Monday, December 2, 2024
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்டாஸ்மாக்கை மூடு : திருச்சி, போடி, கோத்தகிரி, ஓலையூர் போராட்டங்கள் !

டாஸ்மாக்கை மூடு : திருச்சி, போடி, கோத்தகிரி, ஓலையூர் போராட்டங்கள் !

-

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தாலுகா சிறுகனூர் ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுற்றுவட்டார கிராம மக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட கலெக்டரிடம் மனுகொடுக்கப்பட்டது. மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததால் 28.05.2017 அன்று மக்களைத் திரட்டி டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவோமென மக்கள் அதிகாரம் சார்பில் கிராமங்களில் தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்போதே லத்தி, கயிறு என போராட்டத்தை ஒடுக்கப் போவது போன்ற முன் தயாரிப்புகளுடன் வந்து நின்று மக்களை பீதியூட்டியது காவல்துறை.

போராட்டத்தன்று விடுவார்களா? கிராமங்களுக்கு சென்று மக்களை மிரட்டியும், டாஸ்மாக் கடைக்கு மட்டுமல்லாமல் கடைக்கு செல்லும் வழி நெடுக 1 கி.மீட்டர் வரை போலீசை குவித்து போராட்டத்திற்கு செல்லவிடாமலும் தடுக்க முயன்றனர். போலீசாரின் தொடர்ச்சியான மிரட்டலை, அச்சுறுத்தலை மீறி விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளையும், சிறுகனூர், C.R பாளையம், ரெட்டிமாங்குடி, கொளக்குடி ஆகிய கிராம மக்களையும் இணைத்து நடத்தப்பட்டப் இப்போராட்டம் போலீசின் மூஞ்சில் கறிபூசும் வகையில் அமைந்தது.

சிறுகனூர் பேருந்து நிறுத்தத்தில் கூடிய தோழர்களையும், மக்களையும் தடுக்கும் நோக்கில் டாஸ்மாக்கிற்கு செல்லும் வழியில் தடுப்பரண் அமைத்தனர். போராட்டம் நடத்த விடாமல் தடுக்க முயன்றால் நெடுஞ்சாலையை மறிப்போம் என தோழர்கள் எச்சரிக்கை விடுத்ததை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் பேரணியாக செல்ல அனுமதித்தனர். மீண்டும் டாஸ்மாக் கடைக்கு செல்லும் சாலையில் இருந்து அரை கிலோ மீட்டருக்கு முன்பே ஏராளமான போலீசை குவித்தனர். மிரண்டு போன காவல்துறைக்கு அதிர்ச்சி தரும் வகையில் தோழர்கள் சாலை மறியல் செய்தனர்.

பேச்சுவார்த்தைக்கு வந்த காவல்துறையிடம் தோழர்கள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் எனக்கோரினர். சாலை மறியலின் போது “மூடு டாஸ்மாக்கை!” பாடலால் உந்தப்பட்ட மக்கள் இன்னும் 5 நிமிடத்தில் அதிகாரிகள் வரவில்லை என்றால் நெடுஞ்சாலையை மறிப்போம் என போர்க்குணமாக கிளர்ந்தெழுந்தனர். அதில் ஒரு பெண் “டாஸ்மாக் கடையை உன்னால் முடிஞ்சா மூடு. இல்லன்னா ஒதுங்கிக்கோ நாங்க மூடிக்கிறோம்” என்றார்.

மூடச் சொல் கடையை

மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாத காவல்துறை தாசில்தாருக்கு நெருக்கடி கொடுத்தது. சமரசமாக பேசி போராட்டத்தை முடித்துவைக்கும் நோக்கில் வந்த தாசில்தார் உமா மகேஸ்வரிக்கு போடப்பட்டிருந்த போலீசாரின் பாதுகாப்பைத் தாண்டி கையைப் பிடித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த முயன்ற பெண்ணிடமிருந்து, பயம் கலந்த எச்சரிக்கை (மக்களின் உணர்வுகளுக்கு ஆட்ப்பட்டுவிடக்கூடாது) உணர்வுடன் விலகி நின்றார். தன் கழுத்திலிருந்த தாலிக் கையிறை காட்டி “இந்தக் கயிறப் பாருங்க, இதுல தாலி இல்ல. இருந்த தாலியும் அடகு வச்சு குடிச்சிட்டான். நீங்களும் ஒரு பொம்பள தான உங்க வீட்டுல இது மாறி நடந்தா சும்மா இருப்பீங்களா. எங்க தாலியறுக்கிற இந்த டாஸ்மாக்கு வேணாம்” என்றார் மற்றொரு பெண். பெண்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத தாசில்தார் தன் உயரதிகாரியுடன் பேசிவிட்டு GM-ம், AC-யும் நாளைக்கு Inspection-க்கு வாறாங்க என தோழர்களிடம் விளக்கமளித்தார். அதை மக்களிடம் தெரிவிக்குமாறு தெளிவாக ஒதுங்கிக் கொண்டனர் தோழர்கள். தாசில்தாரின் உப்புக்கு பெறாத விளக்கத்தை ஏற்க மறுத்து பெண்கள் ஒருமித்த குரலில் டாஸ்மாக்கை மூடு என கலகக் குரலெழுப்பினர்.

