privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்1991 தனியார்மய சீர்திருத்தம் - பலன் யாருக்கு ? சிறப்புக் கட்டுரை

1991 தனியார்மய சீர்திருத்தம் – பலன் யாருக்கு ? சிறப்புக் கட்டுரை

-

1991 சீர்திருத்தம் – வறுமையின் நிலை என்ன ? இரண்டாம் பாகம்

ந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 2.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அதவாது 140.78 இலட்சம் கோடி ரூபாய்கள். இது 1991இல் புகுத்தப்பட்ட தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் சாதனையால் வந்தது என்கின்றன ஆளும் வர்க்க பத்திரிக்கைகள்.

1991 சீர்திருத்தம், இந்தியாவில் வறுமையை ஒழித்ததா? என்ற கேள்விக்கு சென்ற கட்டுரையில் விடையளிக்க முயற்சி செய்தோம். தி இந்து ஆங்கிலே நாளேடு டெண்டுல்கர் கமிட்டி ஆய்வை மட்டும் எடுத்துக்கொண்டு 1993இல் 45.3% ஆக இருந்த வறுமைக் கோடு சதவீதம் 2012இல் 21.9% ஆக குறைந்திருக்கிறது என்று செய்த பிரச்சாரம், தனியார்மயத்தை ஆதரிப்பதற்காக பல்வேறு வறுமைக்கோடு குறித்த ஆய்வுகளை வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறது என்று பார்த்தோம்.

இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் 80%, 60% 50%, 21.9% மற்றும் 15% என்ற பல ஆய்வு முடிவுகளுள் எதை எடுத்துக் கொள்வது என்பதில் ரமேஷ் டெண்டுகல்கரின் ஆய்வு முறை, மோசடியானது என்பதுடன் இத்தகையவர்களின் வறுமை கோடு குறித்த ஆய்வு முறையே பொதுநலத்திட்டங்களிலிருந்து அரசு விலகிக்கொண்டு ஏகாதிபத்திய தனியார் தரகு முதலாளிகள் சூறையாடுவதை நியாயப்படுத்துவதற்காக எழுதப்பட்ட கள்ளக் கணக்கு தான் என்று வலியுறுத்தியிருந்தோம்.

அப்படியானால் இந்தியாவின் வறுமை நிலைதான் என்ன? செல்போன், கார், பைக், கம்ப்யூட்டர், கலர் டிவி, ஏரோபிளேன், ஸ்பிளிட் ஏசி, ஆன்லைனில் கோபி மஞ்சூரியன், வீட்டு லோன், நீரிழிவு, வழுக்கைத் தலை மற்றும் ஆண்மைக் குறைவிற்கு அதிநவீன சிகிச்சை, பாலீதின் பாக்கெட்டுகளில் பாரம்பரிய குதிரைவாலி, கஸ்தூரி மஞ்சள் வியாபாரம், அமெரிக்க மாப்பிள்ளை,  சாப்ட்வேர் வேலை, ஊபர், ஓலா போன்ற பன்னாட்டு கம்பெனிகளில் டிரைவராக வேலை பார்க்கும் வாய்ப்பு, கோக-கோலா, பெப்சி போன்ற தாகம் தீர்க்கும் பானங்கள், தலித்துகளை தொழில்முனைவோர்களாக மாற்றும் மோடியின் ஸ்டேண்டப்-இந்தியா போன்றவையல்லாம் 1991 சீர்திருத்தத்தின் சாதனைகள் என்கிறார்கள்.

இப்படிச் சொல்பவர்கள் யார்? நாட்டின் மொத்த ஜி.டி.பியான 140.78 இலட்சம் கோடியில் ஒவ்வொருவரும் பெற்ற பங்கு என்ன? மக்கள் என்ன நிலையில் வாழ்கிறார்கள்? 1991 சீர்திருத்தத்தால் பலனடைந்தவர்கள் யார்? என்பதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

அதற்கு 1991 தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கைகள் என்ற பெயரில் இந்தியாவில் என்ன செய்தார்கள் என்பதை இதுவரை தனியார்மய சீர்திருத்தம் பற்றி தெரியாத வாசகர்களுக்காக கீழ்க்கண்ட ஐந்து கருத்துக்களை சுருக்கமாக தொகுத்துக் கொள்வோம்.

1991 சீர்திருத்த கொள்ளை(கை)கள்!

