privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் ! புதுவை ஆர்ப்பாட்டம் !

மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் ! புதுவை ஆர்ப்பாட்டம் !

-

மாருதி தொழிலாளர்கள் 13 பேருக்கு ஹெச். ஆர். அதிகாரியை கொலை செய்ததாக பொய்க்குற்றம் சாட்டி ஆயுள் தண்டனையும், வன்முறை தீயிடல் குற்றங்களுக்காக 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 14 பேருக்கு 03 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்  வழங்கி தீர்ப்பளித்துள்ளது குர்காவ்ன் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம். 10.03.2017 அன்று குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், 18.03.2017 அன்று மேற்படி தண்டனையை வழங்கியது. இவர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட 117 பேரை விடுதலை செய்த நீதிமன்றம், அவர்கள், இருக்கின்ற வழக்கின் படியே நான்கரை ஆண்டுகள் சட்டவிரோதமாக அனுபவித்த சிறைத் தண்டனை பற்றியோ அவர்களது வேலை பறிபோய், வாழ்வே கேள்விக்குள்ளானது பற்றியோ வாயே திறக்கவில்லை.

மாருதி தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அநீதியான, சட்டவிரோதமான தீர்ப்பை கண்டித்தும் அவர்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் வகையிலும் 04.04.2017 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இப்பிரச்சினையின் துவக்கத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்திவருவதன் தொடர்ச்சியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை புஜதொமு-வின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் தோழர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாருதி தொழிலாளர் போராட்டத்தின் நியாயத்தை விளக்கியும், மாருதி நிர்வாகத்தின் சூழ்ச்சிகள், நரித்தனங்கள், வஞ்சகங்களை விளக்கியும், போலீசு, நீதிமன்றத்தின் கூட்டுச் சதியை விளக்கியும், உரையாற்றினார்.  மேலும், குற்றமே நிரூபிக்கப்படாத போதும், மாருதி தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கும் நீதித்துறை, புதுச்சேரியில் வெட்ட வெளிச்சமாக நடந்த ரவுடி கொலையை செய்தது, அரசியல்வாதிகளின் தூண்டுதலில் தான் என்று தெரிந்த போதும், சாட்சிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்கிறது என்று நீதித்துறையின் தொழிலாளர் விரோதப் பண்பை அம்பலப்படுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய புஜதொமு-வின் திருபுவனை வட்டாரக் கிளைப் பொருளாளர் தோழர் சங்கர், ” தொழிலாளர் விரோதமாகச் செயல்படும் தொழிலாளர் துறையைச் சாடியதுடன், தொழிலாளர் போராட்டம் என்பது மட்டுமில்லை, எந்தப் போராட்டமானாலும், அதைத் தீர்க்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளோ, துறை அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ வருவதில்லை. முண்டியடித்துக் கொண்டு வருவது போலீசு தான். அவர்களும் பிரச்சினையைத் தீர்க்க வழி சொல்லாமல், போராட்டத்தை கலைப்பதற்கு, பேச்சுவார்த்தை நாடகமாடுவது, அதையும் மீறி மக்கள் உறுதியாக இருந்தால், அவர்களை வழக்கு போட்டு மிரட்டுவது என்பதையே வேலையாகச் செய்து வருகிறது. உண்மையில் அரசின் உறுப்புகள், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதில்லை. மக்களை ஏமாற்றுவதற்கும், மிரட்டுவதற்கும் தான் உள்ளது. இந்த அரசுக் கட்டமைப்பு மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது என்பதும், மக்களுக்கு எதிராக மாறிவிட்டது என்பதும், தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே, இந்த அரசுக் கட்டமைப்பை நம்பிப் பலனில்லை. அதைத் தகர்த்தெறிந்து, நமக்கான அரசுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்; அதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க அமைப்பாகத் திரள வேண்டும்” என்று அறைகூவி உரையாற்றினார்.

