பசுவின் பெயரால் இன்னொரு கொலை நடந்திருக்கிறது. கறவை மாடு வாங்கிச் சென்ற பெஹ்லு கான் என்ற 55 வயது பால் வியாபாரி, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் இந்துத்துவ கிரிமினல்களால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்.
அக்லக் கொலை, ஊனாவில் தலித் மக்கள் மீதான தாக்குதல் போன்ற ஒரு சில நிகழ்வுகள் தேசிய ஊடகங்களில் பேசப்படுகின்றன. அவ்வாறு பேசப்படாமல், கணக்கில் வராத தாக்குதல்களும் கொலைகளும் அதிகரித்து வருகின்றன. எப்படி அன்றாட நிகழ்வாக நிறுவனப் படுத்தப்பட்டிருக்கும் தலித் மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைகளில் ஒரு சில மட்டும்தான் வெளியுலகுக்குத் தெரிய வருகின்றனவோ, அப்படி மாறி வருகின்றன இஸ்லாமிய மக்களின் மீதான தாக்குதல்கள்.
மாட்டைக் கொன்றார்கள் என்பதில் தொடங்கி “மாட்டைக் கொண்டு சென்றார்கள், மாட்டுக்கறி வைத்திருந்தார்கள், வைத்திருப்பதாக சந்தேகிக்கப் பட்டார்கள்” என்று கொலைகளுக்கும் தாக்குதல்களுக்குமான காரணங்கள் மென்மேலும் அற்பமானவையாக மாறி வருவதை சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்துள்ள சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
பெஹ்லு கான் அரியானா மாநிலம் ஜெய்சிங்பூரைச் சேர்ந்தவர். ராஜ்புத் சாதியிலிருந்து இஸ்லாமியர்களாக மாறிய மியோ முஸ்லீம்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர். அந்த ஊரின் மியோ முஸ்லீம்களில் பெரும்பான்மையோர் நிலமற்ற விவசாயிகள். கான், அவ்வப்போது காய்கறி விற்பார். குத்தகை விவசாயமும் செய்வார். வயதான தாய், மனைவி, இரண்டு மகன்கள், திருமணமாகாத இரண்டு பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு இப்படிப் பல தொழில்கள் செய்து அவர் ஈட்டும் வருமானம் மாதம் 8,000 முதல் 12,000 ரூபாய்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று புதிதாகப் பசுமாடு வாங்க ஜெய்ப்பூர் கால்நடைச் சந்தைக்கு தன் இரண்டு மகன்களுடன் சென்றிருக்கிறார் கான். எருமை மாட்டைவிடப் பசுமாடு விலை குறைவு என்பதால், கன்றுகளுடன் இரண்டு பசுமாடுகளை வாங்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, டில்லி – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆல்வார் என்ற இடத்துக்கு அருகே பஜ்ரங் தள் கும்பலைச் சேர்ந்த பத்து பேர் அவரை வழி மறித்திருக்கின்றனர். இதற்கிடையில் இந்த தாக்குதல் நடந்து கொண்டிருந்த போதே, அவருடன் சந்தைக்கு வந்த ஊர்க்காரரின் இன்னொரு வண்டியும் வந்திருக்கிறது. அதையும் தடுத்து நிறுத்திவிட்டனர்.
பெஹ்லு கானும் மற்றவர்களும் சந்தையில் நகராட்சி அதிகாரிகள் கொடுத்த ரசீதைக் காட்டியவுடன் அதை வாங்கி கிழித்தெறிந்திருக்கின்றனர். வண்டியின் ஓட்டுனர் தன்னுடைய சாதியைச் சொல்லி, தான் ஒரு இந்து என்று நிரூபித்ததால், அவரை ஒரு அறைவிட்டுத் துரத்தி விட்டனர்.
