Tuesday, September 26, 2023

உப்பின் கதை

-

“உப்பு இல்லா பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஏனென்றால், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் சரியான அளவில் உப்பு இருந்தால் தான் அதனை சுவைத்து சாப்பிட முடியும். இல்லையெனில் அதனை சாப்பிடவே பிடிக்காது. உப்பு சரியாக இல்லையென்றால் “என்ன கொழம்பு வக்கிர, உப்பு ஒறப்பு இல்ல” என்று வீட்டில் வசைபாடுகிறோம்.

salt-uppalam-08
உழைப்பின் உப்பு

இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் அண்ணன் ஒத்தை மாட்டு வண்டியில் உப்பினை ஏற்றிக்கொண்டு வந்து வீடு வீடாக கிராமங்களில் விற்பனை செய்ய வருவார். அவர் எப்பொழுது வருவார் என எதிர்பார்த்து நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை வைத்துக்கொண்டு காத்திருப்பார்கள். உப்பு வண்டி வந்தவுடன் தானியங்களை கொடுத்து விட்டு உப்பினை வாங்கிச் செல்வார்கள். பண்டமாற்று முறையில் வியாபாரம் இருந்தது. காசோ, தானியமோ எதுவும் இல்லையென்று கடனாக கேட்டாலும் முகம் சுளிக்காமல் உப்பினை கொடுத்து விட்டுச் செல்வார். அதனால் அனைவருக்குமே அவரை பிடிக்கும். வேறுபாடு இல்லாமல் அன்பாக பழகுவார்கள் கிராம மக்கள். பள்ளி செல்லும் மாணவர்களும் அந்த உப்பு வண்டியில் ஏறிக்கொண்டு ஊரைச் சுற்றி வருவார்கள். அவ்வளவு ஆனந்தம் அடைவார்கள். மாணிக்கம் அண்ணன் போகும் வழியில் தான் பள்ளிக்கூடம். அங்கே மாணவர்களை இறக்கி விட்டுச் செல்வார். இப்பொழுது மாணிக்கம் அண்ணன் வருவதே இல்லை. உப்பு வாங்க வேண்டும் என்றால் கடைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். காரணம் உலகமயமாக்கல் எனும் பெரும்பூதம் அமுல்படுத்தப்பட்டது தான்.

உலகமயமாக்கல் வருகைக்கு பின் இந்தியாவில் உப்பு சந்தை

உலகம் முழுவதும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் நீரைக் கொண்டு தான் உப்பு உற்பத்தி செய்கிறார்கள். உலக அளவில் உப்பு உற்பத்தியில் சீனா தான் முதலிடம். இரண்டாவதாக அமெரிக்கா. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மொத்தம் 6.9 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டிற்கு சராசரியாக 215.86 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 11,799 உற்பத்தியாளர்கள் உள்ளனர். 1.11 லட்சம் தொழிலாளர்கள் தினசரி கூலிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள்.

உப்பு உற்பத்தி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்தியாவில் உப்பு உற்பத்தியில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 180 லட்சம் டன் (76.7 %) உற்பத்தி செய்கிறது. இரண்டாவதாக தமிழ்நாடு 25.8 லட்சம் டன் (11.16), ராஜஸ்தான் 17.5 லட்சம் டன் (9.86%), இதர மாநிலங்களான ஆந்திரா. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடக, மேற்கு வங்கம் ஆகியவை 2.28 சதவீதம் அளவு உற்பத்தி செய்கின்றது.

சிறு உற்பத்தியாளர்கள் 10 ஏக்கருக்கும் குறைவாக 87.6 சதவிதத்தினரும், நடுத்தர உற்பத்தியாளர்கள் 10 முதல் 100 ஏக்கருக்குள் 6.6. சதவித்த்தினரும், பெரும் உற்பத்தியாளர்கள் 100 ஏக்கருக்கும் மேல் வைத்திருப்பவர்கள் 5.8% பேரும் இருக்கின்றனர்.

இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் 62% சிறிய உற்பத்தியாளர்கள் தான் உற்பத்தி செய்கிறார்கள். 28% நடுத்தர உற்பத்தியாளர்களும், வெறும் 10% மட்டுமே பெரிய உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கின்றனர்.

salt-uppalam-11இந்த பெரும் உற்பத்தியாளர்கள் பெரும்பான்மையாக குஜராத்தில் தான் இருக்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு உப்பை ஏற்றுமதி செய்யும் மாபெரும் நிறுவனங்களாகவும் இருக்கிறது.

