Saturday, September 18, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் திருச்சியில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் !

திருச்சியில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் !

-

மாருதி தொழிலாளர்களின் சிறைமீட்புக்கான நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது மாருதி தொழிலாளர் சங்கம்.  அதனை ஆதரித்து திருச்சியில் பு.ஜ.தொ.மு சார்பில் கடந்த 06.04.2017 அன்று மாலை மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஹோட்டல் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராசு தலைமை தாங்கினார். ம.க.இ.க. திருச்சி மாவட்ட செயலர் தோழர் ஜீவா பேசியதை அடுத்து, சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்கள் பேசினார்.

சங்கம் என்றாலே முதலாளிக்கு பிடிக்காது. முதலாளித்துவம் தோன்றி 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் முன் வைக்கும் எந்த கோரிக்கையையும் முதலாளிகள் நிறைவேற்றுவதில்லை. மாறாக தொழிற்சங்கத்தை முடக்குவது, தலைவர்களை தண்டிப்பது போன்ற  நடவடிக்கை மூலம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். முதலாளிகள் இன்று அடியாட்கள் வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். மாருதி ஆலை தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க ஆலை நிர்வாகமே HR அதிகாரிக்கு தீவைத்து விட்டு பழியை தொழிலாளர்கள் மீது போட்டது. 90 தொழிலாளர்களை கைது செய்தனர். 1வாரம் கழித்து மேலும் 50 தொழிலாளரகளை கைது செய்தது. ஆண்டுக்கணக்கில் பிணை வழங்காமல் சிறையில் அடைத்து வைத்துள்ளது. இதனை எதிர்த்து தொடர்ந்து நான்காண்டுகள் போராடியும் குற்றம் நிருபிக்கப்படாமலேயே   தற்போது 117 பேர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 31 தொழிலாளிக்கு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது நீதிமன்றம். இத்தொழிலாளர்களது குடும்பங்கள் இதுநாள் வரை பட்ட துன்ப துயரங்கள் எத்தனை, எத்தனை குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. எத்தனை பேர் செத்து மடிந்துள்ளனர். இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

எந்த முதலாளியாவது சட்டப்படி நடக்கின்றானா ? முறையான வேலை, சம்பளம், விடுப்பு, உரிமை தொழிலாளிகளுக்கு வழங்குகின்றார்களா ? உரிமையை பறித்தெடுத்த முதலாளிகள் யாராவது தண்டிக்கப்பட்டுள்ளார்களா ? இதனை நீதிபதிகள் என்றைக்காவது  கண்டித்தது உண்டா ? நீதித்துறை ஒழுங்கு பற்றி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கொடுத்த பேட்டியை படித்து பாருங்கள் நீதிபதிகள் யோக்கிதையை சந்தி சிரிக்க வைத்துள்ளார். இவர்கள் தான் தொழிலாளர்களை குற்றவாளிகள் என சித்தரிக்கின்றனர். மாருதி ஆலைக்குள் உள்ள 13 தொழிற்சங்கத்தை நிர்வாகம் முடக்கியுள்ளது.

ஜெயா குற்றவாளி என தீர்ப்பு வந்த போது 3 மாணவிகளை தீவைத்து கொளுத்திய அ.தி.மு.க. ரவுடிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சங்கரராமனை கோயில் கருவறையிலேயே வைத்து கொலை செய்த சங்கராச்சாரிக்கு 1 மாதத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. மணல் கொள்ளையன் சேகர் ரெட்டிக்கு 3 மாதத்துக்குள் பிணை வழங்கப்பட்டது. தவறான சிகிச்சை அளித்து 13 பேர்கள் கொல்லப்பட்டனர். இதில் குற்றவாளியான மருத்துவருக்கு ஒரு மாதத்தில் பிணை வழங்கப்பட்டு பின் அவர் அரசு மருத்துவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். தாமிரபரணி நீரை உறிஞ்சும் கோக் நிறுவனம் சொன்னதை அங்கீகரித்து நீதி மன்றம் உத்தரவு போட்டுள்ளது. ஆனால் மாருதி தொழிலாளர்களுக்கோ 4 ஆண்டுகள் கழிந்தும் பிணை வழங்க மறுப்பது என்ன நீதி?  ஆகவே நீதி மன்றம் பெறும் பணக்காரர்களுக்கும் கிரிமினல் கும்பளுக்காக  மட்டும்தான்  செயல்படுகின்றது..

இயற்கை வளங்கள் அனைத்தையும் சூறையாடப்படுகின்றது. இதனை வளர்ச்சி என சொல்கின்றார்கள். இதனை எதிர்ப்பவர்களை போலீசை வைத்து நசுக்குகின்றார்கள். இந்த போலீசு – நீதி மன்றம் – அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளார்களோடு ஒன்றிணைவோம் !  போராடுவோம்! என தனது உரையை முடித்தார்.

இடையிடையே ம.க.இ.க தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம், தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், ம.க.இ.க, பு.மா.இ.மு உள்ளிட்ட முன்னணியாளர்கள் உள்ளிட்டு திரளான தொழிலாளிகளும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியாக ஆ.ஓ.பா.சங்கத்தின் தலைவர் தோழர் கோபி அவர்கள் நன்றியுறையாற்றினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க