ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி !

5
34

மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடியதையடுத்து, அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நாடகமாடிய மோடி அரசு, அதே திட்டத்தை “ஹைட்ரோகார்பன் திட்டம்” என்ற பெயரில் நரித்தனமாகக் கொண்டு வந்துள்ளது.  கூடங்குளம் அணு மின்நிலையம், நியுட்ரினோ ஆய்வுத் திட்டம், ஷெல் எரிவாயுத் திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, மற்றும் தமிழகக் கடற்கரை முழுவதையும் அணு மின்னுற்பத்திக் குவிமையமாக்கும் திட்டம் ஆகியவற்றின் வரிசையில் தமிழகத்தைச் சுடுகாடாக்குவதற்கு மோடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம்!

ஹைட்ரஜன், கார்பன் என்ற இரு வேதிப்பொருள்கள் இணைந்த மீத்தேன், ஈத்தேன், புரோத்தேன், ஹெக்சேன், மண்ணெண்ணெய், பெட்ரோலியம் போன்ற 14 வகைக் கனிமங்கள் ஹைட்ரோகார்பன்கள் எனப்படுகின்றன. பூமிக்கடியில் சுமார் 6000 மீட்டர் ஆழம் வரை பாறை இடுக்குகளில் படிந்திருக்கும் இந்த எரிவாயுவை ஆழ்துளையிட்டு உறிஞ்சி எடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

நெடுவாசலில் எரிவாயுவை எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு.

இந்தியாவின் எண்ணை மற்றும் எரிவாயுவின் ஒரு ஆண்டுத்தேவை 226 மில்லியன்  டன்கள். இதில் 70 மில்லியன் டன்கள் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, நமது மொத்தத் தேவையில் 78 சதவீதத் தேவைக்கு இறக்குமதியை நம்பியுள்ளோம்.  அதிகரித்துவரும் இந்த இறக்குமதியில் 10 சதவீதத்தைக் குறைப்பதுதான் நோக்கம் என்று மோடி அரசு கூறுகிறது. இந்தக் கூற்று உண்மையா?

ஒ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா முழுவதும் ஆய்வு செய்து எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் அதிகமுள்ள 310 இடங்களைக் கண்டறிந்தன. இதில் முதல்கட்டமாக, மகராஷ்ட்ராவில் 29, ஆந்திராவில் 15, அஸ்ஸாமில் 13, குஜராத்தில் 6, இராஜஸ்தானில் 2, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2, (நெடுவாசல்,காரைக்கால்) என மொத்தம் 67 இடங்களில் ஆய்வுக்கான நிலங்களைக் கையகப்படுத்தி, ஒவ்வொரு இடத்திலும் எத்தனை டன் எண்ணெய் உள்ளது, எத்தனை கனஅடி எரிவாயு உள்ளது என்று ஆய்வுகள் செய்து முடித்துள்ளன. இவ்வாறு மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் எரிவாயுவை, அன்னிய நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதென்று முடிவு செய்திருக்கிறார் மோடி.

“பெட்ரோல் டெக்” சர்வதேச மாநாட்டில் பிற நாட்டுத் தலைவர்கள், முதலீட்டாளர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

2016 டிசம்பர்  5-ம் தேதி, சர்வதேச எண்ணெய் நிறுவன முதலாளிகள் கலந்துகொண்ட ”பெட்ரோல் டெக்”’ என்ற சர்வதேச மாநாட்டில் பேசிய மோடி, “இந்தியாவில் பழைய லைசென்ஸ் நடைமுறைகள் கைவிடப்பட்டு விட்டன. இப்போது அந்நிய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களைப் போல கையாள்கிறோம். தாராள சலுகை அனுமதிகள் வழங்குகிறோம். இந்தியாவின் எண்ணெய் எரிபொருள் தேவை ஒவ்வொரு ஆண்டும் 3.5% அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவில் தயக்கமின்றி முதலீடு செய்யுங்கள்” என கார்ப்பரேட் கம்பெனிகளை தாஜா செய்தார்

பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ””கண்டுபிடிக்கப்பட்ட சிறு வயல்களின் ஏலத்தில் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி., மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் கலந்து கொள்ளாது” என்று அன்னிய முதலாளிகளுக்கு சத்தியம் செய்கிறார்.

