Thursday, August 11, 2022
முகப்பு செய்தி மார்ச் 23 கருத்தரங்கம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கூட்டத்தை வீழ்த்துவோம் !

மார்ச் 23 கருத்தரங்கம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கூட்டத்தை வீழ்த்துவோம் !

-

மார்ச்,23 – பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள் : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்!

ன்பார்ந்த இளைஞர்களே, தொழிலாளர்களே,

நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்திய; இளம்வயதிலேயே தூக்குக்கயிற்றை முத்தமிட்ட இளைஞர்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்கள் தான் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு.  நாட்டையும், மக்களையும் நேசிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் உண்மையான கதாநாயகர்கள். அவர்கள் காட்டிய பாதை மக்களின் எதிரிகளை நாட்டிலிருந்து ஓட ஓட விரட்டியடிப்பதற்கான பாதை.

இன்று நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருப்பது பார்ப்பன பாசிசம். பி.ஜே.பி ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து மக்கள் மீது பலவிதமான தாக்குதல்களை இடியாக இறக்குகிறது. இதில் குறிப்பாக, கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் கொண்ட தமிழகத்தைப் பணிய வைக்க பல்வேறு அழிவுத் திட்டங்களை திணித்து வருகிறது மோடி அரசு.

காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுத்து முப்போகம் விளையக்கூடிய டெல்டா மாவட்டங்களையே பாலைவனமாக்கியது. கடன்பட்டு வைத்த பயிர் கண்முன்னே காய்ந்துபோனதாலும், கந்து வட்டி, கடன் தொல்லையாலும் அவதிப்படும் விவசாயிகள் நெஞ்சுவெடித்தும், தற்கொலை செய்துகொண்டும் கொத்துக்கொத்தாக செத்து மடிகிறார்கள். தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களோ எழவு வீடுபோல் காட்சியளிக்கிறது. வறட்சி நிவாரணத்தைக் கூட உரிய நேரத்தில் தராமல் விவசாயிகளை பட்டினிப்போட்டே கொல்கிறது மக்கள் விரோத அரசு.

இதுபோதாதென்று, மீத்தேன், ஷெல்கேஸ், நியூட்ரினோ போன்ற நாசகரத்திட்டங்களை திணித்ததோடு தற்போது பேரழிவை உருவாக்கக்கூடிய ஹைட்ரோ கார்பனை எடுக்கவும் விவசாயத்தை அழிக்கவும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு படையல் வைக்கிறது. இந்த அபாயத்தை உணர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி தொடர்ந்து போராடி வருகிறார்கள். மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைபடாத பி.ஜே.பி யின் வானரங்களோ ’’நாட்டின் வளர்ச்சிக்காக தமிழகம் தியாகம் செய்ய வேண்டும்’’ என்று கதையளக்கின்றன.  

லாபவெறிகொண்டு அலையும் முதலாளிகள் தொழிலாளர்களை காண்ட்ராக்ட் முறையில் கசக்கிப் பிழிந்துவிட்டு சக்கையாகத் தூக்கியெறிகின்றனர். தொழிலாளர் நலச்சட்டங்களும் பன்னாட்டுக் கம்பெனிகள் விருப்பத்திற்கு ஏற்ப திருத்தப்படுகின்றன. மேலும், ஆலை மூடல், வேலை பறிப்பு என தொழிலாளர்கள் அன்றாடம் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஐ.டி ஊழியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. வேலையில்லா திண்டாட்டமோ நாட்டையே அச்சுறுத்துகிறது.

பன்னாட்டு கம்பெனிகள் தொழில்நடத்தி கொள்ளையடிக்க விவசாய நிலங்கள் பறித்தெடுக்கப்படுகிறது., விவசாயிகள் விளை நிலங்களில் இருந்தே விரட்டியடிக்கப்படுகிறார்கள். காடு,மலை,ஆறு,மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை, கனிமவளங்களை கார்ப்பரேட் முதலாளிகள் வரன்முறையில்லாமல் சூறையாட தனியார்மய, தாராளமய கொள்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. மோடி அரசு காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து சேவைத்துறைகளையும் உலக வர்த்தகக் கழகத்தின் பிடியில் சிக்க வைத்திருக்கிறது.

அன்று ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை இங்கு நிலைநாட்ட வங்காளத்தின் தளபதி மீர்ஜாபர் எனும் துரோகி சேவை செய்தான். இன்று அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறுகாலனியாக்க அடிமைச் சேவை செய்கிறார் மக்களின் துரோகி மோடி.