  1. உலக பன்னாட்டு நிதி முனையத்தின் (IMF) கட்டளையின் படி 1991 சீர்திருத்தம், இந்தியாவின் பணமதிப்பை ஜூலை-1991 அன்று 25% குறைத்தது. அதாவது ஒரு தொழிலாளி ஒரு நாள் கூலியாக ரூ. 40 பெற்றுக்கொண்டு 10 ரூபாய்க்கு அரிசி, 10 ரூபாய்க்கு உடை, 10 ரூபாய்க்கு மருத்துவம், 10 ரூபாய்க்கு கல்வி என செலவழிப்பார் எனில் 1991 சீர்திருத்தம், தொழிலாளி உணவிற்கோ, உடைக்கோ, மருத்துவத்திற்கோ, அல்லது கல்விக்கோ செலவிடமுடியாதபடி பகிரங்கமாக கொள்ளையிட்டிருக்கிறது. இப்படித்தான் உலக ஏகாதிபத்தியக் கும்பல்கள் ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியின் போதும் (1936, 1950, 1975, 1983, 2008), இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் பணமதிப்பை குறையவைத்து, மக்களின் வாயிலும் வயிற்றிலும் அடித்து தங்களது பணப்பையை நிரப்புகின்றனர். இதை நிறைவேற்ற ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகள் நரசிம்மராவ், மோடி போன்ற புல்லுருவி அரசாங்கங்களை வைத்துக்கொண்டு ஐ.எம்.எப் மற்றும் உலகவங்கி மூலமாக நிறைவேற்றுகின்றனர். இவ்வாறு 1991 காலகட்டம், இந்திய நாடு, ஏகாதிபத்தியக் கும்பலால் சிறைபடுத்தப்பட்டு மறுகாலனிய நிலைக்குள் புகுந்ததைக் காட்டுகிறது.
  2. 1991, ஜூலை 4-18 தேதிகளுக்கிடையில் கிட்டத்தட்ட இந்தியாவின் 47 டன் தங்கம் ரகசியமாக மக்களுக்கு தெரியாமல் இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டது. இந்த நாளில் இருந்து, தங்கம் மட்டுமல்லாது பிற கனிம வளங்கள், காடுகள், இந்தியாவின் இயற்கை வளங்கள் பன்னாட்டு நிதி முதலைகள் சூறையாடும் வண்ணம் சட்டப்பூர்வமாக திறந்துவிடப்பட்டது. இதற்கு தாராளமயக் கொள்கை என்று பெயர்.
  3. பொதுத் துறைகளை தனியார்மயமாக்குவதற்கு ஜூலை 4, 1992இல் இந்தியாவின் தொழிற்துறை கொள்கை வெளியிடப்பட்டது. இறக்குமதி தொடர்பான விதிகளை இரத்து செய்து, தனியார் முதலாளிகள் கொள்ளையிடும் வண்ணம் பொருளாதாரக் கொள்கை வடிவமைக்கப்பட்டது. ஜூலை 24, 1991 மன்மோகன் சிங்கின் பட்ஜெட், பல்வேறு மானியங்களை வெட்டுவது, விலைவாசியை ஏற்றுவது என்று மக்களை கசக்கி பிழியும் அறிவிப்புகளை ஒருபக்கம் வெளியிட்டுவிட்டு மறுபக்கம் இறக்குமதி வரிச்சலுகை, நாட்டுவளம் சூறையாடல், பணமதிப்பு சரிவு வரை கார்ப்பரேட்டுகள், நிதிமூலதனக் கும்பல்கள் சார்பாக, உலக வங்கி எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசித்தது.
  4. தனியார்மய தொழிற்துறை கொள்கையாலும், விலைவாசி ஏற்றத்தாலும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கொந்தளித்து நாடெங்கிலும் போராட்டங்களை நடத்துவார்கள் என்பதற்காக 1991 சீர்திருத்த பட்ஜெட், இராணுவத்திற்கு மட்டும், பாதுகாப்பு படைகளை மேலும் உருவாக்கிட 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது! இன்று மோடி கும்பல் நிலம் கையகப்படுத்துதல் சட்டம், அன்னிய நேரடி முதலீடு போன்றவற்றை அமல்படுத்தவும் ஆர்.எஸ்.எஸ் அகண்ட பாரதக் கனவை நிறைவேற்றவும் அதை எதிர்க்கும் இந்திய நாட்டு மக்களை ஒடுக்கவும் இராணுவத்திற்கு மட்டும் 2.58 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதை ஒப்பிட்டு பார்த்தால் சீர்திருத்தத்தம் என்பது யாருக்கானது? சீர்திருத்தத்தின் விளைவுகள் எப்படிப்பட்டவை? என்பது தெரியவரும்.

மேற்கண்ட 1991 சீர்திருத்த கொள்கைகள் தான் இன்றைய 140.78 இலட்சம் கோடி ரூபாய் ஜி.டி.பிக்கு காரணம். இப்பொழுது ஒவ்வொருவரின் பங்கை ஆராய்வது நமக்கு எளிதாகும்.

1991 சீர்திருத்தம்-இந்திய விவசாயத்தின் நிலை

இந்தியா ஒரு வேளாண்மை நாடு என்பதால் முதலில் விவசாயத்துறையை எடுத்துக்கொள்வோம். நீங்கள் விவசாய வர்க்கத்தைச் சார்ந்தவர் என்றால் உங்களின் நிலையை உங்களுக்கே விளக்கி காட்ட வேண்டிய அவசியமில்லை. எனினும் ஒட்டுமொத்த உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் என்னவாக இருந்தது என்பதற்கு தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த வரைபடத்தை மீண்டும் தமிழ்படுத்தி வரைந்தோம்.

விவசாயத் துறை

1951-52இல் மொத்த உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு 51.45% ஆகும். 1991 சீர்திருத்தம் புகுத்தப்படும் பொழுது வேளாண்மையின் பங்கு 28.54% ஆக குறைந்து, கடந்த 25 ஆண்டுகளில் வேளாண்மையின் பங்கு உருத்தெரியாமல் 15.4% ஆக குறைந்திருக்கிறது. 1991 சீர்திருத்தம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அடித்து ஒடித்திருக்கிறது.

இணையத்திலும் பத்திரிக்கைகளிலும் ‘தனியார்மயம் போற்றி!’ என்று ஜால்ரா தட்டும் எந்த அடிவருடிகளும் மண்வாசனை அறியாத தற்குறிகள் என்று இதிலிருந்து உங்களுக்கு எளிதில் நிரூபணம் ஆகியிருக்கும் இல்லையா? அப்படியானால் விவசாயிகளின் நிலை என்ன?

ரூபே (RUPE) அரசியல்பொருளாதார ஆய்வதழில், 1991 சீர்திருத்தம், விவசாயிகளின் வாழ்வை எப்படி சூறையாடியது என்பதை மனாலி சக்ரபர்த்தி கீழ்க்கண்டவாறு பட்டியலிடுகிறார்.

