ஒப்பிடும்போது ஹவாலா பரிமாற்றம் என்பது மிகக் கொடிய கிரிமினல் குற்றம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அரித்துச் சிதைக்கக் கூடியதாக உள்ளதால் இது தேசவிரோத, மக்கள் விரோத கொடிய குற்றம். அந்தக் குற்றக் கும்பலிலே ஒரு அங்கமாகத் திகழும் அளவுக்கு தமிழக போலீசு கிரிமினல்தனத்தில் புதிய எல்லையைத் தொட்டிருக்கிறது. நமது வரிப்பணத்தில் வயிறு வளர்க்கும் இந்தச் சட்டவிரோத – சமூகவிரோத கும்பல்தான், குற்றங்களைத் தடுத்து நாட்டையும் மக்களையும் காத்து வருவதாகச் சொல்லப்படுவதை இனியும் நம்பி ஏமாற முடியுமா?

– குமார்

_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க