கிருஷ்ணா சால்ட் ஒர்க் குஜராத்தில் உள்ளது. சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் முழுவதும் நவீன இயந்திரங்களை கொண்டு உற்பத்தியில் ஈடுபடுகிறது. கோஷர் சால்ட், சால்ட் சென்ஸ், சன் ஷைன் சால்ட் என்று பல பிராண்ட் பெயர்களில் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

அஹிர் சால்ட், உப்பு வணிகப் பொருளாக்கப்பட்ட 1990 களின் ஆரம்பத்தில் இருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது இந்த நிறுவனம் ஐக்கிய அமெரிக்க, பிரிட்டன், ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என்று 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. டேப்லெட் உப்பு, பேதியுப்பு என்று பலவகையாக தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறது.

இண்டோ பிரைன் இண்டஸ்ட்ரியல்.லிமிடெட் என்ற நிறுவனம் 4,50,000 டன் உப்பினை மொரிஷியஸ், மத்திய கிழக்கு நாடுகள், மஸ்கட், இந்தோனோஷியா, சிலோன், ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

salt-uppalam-12கட்ச் பிரைன் செம் இண்டஸ்ட்ரியல் (ஸ்ரீ ராம் குழுமம்) என்ற நிறுவனம் 3 லட்சம் மெட்ரிக் டன் உப்பினை மலேசியா, பங்களாதேஷ், சீனா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு தனது வாடிக்கையாளராக டாடா கெமிக்கல்ஸ், ஸ்ரேயா எக்ஸ்பர்ட் ஸ்டார் சால்ட், ரிலையன்ஸ் ஹோம் புராடெக்ட், சால்ட் டிரேடிங் & கோ உள்ளிட்ட பத்தொன்பது தொழில் நிறுவனங்களுக்கும் சப்ளை செய்து வருகிறது.

நாடு முழுதும் உப்பு ஏற்றுமதி செய்யும் முப்பத்தைந்து பெரும் நிறுவனங்களில் குஜராத்தில் மட்டும் பதினைந்து நிறுவனங்கள் உள்ளன. அதற்கடுத்தாக தமிழகத்தில் ஐந்து நிறுவனங்கள் உள்ள

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஏற்றுமதிக்கு தேவையான உப்பினை சிறு உற்பத்தியாளர்களிடம் இருந்து மிகவும் குறைவான, அடிமாட்டு விலைக்கு வாங்கி செல்கின்றன. இதற்கென்று சிறிய ஏஜென்சிகளை அமைத்துள்ளன. ஆண்டிற்கு சுமார் 36 லட்சம் டன் உப்பினை ஏற்றுமதி செய்து வருகின்றன. குறிப்பாக இந்த நிறுவனங்கள் எல்லாம் உலமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பாட்ட பிறகு தான் உருவெடுத்துள்ளன.

salt-uppalam-14உப்பு உற்பத்தியில் ஈடுபடுகின்ற இடங்களில் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு தைராய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இந்த குறைபாட்டினை போக்குவதற்காக “ National Indian Dificiency Disorder Condrol Programme (NIDDCP) என்ற திட்டத்தினை 1962-ல் அறிமுகப்படுத்தி அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்துமாறு கூறியது மத்திய அரசு. அதன் பிறகு இந்த திட்டத்தை 1984-ல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. இதனை மாபெரும் புரட்சி என்றும் சித்தரித்தனர்.

உண்மை என்னவெனில் 1983-ம் ஆண்டு டாடா நிறுவனம் உப்பு சந்தையை கைப்பற்றுவதற்காக “ டாடா சால்ட்” அயோடின் கலந்த உப்பு . இது “தேசத்தின் உப்பு” என்றெல்லாம் முழக்கமிட்டு தனக்கான சந்தையை விரிவுபடுத்தியது.

salt-uppalam-161984-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி மனித நுகர்வுக்கான தேவை 62 லட்சம் டன் தான் என்ற போதிலும் தற்பொழுது 175 லட்சம் டன்னை உற்பத்தி செய்தனர்.