பெண்களின் கலகக்குரலுடன் இணைந்த பறையிசையும், தோழர்களின் உணர்வுப்பூர்வமான முழக்கங்களும் மொத்தக்கூட்டத்தையும் டாஸ்மாக்கை நோக்கி முன்னேற வைத்தது. தடுக்க முயன்ற போலீசுக்கும் – தோழர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி மக்கள் அதிகாரம் மற்றும் விசிக தோழர்களை கைது செய்து மக்களை விரட்டிவிடலாம் என்றெண்ணிய போலீசின் சதித்தனம் முறியடிக்கப்பட்டது. தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த தாசில்தாரும், DSP செட்ரிக் மேனுவேலும் நிலைமை மோசமாவதை உணர்ந்து, கடையை மூடிக்கொள்கிறோம். நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என ஒப்புதல் அளித்தனர். இருப்பினும் கலைய மறுத்த மக்களிடம் கடையை மூடாவிட்டால் மீண்டும் மக்களைத் திரட்டி கடையை அடித்து நொறுக்குவோம் என மக்கள் அதிகார தோழர் ரவி நம்பிக்கையளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். கலைந்து செல்லும் போதே அடுத்தமுறை பெட்ரோலை எடுத்து வந்து எரித்துவிட வேண்டும். பெட்ரோல் எதுக்கு? பாட்டிலை உடைச்சு பத்த வச்சாலே எரியும் என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்

திருச்சி – 9445475157  

***

போடி போலீசைப் பணியவைத்த மக்கள் அதிகாரம்!

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்புகளுக்கு கட்டுப்படாமல் போலிசின் தனி ஆட்சிப் பிரதேசமாக தேனிமாவட்டத்தின் போடிநாயக்கனூர் நகரம் இருக்கிறது ! இல்லாவிட்டால், தமிழகமெங்கும் டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராட்டம்  தினசரி செய்தியாக வந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், போடியில் மட்டும் இரு தனியார் பார்கள் மெயின் ரோட்டில் வெளிப்படையாக இயங்க முடியுமா?

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதியான போடியில் அதிமுக குண்டர்களை எல்லாம் முறியடித்துவிட்டு, காங்கிரசு கட்சியின் போடி நகரச் செயலாளர் பச்சையப்பன் என்பவர் ‘இந்தியன் மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் பார் நடத்துகிறார் !

போடியின் எஸ்.பி. சிஐடி-யான வெற்றி என்பவரின் அண்ணன் பரணி. இவர் இந்தியக் கப்பற்படையில் தேசபக்த சேவை புரிந்துவிட்டு, தற்போது ஒய்வு காலத்தில் மக்கள் சேவை செய்யும் எண்ணத்தில் போடி-மூணாறு சாலையில் ‘டாடா மனமகிழ் மன்றம்’ தொடங்கி டாஸ்மாக் சாராயம் விற்று வருகிறார் !

இந்த இரு பார்களையும் உடனடியாக மூடக்கூறி “உதிர்ந்த ரோமமா உச்சநீதிமன்ற உத்தரவு?” என்று மக்கள் அதிகாரம் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இரண்டு நாட்கள் மட்டும் மூடிவிட்டு போலீசு துணையுடன் மீண்டும் திறந்துவிட்டார்கள். இருவரும் “கலெக்டரிடம் அனுமதி பெற்றிருப்பதாகவும், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது” என்றும் டி.எஸ்.பி. தெரிவித்தார் ! அடுத்ததாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டதற்கும் மறுத்துவிட்டது போலீசு.

