Tuesday, June 28, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் வியர்வை இழையால் தறியில் நெய்ததடா உன் வாழ்க்கை !

வியர்வை இழையால் தறியில் நெய்ததடா உன் வாழ்க்கை !

-

கோவை விசைத்தறி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்நூற்றாண்டு கண்ட தறித் தொழில் தமிழகத்தின் மரபார்ந்த தொழில்களில் ஒன்று. கொங்கு மண்டலத்தின் அடையாள முகங்களில் பஞ்சு மில்களுக்கு இணையாய் சுதந்திரமான கைத்தறி அதைத் தொடர்ந்து விசைத்தறி ஆகிய தொழில்களுக்கும் முக்கிய இடமுண்டு. ஆள் மாற்றி ஆள் என 24 நான்கு மணி நேரமும் இடைவிடாமல் தறி இயங்கும். இத்தகைய கிராமங்களில் தறிச் சத்தம் கேட்டால் தான் தூக்கம் வருவோரும் “கரண்ட் இல்லையா., தறி ஓடுது..பாரு கரண்ட் இருக்கு.” என்பது போன்ற பேச்சுக்களும் சாதாரணம். இப்படி மக்கள் வாழ்வோடு ஊடும் பாவுமாய் பிணைந்த தறியும் அதன் தொழிலும் கொங்கு மண்டலத்தின் சிறப்புக்களில் ஒன்று. இத்தகைய தொழிலிலிருந்து ஒவ்வொரு கிராமமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறது. அறுபடும் ஒவ்வொரு இழையும் விசைத்தறி கூலி நெசவாளர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் துயரத்தை கூறுபவை.

உளுத்துக் கொண்டிருக்கிறது விசைத்தறி தொழில் இங்கே. பஞ்சு செயற்கை விலையேற்றம். பதுக்கல். ஆன்லைன் வர்த்தகம். வெள்ளைத் தங்கமான பஞ்சை பார்த்து கூட இராதவன் பஞ்சில் நிதி மூலதனத்தை கொட்டி அதை வியாபாரம் செய்து விட்டுப் போவான். விளைவிக்கும் விவசாயிக்கு விலைவைக்க உரிமையில்லை. வாங்கும் நெசவாளிக்கும் உரிமையில்லை. பெட்டி பெட்டியாக பணத்தை கொண்டு வந்து பணத்தை இன்னும் சில பெட்டிகள் சேர்த்து எடுத்து போகின்றவர்களுக்காகவே பெட்டி வாங்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய அரசு எந்திரம். வொயிட் காலர் கிரிமினல்களை கண்டு கொள்ளாமல் ஏ‌டி‌எம் வாசலில் போராடுபவர்களின் மண்டையை பிளக்க ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் கும்பலாய் காவல் துறை இருக்க பின்னர் கேட்கவா வேண்டும்.

ஆம் கேட்க வேண்டும். அரசியல்வாதிகளை மட்டுமல்ல இந்த அதிகாரிகளை கேள்வி கேட்க வேண்டும். இவர்கள் தப்பிக்க வழி வைத்திருக்கும் இந்த அரசு அமைப்பை கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் விடிவு காலம் பிறக்கும். நெசவாளிக்கும் விவசாயிக்கும்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு தோழர்களின் பாடல் கோவை மண்ணின் தொழிலாளர்களை பற்றி ஒன்றிருக்கிறது. உலகுக்கே ஆடை தந்த கோவையப் பாரு ! அதன் உயிர் மூச்சு அடங்குதே காரணம் யாரு ? என துவங்கும் அப்பாடலின் ஒரு சரணம் இப்படி இருக்கும்.,

தறியாலே நெய்ததடா உன்னோட வாழ்க்க….
அதில் இழையாக ஓடுதடா உன்னோட வேர்வ….!
பறிபோகுது பல்லாயிரம் கனவு நம்பிக்க…..
அந்த பன்னாட்டு கழுகை விரட்ட எடுடா துவக்க… துவக்க…!

இது போல நாம் துவக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் அதிகாரத்தை கைப்பற்றும் நாளன்றே நமக்கு விடிவு காலம்.

கொங்கு மண்டல விசைத்தறி தொழிலாளர்கள் ஜவுளி முதலாளிகள் இடையே அரசு நடுநிலை நாடகம் போட்ட பேச்சு வார்த்தை நாடக சமயத்திலும் விவசாயிகள் நெசவாளிகளுக்காகவே எனக் கூறிக் கொண்டு கருத்துக் கேட்பு நாடகத்தை மின் வாரியம் அரங்கேற்றிய போதும் முதல் ஆளாய் அம்பலப்படுத்திக் குரல் எழுப்பியது கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. அதன் தொடர்ச்சியாய் இப்போது நலிந்து வரும் விசைத்தறித் தொழிலை பாதுகாக்க தற்போது மிச்சமிருக்கும் தறித் தொழிலாளர்கள் பருண்மையாக வாழும் சோமனூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தோழர் சரவணன்
தோழர் சரவணன்

சோமனூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஆட்டோ ஸ்டாண்டின் முன்னால் மாலை சுமார் 4:30 வாக்கில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் சரவணன் தனது தலைமையுரையில், மோடி அரசு இரண்டு வருடங்களாக பதவியேற்றவுடன் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி எசமான் ஒபாமாவுக்கு படையல் வைத்தது முதல் மோடியின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார். இறுதியில் பெங்களூர் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தையும் அதே போல ஒரு போராட்டத்தை விசைத்தறி தொழிலாளர்கள் நடத்துவதே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை தர முடியும் என கூறி முடித்தார்.

