கிரிமினல் ஜெயா படத்தை உடைத்த தோழர்கள் கடலூர் சிறையில் அடைப்பு !

2
8

குற்றவாளிக்கு அரசு மரியாதையா? மெரீனாவில் இருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று! என்ற தலைப்பில் 20.2.2017 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள அ.இ.அதிமுக.-வின் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பாக  மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அப்போது எம்.எல்.ஏ.அலுவலகத்தில் இருந்த குற்றவாளி  ஜெயலலிதாவின் உருவப்படத்தை தோழர்கள் அகற்றினர். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் பாடபுத்தகத்தில் உள்ள குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படத்தின் மேல் திருவள்ளுவர் படம் ஒட்டப்பட்டது. இது பொதுமக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களும் இப்போராட்டத்தை பார்க்க திரளாக குவிய ஆரம்பித்தனர். இதைப் பார்த்த காவல்துறை இப்போராட்டத்தில் மக்களும் பங்கேற்க ஆரம்பித்தால் அது பிரச்சினையாகிவிடும் என கருதி அங்கிருந்த மக்கள் அதிகாரம் தோழர்களை உடனடியாக அப்புறப்படுத்த முயற்சி செய்தது.

அதே போல காவல்துறை மக்களை கலைக்கும் வண்ணம் யாரையும்  எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்துக்குள் நுழைய  விடாமல் தடுத்தது. பத்திரிக்கையாளர்களையும் விடவில்லை. தடையை மீறி எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளே சென்று குற்றவாளி ஜெயாவின் உருவப்படத்தை உடைத்ததால் காவல்துறை மக்கள் அதிகாரம் தோழர்கள் 70 பேரை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது. மேலும் மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, பகுதி ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், பொருளாளர் செந்தாமரைக்கந்தன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரிமாண்ட் செய்வதாக அறிவித்துள்ளது காவல்துறை. அதன் படி தோழர்கள் அனைவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு அலுவகத்தில் குற்றவாளிகளின் படத்தை அகற்றிதற்காகத்தான் இந்த தண்டனை என்றால் இந்த அரசமைப்பு பாதுகாப்பது யாரை?

பல்வேறு செய்தித் தாள்களில் வெளியான போராட்ட செய்திகள்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.


மக்கள் அதிகாரம் : பத்திரிக்கை செய்தி

PP Logo

ஜெயா படம் அகற்றம்; போலீசின் அடக்குமுறைகளுக்கு கண்டனம்!         21.02.2017

ஊழல் அதிகார முறைகேடுகள் மூலம் சொத்துக் குவிப்பு குற்றம் செய்த ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்கள், பாடப்புத்தகங்கள், விலையில்லாப் பொருட்கள், உப்பு முதல் உணவங்கள் வரை அனைத்திலும் வைத்திருப்பதை உடனடியாக அகற்றக் கோரி, மக்கள் அதிகாரம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

ஜெயா சசி கும்பலைச் சேர்ந்த எம்.எல் ஏ க்கள், சசிகலா பினாமி ஆட்சியை ஆதரித்து விட்டு தொகுதிக்கு திரும்புவதை எதிர்த்து தமிழக மக்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக விருத்தாசலம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடியதற்காக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி.ராஜூ உட்பட சுமார் 10 பேர் மீது பொதுச்சொத்தை சூறையாடியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளதைக் கண்டிக்கிறோம்.

இதேபோன்று பாடப்புத்தகங்களில் உள்ள ஜெயலலிதா படத்தின் மீது திருவள்ளுவர் படத்தை ஒட்டியதற்காக திருச்சியில் மாணவர்கள், இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர். கோவில்பட்டி, மதுரை, தருமபுரி மற்றும் பல இடங்களில் மக்கள் அதிகாரம் போராடியதற்காக அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டு கைது செய்யப்படுள்ளனர்.   இதையொட்டிய நியாயமான இந்தப்போராட்டத்துக்கு போலீசு அனுமதி மறுக்கின்றது.

பள்ளி மாணவர்களுக்கு, இளைய தலைமுறைக்கு நாம் என்ன கற்றுத்தரப் போகிறோம்? என்பது குறித்து அதிகாரவர்க்கமும் போலீசும் பதில்சொல்லியே ஆக வேண்டும். தீண்டாமை, குடி, போதைப்பழக்கம் ஆகியவை தவறென்றும் குற்றமென்றும் போதிக்கின்ற நாம் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைப் போற்றுவது சரியா? குடி குடியைக் கெடுக்கும், புகைப்பழக்கம் உடல் நலத்துக்குக்கேடு, வாய்மையே வெல்லும் என்றெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி விட்டு அதற்கு எதிராக செயல்படுவது சரியா? என்று கேள்வி எழுப்புகிறோம்.

தண்டிக்கப்பட்ட ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் படங்கள், சின்னங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும். ஜெயலலிதா சசிகலா போன்ற ஊழல் குற்றவாளிகளின் பெயரால், நடக்கும் இந்த குற்றக்கும்பலின் ஆட்சி இதனை செய்யாது. மக்கள்தான் தாமே முன்வந்து இதனைச் செய்து சமூக ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என கோருகிறோம்.

இவண்
காளியப்பன், பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

சந்தா