privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்விவசாயி பயிரை வளர்க்கவில்லை பிள்ளையை வளர்க்கிறான் !

விவசாயி பயிரை வளர்க்கவில்லை பிள்ளையை வளர்க்கிறான் !

-

டெல்டாவில மழை பெஞ்சும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்” என்றார் வேளாண் துறையைச் சேர்ந்த ஒரு இடைநிலை அதிகாரி. கடந்த சம்பா பருவத்தின் (டிசம்பர் 2015) இறுதியில் பெய்த பெருமழையால் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 1.22 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி, மகசூலுக்கு வரவேண்டிய 10 இலட்சம் டன் நெற்கதிர்கள் நாசமானதால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 1,600 கோடி ரூபாய். அந்த ஆண்டில் பெய்து கெடுத்த மழை, இந்தப் பருவத்தில் பெய்யாமல் கெடுத்துவிட்டது.

டெல்டா மாவட்டத்தில் விவசாயம் பொய்த்துப் போனதைப் பிரதிபலிக்கும் நாங்குடி கிராம வயல்கள்.

டெல்டா என்றழைக்கப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டும் இந்த ஆண்டு 3.29 இலட்சம் ஹெக்டேர் பரப்பிலும், இம்மாவட்டங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த மேட்டூர் அணை பாசனப் பகுதிகளையும் சேர்த்து 4.65 (3.29+1.36) இலட்சம் ஹெக்டேர் பரப்பிலும் சம்பா பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போயிருக்காது. ஏனென்றால், சம்பா பயிரிடும் பரப்பு குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவே, சம்பா தொகுப்புத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகளை வயலுக்குள் இறங்க வைக்கும் ஒரு கவர்ச்சித் திட்டத்தை அறிவித்தது, அ.தி.மு.க. அரசு. ஆனால், நடவு செய்யப்பட்ட மொத்தப் பரப்பில், ஒரு பத்து சதவீத பரப்பிலாவது விவசாயிகள் கண்டு முதல் எடுத்திருப்பார்களா என்றால், நிச்சயமாக இல்லை.

திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கீவளூருக்கு அருகேயுள்ள நாங்குடி கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட 300 ஏக்கரில், ஒரு பத்து ஏக்கரில் அறுவடை நடந்தால் அதிசயம் என்கிறார்கள் அக்கிராம மக்கள். அந்தப் பகுதி விவசாயம் முழுவதும் வடகிழக்குப் பருவ மழையையும், வெண்ணாற்று வாய்க்காலில் வரும் நீரையும் நம்பித்தான் நடைபெறுகிறது. நிலத்தடி நீர் உப்புத் தன்மை கொண்டதாக இருப்பதால், அப்பகுதியில் பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறுகள் கிடையாது.

அதே நெடுஞ்சாலையில் கீவளூருக்கு முன்பாக, வடக்குத் திசையில் ஐந்தாறு கிலோமீட்டர் உள்ளே சென்றால் அமைந்திருக்கும் வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த நேரு நகர் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு ஓடம்போக்கி ஆறையும், அதிலிருந்து பிரியும் வாய்க்காலையும் ஒட்டி அமைந்திருக்கிறது. ஆறும் வாய்க்காலும் வறண்டு போய்க்கிடப்பதால், அந்தப் பகுதியில் நடவு நட்ட வயல்களில் எல்லாம் ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன.

‘‘ஒரேயொரு மழை பெய்தா போதும், இந்தப் பயிரைக் காப்பாற்றிவிடுவேன்’‘ என நம்பிக்கையைச் சுமந்து நிற்கும் கீவளூர்−நேரு நகரைச் சேர்ந்த வல்லரசன்.

“ஒரு மழை பெய்தால், ஒன்றரை ஏக்கர் குத்தகை நிலத்தில் வளர்ந்து நிற்கும் பயிரை ஓரளவிற்காவது காப்பாற்றி விடுவேன்” என்றார் நேரு நகரைச் சேர்ந்த வல்லரசன் என்ற இளைஞர். நான் அவரைச் சந்தித்தது ஜனவரி 15-இல்; ஜனவரி 28-இல்தான் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறினார், விவசாயத் துறை அதிகாரி. வல்லரசனின் நம்பிக்கையும், அவரது பயிரும் என்னவாயிருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை.

பத்து ஏக்கர் குத்தகை நிலத்தில் மூன்று இலட்ச ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்த நேரு நகர் வல்லரசனுக்கு, அடுத்த மழையை நம்பியிருக்கும் பயிர்கள் சாவியாகாமலிருந்தால் 50,000 ரூபாய் தேறும்; மழை இல்லையென்றால், அந்தச் சொற்பத் தொகையும்கூடக் கிடைக்காது. வயலில் போட்ட முதலீடு மொத்தமும் நட்டம்தான்.