  • 1995-லிருந்து இதுவரை, 2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். கடன் தொல்லை, பயிர்களுக்கான மிகப்பெரும் உள்ளீட்டுச் செலவுகள், உரவிலை, உரிய விலை கிடைக்காமை, மான்சண்டோ போன்ற பன்னாட்டு கம்பெனிகளின் விதைக்கும் விதை நெல்லுக்குமான ஏகபோகம், கோக கோலா கம்பெனியின் தண்ணீர் கொள்ளை என ஒவ்வொரு நாளும் விவசாயிகள் பல்வேறு தாக்குதல்களால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் தற்கொலை செய்தவர்களில் விவசாயிகளின் விகிதம் மட்டும் 47% ஆகும்.
  • 1991க்கும் 2001க்கும் இடையில் 70 இலட்சம் விவசாயிகள் விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நகர்புறம் நோக்கி உதிரிப்பாட்டாளிகளாக வீசி எறியப்பட்டிருக்கின்றனர்.
  • 2001-2011க்கு இடையில் இந்திய வரலாற்றின் 90 வருடங்களில் நிகழ்ந்திராத மாபெரும் இடப்பெயர்ச்சி கிராமங்களில் இருந்து நகர்ப்புறம் நோக்கி நடை பெற்றிருக்கிறது. விவசாயிகளை விவசாயத்திலிருந்தே அப்புறப்படுத்திய ஏகாதிபத்திய கும்பலின் மூர்க்கத்தனமான தாக்குதல் இது.
  • ஒவ்வொரு வருடமும் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் மக்கட் தொகை மட்டும் 10 இலட்சம். இதில் 40% பழங்குடியினர், 40% தலித்துகள், 20% கிராமப்புற ஏழைகள்.

1991 தனியார்மயம் சீர்திருத்தம் விவசாயிகளின் வாழ்க்கையை இவ்விதம் புரட்டிப்போட்டிருக்கிறது. அடுத்து இந்தியாவின் உற்பத்தித் துறையின் நிலையைக் கவனிப்போம்.

1991 சீர்திருத்தம்-உற்பத்தித் துறை: ஆலைத் தொழிலாளிகளின் நிலை

உற்பத்தி துறை

1951-52இல் மொத்த ஜி.டி.பியில் உற்பத்தித் துறையின் அளவு 9.05% ஆக இருந்து 1991 காலகட்டத்தில் 14.51% ஆக இருக்கிறது. 1991 காலகட்டத்தில் இருந்து 2015-2016 வரை உற்பத்தி துறையின் அளவு 17.5% ஆக இருக்கிறது. அதாவது 1950-91 இருந்த வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதிலிருந்து 1991 தனியார்மய சீர்திருத்தம் இந்திய தொழிற்துறையை எங்கேயும் வளர்க்கவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது!

வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால் இந்தியாவிற்கென்று தேசிய பொருளாதாரம் என்ற ஒன்று இப்பொழுது வரை இல்லை! இது நாட்டுப்பற்றாளர்களின் கவனத்திற்குரியது.

இந்தியாவில் தேசிய முதலாளிவர்க்கம் என்ற ஒன்று இருந்திருக்குமேயானால் நாட்டின் இயற்கைவளங்கள், காடு கனிகள், உற்பத்திப் பொருட்களைக் கொண்டு பொருளாதார உற்பத்தி முறை என்ற அளவில் முதலாளித்துவம் உற்பத்தியை பெருக்கியிருக்கும்! வ.ஊ.சி ஆங்கிலேயனை எதிர்த்து கப்பல் விட்டமாதிரியாக. இந்தியாவிற்கென்று உற்பத்தி துறை வளராமல், இந்திய புல்லுருவி வர்க்கம் காலனிய ஏகாதிபத்திய கும்பலிடம் இந்தியாவின் வளங்களை அள்ளிக்கொடுக்கவும் தரகு வேலைபார்க்கவும் தரகு முதலாளி வர்க்கமாக மேல் எழுந்து வந்துள்ளது!

1991 சீர்திருத்தம் டாடா, அம்பானி, பிர்லா போன்ற தரகர்களையே மேலும் பெற்றெடுத்தது. டாடாவின் முன்னோர்கள் காலனிய ஆட்சிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்கள். சீனப்போரில் கஞ்சாவெல்லாம் விற்று கஷ்டப்பட்டு முன்னேறினார்கள் என்றால் 1991 சீர்திருத்தம் டாடாவிற்கு நிலக்கரி, மின்சாரம், எரிசக்தி போன்ற இந்திய பொதுச் சொத்துக்களை ஒட்டச்சுரண்ட வாய்ப்பளித்தது. சான்றாக டாடா, இந்திய நிலக்கரி வயல்களை அபகரித்து இந்தோனசிய டாடாவிற்கு விற்று மீண்டும் இந்தோனசியா டாடா, இந்தியாவிற்கு அதிக விலைக்கு விற்றது. இந்தியர்களின் உடமை இந்தியர்களுக்கே பெரும் விலையில் விற்கும் அளவிற்கு 1991 சீர்திருத்தம் தரகு வர்க்கத்தைத் தோற்றுவித்தது. அதாவது உற்பத்தியைச் சாராத கமிசன் வர்க்கம் உருவாகியது.

மறுபுறத்தில் இந்திய ஆலைத் தொழிலாளிவர்க்கம் சின்னாபின்னமாக்கப்பட்டது. தொழிலாளிகளின் கூலியைக் குறைத்து இலாபத்தைக் பிழியும் தாராளமயக் கொள்கையின் விளைவுகள் இவ்வாறு இருந்தன.

தொழிலாளியின் நிலை

1991 தனியார்மய சீர்திருத்த கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதால், தற்பொழுது இந்தியாவின் அமைப்புசார் தொழிற்துறை தொழிலாளர்களின் (Organized manufacturing sector) சதவீதம் வெறும் 3% மட்டுமே. ஒவ்வொரு முறை பொதுத்துறை ஆலைகள் தனியார்மயமாக்கப்பட்ட பொழுது, நிரந்தரத் தொழிலாளிகள் அகற்றப்பட்டு ஒப்பந்தத் தொழிலாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

2011-2012 கணக்கின்படி, இந்தியாவின் 47.2 கோடி தொழிலாளிகளில் 92% பேர் அமைப்பு சாரா தொழிலாளிகள். இவர்களுக்கு பணிபாதுகாப்பு, குறைந்தபட்ச கூலி, மருத்துவம், காப்பீடு, வீட்டு வாடகை, சட்ட உதவி, என்று எந்த உரிமைகளும் கிடையாது. மிகச் சமீபத்தில் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.10000 ஆக நிர்ணயிப்பதை இந்திய தரகு முதலாளிவர்க்கம் தடுத்து நிறுத்தியிப்பதை நீங்கள் வாசித்திருப்பீர்கள். நாட்டின் அறுதிப் பெரும்பான்மையான மக்களை அமைப்பு சாரா தொழிற்துறைக்குள் அடக்கினால் 1991 தனியார்மய சீர்திருத்தம் என்பது எத்துணை பெரிய உழைப்புச் சுரண்டல் என்பது தெரியவரும்.