அதுமட்டுமில்லாமல் Salt in Central Excesice & salt act 1994-ல் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளனர். தாராளமயமாக்கல் கொள்கைக்கு ஏற்றவாறு Salt in cess act 1964 no.gsr.639(e) சட்டத்தில் 04.09.2001 ல் மாற்றம் கொண்டு வந்து முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு திறந்து விட்டது பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு.

அழிந்து வரும் சிறு உற்பத்தியாளர்கள்.

தென்னிந்தியாவை பொறுத்த வரை 2012-13 ம் ஆண்டில் 27.7 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது. 2013-14 ம் ஆண்டில் 25.8 லட்சம் டன்னாக உற்பத்தி குறைந்துவிட்டது. காரணம் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்குவதே.

salt-uppalam-17இது குறித்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பாரம்பரியமாக உப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் தேவி என்பவர் கூறுகையில், “உற்பத்தி செய்யும் மொத்த நிலம் 2500 ஏக்கர் நாயுடு, முதலியாருக்கு சொந்தமானது. நாங்க எட்டு ஏக்கர் குத்தகைக்கு வாங்கி தான் உற்பத்தி பண்ணுறோம். ஏக்கருக்கு ஆறாயிரம் ரூபா குத்தகை கட்டிடுறோம். முதலில் பாத்தியாக கட்டி சேற்றை மிதிச்சி சமன் படுத்திடுவோம். அப்புறம் தரை கடினமா இருக்கணும்னு கடல் மணலை கொட்டுவோம். ஒரு லோடு மாட்டு வண்டிக்கு 600 ரூபா கேட்பாங்க. அண்டை வெட்டி வாய்க்கால் போடுவது, சேறு மிதிக்கிறது சாதாரண வேலை இல்லை. கடுமையான வெயில் வியர்வை சிந்த உழைக்கணும். முதுகு தோல் பட்டை விட்டுடும். உப்பு தண்ணி என்பதால கை கால்கள் எல்லாம் மரத்து விடும்.

ஒவ்வொரு பாத்தியா தண்ணி வைப்போம். நீர் வடிய வடிய உப்பும் உற்பத்தியாகி இருக்கும். அதை வாரி தலையில சுமந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் நடந்து தான் தூக்கி வருவோம். உடம்பு முழுக்க உப்பா இருக்கும். வெயில் வேற சொல்லவா வேணும். “மழை வந்து தொலச்சாலாவது வீட்டுக்கு போயிடலாம்” அப்படின்னு நினைப்போம் சார். வெயில்ல வேல செய்றதுக்கு பயந்து உப்பு எடுக்க விடிகாலை 2 மணிக்கு கிளம்பி போய்டுவோம் சார்.

salt-uppalam-07உற்பத்தி செஞ்ச உப்பை எல்லாம் பத்தரமா பாதுகாக்கணும். வியாபாரிங்க வந்து வாங்கிட்டு போற வரைக்கும் கடன் வாங்கி தான் எல்லாம் வேலையும் செய்வோம். நான்கு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபா செலவாகிடும். அதனால் இரண்டு, மூணு குடும்பம் சேர்ந்து தான் குத்தகை வாங்குவோம். தனி ஆளா எதுவும் பண்ண முடியாதுங்க. எங்ககிட்ட வாங்குற வியாரிங்க ரொம்ப கம்மி விலைக்கு வாங்குவாங்க. மூட்டை 140,150 ரூபான்னு வாங்குவாங்க. அதுலயே மூட்டைக்கு 14 ரூ படிச்சிகிட்டு தான் மீதி காசு கொடுப்பாங்க. ஜனவரி தொடங்கி ஜூன் வரைக்கும் தான் வேலையே. அதுக்கப்புறம் ஆறு மாசம் வீட்ல தான் இருப்போம். எங்க பிள்ளைங்களை எல்லாம் கவர்மென்ட் ஸ்கூல்ல தான் படிக்க வைக்கிறோம். தனியார் ஸ்கூல்ல படிக்க வக்கிற அளவுக்கு இந்த தொழில்ல வருமானம் இல்லைங்க. எங்ககிட்ட இருந்து வாங்கிட்டு போயிட்டு பாக்கெட் போட்டு விக்கிறவங்களுக்கு தான் சார் லாபம்.

salt-uppalam-03நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த புதுசல கிராமத்துல விக்கிறதுக்காக வந்து வாங்கிட்டு போவாங்க. அப்ப செலவுக்கு கையில காசு இருக்கும். இப்ப எல்லாம் பெரிய வியாபாரி வர வரைக்கும் இல்லனா, நல்ல விலை போற வரைக்கும் காத்துகிட்டு இருக்கணும்” என்று கவலையோடு கூறுகிறார்.