தோழர் வினோத்
தோழர் வினோத்

அடுத்ததாக உரையாற்றிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் வினோத், கேஷ்லெஸ் எக்கானமி எனக் கூறிவிட்டு உண்மையிலேயே பேங்க், ஏ‌டி‌எம் என எந்த இடத்திலுமே கேஷே இல்லாமல் மக்கள் கையில் பணமே இல்லாமல் பொருளாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி என பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சாடியவர் அதன் தொடர்ச்சியாய் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் சட்டவிரோதத் தன்மையை அம்பலப்படுத்திப் பேசினார். 12 மணி நேரம் குடோனில் வேலை கூலியை வாங்கிக் கொண்டு வந்து குடும்பம் நடத்துவது என இருந்த தொழிலாளர்களை, பேங்கின் நடைமுறை பற்றிய அடிப்படை அறிவில்லாமல் இருக்கும் மக்களிடம் பேங்க் ஏ‌டி‌எம் போன்றவற்றை கொண்டு போய் சேர்க்காமல் இப்படி ஒரு நடவடிக்கையை அறிவித்து அறியாமையில் இருக்கும் மக்களை துன்பத்தில் உழல விட்டுள்ளார் மோடி என்பதை விளக்கினார்.

அடுத்து உரை நிகழ்த்திய காங்கேயம் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் வசந்தன், அனைவருக்கும் பொதுவான சட்டத்தை அரசு மதிக்காத போது நாம் மட்டும் ஏன் மதிக்க வேண்டும்..? என கேள்வி எழுப்பினார். வெனிசுலாவில் மக்கள் திருப்பி அடித்து பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முறியடித்தனர். அதே போல் விசைத்தறி தொழிலாளர்களும் திருப்பி அடிக்க வேண்டும் அப்போதுதான் நாம் ஒரு மாற்றத்தை காண முடியும் என வலியுறுத்தினார்.

அடுத்து உரையாற்றிய கரூர் தோழர் ராமசாமி, புதிய தாராளமய கொள்கையின் விளைவாய் சிறு தொழில் அனைத்தும் அழிக்கபடுவதை அதன் தொடர்ச்சியாய் பாதிப்புக்குள்ளாகும் தறித் தொழிலை காக்க வேண்டியதன் அவசியத்தையும் பேசினார்.

அடுத்து பேசிய ஈரோட்டை சேர்ந்த தோழர் புஷ்பராஜ், விவசாயத்திற்கு அடுத்த படியாய் ஆதாரமான தொழிலாக விளங்கும் தறித் தொழிலலையும் அது எப்படி நசிந்து வருகிறது என்பதையும் கூறியவர்., ஈரோட்டில் நடைபெற்ற மின்சார வாரியத்தின் நுகர்கோர் கருத்துக் கேட்பு கூட்டம் எனும் நாடகத்தையும் அதில் கலந்து கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினரும் இணைந்து மின் வாரிய அதிகாரிகளை அவர்தம் பொய்களை தோலுரித்ததை நினைவுபடுத்திப் பேசினார்.

அடுத்து பேசிய மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் சம்புகன் மோடியின் நடவடிக்கையை திரை கிழித்துப் பேசினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் வெகுண்டெழுந்த உ.பி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு சென்ற சம்பவத்தை கூறி மக்கள் போராட்டமே அனைத்துக்கும் தீர்வு என முன்வைத்தார்.

அடுத்தாக உரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் கோவை மாவட்ட பொருளாளர் தோழர் நித்தி, வெளி நாட்டு துணி இறக்குமதி பஞ்சு விலையேற்றம் போன்றவற்றின் விளைவாக நலிந்து வரும் விசைத்தறி தொழிலை தமது பிரச்சார அனுபவத்தில் கண்ட மக்களின் துயரங்களை பகிர்ந்து கொண்டார்.

  • படங்களைப் பெரிதாக பார்க்க அழுத்தவும்.

சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி,

Coolie Photographer
தொழிலாளிகளை படமெடுக்கும் போலீசு!

“நாங்கள் அனைவரும் இன்று விடுப்பு எடுத்துக் கொண்டு மனைவி குழந்தை என குடும்பத்துடன் இருப்பதை மறுத்து விசைத்தறி தொழிலை பாதுகாக்க, அதற்கான போராட்டங்களை கட்டியமைக்க இங்கு வந்துள்ளோம்.இங்கோ காவல் துறை அனைவரையும் புகைப்படம் எடுக்க ஆள் வைத்து மிரட்ட முயற்சிக்கிறது. நாங்கள் என்ன கிரிமினல்களா..? இந்த மண்ணின் மைந்தர்கள். கட்டபொம்மன் பகத்சிங் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளின் வாரிசுகள் நாங்கள்.