2.5 ஹெக்டேர் குத்தகை நிலத்தில் மூன்று இலட்ச ரூபாய் செலவு செய்து நட்ட பயிர்கள் காய்ந்து போனதாகக் கூறுகிறார், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குழிமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி. இந்த நட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் மனமுடைந்து பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டான் ஆசைத்தம்பியின் மகன் அரவிந்த்.

அகால மரணமடைந்த அரவிந்தின் வயது இருபத்தைந்து. சம்சாரி வாழ்வைத் தொடங்க வேண்டிய வயதில், அவன் வாழ்வு முடிந்து போனது. தகவல் தொழில்நுட்ப அறிவியலில் பட்டயப் படிப்பு முடித்திருந்த அரவிந்த், விவசாயத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக வேறு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால், அவன் விரும்பிய தொழில் அவனை வாழவைக்கவில்லை.

இப்படி ஒவ்வொரு குறு, சிறு விவசாயியின் தலையிலும் இருபத்தைந்தாயிரம் தொடங்கி இரண்டு இலட்சம், மூன்று இலட்சமெனக் கடன் சுமை இந்த ஆண்டில் மட்டும் ஏறியிருக்கிறது. நாங்குடி கிராமத்தில் 100 ஏக்கரில் பயிர் செய்யும் ஜீவானந்தம் போன்ற பெரிய பணக்கார விவசாயிகளும் இந்த வறட்சியால் நட்டமடைந்திருக்கிறார்கள் என்றாலும், சிறு, குறு, குத்தகை விவசாயிகளின் பாடுதான் மிகவும் பரிதாபகரமானது. தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் இறந்து போன டெல்டா மாவட்ட விவசாயிகளின் பட்டியலைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் சிறுவிவசாயிகளாகவே இருப்பது தற்செயலானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

போர்வெல் தோண்ட 40,000 ரூபாய் செலவழித்தும் தண்ணீர் கிடைக்காத மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட அரவிந்தின் (புகைப்படம்) தந்தை ஆசைத்தம்பி.

விவசாயிகளின் தற்கொலைக்கும் அதிர்ச்சி சாவுகளுக்கும் இந்தக் கடன் சுமை ஒரு காரணம் என்றாலும், இந்தப் பொருளாதார விவகாரத்தைத் தாண்டியும் உணர்ச்சிகரமான காரணிகளும் உள்ளன. “விவசாயி பயிரை வளர்ப்பதில்லை, பிள்ளையை வளர்க்கிறான்” என்று அந்த உணர்ச்சியை எடுத்துச் சொன்னார், வல்லரசன்.

இதோ, வல்லரசனின் கதையைக் கேளுங்கள். அந்த உணர்ச்சியை நாமும் புரிந்துகொள்ள முடியும். வல்லரசனுக்குத் தந்தை கிடையாது. அவரது தாய்க்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்த சகோதரர் மாற்றுத் திறனாளி, இரண்டாவது வல்லரசன், கடைசிப்பிள்ளை சந்திரபோஸ். கீவளூரில் உள்ள பெரிய அக்ஷய கோவில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறது, அவரது குடும்பம்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கடனை இந்த ஆண்டு விளைச்சலைக் கொண்டு ஈடுகட்டிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த வல்லரசனுக்கு, காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதும், அரசு அறிவித்த சம்பா தொகுப்புத் திட்டமும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, குத்தகைக்கு எடுத்துள்ள பத்து ஏக்கர் நிலத்திலும் பயிர் செய்வது என முடிவு செய்த வல்லரசன், துணைக்குத் தனது தம்பி சந்திரபோஸை அழைத்தார்.

இரண்டு முதுகலைப் பட்டப் படிப்பும், ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்பும் முடித்துத் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த சந்திரபோஸ், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, விவசாயத்திற்குத் திரும்பினார். பத்து ஏக்கரிலும் பயிர்கள் முளைத்து வந்துகொண்டிருந்த நிலையில், காவிரியில் தண்ணீர் வருவது நின்று, ஓடம்போக்கி ஆறு வறண்டு போனது. பருவ மழையும் ஏமாற்றிவிட்டது. 10 ஏக்கரில் ஒன்றரை ஏக்கரில் வளர்ந்து நின்ற பயிர்கள் மட்டும்தான் கொஞ்சம் நம்பிக்கை தருவதாக இருந்தன. அந்தப் பயிர் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என முடிவு செய்த இரண்டு சகோதரர்களும் துணிந்து ஒரு முடிவை எடுத்தனர்.

ஓடம்போக்கி ஆறில் ஊறும் தண்ணீரை டீசல் இன்ஜினை வைத்து இறைத்து, ஹோஸ் பைப் மூலம் எடுத்துவந்து பயிரைக் காப்பாற்றுவது என்பதுதான் அந்த முடிவு. இது எளிதான காரியமல்ல. ஓடம்போக்கி ஆற்றுக் கரையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தள்ளியிருக்கிறது அந்த ஒன்றரை ஏக்கர் நிலம். அத்துணை தொலைவிற்கு ஹோஸ் பைப் தேவை. மேலும், டீசல் என்ஜின் செட், அதற்கான டீசல் எனச் செலவும் எகிறிப் போகும்.

