Wednesday, January 15, 2025
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்DYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் ! - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு கண்டனம் !

DYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் ! – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் !

-

NDLF Letter head

கண்டன அறிக்கை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான போலிசின் கொலைவெறித்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்!

31.12.2016 அன்று மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். போராடிய ஒரு பெண்ணை பள்ளிக்கரணை காவல் நிலைய எஸ்.ஐ வக்கிரத்துடன் நடத்தியதைக் கண்டித்து போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கடத்திக் கொண்டு போய் போலீசு வண்டியிலேயே வைத்து துப்பாக்கியால் கடுமையாக போலீசு தாக்கியது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி மண்டையை உடைத்தது, 14 பேரை சிறையில் அடைத்துவிட்டனர். மக்களை பாதுகாப்பதாகச் சொல்லும் போலீசே பொறுக்கித்தனமானமாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவதும் அதை எதிர்த்துக் கேட்டால் தாக்குவதும் சிறையில் அடைப்பதும் எந்த சட்டத்தில் இருக்கிறது?

மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து 50 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் மக்கள் ” 50 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் இல்லையேல் என்னை தூக்கிலிடுங்கள் ” என்று மோடி சவடால் அடித்தார் .

மக்கள் கையிலிருந்த பணத்தை வங்கியில் போட்டார்கள். போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை . ஆலைகளும், நிறுவனங்களும் ஊழியர்கட்கு சம்பளத்தை பணமாக வழங்கவில்லை.

வியாபாரிகளுக்கும் பணம் கையில் இல்லை. விசைத்தறிகள் நூல் வாங்கவும், தொழிலாளர்களுக்கு கூலி தரவும் பணம் இல்லாததால் முடங்கிவிட்டது. மக்கள் மணிக்கணக்காக ATM முன்பு நின்றும் பயனில்லை , வங்கி கணக்கு உள்ளவர்கட்கே இந்த நிலைமை, வங்கி கணக்கு இல்லாதவர்கள் நிலை மேலும் வேதனைக்குரியது கல்யாணம், கருமாதி எதற்கும் செலவு செய்ய பணம் இல்லை.

கோடிக்கணக்கான மக்கள் தங்கள் கையிலிருந்த பணத்தை – சுமார் 15 லட்சம் கோடியை வங்கியில் போட்டுவிட்டனர். திவாலாகிப்போன வங்கிகளுக்கு இந்த பணம் வந்துவிட்டது. இந்த பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தரவே , மோடி இந்த திட்டத்தை அறிவித்தார் . கடன் வாங்கி திருப்பித்தராத முதலாளிகளுக்கு வாராக்கடன் என முத்திரை குத்தி தள்ளுபடி செய்தது மோடி அரசு. அவர்களுக்கு மீண்டும் கடன் கொடுக்கவே இந்த திட்டம். உள்நாட்டு/அயல்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகட்கும், தரகு முதலாளிகட்கும் தேவையான பணத்தை வழங்கவே , மக்கள் கையிலும், சுருக்குப்பையிலும் உள்ளதை பிடுங்கிக்கொண்டது மோடி அரசின் இந்த திட்டம். உணவு, உடை, தேனிர் என எந்த பொருள் வாங்கவும் பணம் இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள் . ATM வரிசையில் நின்று 200 பேர் செத்துப்போனார்கள். எனவே மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராடுகிறார்கள்.

சட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.

நன்றி , வணக்கம்.

தங்கள் உண்மையுள்ள,
சுப.தங்கராசு
பொது செயலாளர்,
பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.

___________________________________________________________________________________________

 

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

தமிழ்நாடு. நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை -95, 9445112675

 

தேதி : 3.1.2016

வங்கியில்போட்ட பணத்தை எடுக்காதே என்று
மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது மோடி அரசு!
எதிர்த்துப் போராடுபவர்களின் மண்டையைப் பிளக்கிறது தமிழக அரசு!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான போலீசின் கொலைவெறித்தாக்குதலை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது!

