Saturday, September 18, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க சொத்துக் குவிப்பு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் !

சொத்துக் குவிப்பு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் !

-

ழலுக்கு எதிரான சண்டமாருதம் என்றும் எச்சரிக்கை என்றும் பலவாறாக கொண்டாடப்பட்டது ஜெயா – சசி ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. இந்த வழக்கில் துவக்கம் முதலே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு எப்படியெல்லாம் உதவி வந்திருகிறார்கள் என்பதையும், இத்தீர்ப்பு திட்டமிட்டே தாமதிக்கப்பட்டிருப்பதையும், தீர்ப்பில் உள்ள நிழலான பகுதிகள் குறித்தும் புதிய ஜனநாயகத்தில் எழுதியிருந்தோம்.

முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கும் மற்ற மூன்று குற்றவாளிகளுக்கும் இடையிலான உறவும், குற்றத்தில் ஜெயலலிதாவின் பாத்திரமும் உண்மை விவரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கின்றன என்ற போதிலும், அவர் இறந்து விட்ட காரணத்தினால், அவருடைய மேல் முறையீடு அற்றுப் போய்விட்டது (abated) என்று தனது தீர்ப்பில் கூறியிருந்தது உச்ச நீதிமன்றம். அற்றுப் போய்விட்டது என்று குறிப்பிட்டிருப்பதன் பொருள் என்ன என்ற கேள்வி அப்போதே எழுந்து விட்டது.

வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் நீதிபதி குன்ஹா

இறந்தவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க முடியாது என்பது எதார்த்தம். அபராதத்துக்கு ஜெயலலிதா விலக்குப் பெற முடியாது. ஏனென்றால், அதை வசூலிக்கும் சாத்தியங்கள் நிரந்தரமானவை. நீதிபதி குன்ஹா வசூலிக்கும் முறை என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் என்று தீர்ப்புக்கு விளக்கமளித்தார் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆசார்யா. மரணம் என்பது குறிப்பிட்ட நபருக்கு எதிரான வழக்கைத்தான் முடிவுக்கு கொண்டு வருகிறதேயொழிய, அவருடைய சொத்துக்கு எதிரான வழக்கை அல்ல என்பதுதான் சட்டம்.

முறைகேடாக சேர்த்த சொத்துகள் முழுவதும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படவேண்டும். குற்றவாளிகள் தாங்கள் நியாயமாக சம்பாதித்த பணத்திலிருந்து அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்பது குன்ஹாவின் தீர்ப்பு. அவருடைய தீர்ப்பை முழுமையாக ஏற்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்த போதிலும், ஜெயலலிதா தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்த வரிகள் சந்தேகத்துக்கிடமானவையாக இருந்த காரணத்தினால் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது கர்நாடக அரசு.
“மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்தான் குற்றவாளி இறந்திருக்கிறார் என்பதால், மேல்முறையீடு அற்றுப்போதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. குற்றவாளி இறப்பதற்கு முன் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அதற்கு என்ன வலிமையும் விளைவும் இருக்குமோ அது மரணத்துக்குப் பின்னரும் இருக்கும்… எனவே ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்முறையீடு அற்றுப்போய்விட்டதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது, வெளிப்படையாகத் தெரிகின்ற சட்ட ரீதியான தவறு. தீர்ப்பில் உள்ள இந்த தவறு திருத்தப்படவேண்டும் ” என்றும் இது குறித்த தங்களது வாதுரைகளை முன்வைக்க நீதிபதிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் தனது சீராய்வு மனுவில் கோரியிருந்தது கர்நாடக அரசு.

கர்நாடக அரசின் வாதுரைகளைக் கேட்கக் கூட மறுத்த நீதிபதிகள் (குமாரசாமிகள்) பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய்.

ஆனால் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளான பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர், கர்நாடக அரசின் வாதுரைகளைக் கேட்பதற்குக் கூட மறுத்து மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். இதன் பொருள், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஜெயா குற்றவாளி இல்லை என்பதுதான். எனவே அரசு அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவோ அபராதத்தை வசூலிக்கவோ முடியாது என்று விளக்கமளிக்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

நாலும் மூணும் எட்டு என்று கணக்கு போட்டு ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியின் கணக்கையும் தீர்ப்பையும் பார்த்து நாடே கைகொட்டிச் சிரித்தது. மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றமோ 4+3= 0 என்று தீர்ப்பளித்து ஜெயாவை விடுவித்திருக்கிறது.

கொடநாடு, பையனூர் பங்களா, மிடாஸ் உள்ளிட்ட எந்த திருட்டுச் சொத்தும் பறிமுதல் செய்யப்படவில்லை. அனைத்தையும் மன்னார்குடி மாபியா கேட்பாரின்றி அனுபவித்துக் கொண்டிருக்கிறது. போயஸ் தோட்டத்தில் தினகரன் ஆட்சி. தனது தலைமையகத்தை தற்காலிகமாக பரப்பன அக்கிரகாராவுக்கு மாற்றியிருக்கிறார் சின்னம்மா.

-புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017

  1. அவ்வளவுதான் ஜெயாவின் அத்தியாயம் முடிந்துவிட்டது. இனிமேல் தமிழகப் பாடப்புத்தகங்களில் இந்த அம்மையார் புனிதர், தியாகி என்பதான கட்டுக்கதைகள் பரப்பப்படும். இனி அந்த அம்மாவின் சொத்துக் குவிப்பு பற்றி யார் போராடுவது?

  2. வெள்ளை வெள்ளைதான் கறுப்பு கறுப்புதான். ஆரியம் வெள்ளை திராவிடம் கறுப்பு. குற்றங்களும் கொள்ளைகளும் கொலைகளும் கற்பழிப்புகளும் அப்படித்தான். அவாள் எல்லாம் வெள்ளை தெய்வீகம் நிறைந்தவர்கள். சுதந்திர இந்தியாவிலும் மனு தர்ம (?) ஆட்சி◌தான் நடக்கிறது.

    ஈழம் தொடக்கம் கஸ்மீரம் வரை இதுதான் உண்மை நிலை கச்சதீவுக் கடலில் தமிழ் மீனவர் சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்படுவதும் அவர்களின் படகுகள் சொத்துகள் பறிக்கப் படுவதும் புதுடில்லி ஜன்தர் மன்தரில் தமிழ் விவசாயிகள் நடத்தப் படுவதும் ஒன்றேதான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க