இந்நிலையில், 29/05/2017-தேதியன்று அறிவிப்பின்றி போடி நகர மக்கள் அதிகாரம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாகக் காலையிலிருந்து நகரம் முழுவதும் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்துவிட்டு, மாலையில் பெண்கள் உட்பட 30 தோழர்கள் விண்ணதிரும் முழக்கங்களுடன் ஊர்வலமாகச் சென்று ‘இந்தியன் மனமகிழ் மன்றத்தை’ முற்றுகையிட்டனர்! அரைமணிநேரம் கழித்து ஆஜரான இன்ஸ்பெக்டர் சேகர் வந்தவேகத்தில் “கடையை மூடிவிடுவோம் போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்” என்று பேரம் பேசத் தொடங்கினார் ! முதலில், “இந்த பாருக்கு அனுமதி கொடுத்த தாசில்தார், கலெக்டரை வரச் சொல்லுங்கள். இங்குள்ள சரக்குகளை உடனே அகற்றுங்கள். அப்புறம் பார்க்கலாம்” என்று பதிலடி கொடுத்தனர்.

தோழர்களை முறைத்துவிட்டு, ‘ஈனப்போகும் மாடு மாதிரி’ ஓரிடத்தில் நிற்காமல் மேலதிகாரிகளிடம் ஆலோசனை செய்யத் தொடங்கினார். எஸ்.ஐ. ஜெயலட்சுமி தலைமையில் மேலும் சில போலீசுகள் வந்திறங்கியதும் துணிச்சல் பெற்ற இன்ஸ்.சேகர், வேனை வரவழைத்து ஏறச்சொல்லி தோழர்களை மிரட்டினார். தோழர்கள் மறுத்து தரையில் அமர்ந்து முழக்கமிடத் தொடங்கினர். தோழர்களை ஏகவசனத்தில் ஆபாசமாகப் பேசிய சேகர், போலீசாரை ஏவி தோழர்களை அடித்தும், தோழர்களைத் தூக்கமுடியாத கோபத்தில் தரையில் இழுத்துச் சென்று, குண்டுக்கட்டாக தூக்கியும் வேனில் ஏற்றினார்.

அடைக்கப்பட்ட மண்டபத்தில் இன்ஸ் சேகரின் ஆபாசப் பேச்சைக் கண்டித்தும், இரண்டு பார்களிலும் உள்ள டாஸ்மாக் சரக்கை உடனே அப்புறப்படுத்தக் கோரியும் தோழர்கள் உணவு உண்ண மறுத்தும் போராடினர். தோழர்களின் உறுதியைக் கண்டு பின்வாங்கிய போலீசு தன எஜமானரின் உத்தரவுக்கேற்ப இருகடைகளையும் இழுத்து மூடியதோடு உள்ளிருந்த சரக்குகளையும் அப்புறப்படுத்தியது !

ஆனாலும் போலீசின் அடக்குமுறை ஆபாசப் பேச்சுக்களைக் கண்டித்து இறுதிவரை சாப்பிடாமலே வெளியேறிய தோழர்களைக் கண்டு வேறு ஏதேனும் பிரச்சனை செய்து விடுவார்களோ என்றஞ்சி, மறுநாள் காலையில் பகுதித் தோழர்களை அழைத்து “நேற்று நடந்ததை பெரிதுபடுத்தவேண்டாம். எங்களுக்கு மேலிடத்து பிரஷர். நீங்கள் நடத்திய போராட்டம் எங்களுக்கும் நல்லதுதான்” என்று சமாதானம் செய்துள்ளனர் !

தோழர்களின் உறுதியான போராட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர், “டி.வி.யில தினமும் பொம்பளைகள் சாராயக் கடையை உடைக்குறாங்க. எவனும் ஒன்னும் பண்ண முடியல. இங்க போராடுனவங்க நம்மளுக்கும் சேர்த்துதான போராடுனாங்க. இங்க நின்னு வேடிக்கைப் பாக்குறவங்க பத்துப்பேரு சேர்ந்து நின்னிருந்தா போலீசு அவங்கள அடிப்பானா?” என்று அங்கிருந்தவர்களைப் பார்த்து கேட்டார் ! அவரை எதிர்த்துப் பேசாமல் ஒருவித குற்ற உணர்வுடன் மக்கள் கலைந்து சென்றனர் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
போடி

***

கோத்தகிரி M கைகாட்டி டாஸ்மாக் உடைப்புப் போராட்டத்தில் 30 பெண்கள் கைது, சிறையில் அடைப்பு!

