Friday, December 2, 2022
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்தமிழ்நாடு மின்துறையில் உதயமானது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் !

தமிழ்நாடு மின்துறையில் உதயமானது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் !

-

மிழகத்தில் மின் துறையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்கி வருகிறது. அதில் மிகப் பெரிய தொழிற்சங்கம் சி.ஐ.டி.யு. இதன் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாலும்,  நிர்வாகத்துடன்  சமரச போக்கை கடைபிடித்து தொழிலாளிகளுக்கு துரோகம் செய்வதையே தனது லட்சியமாக கொண்டுள்ளதால் அதிருப்தி அடைந்த கடலூர் மின்துறை ஊழியர்கள் அதில் இருந்து வெளியேறி தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக  முன்னணி என்ற தொழிற்சங்கம் தொடங்கி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்துள்ளனர்.

அதன் துவக்க விழா 19.03.2017 அன்று கடலூரில் TVM திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக  முன்னணி, மாநில ஒருங்கிணைப்பளர் தோழர் ஸ்ரீதர் தலைமையில்  நடைபெற்றது.  தனது தலைமையுரையில் பேசிய அவர், மின் துறையில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனையில் எந்த தொழிற்சங்கமும் பெரிய அளவில் கவனம் செலுத்துவது இல்லை. அதே போன்று மின்துறை மூன்றாக சிதைந்துள்ளது. முன்பு இருந்த தமிழ் நாடு மின்சார வாரியம் போன்று இல்லை. அனைத்தும் தனியார் மயமாக்குகிறார்கள். இந்த சூழலில் மின்துறையை காப்பாற்ற வேண்டும் என்றால் துடிப்பாக போராடக் கூடிய அமைப்பு தேவை. அதனால் தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பில் இணைந்துள்ளோம். அந்த வகையில் புதிய சங்கம் துவங்குவது மிக்க மகிழ்சி. இந்த சங்க துவக்க பிரசுரத்தை ஊழியர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது நல்ல வரவேற்பு இருந்தது. பல  AE-க்கள் வாழ்த்து கூறினார்கள். இது ஒரு விடிவெள்ளி போல் உள்ளது. நமக்கு பல தோழர்கள் தொடர்ந்து ஆதரவு தருகிறார்கள். இன்னும் பல தோழர்களை இணைத்து நம் சங்கத்தை முன்னேற்றுவோம். தற்பொழுது கடலூரில் துவங்கியுள்ளோம். இன்னும் பல மாவட்டங்களில் தொடங்குவோம். இதனை ஒரு மாநில அமைப்பாக மாற்ற அனைத்து தோழர்களும் பாடுபட வேண்டும்.  என்று கூறி தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக பேசிய கடலூர் மாவட்ட தலைவர் தோழர் சண்முகம் அவர்கள், “பல தொழிற்சங்கங்கள் குப்பைக் கொட்டிக்கொண்டிருக்கின்ற” இந்த காலகட்டத்தில் தொழிலாளர்களையும், மின்துறையையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் இதனை தொடங்கியுள்ளோம். இந்த துறை எப்படி எல்லாம் போகும் என்று பல அறிஞர்கள் வேதனையில் சிந்தித்து கொண்டிருக்கும் வேலையில், அவர்களுக்கு ஒரு நம்பிக்கையாக நாம் உருவாகுகிறோம். எங்களுக்கு CITU ல்  லாபம் கிடைக்கவில்லை என்று இங்கு வரவில்லை. அப்படி தான் சிலர் சொல்கிறார்கள். அது பற்றி கவலை இல்லை. அப்படி சொல்பவர்களுக்கு வாழ்த்துக்கள். நமது நோக்கம் இன்றைக்கு பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மய மாக்கப்படுகிறது. இயற்கை வளங்கள், கனிம வளங்கள் என அனைத்தும் சூறையாடப்படுகிறது. திட்டம்போட்டு தொழிலாளர்  நலச்சட்டங்களை மாற்றுகிறார்கள். மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது அரசு. தனியார்மயமாக்கலை சிலர் வரவேற்கிறாகள். காரணம் லஞ்சம் வாங்குகிறார்கள். அந்த அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. மின்துறையில் ஆட்களை எடுப்பதே இல்லை. பணிச்சுமை அதிகமாகி விட்டது. வேலைப்பளுவற்ற ஊதிய உயர்வு என்று சொன்னார்கள். ஆனால் அப்படி இல்லை என்று அரசு கடைபிடித்து வரும் தொழிலாளர் விரோதபோக்கை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக பேசிய கடலூர் மாவட்ட பொருளாளர், தோழர் ஜோதிபாசு அவர்கள், “அடிமைத் தனத்துடன் வாழ்வதை விட போராடி சாவதே மேல்” என்று நினைப்பவன் நான். CITU-ல் இருக்கும் பொழுது பல போராட்டங்களில் கலந்து கொண்டவன். அங்கே சில தோழர்கள் அடிமைத் தனத்துடன் நடத்துவதையும், சங்கத்தின் சமரச போக்கையும்  எதிர்த்து கேட்டுள்ளேன்.அது தொழிலாளர்களுக்கு விரோதமாக மாறிவிட்டது. மார்க்சியம் தோற்றுவிட்டது என்கிறார்கள் முதலாளித்துவவாதிகள். ஆனால், அது ஒருபோதும் தோற்றது கிடையாது. துடிப்புடன் போராடக்கூடிய தொழிற்சங்கம் இருக்கும் வரை அது மேலே தான் செல்லும். அந்த அடிப்படையில் தொழிலாளி வர்க்க விடுதலைக்காக உணர்வுடன் போராடக்கூடிய அமைப்பில் இணைதிருப்பது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்  என்று கூறி தனது உரையை முடித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி இணைச் செயலர் தோழர் லோகநாதன் அவர்கள் பேசும் போது, தொழிலாளர்களின் உழைப்பு எங்கும் சுரண்டப்படுகிறது. அரசு ஊழியர்கள் என்றால் சொகுசாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பது மின்துறை ஊழியர்கள் படும் துன்பதுயரங்களில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அவல நிலையை மாற்றியமைக்க தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து போராடுவது மட்டும் தான் தீர்வு என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக, வாழ்த்துரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில தலைவர் தமிழ் நாடு, தோழர் அ.முகுந்தன் அவர்கள், புதியதாக ஒரு சங்கம் துவங்குவது என்பது சாதாராண விஷயம் அல்ல. பல்வேறு பிழைப்புவாத சங்கங்கள் இருக்கிறது.  அதிலிருந்து வெளியேறியதை புஜதொமு வரவேற்கிறது.  என்றென்றும் உங்களுக்கு அது தோள் நிற்கும். ஒரு சங்கம் செயல்படுவது சந்தா பெறுவதற்கு அல்ல. அது புரட்சிக்கு வேலை செய்ய வேண்டும். தொழிலாளி வர்க்கம் விடுதலை பெற வேண்டுமானால் புரட்சிகர சங்கம் தேவையாக இருக்கிறது.