மற்றபடி 3% அமைப்புசார் தொழிற்துறைத் தொழிலாளர்களின் நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்வோம். மனாலி சக்ரபர்த்தியின் கட்டுரையின் படி, 1980இல் அமைப்புசார் தொழிலாளிகளின் கூலிக்கும் முதலாளிகளின் இலாபத்திற்கும் இடையே இருந்த விகிதம் 2.73 என்ற அளவில் இருந்து பத்து மடங்கு குறைந்து 2012இல் கூலி/இலாப விகிதம் 0.25 ஆக உள்ளது. அதாவது ஒரு ஆலை, தொழிலாளர்களுக்கு 5 கோடி சம்பளம் வழங்கி 2 கோடி இலாபம் அடைந்தால் கூலி/இலாப விகிதம் 2.5 ஆகும். 1991 தனியார்மய சீர்திருத்தம் 2012ஆம் ஆண்டு கூலி/இலாப விகிதத்தை 0.25 என்று காட்டுகிறது என்றால் வெறும் 50 இலட்சம் கூலி கொடுத்து 2 கோடி இலாபம் அடைந்திருக்கிறது என்றாகிறது. இது எப்படி சாத்தியம்?

  • மாபெரும் ஆட்குறைப்பு செய்வது (Mass Layoff),
  • நாட்டின் தொழிற்பட்டாளத்தை உதிரி பாட்டாளிகளாக்கி கொடூர உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்குவது,
  • கூலியைக் குறைப்பது,
  • வேலை நேரத்தை அதிகரிப்பது,

ஆகியவற்றின் மூலமாக கூலி/இலாப விகிதம் பத்து மடங்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

எஸ். சக்ரபர்த்தி எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் எழுதிய கட்டுரை, கூலி உயர்வின் தன்மையை விரிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது. 1981-82லிருந்து 2011-2012 வரை உண்மை கூலி உயர்வு (Real Wage Increase) வருடத்திற்கு 0.82% ஆக இருக்கிறது. அதே சமயம் ஒவ்வொரு வருடமும் தொழிலாளர்கள் பெறும் கூலி அல்லாத பணிப்பலன்கள் [Nonwage Benefits] (காப்பீடு, வீட்டு வாடகை, மருத்துவம் போன்றவை) 0.18% என்ற விகிதத்தில் குறைந்து கொண்டே வருகிறது. ஆக உண்மை கூலி உயர்வு வருடத்திற்கு 0.69% ஆக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் தனிநபர் வாங்கும் திறன் அல்லது சராசரி தனிநபர் வருவாய் ஒவ்வொரு வருடமும் 3.6% சதவீதம் அதிகரித்து வருகிறது.

சராசரி தனிநபர் வருவாய் (Per capita income) என்பது ஒவ்வொருவரும் பெறும் சராசரி வருவாய் என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி (ஜிடிபி) மதிப்பை அந்நாட்டின் மொத்த மக்கட் தொகையால் வகுத்தால் கிடைக்கும் தொகைதான் தனிநபர் வருவாய் அல்லது வாங்கும் திறன். ஒரு வருடத்திற்கு 140.78 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பு உள்ள பொருளை உற்பத்தி செய்திருப்பதால் அதைவாங்கும் 140 கோடி மக்களது ஒவ்வொரு கையிலும் குறைந்தது வருடத்திற்கு ஒரு இலட்சமாவது இருக்க வேண்டும் என்பது இதன் கணக்கு!

இப்பொழுது அமைப்புசார் தொழிற்துறைத் தொழிலாளர்களின் கூலி உயர்வு ஆண்டுக்கு 0.69% என்று இருந்து சராசரி தனிநபர் வருவாய் ஆண்டுக்கு 3.6% என்ற அளவில் வளர்ந்தால் ஆலைத் தொழிலாளியின் நிலைமை என்னவாக இருக்கும்? எஸ். சக்ரபர்த்தியின் தரவுகளின்படி 1980களில், ஓர் ஆலைத் தொழிலாளி, தனிநபர் சராசரி வருவாயை விட நான்கு மடங்கு கூலி பெற்றிருந்தார். 2012-2013 கணக்கெடுப்பின் படி, இந்த நான்கு மடங்கு விகிதம் 1.7 ஆக குறைந்திருக்கிறது. 80களின் வாழ்நிலைமை 2013-இல் 2.3% அளவிற்கு குறைந்திருக்கிறது. அதாவது 1.7 விகிதத்தை 1 இலட்சம் எனும் தனிநபர் வருவாயோடு பெருக்கினால் ஓர் ஆலைத் தொழிலாளி வருடம் ஒன்றிற்கு 1.7 இலட்சம் கூலி பெறுகிறார். அதாவது மாதம் ஒன்றிற்கு பெறும் கூலி 14167 ரூபாய்.

ஆனால் இதே ஓர் ஆலைத் தொழிலாளி உருவாக்கும் பொருட்களின் மதிப்பு 2012-2013 கணக்கின் படி, தான் வாங்கும் கூலியை விட 15.5 மடங்கு அதிகமாகும். இதுதான் ஆலைத் தொழிலாளியின் இன்றைய நிலைமையும் மொத்த ஜி.டி.பியில் ஆலைத் தொழிலாளி வகிக்கும் பாத்திரமும்!

