Wednesday, March 3, 2021
முகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் ஆதார் - மீப்பெரும் மின்தரவுக் கிடங்கு : மக்களை ஒடுக்கும் டிஜிட்டல் ஆயுதம்

ஆதார் – மீப்பெரும் மின்தரவுக் கிடங்கு : மக்களை ஒடுக்கும் டிஜிட்டல் ஆயுதம்

-

”உங்களுடைய வீட்டுப் பணியாளர்கள், கார் ஓட்டுநர், எலக்ட்ரீசியன், வீட்டு வாடகைக்காரர்கள், யாராயிருந்தாலும் ஆதாரை அடிப்படையாக கொண்ட எங்களுடைய ஆண்டிராய்ட் ஆப் மூலம் அவர்களது பின்னணியை பரிசோதித்துக் கொள்ளலாம்” என்கிறது அந்த ட்ரஸ்ட் ஐடி(TrustID) என்ற கம்பெனியின் விளம்பரம். “முகத்தைப் பார்த்து நம்பாதீர்கள், ட்ரஸ்ட் ஐடியைப் பாருங்கள்” என்கிற முழக்கத்தை வைத்துள்ளது அக்கம்பெனி.

டிரஸ்ட் ஐடி - யின் விளம்பரம்
டிரஸ்ட் ஐடி – யின் விளம்பரம்

அதாவது எந்த ஒரு தனிநபராக இருந்தாலும், அவரது தனிப்பட்ட தகவல்களை ஒரு தனியார் நிறுவனத்திற்கு காசு கட்டி நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதே மேற்படி விளம்பரத்தின் பொருள். ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் இந்தியக் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களைக் கையாள்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், உச்சநீதிமன்றமே ஆதாரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்பாடுத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ள நிலையிலும் தான் மேற்கண்ட விளம்பரம் வெளியாகியிருக்கிறது.

அரசின் நலத்திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் (இடைத்தரகர்களுக்குச் செல்லாமல்) நேரடியாக மக்களிடம் சென்று சேர்வதை உத்திரவாதப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படவுள்ள ஒரு பிரத்யேக அடையாள எண்ணாகத் தான் முதலில் ஆதாரைச் சொன்னது அரசு. ஆனால், ஆதாரின் மூளையான நந்தன் நிலேகானி ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு வகையான வியாக்கியானங்களை சொல்லி வந்திருக்கிறார்.

“ஆதார் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல – அது ”அடையாள செயற்தளம்” (Identity Platform)” என்று 2011-ம் ஆண்டு பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர் கருத்தரங்கு ஒன்றில் பேசும் போது குறிப்பிட்டுள்ளார். இதன் பொருள், ஆதாரை ஒட்டுமொத்த மக்களுடைய அடையாளங்களின் மீப்பெரும் மின்தரவுக் கிடங்காக அரசு உருவாக்கியுள்ளது.

மீப்பெரும் மின்தரவுக் கிடங்கு என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது, அதைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

ஆதார் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது; செல்போன் இணைப்பு பெற ஆதார் எண் அவசியம்; ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு நபருக்கு நபர் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இந்தப் போக்குகள் மெல்ல மெல்ல இந்தியர்களுடைய வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக ஆதார் மாற்றப்பட்டு வருகிறது.

ஒரு தனி நபரின் கடன் எவ்வளவு, யாருக்குப் பணம் கொடுக்கிறார், யாரிடம் வாங்குகிறார், சம்பளம் எவ்வளவு, அந்தச் சம்பளத்தில் வீட்டுக்கு செலவு செய்வது எவ்வளவு சேமிப்பது எவ்வளவு என்பவை உள்ளிட்டு அந்த தனிநபரின் பொருளாதார செயல்பாடுகளில் துவங்கி, அவர் ஓய்வு நேரத்தில் எந்த மாதிரியான திரைப்படங்கள் பார்க்கிறார், செல்பேசியில் எத்தனை நேரம், எதற்காக செலவிடுகிறார் என்பன போன்ற அவரது சமூக செயல்பாடுகள் வரை கண்காணிக்க முடியும்.

நூற்றி முப்பது கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மின்தரவுகளாக சேமிக்கப்படுவது அரசுக்கும் முதலாளிகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது.

உதாரணமாக, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இணையத்தின் மூலம் கட்டணம் செலுத்தி நீங்கள் வாங்கிப் படிக்கும் நூல்கள், பார்க்கும் படங்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு உங்களது ஆர்வம், ஆளுமை, பண்புகள் எவ்வாறிருக்கும் என்பதை கணிக்கும் கணினி செயலிகளை உருவாக்க முடியும். இது போன்ற செயலிகள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒரு முதலாளி தன்னிடம் வேலைக்குச் சேர முன்வரும் ஒருவரை வேலைக்குச் சேர்க்கலாமா அல்லது பணிநீக்கம் செய்யலாமா என்பதை முடிவு செய்ய முடியும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் விளம்பரத்தின் உட்பொருளும் இது தான்.