குறிப்பாக உற்பத்தியில் ஈடுபடும் கூலித்தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் அறவே இல்லை. இந்தியா முழுவதும் இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ரத்த சோகை 41% பேருக்கும், பார்வைக்குறைபாடு 42%, பல் சொத்தையாதல் 41.7%, எடைக்குறைவு 19%, முன் கழுத்து கழலை நோய் 19%, தோல் பதிப்பு 91%, சதை மற்றும் எலும்பு செயலிழப்பு பெண்களுக்கு 75% ஆண்களுக்கு 44% போன்ற நோய்களால் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை மருத்துவத்திற்கே செலவிட வேண்டியுள்ளது. பெரும்பாலும் இத்தொழிலில் ஈடுபடுபவர்களுடைய குழந்தைகள் பள்ளிப் படிப்பையே முடிக்கவில்லை. ஒன்று பெற்றோர்களுடன் வேலைக்கு செல்வது இல்லையெனில், வெளியில் வேலைக்கு சென்று விடுகிறார்கள்.

salt-uppalam-06இத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாளொன்றுக்கு ஆண்களுக்கு ரூ 250, பெண்களுக்கு ரூ 150 என்று வழங்கப்படுகிறது. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் ரூ.80 மட்டுமே வழங்கப்படுகிறது.

சிறு உற்பத்தியாளர்களுக்கு மானியமும் வழங்குவது இல்லை. மின்சாரமும் இல்லை. பன்னாட்டு கம்பனிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் அரசு இவர்களை கண்டுகொள்வதே இல்லை. டீசல் எஞ்சின் வைத்து தான் உற்பத்தி செய்கிறார்கள். இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. மழை உள்ளிட இயற்கையின்சீற்றத்தால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. சென்ற ஆண்டு டிசம்பரில் பெய்த மழையால் பல லட்சம் மதிப்புள்ள உப்புக்கள் அழிந்தன. இதற்க்கு எந்த வித நஷ்டஈடும் கொடுக்கவில்லை அரசு. இந்த சூழலில் பெரிய நிறுவங்களோடு போட்டி போட முடியாமல் திணறி இத்தொழிலை விட்டே வெளியேறி வருகிறார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பன்னாட்டு கம்பனிகள், உள்நாட்டு தரகு முதலாளிகள் கொள்ளைக்காக புதிய சட்டங்களை கொண்டு வரும் மோடி அரசு தொழிலாளர்களுக்காக கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. கவலைப்பட போவதுமில்லை. எனவே சிறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஒன்றிணைந்து முதலாளித்துவ லாபவெறிக்கு எதிராக போராடுவது மட்டும் தான் தீர்வு. உப்பிட்டவனை ஒருபோதும் மறவாதே என்பார்கள். இத்தொழிலாளர்கள் உற்பத்தி செய்த உப்பினை சாப்பிட்டவர்கள் சிந்தித்து பாருங்கள். உப்பு உங்களுக்கு உரைத்தால் உப்பளத் தொழிலாளர்களுக்காக நாமும் போராடுவோம்!

செய்தி, படங்கள்:
– வினவு செய்தியாளர்.

  1. அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் வினவு செய்தியாளர் அவர்களுக்கு

  2. இந்த பதிவு ஒவ்வொரு கிராமத்து மனிதனின் வாழ்வையும் அவர்களின் உண்வின் சுவையையும் திரையிட்டு காட்டுகின்றது. இன்னும் இன்னும் மனிதன் வாழ்வை சுவைத்து உழைக்கும் மனிதனின் வியர்வையில் மூழ்கி, அவனின் உழைப்பையும் உரிமையையும் சுரண்டி கொழுத்து திரியும் முதலாளித்துவ பயங்கரவாதிகளை அந்த உழைக்கும் உப்புக்காரணுக்கு அடையாளப்படுத்தி அடித்து நொருக்க உங்கள் இந்த பதிவு தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க