பன்னாட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு வழங்கும் வாக்குறுதிகளையும் சலுகைகளையும் பாருங்கள்:

  • ஏலம் எடுக்கும் நிறுவனங்களுக்கு தொழிலில் முன்அனுபவம் எதுவும் தேவையில்லை. தொழில்நுட்ப அறிவு மட்டும் இருந்தால் போதுமானது.
  • இதற்கென இறக்குமதி செய்யப்படும் எந்திரங்கள் உள்ளிட்ட கருவிகள் அனைத்துக்கும் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • ஏலம் எடுத்த நிலப்பரப்பில் எத்தனை கிணறுகள் வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளலாம்! இத்தனை மீட்டர் ஆழம்தான் தோண்ட வேண்டும் என்றும் நிபந்தனை இல்லை.
  • ஷேல், மீதேன் உள்ளிட்ட எல்லா வகையான ஹைட்ரோ கார்பன்களையும் எடுப்பதற்கு எந்தவித தடையோ, கட்டுப்பாடோ கிடையாது.
  • பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரி கிடையாது, எரிவாயுவுக்கு ராயல்டி 10% மட்டுமே.
  • உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சர்வதேச சந்தை விலையில் விற்றுக் கொள்ளலாம். ஏலம் எடுக்கும் அந்நிய நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலரில் பணம் பட்டுவாடா செய்யப்படும்.
  • ஒப்பந்த காலமான 15 ஆண்டுகள் முடிந்தபின், மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்க முடியும். ஒப்பந்த காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தாலோ அல்லது காரணமின்றியோ திட்டத்திலிருந்து விலகும் நிறுவனங்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது.

இப்படி அடுக்கடுக்கான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது மோடி அரசு.

நெடுவாசல் பூமியின் அடியில் கிடக்கும் வளத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.எம்.சித்தேஸ்வரா

எண்ணெய், எரிவாயு வயல்களைச் சர்வதேச சந்தையில் ஏலம் விடுவதற்காக மோடி அரசு நியமித்திருக்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற தரகு கம்பெனி வெளியிட்டிருக்கும் ஆவணமும், 14.10.2015 தேதியிட்ட பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆவணமும், டைரக்டரேட் ஜெனரல் ஆப் ஹைட்ரோ கார்பன்ஸ்-இன் ஆவணங்களும் மேற்கூறிய விவரங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றன.

நெடுவாசல், காரைக்கால் மட்டுமல்ல, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், இராமநாதபுரம், அரியலூர், ஆகிய மாவட்டங்களில் சுமார் 3,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 398 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் திட்டமிட்டுள்ளது மோடிஅரசு. நெடுவாசலை பி.ஜே.பி.-யின் முன்னாள் மத்திய மந்திரியான ஜி.எம்.சித்தேஸ்வராவின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளதைப் போல, கிருஷ்ணா-கோதாவரிப் படுகையை ரிலையன்ஸ் மற்றும் அதானிக் குழுமத்திற்கும், இராஜஸ்தானில் வேதாந்தா மற்றும் கெய்ர்ன் நிறுவனங்களுக்கும், குஜராத்தில் அதானிக்கும் ஒதுக்கியிருக்கிறது மோடிஅரசு. இதற்காக நாடு முழுவதும் 16,82,657சதுர கி.மீ. பரப்பளவு நிலங்கள் கண்டுபிடிப்புகளுக்கும், எண்ணெய் உற்பத்திக்கும் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 2015-16 வரை சுமார் 40  பில்லியன் டாலர் தனியார் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மோடி அரசு சொல்லிக் கொள்வது போல, இந்த திட்டத்தின் நோக்கம் சுயசார்பும் அல்ல, அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துவதும் அல்ல. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கூறுபோட்டு விற்பதுதான் மோடி அரசின் நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

வெளிப்படையாகத் தெரியாத நோக்கம் ஒன்றும் மோடி அரசுக்கு இருக்கிறது. காவிரி வடிநிலத்தை ஹைட்ரோ கார்பன் வேட்டைக்குப் பயன்படுத்துவதற்காகத்தான், காவிரி நீரை மோடி அரசு திட்டமிட்டே தடுத்து வருகிறது என்பது இப்போது உறுதியாகிறது.

  • மாறன்.
    புதிய ஜனநாயகம், மார்ச் 2017

சந்தா