அது மார்க்சிய- லெனினிய அடிப்படையில் இயங்கி வரவேண்டும். அரசுத் துறைகள் கார்ப்பரேட்மயமாகி வருகிறது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறார்கள். இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. செவிலியர்கள், விவசாயிகள், மீனவர்கள் என எங்கும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் இந்த அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளோ ஆர்.கே நகரில் எப்படி வெற்றி பெருவது என்று திட்டமிட்டு வருகிறார்கள். தேர்தல் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது. தொழிலாளிகள் ஒன்று திரண்டால் தான் தீர்க்க முடியும். மாருதி தொழிலாளிகள் நிலையை நாம் பார்க்கிறோம். அரசு- நிர்வாகம்-போலிசு கூட்டு சேர்ந்து தொழிலாளியை தண்டித்துள்ளார்கள். இனி தொழிலாளி வர்க்கம் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்தி பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் கொடியை அறிமுகம் செய்து விட்டு  சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில பொதுச்செயலர், தமிழ் நாடு. தோழர் சுப.தங்கராசு அவர்கள், “தொழிற்சங்கம் என்பது புரட்சிக்கான பயிற்சி பள்ளி தான். அதற்கான வேலையை தான் புஜதொமு செய்கிறது. அந்த வகையிலே புஜதொமு உடன் இணைந்திருப்பது மகிழ்சியளிக்கிறது. மின்துறையில் தொழிலாளர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, ஊதிய உயர்வு இல்லை. ஆனால் பணிச்சுமை மட்டும் அதிகம். வேலைப்பளுவோடு கூடிய ஊதிய உயர்வு என்று தனியார் நிறுவனங்கள் பேசலாம். ஏனென்றால் அவர்களுக்கு கொள்ளை லாபம் வேண்டும். ஆனால், ஒரு பொதுத்துறை நிறுவனம் அப்படி ஏன் பேச வேண்டும்?   என்று கேட்டு  தொழிற்சங்கங்கள் போராடவில்லை. ஆனால்,நாம் கேட்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போராட வேண்டும். அவர்களை பணிநிரந்தரம் செய்யகோரி கேட்க வேண்டும். 1926ல் இருந்து  தொழிலாளர் உரிமைக்காக போராடி  44 சட்டங்கள் கொண்டுவந்தார்கள். அதனை எல்லாம் காங்கிரசு அரசு ஒவ்வொன்றாக திருத்தியது. ஆனால் மோடி அரசோ, ஒரேடியாக, முதலாளிகளுக்கு சாதகமாக ஒரு தொகுப்பான கெயிட் லைன் (வழிகாட்டல்) மாதிரி அனைத்தையும் மாற்றி விட்டது.