அடுத்ததாக, சேதுராப்பட்டு தொழிற்பேட்டைக் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர் ரமேஷ், தொழிலாளர் பிரச்சினையைப் பற்றிய போராட்டத்தில் பேச அழைத்ததை பெருமையாகவும், கடமையாகவும் கருதி உரையைத் தொடங்கியவர், ”புதுச்சேரி தொழிலாளர் அதிகாரிகளின் முதலாளிகளின் ஆதரவான நடவடிக்கையைப் பற்றி அவர்களிடம் பேசும் போது, தங்களது நடவடிக்கையைப் பற்றி குற்ற உணர்வு ஏதுமின்றி, தொழிலாளர்களால் என்ன செய்ய முடியும் ? மிஞ்சிப் போனால், போஸ்டர் அடித்து ஒட்டியும், மைக்கைப் பிடித்துக் கத்தியும் போராட்டம் செய்வீர்கள் ? என அதிகாரத் திமிரோடு பேசியதை அம்பலப்படுத்திய தோழர், தொழிலாளர்களை வன்முறையைத் தூண்டுவதற்கு இது போன்ற அதிகாரிகளின் தொழிலாளர் விரோத சட்ட விரோத நடவடிக்கைகள் தான் காரணம் என்பதை விளக்கினார். மேலும், தொழிலாளர் பிரச்சினைகளுக்காக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இது போன்ற முன்னெடுப்புக்களுக்கு எப்போதும் துணை நிற்போம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக உரையாற்றிய, புதுச்சேரி புஜதொமு-வின் மாநில இணைச் செயலாளர் தோழர் லோகநாதன், மாருதி தொழிலாளர்களின் போராட்டம் குறித்து விளக்கி, அத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது, அவர்களை மிரட்டி தொழிலாளர் போராட்டங்களை நசுக்குவதற்குத் தான். அதன் வெளிப்பாடு தான் தீர்ப்பு வழங்கப்படும் தினத்தில் மாருதி நிறுவனம் அமைந்துள்ள மானேசர் தொழிற்பேட்டை வட்டாரத்தில் பல்லாயிரக்கணக்கான கலவரத் தடுப்புப் போலீசாரைக் குவித்து, தொழிலாளர்கள் மீண்டும் சேர்ந்து தங்களது எதிர்ப்பைக் காட்டி விடக்கூடாது என அச்சுறுத்தியது. ஆனால், அந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர் ஒன்று கூடி தீர்ப்புக்கு முன்னதாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

மேலும், தொழிலாளர்களை மட்டுமல்ல, ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும் ஒடுக்கும் கருவியாகத் தான் அரசு உள்ளது என்ற மார்க்ஸின் வரிகளைச் சுட்டிக் காட்டி, கருப்புப் பண ஒழிப்பு என்று சொல்லி, பணமில்லாப் பரிவர்த்தனை, வங்கி இருப்பு அதிகரிப்பு என மக்களைச் சுரண்டுவது, உலக நாடுகள் வரையிலும் பேசப்படும் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை, மோடி கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் தவிர்ப்பது, என உழைக்கும் மக்கள், விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினார். மேலும், தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் ஒடுக்குவதில் அரசும், இவ்வொடுக்குமுறைகளை மூடி மறைப்பதன் மூலம் பத்திரிக்கைகளும் தங்களுக்குள் கள்ளக் கூட்டு வைத்துச் செயல்படுவதையும் தோலுரித்தார்.

ஆனால், அரசு நினைப்பதைப் போல், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என உழைக்கும் மக்களின் போராட்டங்களை கண்டும் காணாமல் புறக்கணிப்பதன் மூலமோ, போலீசு, நீதிமன்றங்களின் மூலமோ, நசுக்கி ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்பது அறிவியலுக்கு புறம்பானது. ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வு என்பது நீரில் மிதக்கும் காற்றடைத்த பந்தைப் போன்றது. அதை என்ன தான் முயற்சி செய்து தண்ணீருக்குள் அமிழ்த்தினாலும், இறுதியில் அது நீரின் மேலே தான் எழும்பி நிற்கும்.

உழைக்கும் மக்களின் ஒவ்வொருவர் மனதில் எழும்பி நிற்கும் உணர்வை அரசின் எந்த ஒடுக்குமுறையாலும் நசுக்கி விட முடியாது. அந்த உணர்வை ஒன்று பட்ட வர்க்க உணர்வாக மாற்றி, முதலாளித்துவத்தை அடித்து நொறுக்கி அமிழ்த்துவதன் மூலம், உழைக்கும் மக்களுக்கான உண்மையான அதிகாரத்தைப் படைத்து நமது பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதற்கான சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் போராட்டமாக இதை மாற்றுவோம் என்று கூறி நிறைவு செய்தார்.

இறுதியாக நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்!
போலிசு – நீதிமன்றம் – போலிசு கூட்டுச்சதியை முறியடிப்போம்!
ஆயுள்தண்டனையை ரத்து செய்யும் வரை போராடுவோம்!
தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக தக்க பதிலடி கொடுப்போம்!
முதலாளிகளைப் பாதுகாக்கும் அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவோம்!
பாட்டாளி வர்க்க அரசை கட்டியமைப்போம்!

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு தோழர் பழனிசாமி, 95977 89801.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க