நூற்றி முப்பது கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மின்தரவுகளாக சேமிக்கப்படுவது அரசுக்கும் முதலாளிகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது.

அரசைப் பொருத்தவரை மக்களை சதாகாலமும் கண்காணிக்க முடியும். மேலும் மீப்பெரும் மின்தரவுகளை செயற்கை அறிதிறனுடன் (Artificial Intelligence) இணைக்கும் தொழிநுட்ப சாத்தியமும் உள்ளது. அவ்வாறு செய்யப்படும் போது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட நபர் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கும் சாத்தியங்கள் உள்ளன என்பதை (ஆதார் மூலம் இணைக்கப்பட்டு, மீப்பெரும் மின்தரவுக் கிடங்கில் சேமிக்கப்பட்டிருக்கும்) விவரங்களைக் கொண்டு கணிக்க முடியும். இவ்வாறு கணிக்கும் போது வந்தடையும் முடிவுகள் எந்தளவுக்குத் துல்லியமாக இருக்கும் என்பதும் அது சரியாக இருக்குமா என்பதும், இவ்வாறு மனிதர்கள் குறித்த தீர்மானங்களைக் கணினிகள் எடுப்பது சரிதானா என்பதும் அறிவியல் உலகில் இன்னமும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் இன்றைக்கே மக்களின் வாசிப்பு, ரசனை, அரசியல் தரம், சமூக உணர்வு அத்தனையும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களாலேயே திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது மேற்கண்ட ஆய்வு முற்றிலும் சாத்தியமல்ல என்று ஒதுக்கிவிட முடியாது.

அறிவியல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் ஒருபுறமிருக்க – “எனது செயல்பாடுகளை அரசு கண்காணிப்பதில் என்ன தவறிருக்கிறது? நான் என்ன தீவிரவாதித்திலா ஈடுபட்டுள்ளேன்?” என்பது போன்ற பாமரத்தனமான, அடிமுட்டாள்தனமான வாதங்களும் இணைய விவாதங்களில் முன்வைக்கப்படுகின்றன. ஒரு சமூகத்தையும் அதன் மனிதர்களையும் கண்காணிப்பது என்பது அவர்களை மொத்தமாக கட்டுப்படுத்துவதற்கான முன்நிபந்தனை என்பதையும் அது அடிப்படையான மக்கள் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது என்பதையும் “இராணுவ ஆட்சி வந்தா எல்லாம் சரியா போயிடும் சார்” என்று முந்தைய காலங்களில் பிதற்றிக் கொண்டிருந்த ஐஏஎஸ் ஐபிஎஸ் வகையான பாமர மூளைகள் புரிந்து கொள்ளவில்லை.

ஆதாரின் உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ஓரளவு ஜனநாயக உணர்வுள்ளவர்கள் அதைக் கேள்வி கேட்கத் துவங்கியுள்ளனர். ஆதாரைக் கேள்விக்குள்ளாக்குபவர்களையும் உச்சநீதிமன்றத்தில் ஆதாருக்கு எதிராக நடக்கும் வழக்கின் தீர்ப்பு அரசுக்கு ஆதரவாகவே இருக்கும்  என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கூட அபாயம் என்பது ஆதாரின் வடிவத்தில் மட்டும் இல்லை.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு தேசிய புலனாய்வுச் சட்டகத்தை (நேட்கிரிட் : NATGRID – Nationlan Intellingence Grid) புனரமைத்துள்ளது. வங்கிப் பரிவர்த்தனைகள், கடனட்டைகள், குடியேற்றத் துறை, இரயில்வே பயண விவரங்கள், விமான பயண விவரங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் காவல்துறை மாநில புலனாய்வு அமைப்புகள் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்டு 21 துறைகளின் மின்தரவுகளை ஒருங்கிணைக்கும் மையமாக நேட்கிரிட்டின் செயல்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது மோடி அரசு.

நேட்கிரிட்டுடன் ஆதார் விவரங்களையும் – ஆதார் எண்ணால் இணைக்கப்பட்ட பல்வேறு பொருளாதார பரிவர்த்தனை, செல்பேசி உரையாடல் விவரங்கள் மற்றும் இன்னபிற விவரங்களையும் இணைப்பது தொழில்நுட்ப ரீதியில் எளிதானது. அப்படி இணைக்கப்பட்டிருப்பதான செய்திகள் இதுவரை வெளியாகவில்லை எனினும், ஏற்கனவே அப்படியான ஒரு இணைப்பு செய்யப்பட்டிருந்தால் வியப்பதற்கு ஏதுமில்லை.