ஒரு காலத்தில் சமஸ்கிருதம் தெரியாதவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாதபடி சட்டம் இயற்றி வைத்திருந்தது பார்ப்பன கும்பல். இன்று தமிழக மாணவர்கள் மீது நீட் தேர்வை திணித்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டுகிறது. செத்தமொழியான சமஸ்கிருத்திற்கு பல ஆயிரம் கோடி செலவு செய்து ஆரம்பக் கல்வி முதல் ஐ.ஐ.டி வரை தனி வாரியம் அமைப்பது, வேத கலாச்சாரத்தை புகுத்துவது, வரலாற்றைத் திரிப்பது, புதிய தேசியக் கல்வி கொள்கையை உருவாக்குவது என்ற பெயரில் பார்ப்பன பாசிச பண்பாட்டைப் புகுத்துகிறது.

தங்களுக்கு எதிராக மாணவர்கள் ஒண்றினைவதை தடுக்க அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு மீதான தடை – ஐ.ஐ.டி, ஜே.என்.யூ, ஹைதராபாத் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றுவது, எதிர்த்து நிற்கும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளியது, டெல்லி பல்கலைக்கழக மாணவியைக் ’கற்பழிப்போம்’ என பகிரங்கமாக மிரட்டுகிறது.

பார்ப்பன பாசிஸ்டுகளை அம்பலப்படுத்திய கல்புர்க்கி, பன்சாரே, தபோல்கர் போன்ற முற்போக்காளர்களை கொலை செய்தனர். குஜராத்தில் தலித்துகள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தினர். கிறித்துவர் – முஸ்லீம்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறையை நடத்தி அச்சுறுத்துகின்றனர். பலமாநிலங்களில் ஆட்சிக்கவிழ்ப்புகள் செய்கின்றனர். இவர்களே சொல்லும் சட்டம், மரபுகள் அனைத்தையும் தூக்கியெறிந்து கோவா,மணிப்பூரில் குதிரை பேரம் நடத்தி ஆட்சியமைக்கின்றனர். இதெல்லாம் எதைக்காட்டுகிறது, தன் ஆட்சி அதிகாரத்தின் பலம் கொண்டு நாடுமுழுவதும் பார்ப்பன பாசிசத்தை நிலைநாட்ட துடிப்பதையே.

அன்று ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துக்கொண்டனர் பகத்சிங், சுகதேவ், ராஜகுருவாகிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள். “அநீதிகளுக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை’’ என்று ஆங்கிலேய அரசுக்கு எதிரான போரில் அனைத்து இளைஞர்களும் பங்கெடுக்க அறைகூவல் விடுத்தனர்.

காவி இருள் நாட்டையே கவ்வியிருக்கிறது. நாம் என்ன செய்ய போகிறோம்? ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் காட்டியப் பாதையை வரித்துக் கொள்வோம். இப்பாதையில் மாணவர்கள் இளைஞர்கள் தொழிலாளர்கள் இதர உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம். இன்று நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாதமாக, இந்துமதவெறியாக வலம் வரும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம். அதற்கொரு முன்மாதிரி களமாக தமிழகத்தை மாற்றுவோம்!

நாள்: மார்ச் 23 மாலை 5 மணி
இடம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மாளிகை
(வானகரம் பேருந்து நிறுத்தம் அருகில்)

 • கருத்தரங்கம்: தலைமை – தோழர் ராஜா, செயலர், புமாஇமு, சென்னை
  உரையாற்றுவோர்:
 • பேராசிரியர் சம்சுல் இஸ்லாம், டெல்லி பல்கலைக்கழகம்
 • டாக்டர் எழிலன், நிறுவனர், இளைஞர் இயக்கம்
 • தோழர் துரை. சண்முகம், ம.க.இ.க,
 • தோழர் ரமேஷ், நிறுவன உறுப்பினர், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்,
 • தோழர் ம.சி. சுதேஷ்குமார், மாநில இணைச் செயலர், புஜதொமு, தமிழ்நாடு
 • தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு – 94451 12675

  • சென்னைக் கருத்தரங்கம்:
   நாள்: மார்ச் 23 மாலை 5 மணி
   இடம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மாளிகை
   (வானகரம் பேருந்து நிறுத்தம் அருகில்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க