குத்தகை பாக்கி அனைத்தையும் உடனடியாகக் கட்டச் சொல்லி கீவளூர்−நேரு நகரைச் சேர்ந்த குத்தகை விவசாயிகளுக்கு இந்து அறநிலையத் துறை அனுப்பியிருக்கும் நோட்டீஸ்

செலவைப் பற்றி அந்தச் சகோதரர்கள் கவலை கொள்ளவில்லை. பயிரைக் காப்பாற்ற வேண்டும், அதற்குத் தண்ணீர் வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது கவலையாக இருந்தது. அவர்களிடம் சொந்தமாக டீசல் என்ஜின் இருந்தது. ஓடம்போக்கி ஆற்றுக்கும் அவர்களின் வயலுக்கும் இடையே இருந்த வயல்கள் அனைத்திலும் பயிர்கள் காய்ந்து போய்விட்டதால், ஹோஸ் பைப்புகளின் வழியாகத் தண்ணீரைக் கொண்டுவருவதிலும் பிரச்சினையில்லை. ஆனால், ஆற்றில் தண்ணீர் ஊறும் போது இறைக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களுக்குச் சவாலாக இருந்தது.

இதனால் சகோதரர்கள் இருவரும் மாறிமாறி 24 மணி நேரமும் ஆற்றின் கரையிலியே காத்துக்கிடந்தனர். தங்களால் முடியாதபோது, ஒரு கூலியாளை அமர்த்தினார்கள். ஒரு நாளல்ல, இரண்டு நாள் அல்ல, இப்படி பதினைந்து நாட்களுக்கு ஆற்றில் தண்ணீர் ஊறும்போது, அதனை எடுத்துப் பயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஓடம்போக்கி ஆறில் தண்ணீர் ஊறுவது நின்றுபோனது.

“ஒரேயொரு மழை வந்தால் போதும், இதுகள காப்பாற்றிவிடுவேன்” என அந்தப் பயிரைக் காட்டி வல்லரசனும் சந்திரபோஸும் கூறியபோது, ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கம் மட்டுமே அவர்களது முகத்தில் தெரிந்தது.

தற்கொலை செய்து கொண்ட அரவிந்தும் பயிர்களைக் கருகி விடாமல் காப்பாற்ற புதிதாக இரண்டு போர்வெல்லைத் தோண்டினார். அவரது தந்தை ஆசைத்தம்பி தடுத்தும் கேளாமல், புதிய போர்வெல் தோண்ட 40,000 ரூபாய் செலவழித்தார். இரண்டிலும் தண்ணீர் கிடைக்கவில்லை, பயிரையும் காப்பாற்ற முடியவில்லை. இந்த வேதனையில்தான் பூச்சிமருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார், அரவிந்த்.

பெத்த பிள்ளையைக் காப்பாற்ற யாரும் கணக்குப் பார்ப்பதில்லை. அதுபோலத்தான் விவசாயிகளும். மற்ற தொழில் செய்பவர்கள் கடன்பட்டு நொடித்துப் போவதற்கும், ஒரு விவசாயி மேலும் மேலும் கடன்பட்டு நொடித்துப் போவதற்கும் இத்தகைய வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையிலும் வல்லரசன் உள்ளிட்டு, நேரு நகரைச் சேர்ந்த குத்தகை விவசாயிகளுக்குப் பழைய குத்தகையை உடனடியாகக் கட்டச் சொல்லி இந்து அறநிலையத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. குத்தகை பாக்கியையும் கடனையும் எப்படி அடைக்கப் போகிறீர்கள் எனக் கேட்டேன். “கஷ்டம்தான் சார்… கடன்காரன் வந்து வீட்டு வாசல்படியில் நின்று கத்தும்போது நாண்டுகிட்ட சாகலாம் போலத் தோணும். வேறு வேலைக்குப் போவோம், அல்லது வீட்டை விற்று, கடனை அடைத்துவிட்டு வாடகை வீட்டுக்குப் போவோம்” என அண்ணனைத் தேற்றிவருகிறேன் என்றார், சந்திரபோஸ்.

நம்பிக்கையும் எதார்த்தமும் ஒத்துப் போவது மிகவும் அரிதானது. கீவளூருக்கு அருகிலுள்ள திருவாரூரிலும் நாகப்பட்டினத்திலும் மாற்று வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவு. திருப்பூருக்கு வேலை தேடிப் போன நேரு நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சுவற்றில் அடித்த பந்து போல, வேலை கிடைக்காமல், போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் தங்களின் உழைப்பு மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக எதிர்காலம் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைதான் விவசாயிகளின் மரணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறதேயொழிய, அரசு அறிவித்திருக்கும் நிவாரணமோ, அவர்கள் போடும் இலவச அரிசியோ அல்ல.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க