1991 சீர்திருத்தம்-சேவைத் துறையின் நிலைமை

பொருளாதாரம் என்ற வகையில் விவசாயமும், உற்பத்தித் துறையும் மொத்த ஜி.டி.பியில் சொற்ப அளவிலான பங்கையே பெற்றிருக்கும் பொழுது, சேவைத்துறைகளின் பங்கு 64.1 சதவீதமாக இருக்கிறது. 1950களிலிருந்து தற்பொழுதுவரை நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது என்பதை கீழ்க்கண்டபடம் காட்டுகிறது.

சேவைத் துறை

சேவைத்துறை என்பது அடிப்படையில் உழைத்துப் பிழைக்காத சிறு கும்பல் நாட்டுமக்களை கமிசன், கடுவட்டி, கருப்புப் பணம், கட்டப்பஞ்சாயத்து, அதீத நுகர்வு, ஊழல் மூலம் சுரண்டிக் கொழுக்கும் பல்வேறு துறைகளை உள்ளடக்கியிருக்கிறது. அவற்றுள் சில வர்த்தகம், நட்சத்திர விடுதிகள், மருத்துவம், கல்வி, போக்குவரத்து, சேமிப்பு, தொலை தொடர்பு, நிதி நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தக சேவை, சமூக, தனிநபர் சேவைகள், கட்டுமானம் என்று பரந்து விரிந்துள்ளது.

சேவைத்துறைக்குள் குதித்து பலன் பெற்ற உழைப்பாளிகளுள் பச்சமுத்து, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, பாபா ராம்தேவ், அதானி, அம்பானி, டாடா பிர்லா, கல்வி வள்ளல்கள், அரசு அதிகார வர்க்கம், இராணுவத் தளபதிகள், பார்ப்பன மடங்கள், ஆதினங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் இதில் அடக்கம். மொத்த ஜி.டி.பியில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்த தரகு முதலாளிக்கூட்டமே. இது எத்துணை சதவீதம் என்பதை அடுத்து பார்க்கும் முன் சேவைத்துறையில் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.

மென்பொருள் பணியாளர்கள்-வெளுப்பு சட்டைத் தொழிலாளிகள்

மென்பொருள் பணியாளர்களின் வாழ்க்கை 1991 சீர்திருத்தால் இலட்சங்களில் சம்பளம், புது வீடு, கார் லோன் என்று புது நடுத்தர வர்க்கமாக உருவாகியுள்ளது எனினும் ‘சாயந்திரம் புதுசு சாயம் போனா பழசு’ என்ற கதையாக மென்பொருள் பணியாளர்கள் இன்றைக்கு வெளுப்பு சட்டைத் தொழிலாளிகள் (White collar Workers) அல்லது வெளுப்பு சட்டை அடிமைகள் (White collar Slaves) என்றே அழைக்கப்படுகிறார்கள்.

மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் வித்தியாசம் எதுவுமின்றி குறைந்த பட்ச பணிபாதுகாப்புமின்றி ஒட்டச் சுரண்டப்படும் வெளுப்பு சட்டைத் தொழிலாளிகள் கால் ஊன்ற ஓர் இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். தங்களுக்கு இலாபம் குறைந்தால் மோடியை குந்த வைத்து அமெரிக்காவுடன் நாஸ்காமால் பஞ்சாயத்து பேச முடிகிற பொழுது, தங்களுடைய வேலை பறிபோவதையும், உழைப்புச் சுரண்டப்படுவதையும் எதிர்க்க துணியாமல் வெளுப்பு சட்டை தொழிலாளிகள் கழுத்தில் கயிறு மாட்டி தொங்குகிற அளவிற்கு தைரியமற்ற கோழைகளாக சமூகத்தில் அன்னியமாகிப் போயிருக்கின்றனர்.

யார் யாருக்கு எவ்வளவு கிடைத்தது?

விவசாயியாக, ஆலைத்தொழிலாளியாக, ஒப்பந்த தொழிலாளியாக, சேவைத்துறையில் வெளுப்புச் சட்டை தொழிலாளியாக இருப்பவர்களுக்கு நாட்டு உற்பத்தியில் பெரிதான எந்த பங்கும் போய்ச் சேரவில்லை என்பதை மேலே பார்த்தோம். அப்படியானால் 1991 சீர்திருத்தால் பலனடைந்தவர்கள் யார்?

ஒவ்வொருவரிடமும் உள்ள வருவாயைக் கணக்கிட்டு இந்தியாவில் சொத்துள்ளவர்களை 10 படிநிலைகளாக பிரித்தால் நமக்கு கீழ்க்கண்ட வரைபடம் கிடைக்கிறது.

சொத்து கையிருப்பு விகிதம்

முதல் படி நிலையில் உயர் 10% சதவீத அடுக்கில் வருபவர்களிடம் (அதாவது 90%-100%) மட்டுமே நாட்டின் 74% சொத்து இருக்கிறது. 80-90% படிநிலையில் இருப்பவர்களிடம் 9.4% சொத்தும், 70%-80% படிநிலையில் இருப்பவர்களிடம் 5.7% சொத்தும் இதர வர்க்கங்களிடம் 10.9% சொத்தும் இருக்கின்றன. இதில் இதர வர்க்கத்தினரை மேலும் 7 படிநிலையாக பிரித்தால் கீழ் மட்ட படிநிலையில் இருப்பவர்களிடம் உள்ள சொத்துக் கையிருப்பு வெறும் 0.2% மட்டுமே. இந்த கீழ்மட்ட படிநிலையில் தான் விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அடங்கி இருக்கிறார்கள்.

மாறாக உயர் 10% பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த பதினைந்து ஆண்டுகளில் கீழ்க்கண்டவாறு அதிகரித்திருக்கிறது.

பணக்காரர்களின் சொத்து அதிகரிப்பு விகிதம்

2000த்தில் உயர் 10% பணக்காரர்களிடம் இருந்த சொத்து மதிப்பு இந்தியாவின் சொத்து மதிப்பில் 65.9% ஆக இருந்து 2014 ஆம் ஆண்டு 74% ஆக அதிகரித்திருக்கிறது. உலக பெருமந்தம் தொடங்கிய 2008வது ஆண்டிலும் கூட இவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்ததேயன்றி குறையவில்லை. ஆனால் இதே 2008 பெருமந்தத்தால் வேலையிழந்து நலிவுற்று இக்கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் அனேகம் பேர் இங்கு இருப்பீர்கள்.