ரூ.500, 1000 செல்லாது என்ற மோடியின் நடவடிக்கையை எதிர்த்து கடந்த டிசம்பர் 31 ந்தேதி சென்னை மேடவாக்கம், மாம்பாக்கம் சாலை சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 14 பேர் வங்கி ஏடிஎம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அங்கு வந்த பள்ளிக்கரனை உதவி ஆய்வாளர் ரவி போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனைக் கண்டித்த மற்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி கைது செய்துகொண்டு செல்லும்போது போதும் போலீசு வாகனத்தில் வைத்து லத்தியாலும், துப்பாக்கியின் அடிப்பக்கத்தாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

DYFI Protestஇவர்களை அடைத்து வைத்திருந்த மண்டபத்தின் அருகில் கூடி பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் நடத்தியது பற்றி கேள்வி எழுப்பிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சி.பி.எம் கட்சியினர் மீது பள்ளிக்கரனை ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான போலீசார் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் சிலரின் மண்டை உடைந்துள்ளது, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 14 பேரை சிறையிலும் அடைத்துள்ளது போலீசு. மக்களின் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் மீதான போலீசின் இந்த கொலைவெறித் தாக்குதலை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

போராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளிக்கரனை போலீசு உதவி ஆய்வாளர் ரவி, தாக்குதலில் ஈடுபட்ட ஈடுபட்ட ஆய்வாளர் நடராஜ் உள்ளிட்ட போலீசாரை பணிநீக்கம் செய்து – கைது செய்ய வேண்டும் எனவும் கோருகிறோம். ரூ.500, 1000 செல்லாது என அறிவித்து 50 நாட்கள் கடந்துவிட்டது. கருப்புப்பண ஒழிப்பு நாடமாடிய மோடியின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.

“50 நாட்களில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் இல்லையென்றால் என்னை நடுத்தெருவில் வைத்து தூக்கில் போடுங்கள்’’ என்று வாய்ச்சவடால் அடித்த மோடி, இப்போது அறிவிப்புகளை மட்டும் மாற்றி பித்தலாட்டம் செய்கிறார். தங்கள் சொந்த பணத்தை எடுக்க முடியாமல் வங்கி, ஏடிஎம் வாசல்களில் காத்துக்கிடக்கிறார்கள் மக்கள். மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் அமைப்புச்சாரா தொழில்கள் அனைத்தும் நலிவடைந்துவிட்டது. சிறுதொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறது.

பலகோடித் தொழிலாளர்கள் வாழ்வை இழந்து நிற்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் பல லட்சம்கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த 50 நாளில் பெருவாரியான உழைக்கும் மக்கள் வாழ்வை நாசமாக்கி தனியார் வங்கிகளையும், பணமற்ற பரிவர்த்தனை செய்யும் பே.டி.எம் வாலட்டுகள் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளையும் மேலும் மேலும் கொழுக்க வைப்பதைத்தான் செய்துள்ளது மோடி அரசு. மோடியின் கருப்புப்பண ஒழிப்பு நாடகமும் முடிவுக்கு வந்துவிட்டது. 2000 ரூபாய்க்காக வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் காத்துக்கிடந்து செத்ததுதான் மிச்சம் என்பதை கண்கூடாக பார்க்கும் மக்கள் மோடியை காறி உமிழ்கிறார்கள்.

உழைத்து சேமித்த மக்கள் பணத்தை கொள்ளையிடுவதுதான் மோடியின் நோக்கம் என்பதை உணர்ந்து நாடு முழுவதும் மக்கள் போராடுகிறார்கள். தமிழகத்தில், எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகள் சேர்ந்து 51 வது நாள் ’’50 நாள் அவகாசம் முடிந்தது, வங்கிகளை முற்றுகையிடுவோம், போட்ட பணத்தை எடுப்போம்’’ என்று அண்ணாசாலையில் அரசு கருவூல வங்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதுபோல் அமைப்புகளும், எதிர்க் கட்சிகளும் பல வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இப்பிரச்சனையை தீர்க்க முடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ள மோடி அரசும், மாநில அரசுகளும் போலீசு குண்டாந்தடிகளை ஏவி போராடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. அந்த வழியில்தான் தமிழக அரசின் போலீசும் போராடுபவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துவது, பாலியல் துன்புறுத்தல் செய்வது என அடக்குமுறையை ஏவிவருகிறது. போலீசின் இத்தகைய அடக்குமுறைகளால், ரூ.500, 1000 என்ற மோடியின் பாசிச நடவடிக்கைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒருபோதும் தடுத்துவிட முடியாது.

த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க