privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஓசூர் விவசாயி சேகர் தற்கொலை !

ஓசூர் விவசாயி சேகர் தற்கொலை !

-

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய தொழில்நகரமான ஓசூர் நகரையொட்டிய அலசநத்தம் கிராமத்தை சேர்ந்த 37 வயதுடைய சேகர் ஒரு காய்கறி விவசாயி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதியன்று முட்டைக்கோஸ் பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஐந்து நாட்கள் உயிர் பிழைக்கப் போராடி இறுதியில் மரணமடைந்தார்.

தற்கொலை செய்து மாண்டு போன விவசாயி சேகர்

விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலையின்மை, நீரின்றிப் பயிர்கள் கருகுவது, விதைப் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்க கடன்படுவது, கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பது என விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே சேகரை தற்கொலைக்கு தள்ளியுள்ளது. பல்வேறு வகையில் நெருக்கடியை சந்தித்துவரும் ஓசூர் விவசாயிகள் மத்தியில் தற்கொலை செய்துக்கொள்வது என்பது பெரும் அதிர்ச்சிக்குரிய விசயம்!

சேகரின் தந்தை மற்றும் சித்தப்பாவிற்கான மொத்த நிலம் 9 ஏக்கர். போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் இதில் 4 ஏக்கர் நிலத்தில் சேகர் விவசாயம் செய்துவந்தார். இதற்கு இரண்டு ஆழ்குழாய் போட்டு நிலத்தடிநீரைப் பயன்படுத்தி காய்கறிகளைப் பயிரிட்டுவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலும் நிலத்தடிநீர் வற்றிப்போனதால் 2 ஏக்கர் நிலத்தை தரிசாக விட்டுவிட்டு மீதமுள்ள 2 ஏக்கரில் மட்டும் பயிரிட்டார். இதில் கொத்தமல்லி மற்றும் தக்காளி பயிரிட்டுவந்தார். நல்ல விளைச்சல் இருந்தாலும் உரிய விலை கிடைக்கவில்லை.

குறிப்பாக, கடந்த 2016 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பணமதிப்பிழப்பு காரணமாக, கொத்தமல்லி ஒரு கட்டு 50 பைசாவாகவும், தக்காளி ஒரு பெட்டி 20 ரூபாயாகவும் விலை சரிந்திருந்தது. இதனால், மனம் உடைந்த சேகர் அறுவடை செய்வதற்கான கூலி கொடுக்கக்கூட இந்தவிலை பயன்தராது என்பதை எண்ணி மனம் வருந்தி வேறு வழியில்லாமல் தனது தோட்டத்தை மாடுகளை விட்டு மேய்த்துள்ளார்.

விவசாயி சேகரின் மனைவி

இக் காலகட்டத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை கடன்பெற்ற சேகரால் ஒரு பைசாகூட அடைக்க முடியவில்லை. பூச்சி மருந்து கடையில் ஒரு லட்ச ரூபாய் வரை கடன் உள்ளது எனவும், டிராக்டர் வாங்கிய கடன் தவணைகள் கட்ட முடியாமல் இருந்துள்ளார் எனவும், மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள சிலரிடம் கடன் வாங்கியுள்ளார் எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில், மீண்டும் பயிர் செய்வதற்கு புதிதாக கடன் வாங்க இயலாத நிலையில் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன் வாங்கிப் பயிர்செய்துள்ளார். இந்த முறை வீட்டின் உணவுத் தேவைக்காக ராகியைப் பயிரிட்டுள்ளார். மேலும், நீடித்து பயன்தரும் எனக் கருதி ரோஜா, சாம்மந்தி பூச்செடிகளையும் நட்டுள்ளார். குறிப்பாக, இந்த ஆண்டு பொங்கல் மற்றும் அதனை அடுத்து பிப்ரவரியில் காதலர்தினம் என எதிலும் எதிர்ப்பார்த்த வகையில் பூக்களும் விலை போகாமல் நட்டமடைந்தார்.

இந்த சூழலில் இறுதியாக மனைவியிடம் இருந்த தாலிக்கொடியை கேட்டு சண்டையிட்டுள்ளார். அதற்கு மனைவி உடன் படாமல் இருந்ததால் விரக்தியில் இருந்த சேகர் தனது பெரியப்பாவின் முட்டைக்கோஸ் பயிருக்கு தெளிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தைக்குடித்து தற்கொலைக்கு முயன்று இறுதியில் மரணம் அடைந்துள்ளார். தாய், தந்தை, மனைவி மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த சேகர் வீட்டின் தலைவராக இருந்துள்ளார். தனக்கு அருகில் உள்ள மற்ற தம்பி தங்கைகளுக்கும் தேவையானதை கவனித்துக்கொண்டும் பொறுப்புள்ள விவசாயியாக இருந்துள்ளார்.அலசநத்தம் இன்று ஓசூர் நகரின் ஒரு பகுதி எனும் அளவிற்கு குடியிருப்புகள் வந்துவிட்டன. அவ்வாறு மாறுவதற்கு முன்னமே தனது நிலத்தோடு வீடுகட்டி குடியேறி சென்றுள்ளார் சேகரின் தந்தை.

விவசாயி சேகரின் மகன்

காரணம் விவசாயத்தின் மீதுள்ள ஈடுபாடு. அதே மனப்போக்கில் சேகரும் வளர்ந்து வந்துள்ளார். தனது நிலத்தைச் சுற்றியுள்ள பலரும் நிலத்தை பிளாட் போட்டு விற்றுவிட்ட நிலையிலும் விவசாயத்தை கைவிடக்கூடாது என்று உறுதியுடன் இருந்துள்ளார். தான் ஒரு விவசாயி என்பதில் பெருமிதம் கொண்டிருந்தார். சேகரைப் போல ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை பகுதிகளில் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.  பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் இவர்கள் அனைவரும் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

விலைப்பொருட்களுக்கு உரிய விலையின்மை, நீரின்றி பயிர்கள் கருகுவது, நிலத்தடி நீர் வற்றிப்போவது, பூச்சிக்கொல்லி போன்றவற்றிற்கு கடனாளியாவது, யானைகளால் விவசாயிகள் கொல்லப்படுவது, பயிர்கள் அழிக்கப்படுவது, ஏரிகள் நீரின்றி வற்றிப்போவது என விவசாயம் சந்தித்துவரும் நெருக்கடி விவசாயி என்ற அவர்களது பெருமிதத்தை குறைக்கவில்லை. நெருக்கடி தாளாமல் தற்கொலை செய்துக்கொள்வது என்பது புதிய நிலைமையாக உருவாகியுள்ளது. நெருக்கடிக்குக் காரணமான இந்த அரசை நெருக்குவதைத் தவிர விவசாயிகளுக்கு வேறுவழியில்லை. அதுமட்டும்தான் விவசாயியைக் காக்கும். விவசாயத்தையும் காக்கும்.

-பு.ஜ.செய்தியாளர், ஒசூர்.