1991 சீர்திருத்தம்: 1% பணக்காரன்

சொத்துக் கையிருப்பு சதவீதத்தை மேலும் பகுத்து புரிந்து கொள்வதற்காக உயர் படிநிலையான 90%-100% இருப்பவர்களுள் 1% சதவீதம் பேரிடம் மட்டுமே உள்ள சொத்து மதிப்பை கணக்கில் எடுத்துகொள்வோம். இவர்கள் நாட்டின் அதி உயர் பணக்காரர்கள் ஆவர். இந்திய நாட்டின் 1% பணக்காரர்களிடமும், உலக அளவில் 1% பணக்காரர்களிடமும் கடந்த 14 வருடங்களுள் சேர்ந்த சொத்து மதிப்பு கீழ்க்கண்டவாறு உள்ளது.

இந்தியப் பணக்காரனும் உலகப் பணக்காரனும்

 

2000 ஆம் ஆண்டில் 1% உயர் பணக்காரர்களிடம் இருந்த சொத்து மதிப்பு இந்தியாவின் மொத்த சொத்தில் 36.8% ஆக இருந்து 2014 ஆம் ஆண்டு 49% ஆக அதிகரித்திருக்கிறது. இதுவே உலக அளவில் 2000ஆம் ஆண்டில் 1% உயர் உலக பணக்காரர்களிடம் இருந்த சொத்து மதிப்பு உலகத்தின் ஒட்டுமொத்த சொத்தில் 48.7% ஆக இருந்து 2014 ஆம் ஆண்டு 48.2% ஆக இருக்கிறது. மூன்றாம் உலகநாடுகளில் புகுத்தப்பட்ட தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள், இந்தியாவையும் உலகையும் மிக மிக சொற்பமானவர்களின் கைகளில் கொண்டு போய் சேர்த்திருக்கிறது.

இதில் உலகின் ஒட்டுமொத்த உயர் 1% சதவீத பணக்காரர்களுள் அமெரிக்காவில் மட்டும் 38.33% பேர் இருக்கிறார்கள். இதே சீனாவில் 3.36% பேரும் இந்தியாவில் 0.8% பேர் மட்டுமே 1% சதவீத பணக்காரர்களாக இருக்கிறார்கள். அப்படியானால் இறுதி அம்சமாக இந்தியாவின் 1991 தனியார்மய சீர்திருத்தம் பன்னாட்டு கார்ப்பரேட் கும்பலுக்கு எவ்வளவு தோதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

உயர் அடுக்கு பணக்காரர்கள்

1991 சீர்திருத்தம்: இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு

1991 சீர்திருத்தத்தில் தாராளமயம் என்பது இந்தியாவில்

  • குறைந்த கூலிக்கு ஆட்கள்,
  • சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் தண்ணீர் மின்சாரம் போன்ற சலுகை,
  • பொது நலத்திட்டங்கள் அனைத்திலும் தனியாரை அனுமதிப்பது,
  • பல்வேறு வரிகள் இரத்து,
  • விவசாயிகளிடமிருந்து நிலம் அபகரிப்பு,
  • பன்னாட்டு மருந்துகம்பெனிகளுக்கு இந்திய மக்கள் சோதனை எலிகளாக இருத்தல்,
  • கருப்பு பணத்தை பதுக்குவதற்கு ஏற்ற ரிசர்வ் வங்கியின் கொள்கை,
  • வரியில்லா சொர்க்கங்களில் முதலீடு அனுமதி மற்றும் இரட்டை வரி விலக்கு ஒப்பந்தம் என்று இந்தியா உலக கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடப்பட்டது.

இதனால் இந்தியாவிற்குள் புகுந்த அன்னிய நேரடி முதலீட்டு வரத்து கடந்த பதினைந்து வருடங்களுள் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.

அன்னிய நேரடி முதலீடு

2000-மாவது ஆண்டு இந்தியாவிற்குள் புகுந்த அன்னிய முதலீடு கிட்டத்தட்ட 5000 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 2008 பொருளாதார குமிழி வெடிப்பிற்கு பின்பான உலக பெருமந்த காலத்தில் இந்தியாவிற்குள் உச்சபட்சமாக 41,738 மில்லியன் டாலர்கள் உள்ளே வந்திருக்கின்றன. உலகின் பிற நாடுகளில் பொருளாதாரம் சீட்டுக்கட்டாக சரிகிற பொழுது, மூலதனபாய்ச்சல் கண்டம் விட்டு கண்டம், நாடு விட்டு நாடு, ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளி என இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளை நோக்கிப் பாய்கிறது. ஏனெனில் இங்குதான் சுரண்டுவதற்கு வாய்ப்பு அதிகம். குறைவான கூலிக்கு இங்குதான் ஆட்கள் அதிகம். இங்குதான் தனக்குத்தோதான இறையாண்மையற்ற புல்லுருவி அரசுகளை நிர்ணயிப்பது எளிது.

2008 பெருமந்தத்திற்கு பிறகு, மோடி கும்பலை வைத்து தற்பொழுது மேக்-இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்டப் இந்தியா, இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை என்று அடுத்த கட்ட நகர்வை பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதன் ஒருபகுதியாக 2015-2016 நிதியாண்டில் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்கிறார்கள். இதில் இந்தியாவிற்கு சிங்கப்பூரிலிருந்து 13.69 பில்லியன் அமெரிக்க டாலர்களும், மொரிசியஸ்ஸிலிருந்து 8.35 பில்லியன் அமெரிக்க டாலர்களும் அமெரிக்காவிலிருந்து 4.19 பில்லியன் அமெரிக்க டாலர்களும் நெதர்லாந்திலிருந்து 2.64 பில்லியன் அமெரிக்க டாலர்களும் ஜப்பானிலிருந்து 2.61 பில்லியன் அமெரிக்க டாலர்களும் அன்னிய நேரடி முதலீடாக வந்திருக்கின்றன.