கோவை சோமனூர் எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்னால் பருத்தி விளைந்த மண் இது. பருத்தியை வெள்ளைத் தங்கம் என நம் முன்னோர்கள் மரியாதை கொடுத்தார்கள். பருத்தி காய்ந்து வெடித்தால் செடி சிரிக்கிறது என்பார்கள். மழை இல்லாமல் பஞ்சுக்கு விலை இல்லாமல் எல்லோரும் விசைத்தறிக்கு மாறினோம். விவசாயத்தை நினைவில் மட்டும் வைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 50 ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்களுக்கு என்ன நேர்ந்தது. இ‌எஸ்‌ஐ வசதி உண்டா ? பி‌எஃப், பணிக்கொடை எதுவும் கிடையாது. தொழிலாளர்களுக்கான சட்டப்படியான சலுகைகள் எதுவும் இதுவரை இல்லை. ஆனால் எல்லா கட்சிகளும் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஓட்டுப் போட்டு தேர்வு செய்தவர்கள் திட்டமிட்டு இந்த உரிமைகள் நமக்கு கிடைக்காமல் செய்தார்கள். முதலாளிகளுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்கள்.

புஜதொமு 2014இல் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் இதே பிரச்சினைகளுக்காக நடத்தினோம். விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்சினையில் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். நடந்திருப்பது சட்டப்படியான ஒப்பந்தம் அல்ல கட்டப்பஞ்சாயத்து என்றோம். 12/3 ஒப்பந்தம் போட சொன்னோம். அதனை விசைத்தறி சங்கத் தலைவர்கள் மறுத்தார்கள். விளைவு மீண்டும் நெருக்கடி இந்த முறை நெருக்கடி முற்றிப் போயி உள்ளது. இதனை போராடித்தான் தீர்வுக்கு கொண்டு வர முடியும். சாதுரியமாக நடந்து கொண்டால் டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் நிலைதான் தறி மாவட்டங்களிலும் ஏற்படும்.

தஞ்சையில் கடந்த டிசம்பர் முதல் இன்று வரை ஒரே மாதத்தில் 90-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்ந்த பயிரைக் கண்டு கண்ணீர் வடித்து நெஞ்சு வெடித்து வயலில் விழுந்து சாகிறார்கள்.

இதே போல் சோமனூர் பகுதி அறிவாளிகள் அது போல நடக்காது என நினைக்கலாம் ஆனால் நிலைமை அப்படி இல்லை. வெளி மாவட்ட தொழிலாளிகள் இப்போது வெளியேறி உள்ளார்கள். இதுவே அபாயமணி என எடுத்துக் கொள்ளுங்கள் ஏற்கெனவே விவசாயம் செய்ய முடியாமல் தான் விசைத்தறிக்கு மாறினோம். விசைத்தறியும் இல்லையெனில் அடுத்து எங்கு மாறுவது ? போராட்டம் தான் தீர்வு.

Vilavai Ramasamy (2)
தோழர் விளவை ராமசாமி

2007 இல் காங்கிரஸ் கவர்ன்மெண்ட் நம் தொழிலுக்கு அடிப்படையான பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து எடுத்து விட்டது. பஞ்சு இந்தியாவுக்கு அவசியம் இல்லையா…? ஏன் பி‌ஜெ‌பி சர்க்கார் காங்கிரஸ் முடிவை மாற்றி பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் இடத்தில் மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வில்லை. பஞ்சு தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் நமது தொழில் நலிவடையாது. அதே நூலின் விலையையும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் பதுக்கி வைத்து விலையேற்றுகிறான். பஞ்சில் விலை ஏறுது ஆனால் நாம் உற்பத்தி செய்யும் ஜவுளி விலை குறையுது. பின்னர் குறைந்த விலையில் வாங்கியபிறகு விளம்பரம் செய்து துணியின் விலையை ஏற்றிக் கொள்கிறான்.

நாம் உற்பத்தி செய்த துணியின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் நமக்கே வேண்டும். பஞ்சைப் பதுக்கும் முதலாளிகளை கைது செய்ய வேண்டும்.

இதற்காக நாம் விசைத்தறியில் ஓடும் நாடாவை கையில் எடுக்க வேண்டும். நாட்டை கைப்பற்ற வேண்டும் சோமனூர் வீதியில் இறங்கவேணும். கோவை ஜெயிலை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அங்கு அதிகபட்சம் 2500 பேரை அடைக்கலாம். அதன் கொள்திறனே அவ்வளவு தான். இரண்டாயிரம் பேர் முன்னரே உள்ளே இருக்கிறான். நாம் இரண்டு இலட்சம் பேர் இருக்கிறோம். நாம் ரோட்டுக்கு வந்தால் அனைத்தும் நிறைவேறும் என வீதியில் இறங்கி போராடுவோம்”, எனக் கூறி முடித்தார்.

பு.ஜ.தொ.மு கோவை மாவட்ட செயலர் தோழர் திலீப் அவர்களின் நன்றியுரையோடு ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

  • தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
    கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க