பிறகு பெஹ்லு கானையும் அவரது இரு மகன்களையும் ஹாக்கி மட்டைகளால் தாக்கியிருக்கின்றனர். பிறகு, “பாவம்பா, பாத்தா சாதுவா தெரியுது. விட்டுவிடுவோம். சரி ஓடிப் போயிடுங்கடா” என்று கருணை காட்டுவது போல நடித்திருக்கின்றனர். ஓடத் தொடங்கியவுடன் நாயை அடிப்பது போல விரட்டி விரட்டி அடித்திருக்கின்றனர். வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டமும் சேர்ந்து அடிக்கத் தொடங்கியிருக்கிறது. இறுதியில் அவர்களை உயிரோடு கொளுத்துவதற்காக அவர்கள் மீது பெட்ரோலைத் தெளித்திருக்கின்றனர். நடந்த இடம் டில்லி -ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் ரோந்து போலீசு வந்து விட்டது. ஆனால், தாக்கியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
சுமார் ஒன்றேகால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மாடுகள் ஐந்து கன்றுகளையும், பெஹ்லு கானின் கையிலிருந்த 75,000 ரூபாயையும் பஜ்ரங் தள் கும்பல் பிடுங்கிக் கொண்டுவிட்டது. மாடுகள் கோசாலைக்குப் போய்விட்டதாகச் சொல்கின்றனர். இரண்டு வண்டிகளும் போலீசால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன.
அடிபட்டவர்களை மருத்துவமனையில் பார்ப்பதற்கே அவர்களது குடும்பத்தினரிடம் 5,000 ரூபாயைக் கறந்திருக்கிறது போலீசு. அது மட்டுமல்ல, மருத்துவமனையில் இருப்பவர்களை வீட்டுக்கு அழைத்துப்போக வேண்டுமானால், ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று பேரம் பேசியிருக்கிறான் போலீசு இன்ஸ்பெக்டர்.
அந்த பரிதாபத்துக்குரிய ஏழைகள், அரும்பாடுபட்டு 75,000 ரூபாய் பணத்தைப் புரட்டி எடுத்துக் கொண்டு வந்து, பெஹ்லு கானைக் கண்ணில் காட்டுமாறு கெஞ்சியிருக்கின்றனர். ஆனால், ஏப்ரல் 4-ஆம் தேதியன்று அவர் இறந்து விட்டார். ஹாக்கி மட்டையால் அடித்த அடியில், மார்பெலும்பு நொறுங்கி, நுரையீரல், இதயம் உள்ளிட்ட உள் உறுப்புகளில் இரத்தம் உறைந்து, அவர் இறந்து விட்டார்.
மரண வாக்குமூலத்தில் தன்னைத் தாக்கியவர்கள் விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் பெஹ்லு கான் கூறியிருக்கிறார். அதேபோல காயம்பட்ட மற்றவர்களும் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக, பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 16 பேர் மீது பசுவதை தடை சட்டத்தின் கீழ் (Rajasthan Bovine Animals (Prohibition of Slaughter and Regulation of Temporary Migration or Export) Act, 1995) போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். கான் இறந்து விட்டதால், வேறு வழியின்றி இந்துத்துவ காலிகள் 6 பேர் மீது கொலை வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள்.
மேற்கூறிய சட்டத்தின்படி பெஹ்லு கானும் மற்றவர்களும் செய்திருக்கும் குற்றம் என்ன? ஜெய்ப்பூர் கால்நடைச் சந்தையில் மாடுகளை வாங்கினார் என்பதற்கான ரசீது அவரிடம் இருந்தது. மாடுகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாக போலீசு வழக்கு போட்டிருக்கிறது. அவ்வாறு கொண்டுசெல்ல வேண்டுமானால், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிச் சீட்டு பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறது அந்த சட்டம். அப்படி ஒரு அனுமதிச்சீட்டு பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என்று ஜெய்ப்பூர் ஆர்.டி.ஓ. பல்தேவ்ராம் போஜக் கூறியதாகப் பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். (Anand kochukudy, thewire.in, 14.4.2017)
இல்லாத ஒரு அனுமதிச் சீட்டை வாங்காத குற்றத்துக்காக அந்த இஸ்லாமியர்கள் மீது வழக்கு போடுகிறது போலீசு. எந்த சீட்டைக் காட்டினாலும், அதை வாங்கி கிழித்துப் போட்டுவிட்டு தாக்குதல் தொடுக்கின்றனர் இந்துத்துவ காலிகள். அப்படியானால் இந்த சட்டத்தின் நோக்கம் என்ன?