இதில் மொரிசியஸ், சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து நாடுகள் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் உருவாக்கிய வரியில்லா சொர்க்கங்களாகும். சான்றாக இஸ்ரோவின் ரூ. 60,000 கோடி அலைக்கற்றை ஊழலில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகள் தேவாஸ் மல்டி மீடியா கம்பெனியை மொரிசீயஸில் தான் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்தியாவின் விண்வெளித்துறை விஞ்ஞானிகள் இந்தியாவில் குடிமகனாகவும் மொரிசீயஸ் நாட்டு பன்னாட்டு முதலாளியாகவும் இருப்பதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது  1991 ஆம் ஆண்டு தனியார்மய-தாராளமய-உலகமய சீர்திருத்தமே. இதைப் புரிந்து கொள்ளாமல் இந்தியாவின் எந்த ஊழல்களையும் புரிந்துகொள்ள இயலாது!

1991-கதையை நாம் இதற்கு மேலும் நீட்டிக்கலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட விவசாயம், தொழிற்துறை உற்பத்தி, சேவைத்துறை, அன்னிய முதலீடு என எதிலுமே நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எதையும் பெறவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது அல்லவா? அப்படியானால் நமது விடிவு காலத்தின் தொடக்கத்திற்கு தேவையான முடிவுரையை இங்கு எழுதிவிடுவோம்.

தனியார்மயம் நல்லதா? கெட்டதா? என்று விவாதிக்கிறவர்களை காலம் குப்புறத்தள்ளி பலகாலம் ஆகிவிட்டது. அந்தக் காலம் காலாவதியாகிவிட்டது ! 1991 தனியார்மய தாராளமய உலகமய சீர்திருத்தம் உலக ஏகாதிபத்திய கும்பல்களுக்கானது;  தரகு முதலாளிகளுக்கானது.

தனியார்மயத்தால் பலனடைந்தேன் என்று மார்தட்டுகிறவர்கள் யார்? விவசாயி, ஆலைத்தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி போன்ற உழைக்கும் மக்களா? தரகு முதலாளி, பன்னாட்டு நிறுவனங்கள் போன்றோரா?  இந்திய உழைக்கும் மக்கள் தனியார் மயத்தால் பலனடையவில்லை என்பது மட்டுமல்ல உண்மையில் அழிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த அழிவில்தான் இந்தியாவின் புதிய பணக்காரர்கள் தமது டாம்பீகத்தை காட்டுகிறார்கள். ஒரு விவசாயி – தொழிலாளியின் அழிவை அவர் செல்பேசியில் பாட்டு கேட்டுக் கொண்டே இறக்கிறாரே என்று நீரோக்கள் வியக்கலாம். நீங்கள்?

– இளங்கோ

1991 சீர்திருத்தம் – வறுமையின் நிலை என்ன ?முதல் பாகம்

( செய்தி ஆதாரங்கள் )

  1. நல்ல கட்டுரை (வழக்கமான தொனியையும், வார்த்தைகளையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால்). Let me play devil’s advocate.

    — உங்கள் சித்தாந்த prism மூலமாகவே அனைத்தையும் பார்க்கிறீர்கள். அதன் அடிப்படடையில் அனைவருக்கும் சமமான பங்கு என்பதையே பிரதானமாய் முன்னிறுத்துகிறீர்கள். இது சரியா?

    — என் பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறதா என்பதை ஆராய என்னளவில் ஆரம்பத்தில் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்று தானே பார்க்க வேண்டும்? பக்கத்துக்கு வீட்டு பணக்காரனின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்ப்பது சரியா? 1% பணக்காரனின் சொத்து எவ்வளவாவது இருந்து விட்டுப் போகட்டும். என் நிலை உயர்ந்திருக்கிறதா?

    — மற்றவரோடு ஒப்பீடு இல்லாமல் ஒருவரின் 1991 நிலை, தற்போதைய நிலை என்பதை எப்படி ஒப்பிடுவது? டெண்டுல்கர் கலோரி கணக்கு சொல்கிறார். நீங்கள் எதை பரிந்துரைக்கிறீர்கள்?

    — ஒரு துறை வளர்ந்திருக்கிறதா என்பதை ஒட்டுமொத்த உற்பத்தியில் அதன் பங்கு என்ன என்பதைக் கொண்டு அளவிடுவது சரியா? பீர்பால் பெரிய கோடு கதை போல, வேறொரு துறை அதிகமாக வளர்ந்தால் மற்ற துறைகளின் பங்கு குறையத்தானே செய்யும்?

    – கட்டுரையில் குறிப்பிட்டது போல அப்படி வளர்ந்த துறை சேவைத்துறை. இதை விரிவாக அலசாமல் “சேவைத்துறை என்பது அடிப்படையில் உழைத்துப் பிழைக்காத சிறு கும்பல் ….” என சுருக்கி விட்டீர்கள்.

    – “1980இல் அமைப்புசார் தொழிலாளிகளின் கூலிக்கும் முதலாளிகளின் இலாபத்திற்கும் இடையே இருந்த விகிதம் 2.73 என்ற அளவில் இருந்து பத்து மடங்கு குறைந்து 2012இல் கூலி/இலாப விகிதம் 0.25 ஆக உள்ளது”. இதற்கு காரணம் இயந்திரமயமாக்கலா? சிறு நிறுவனங்களாக இல்லாமல், பெரிய நிறுவனங்களாக இருப்பதால் இயல்பாக கிடைக்கும் செலவு குறைப்பா?

    — “மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் வித்தியாசம் எதுவுமின்றி குறைந்த பட்ச பணிபாதுகாப்புமின்றி ஒட்டச் சுரண்டப்படும் வெளுப்பு சட்டைத் தொழிலாளிகள் கால் ஊன்ற ஓர் இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.” இந்தக் கருத்தில் எனக்கு ஏற்பில்லை. இது தனியாக ஆராயப்பட வேண்டிய விஷயம். கட்டுரை செய்வது போல ஒரு பத்தியில் கடந்துவிட முடியாது..