மனிதப் புலனாய்வையே (Human Intelligence) முந்தைய காலங்களில் அரசுகள் சார்ந்திருந்தன. இதனிடத்தில் பல்வேறு தகவல்மூலங்களில் இருந்து பெறப்பட்ட மின்தரவுகளை சேமிக்கும் மீப்பெரும் மின்தரவுக் கிடங்குகளை (Big Data Lakes) உருவாக்குவது, அதின் விவரங்களை செயற்கை அறிதிறன் பெற்ற கணினிகளின் மூலம் சலித்தெடுத்து முன்னறிப் புலனாய்வு முறையை (predictive intelligence) புகுத்தும் முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகின்றது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை (அது நடந்த பின் அல்லது நடக்கும் முன்) யார் செய்திருக்க முடியும் (அல்லது செய்ய முடியும்) என்பதை அனுமானிக்கும் சாத்தியங்களை தொழில்நுட்பம் வழங்குகின்றது.

அவரை கேள்விக்கேட்ட பத்திரிகையாளரை தேசவிரோதி என்று கூறிய பாரதிய  ஜனதாவின் ஹெச்.ராஜா

இது ஒரு மாபெரும் தொழில்நுட்ப பாய்ச்சல் என்று தூய அறிவியல்வாதிகள் கொண்டாடலாம். ஆனால், அந்த தொழில்நுட்பத்தை யார் எந்த நோக்கத்திற்காக எந்த மக்களின் மேல் பிரயோகிக்கிறார்கள் என்பதே நமது கவலைக்குரியதாகும். இந்த தொழில்நுட்ப சாத்தியங்களை அமெரிக்கா எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தியது என்பதையும் அதனால் தனிநபர் சுதந்திரம் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டது என்பதையும் ஸ்நோடன் அம்பலப்படுத்தினார். இங்கோ மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலே உச்சநீதிமன்றத்தில் தனிநபர் சுதந்திரம் என்பது அரசியல் சாசனத்தால் உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என வாதிடுகிறார்.

மோடி அதிகாரத்திற்கு வந்த பின் நாடு மொத்தமும் காவிமயமாக்கும் வெறியுடன் செயல்பட்டு வருகின்றது இந்துத்துவ கும்பல், தமது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ள அனைவரையும் தேச விரோதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கின்றனர் – இதற்கு அவர்கள் குறைந்தபட்சமாக கூட கூச்சப்படுவதில்லை. சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மோடி அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரை நோக்கி “தேச விரோதி” என சீறினார் பாரதிய ஜனதாவின் ஹெச்.ராஜா.

ஹெச்.ராஜா போன்றவர்களின் கட்டுப்பாட்டில் மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்ற தொழில்நுட்பங்கள் சென்று சேர்ந்தால் என்ன நடக்கும்? அந்த பத்திரிகையாளர் தேசவிரோதி தான் என்பதற்கான ’தரவுகளுடன்’ மறுநாள் காலை போலீசார் அவரது வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருப்பார்.

ஆதார், மீப்பெரும் மினதரவுக் கிடங்குகள், செயற்கை அறிவு துணையுடன் மனிதர்களின் செல்நடத்தையை முன்னோக்கி அறிவதும், அந்த அறிதலை முன்வைத்து அரசியல் -பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை வகுத்துக் கொள்வது இவர்களது நோக்கம். இது மக்களின் சிவில் அரசியல் உரிமைகளை காவு கொடுப்பதோடு அதில் முன்னணியாளர்களாக இருக்கும் இடதுசாரி முற்போக்கு அமைப்புக்களின் தோழர்களையும் ஆதரவாளர்களையும் முடக்க நினைக்கிறார்கள். இன்னொருபுறம் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முதலாளிகளின் ஏகபோகத்திற்கும் இந்த புதிய வகை ஆதார் திட்டம் பயன்படும். இப்படி இரண்டு புறங்களிலும் நம்மை அடிக்கப் போகிறது ஆதார் திட்டம்.

நேட்கிரிட், ஆதார் குறித்த இணைய விவாதம் ஒன்றில் ”எந்த நேரமும் சமூகத்தைக் கண்காணிப்பதும் எச்சரிக்கையாக இருப்பதும் அதன் பாதுகாப்பை உத்திரவாதிப்படுத்திக் கொள்வதற்கு தானே.. அதில் ஓரிரு நல்லவர்கள் பாதிக்கப்பட்டாலும் கூட மொத்த சமூகத்திற்குமான பாதுகாப்பு முக்கியமானதல்லவா?” என வாதிட்டுக் கொண்டிருந்தார் மோடி பக்தர் ஒருவர். அதீத பாதுகாப்புடன் உடலுக்குள் இருக்கும் நல்ல செல்களைக் கூட நோய் கிருமிகள் என சந்தேகப்பட்டு தாக்கியழிப்பதற்கு பெயர் நோயெதிர்ப்பு சக்தியல்ல – கான்சர்.

உடலை அரிக்கும் கான்சரைப் போல் நாட்டைப் பீடித்து வருகிறது இந்துத்துவ கும்பல். புற்றுநோயை வெட்டி எறியாமல் நமது ஆரோக்கியத்தை மீட்க முடியாது.

– முகில்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க