இந்த சட்டத்தின் நோக்கம் பசுக்களைப் பாதுகாப்பதல்ல, இஸ்லாமியர்களையும் தலித் மக்களையும் அச்சுறுத்தி ஓடுக்குவதுதான். “பசுக்களை எங்கள் குழந்தைகளைப் போலப் பார்ப்பவர்கள் நாங்கள். மாட்டின் வாலைக்கூடக் கழுவத் தெரியாத ஆட்கள் எங்களுக்கு பசுப் பாதுகாப்பு பற்றி சொல்லிக்கொடுக்கிறார்களா? பிடுங்கிக் கொண்டு போன எங்கள் பசுக்களையும் கன்றுகளையும் இவர்களுடைய கோசாலையில் பட்டினி போட்டே கொன்றுவிடுவார்கள். அதை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது” என்று குமுறுகிறார்கள் பெஹ்லு கானின் குடும்பத்தினர்.
அவர்கள் கூறுவது மிகையல்ல. நாட்டிலேயே மிகச்சிறந்த கோசாலை என்று பீற்றிக் கொள்ளப்படும் ஜெய்ப்பூரில் உள்ள ஹிங்கோனியா கோசாலையில் மாதந்தோறும் சுமார் 1050 மாடுகள் சாகின்றன. அவற்றில் ஆகப் பெரும்பான்மையானவை இயற்கையான மரணங்கள் அல்ல. தீவனமின்றி, சேற்றிலும் சாணத்திலும் சிக்கி நோய்வாய்ப்பட்டு மெல்ல அழுகித் துடித்துச் சாகின்ற பரிதாபத்துக்குரிய மரணங்கள். கோமாதா பெயரில் வசூலிக்கப்படும் பணத்தை கோமாதாவின் காவலர்கள் தின்றுவிடுவதால் நடக்கும் மரணங்கள்.
ஆகஸ்டு 2016-இல் இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றம், “அது கோசாலையல்ல, கசாப்புக்கடை” என்று சாடியது. பத்திரப் பதிவுக்கான ஸ்டாம்ப் கட்டணத்தில் 10% ‘கோமாதா வரி’யாக (சர்சார்ஜ்) மக்களிடம் வசூலிக்கிறது ராஜஸ்தான் அரசு என்பதை இங்கே நினைவிற் கொள்ளவேண்டும்.
குஜராத் அரசோ, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆல்வாரில் நடந்த ரவுடித்தனத்தையே சட்டமாக்கி விட்டது. காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சியினரையெல்லாம் அவையிலிருந்து வெளியேற்றி விட்டு, பார்வையாளர் மாடம் முழுவதும் சாமியார்களை உட்கார வைத்துக் கொண்டு, பசுவைக் கொலை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை என்ற சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது.
இத்தகைய சட்டங்கள் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதை பெஹ்லு கானின் கொலை காட்டுகிறது. செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக துலினாவில் 5 தலித்துக்களை அடித்தே கொன்றார்கள். ஊனாவில் தலித்துகளுக்கு கசையடி. வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி அக்லக்கைக் கொன்றார்கள். பையில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாகக் கூறி போபால் ரயில் நிலையத்தில் வைத்தே இஸ்லாமியப் பெண்களை அடித்துத் துவைத்தார்கள். ஆட்டுக்கறி கடைகளை மாட்டுக்கறி கடைகள் என்று வதந்தி பரப்பி, உ.பி.யில் கறிக்கடைகளை மூடினார்கள். இப்போது பால் வியாபாரம் செய்த குற்றத்துக்காக பெஹ்லு கானைக் கொலை செய்திருக்கிறார்கள். இறைச்சிக்கடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இலட்சக்கணக்கான குரேஷி பிரிவு இஸ்லாமியர்களை அந்தத் தொழிலிலிருந்து விரட்டுவதற்கு பா.ஜ.க.வினர் பசுவதை தடைச் சட்டத்தைப் பயன்படுத்தினர். இப்போது பால் வியாபாரம் செய்யும் மியோ முஸ்லிம்களையும் குறி வைத்திருக்கின்றனர்.
கண் தெரியாத தாய், தன் கணவன் கொலை செய்யப்படும் காட்சியைக் கண்டும் ஏதும் செய்ய இயலாமல் ஆற்றாமையால் துடிக்கும் மனைவி, நிர்க்கதியாக நிற்கும் இளம் மகள்கள், எலும்புகள் நொறுக்கப்பட்ட மகன்கள், தீவனத்துக்கு வழியின்றி கோசாலையில் வாடும் பெஹ்லு கானின் மாடுகள், கன்றுகள்!
“தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா?” என்று தருண் விஜய் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தக் காவி காட்டுமிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?
- அஜித்
புதிய ஜனநாயகம், மே 2017
May be Hitler is far better than BJP and RSS. Who knows ?