    —————————-

    – இந்தியாவில் விவசாயதின் கீழ் உள்ள மொத்த நிலத்தின் பரப்பளவு எவ்வளவு? எத்தனை பேர் விவயசாத்தை தொழிலாக கொண்டுள்ளனர்? மொத்த நிலத்தை இவர்களுக்கு சமமாக பிரித்துக் கொடுத்தால் ஆளுக்கு எவ்வளவு கிடைக்கும்? அதில் எத்தனை கிலோ அரிசி ஆண்டுக்கு விளையும்? இது தொடர்பாக இணையத்தில் துல்லிய பதில் எனக்கு கிடைக்கவில்லை. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. பகிர்ந்துகொள்ளுங்கள்.

    —————————-

    — நீங்கள் பல சர்வேக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளீர்கள். என் ஆட்டு மூளைக்கு தோன்றிய சர்வே ஒன்றினை பரிந்துரைக்கிறேன். 1975 வாக்கில் பிறந்தவர்களை எடுத்துக்கொள்வோம். ஒரே கேள்வி: “உங்கள் சிறு வயதில் கிடைத்த பொருளாதார வசதிகளோடு ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது?”

    —————————-

    – “இந்தியாவில் தற்கொலை செய்தவர்களில் விவசாயிகளின் விகிதம் மட்டும் 47% ஆகும்”. இந்தியாவில் விவசாயிகளின் சதவீதம் என்ன?

    – “ஒவ்வொரு வருடமும் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் மக்கட் தொகை மட்டும் 10 இலட்சம். இதில் 40% பழங்குடியினர், 40% தலித்துகள், 20% கிராமப்புற ஏழைகள்”. ஏதாவது அச்சுப் பிழையா? வேறு யாரும் வெளியேறுவது இல்லை என்கிறீர்களா?

  2. இந்தியாவில் விவசாய தொழில் ஜாதி அடிமைதனத்தை அடித்தளமாக கொண்டு கட்டி அமைக்கப்பட்ட ஒரு தொழில் மையம் .

    வேறு வேலை வாய்ப்பு இல்லாமல் , அடிமை சங்கிலியை உடைக்க முடியாமல் துன்பப்பட்டவர்கள் ஏராளம்.

    //1951-52இல் மொத்த உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு 51.45% ஆகும். 1991 சீர்திருத்தம் புகுத்தப்படும் பொழுது வேளாண்மையின் பங்கு 28.54% ஆக குறைந்து, கடந்த 25 ஆண்டுகளில் வேளாண்மையின் பங்கு உருத்தெரியாமல் 15.4% ஆக குறைந்திருக்கிறது. 1991 சீர்திருத்தம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அடித்து ஒடித்திருக்கிறது.//

    மேற்கண்ட வரிகளை படிக்கும் போது ஏதோ விவசாயத்திற்கு பேராபத்து வந்து விட்டதோ என்பது போன்ற மாய தோற்றம் ஏற்படுகிறது .

    1951-52 இல் நாட்டின் மொத வருவாயாக நூறு ரூபாயில் 52 ரூபாய் விவசாயத்தில் வந்த வருமானம் . மற்றது சைக்கிள் கடை , அரசு ஊழியர் ,டெய்லர் வேலை மூலம் வந்த வருவாய் 48 ரூபாய்

    இப்பொழுது 2015 இல் நாட்டின்மொத்த வருவாய் 350 ரூபாய் . விவசாயத்தின் மூலம் வருவது 52 ரூபாய் , சாப்ட் வார், கார் ஏற்றுமதி, மற்ற உற்பத்தி மூலம் வருவாய் 300 ரூபாய்

    இதை விழுக்காட்டின் வழியாக சொல்லும் பொழுது 1952 ல 50% /ஜிடிபி இப்போ வெறும் 2016 ல 15%/gdp என்கின்ற ஒப்பீடு

    எப்படி பொருளாதார சீர்திருத்தம் ஒடுக்கப்பட்டவர்களின் அடிமை சங்கிலியை உடைத்துள்ளது தெரிகிறதா ?

    • //எப்படி பொருளாதார சீர்திருத்தம் ஒடுக்கப்பட்டவர்களின் அடிமை சங்கிலியை உடைத்துள்ளது தெரிகிறதா?//

      இதுதான் ஆளும்வர்க்க அரசியலின் அடிமைத்தனம் வெளிப்படும் இடம். இதுல ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காகப் பேசுவதுபோல பாசாங்கு வேற.

      விவசாயத்தையும் இன்ன பிற வாழ்வுரிமையையும் ஒழித்துக்கட்டினால்தான் அவர்களை குறை கூலிக்கு ஒட்டச் சுரண்ட முடியும் என்று அதை திட்டமிட்டே அழித்தார்கள். காவிரிப்பிரச்சினை தலைவிரித்தாடும் இன்றைய சூழலில்கூட இப்படி நடிக்க முடிவது ஆச்சரியம்தான்.

      //வேறு வேலை வாய்ப்பு இல்லாமல், அடிமை சங்கிலியை உடைக்க முடியாமல் துன்பப்பட்டவர்கள் ஏராளம்.//

      அடிமைக்கு சோறாவது போட்டான் அவன். அதுக்கும் துப்பில்லாமல் அவர்களை பட்டினியில் தள்ளியிருக்கிறார்கள் அயோக்கியர்கள்.

      //மேற்கண்ட வரிகளை படிக்கும் போது ஏதோ விவசாயத்திற்கு பேராபத்து வந்து விட்டதோ என்பது போன்ற மாய தோற்றம் ஏற்படுகிறது.//

      மாயத்தோற்றம்தான். விவசாயம் செழித்தோங்குகிறது என்கிற மாயத்தோற்றத்தைத்தான் சகிக்க முடியவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க