கொடியை அறிமுகம் செய்து வைக்கும் தோழர்.தங்கராசு

தொழிற்சாலை ஆய்வாளர் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வதற்கு தடை விதித்தார். தொழிலாளிகளின் கொஞ்ச நஞ்ச உரிமையை கூட மாற்றி விட்டார். இந்த சட்டங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் மற்றும் மத்திய, மாநில அரசை எதிர்த்து போராடி கொண்டு வந்த சட்டங்கள். ஆனால், தனியார்மயம்-தாராளமயம்-உலகமயமாக்கல் வந்த பிறகு அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்குவது, அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பது. தனியார் துறையை ஊக்குவிப்பது ஏகமோசடித் தனங்களை மோடி அரசு செய்து வருகிறது.

எல்.ஐ.சி, ரயில்வே, பி.எஸ்.என்.எல், சேலம் உருக்காலை என அனைத்தையும் விற்று தொழிலாளர்களை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைகளாக்க முயற்சி செய்கிறார்.

மக்கள் சேமிப்புகளை, வங்கி பணத்தை முதலாளிகளுக்கு கொடுத்ததன் மூலம், 9.67 லட்சம் கோடி வாராக்கடனாக உள்ளது. அதனை வசூலிக்க மோடி அரசால் முடியவில்லை.  கருப்புப் பணத்தை ஒழிப்பது என்ற பெயரில் மக்களின் சுருக்குப்பை சேமிப்புகளை கொள்ளையடிப்பது என்று மக்கள் விரோத செயல்களையே செய்து வருகிறார்.

மாருதி தொழிலாளர்கள், கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் என்று தொழிலாளர்களை ஒடுக்குகிறது அரசு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த உரிமை கூட இன்று பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் சுதந்திரம் இல்லை. பல்வேறு அழிவு திட்டங்களை மக்கள் மீது திணிக்கிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் எதிராக உள்ள இந்த அரசை நம்பி  பயனில்லை. அவர்கள் நமக்கானவர்கள் இல்லை என்பதை  நிரூபித்து விட்டார்கள். நமக்கு என்ன தேவை என்பதை தொழிலாளி வர்க்கம்  தான் இனி முடிவு செய்ய வேண்டும். அது ஒரு புரட்சியின் மூலம் மட்டுமே சாத்தியம். அதனை மெரினா நமக்கு கற்றுக்கொடுத்தது.  அப்படிபட்ட போராட்டத்திற்கு  தொழிலாளி வர்க்கம் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்சியின் இறுதியாக கடலூர் மாவட்ட இணைச்செயலர் தோழர் பாவாடைசாமி நன்றியுரை கூறியதும் நிகழ்சி முடிவுற்றது.

இவ்விழாவில் புதிய தொழிற்சங்கத்தின்  மாநில ஒருங்கிணைப்பாளர் உட்பட புதிய பொறுப்பாளர்கள் அறிமுகபடுத்தப்பட்டது  அதேபோல் மின்துறையில் நீண்ட காலம் நேர்மையாக பணியாற்றிய, தொழிலாளர்களுக்காக போராடிய சிஐடியு–வால் கைவிடப்பட்ட  ஓய்வு பெற்ற அதிகாரி தோழர்.பொன்னுசாமி அவர்கள்  கெளரவிக்கப்பட்டார். பல்வேறு சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த துவக்க விழாவில் தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் 9  தீர்மானங்களை வாசித்தார்.

  1. மின்வாரியத்தை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுவதை தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வன்மையாக கண்டிப்பதுடன் கார்ப்பரேட்மயமாகாமல் மின் வாரியம் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகிறது.
  2. மத்திய அரசின் உதய் மின் திட்டம் திணிக்கப்படுவதை தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வன்மையாக எதிர்க்கிறது.
  3. 16 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இழுத்தடித்து ஊழியர்களையும், தொழிலாளர்களையும் துன்பதுயரங்களுக்கு உள்ளாக்கப்படுவதை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக ஊதிய உயர்வினை அமுல்படுத்த வலியுறுத்துகிறது.
  4. மின் வாரியத்தில் ஊழியர் மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வேலை சுமை கூடியுள்ளது. இந்த காலியிடங்களை உடனே நிரப்பிட வேண்டுமென தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வலியுறுத்துகிறது.
  5. மின் வாரியத்தில் கடுமையாகவும், அர்பணிப்போடும் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படாமல் இருக்கும் பதவி உயர்வை உடனே அளித்திட வேண்டுமென தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வலியுறுத்துகிறது.
  6. மின் வாரியத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டுமென தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வலியுறுத்துகிறது.
  7. விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் நாசப்படுத்தும் மீத்தேன், நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்பு, உள்ளிட்ட நாசகார திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வலியுறுத்துகிறது.
  8. சங்கம் வைக்கும் உரிமைக்காக போராடிய மாருதி ஆலைத் தொழிலாளர்கள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை, 14 பேருக்கு 3 ஆண்டுகள் சிறையென்று ஹரியானா நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வன்மையாக கண்டிப்பதுடன் இத்தண்டனையை ரத்து செய்யும்படி வலியுறுத்துகிறது
  9. இலங்கை கடற்படையால் திட்டமிட்டே தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் தமிழ் விரோத நடவடிக்கையை வன்மையாக தமிழ் நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி கண்டிக்கிறது.


( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க