Thursday, December 12, 2024
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுயார் தீவிரவாதி ? தருமபுரி பாலக்கோட்டில் தூளான டாஸ்மாக் கடை !

யார் தீவிரவாதி ? தருமபுரி பாலக்கோட்டில் தூளான டாஸ்மாக் கடை !

-

ருமபுரி   பாலக்கோடு அருகே  அண்ணாமலைஅள்ளி  பகுதி பொதுமக்கள், பெண்கள்  மக்கள் அதிகாரம் அமைப்புடன்  இணைந்து  அப்பகுதியில்   உள்ள  டாஸ்மாக்கை  அடித்துநொறுக்கி  போராட்டம் நடத்தினர். தமிழகம்   முழுவதும்  தேசிய நெடுஞ்சாலைகளில்  இருக்கும்  டாஸ்மாக்கை  மூடவேண்டும் என்று  உச்சநீதிமன்றம்  உத்தரவு போட்டதை  அடுத்து   ஊருக்குள்  டாஸ்மாக்  திறந்து  ஊரை கொள்ளையடிக்கும்  கொள்ளைக்காரனைப் போல    ஆட்டம்   போடுகிறது  தமிழக அரசு.

இதற்கு  எதிராக   எங்கள் ஊரில்  டாஸ்மாக்கை  அனுமதிக்க மாட்டோம்   என்று  அன்றாடம்  டாஸ்மாக்கை  அடித்து நொறுக்குகின்றனர் மக்கள். இந்நிலையில்  உயர்நீதி மன்றம்  டாஸ்மாக்கை எதிர்த்து  போராடக் கூடிய மக்களை  கைது செய்ய கூடாது என்று  உத்தரவு  இருந்தும்  அதனை  மாவட்ட  நிர்வாகம்  கால்தூசுக்கும்  மதிப்பதில்லை. அதைத்தான்  தருமபுரியிலும்  அரங்கேற்றியிருக்கிறது .

தருமபுரி  மாவட்டம்  பாலக்கோடு அருகே  அண்ணாமலைஅள்ளி பகுதியில் உச்சநீதிமன்ற உத்தரவை  மீறி  டாஸ்மாக் கடை  செயல்படுவதை    அறிந்த  மக்கள்   உடனே    மக்கள்  அதிகாரம்  அமைப்பை  அழைத்தனர். கடந்த  ஒரு வாரமாக  அப்பகுதியில்   பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் மக்கள் அணிதிரண்டு   13.05.2017 அன்று   காலை 10 மணியளவில்   கடையின்  பூட்டை உடைத்து  மது பாட்டில்களை   எடுத்து  வெளியே வீசி, உடைத்து நொறுக்கி  சுமார்  1  மணிநேரத்திற்கும்  மேலாக  போராட்டம் நடத்தினர்.  அதுவரை அமைதியாக  வேடிக்கை  பார்த்துக் கொண்டிருந்த  காவல்துறை   திடீரென்று  போராடியவர்களை  தரதரவென்று  இழுத்து  80 பெண்கள், 30  ஆண்கள்  என அனைவரையும்  கைது செய்து  மண்டபத்தில்  அடைத்தது.

பிறகு  மக்கள் அதிகாரம்  அமைப்பை   சார்ந்த   தோழர்கள் சிவா,கோபிநாத்  இருவரையும்  மண்டபத்தில்  இருந்து தனியாக  கடத்த  முயற்சித்தனர்.  அப்போது  அந்த பெண்கள்  தோழர்களின்  கையை  பிடித்துக்கொண்டு  நாங்கள் அவர்களை  தனியாக  விடமாட்டோம் . அவர்களை  விடவில்லை என்றால்  நாங்களும்  அவர்களோடு வருவோம். என்று  விடாப்பிடியாக  போராடினர்.  இருந்தும்  அவர்களை   தனியாக   கடத்தி  சென்றது போலீசு. இதனை  அறிந்து   வெளியில்  நின்று  கொண்டிருந்த அப்பகுதி    பெண்கள்   40-க்கும்  மேற்பட்டோர்  மறியல்  செய்வதற்கு   தயாராகும்  போது  இடைமறித்த  காவல்துறை,   மக்கள் அதிகாரம்  அமைப்பு  தோழர்களை  குறிப்பிட்டு   அவர்கள்  நக்ஸலட்டுக்கள், தீவிரவாதிகள்   அவர்களோடு  போராட வந்துட்டீங்க  என்று  அப்பெண்களை   அச்சுறுத்தியது.

அதற்கு  அந்த  பெண்கள்  யாரை  பார்த்து   தீவிரவாதி  என்கிறீர்கள் ,நக்ஸலட்டுகள்  என்கிறீர்கள்   அவர்கள்   எங்களுக்காக    போராட  வந்துருக்கிறார்கள்.  நீங்கதான்  தீவிரவாதி  என்று   காவல்துறையின் அச்சுறுத்துலுக்கு  அஞ்சாமல் பெண்கள்    பதிலடிகொடுத்தது    காவல்துறையை  அச்சம் கொள்ள வைத்தது.

கடத்தி  சென்ற  தோழர்களை  விடவில்லை  என்றால்   நாங்கள்   இரவு ஆனாலும்  போகமாட்டம்  என்று  தொடர்ந்து  போராடினர். ஆனால்  இந்த  இரண்டு தோழர்களையும்  கடத்தி சென்று   கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.   இந்நிலையில் மண்டபத்திற்கு   வெளியில்  இருக்கும்   அப்பகுதி  பெண்கள்,  ஆண்களை  மக்கள்  அதிகாரம்   மண்டல  ஒருங்கினைப்பாளர்   முத்துக்குமார் மீண்டும்  போராடுவதற்கு  ஒருங்கிணைக்கும் போது, தருமபுரி  எஸ்பி    முத்துக்குமாரை   அவர் யார்? என்று அப்பகுதி மக்களிடம்  கேட்டு  அவரை   கைது செய்ய   காவல் துறை  முயற்சித்தது.

அப்பகுதி  மக்கள்    அவரும்  எங்க  ஊருக்காரர்தான்  என்று  அவர்களிடம்  வாக்குவாதத்தில்  ஈடுபட்டு  அவர்களோடு   அழைத்து  சென்றனர். காவல்துறை ஆதரவோடு  மீண்டும் இந்த கடையை  திறந்தால்  நாங்கள்  மீண்டும் அடித்து நொறுக்குவோம், என்று  போராட தயாராகி  வருகின்றனர்.  இனியும்  தீவிரவாத  பீதியூட்டி  மக்கள்  போராட்டங்களை  ஒடிக்கிவிடலாம்  என்று  நினைக்கும்  ஆளும் வர்க்க  கனவை  அண்ணாமலைஅள்ளி    மக்கள்  தவிடு பொடியாக்கி விட்டனர். இதுபோன்ற  துணிச்சலான மக்கள்  போராட்டங்கள் தான்   அனைத்து  பிரச்சனையையும்  தீர்க்க முடியும் என்பதை அப்பகுதி மக்களுக்கு அரசும் போலீசும் உணர்த்திவிட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள்  அதிகாரம், தருமபுரி
தொடர்புக்கு: 80152 69381.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க