லை மாவட்டமான நீலகிரியில் நிரந்தரமான வேலை , வருமானம் என்பது கிடையாது.  பெண்கள் தேயிலை பறிப்பு வேலைக்கும், ஆண்கள் உதிரியாகக் கிடைக்கக் கூடிய பெயின்டிங், கட்டிட வேலைக்கும் செல்வதுதான் நிலையாக உள்ளது. தேயிலை விலை வீழ்ச்சியினால் இப்பொழுது இந்த வேலைகளும் கிடப்பது என்பது அரிதாக உள்ளது.  இந்த வேலைகளில் கிடைக்கக் கூடிய சொற்பமான வருமானத்தில் ஆண்கள் குடித்துவிட்டு வருவது என்பதும், குடிக்க பணம் இல்லாமல் போனால் பணம் கேட்டு பெண்களை அடித்துத் துன்புறுத்துவதும் தொடர் கதையாக உள்ளது. பெண்கள் வேலைக்கு சென்று செலவுக்கு வைத்துள்ள பணத்தை பிடுங்கிக் கொண்டு போவது என கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

இந்தக் கொடுமைகளுக்குக் காரணமான டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி மாவட்டம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகின்றது.  அந்த வகையில் கோத்தகிரி தாலுக்காவுக்கு உட்பட்ட M கைகாட்டி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.   இந்தக் கடை ஏற்கனவே கட்டபெட்டு என்ற பகுதியில் இயங்கி வந்த கடை ஆகும்.  அங்கு மக்கள் போராடி விரட்டிய கடையை இந்தப் பகுதியில் திறந்து உள்ளது மாவட்ட நிர்வாகம்.  இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அங்கு வந்த தாசில்தார் , கோத்தகிரி காவல் ஆய்வாளர் போராடிய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 15 நாளில் கடையை மூடிவிடுவதாகவும் அப்படி இல்லையென்றால் கடையை உடைக்க நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று வாக்குறுதி தந்தனர்.  வழக்கம்போல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.  ஆத்திரம் கொண்ட மக்கள் கடையை அடித்து நொறுக்கினர்.  இதில் மக்கள் அதிகாரம் தோழர்கள், பெண்கள் உட்பட 37 பேரை கைது செய்து கடுமையான வழக்குப் பிரிவுகளைப் போட்டு சிறையில் அடைத்து உள்ளது காவல்துறை.

சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டது, அத்துமீறி கடையில் நுழைந்தது, மொத்தமாகக் கூடியது என்று வழக்கு போட்டு தங்களை சட்டத்தின் காவலர்களாக காட்டிகொண்டனர் கோத்தகிரி காவல்துறை. ஆனால் இதே காவல்துறை கோத்தகிரியில் பெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டும், பொறுக்கிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு புகார் கொடுக்கும் பெண்களிடம் உங்கள் மீதும் வழக்கு போடுவோம் என்று மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க வைப்பதுண்டு. தடை செய்யப்பட்ட லாட்டரிகள் தாராளமாக காவல் நிலையம் அருகிலேயே கிடைப்பதையும் அனுமதிக்கிறது.  இவையெல்லாம் கோத்தகிரி உளவு போலீஸ் மற்றும் கோத்தகிரி ஆய்வாளர் பாலசுந்தரம் ஆசியுடன் நடக்கிறது.

இந்த சட்டவிரோத கிரிமினல் கும்பல் தான் நியாயமாகப்போராடியவர்களை சட்டவிரோதம் என்று சிறையில் அடைக்கிறது.  கைது செய்யப்பட்ட மக்களையும், தோழர்களையும் பார்க்கச்சென்ற புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட துணைத்தலைவர் ராஜாவை பார்க்க விடவில்லை. ஏன் என்று கேட்டதற்கு தோழர் ராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது.  போராட்டத்தில் கலந்து கொள்ளாத மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் வழக்கு போட்டு தனது வெறித்தனத்தைக் காட்டியுள்ளது.

இந்த வழக்கில் பிணை கேட்டு நீதிமன்றம் சென்றால் ஒருவருக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள் நீதிபதிகள்.  வழக்கு விசாரிக்குமுன்பே தண்டனை வழங்கி நாங்களும் மக்களை ஒடுக்குவதில் சளைத்தவர்கள் அல்ல என்று நீதிபதிகள் நிரூபித்து உள்ளனர்.  இந்த அபராதத்தைக் கட்ட முடியாது என்று உயர்நீதிமன்றம் சென்று உள்ளனர் தோழர்கள்.  இன்றுடன் 15 நாள் ஆகிறது அபராதம் கட்டி வெளியே வரமாட்டோம் என்று உறுதியுடன் போராடி வருகின்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோத்தகிரி.

***

ஓலையூர் டாஸ்மாக் கடை மூடல் !

மக்களின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!
மக்கள் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி நிச்சயம் “மக்களே அதிகாரத்தை கையிலெடுப்போம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம்”

இன்றே இணைவீர் மக்கள் அதிகாரத்தில்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
ஓலையூர் கிளை – 96591 94257.

  1. யார் என்ன சாப்பிடலாம் என்பதை இந்த கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் தான் முடிவு செய்கிறார்கள் போல இருக்கு, மாட்டு கரி கூடாது என்பதற்கு பசுவை கொன்று போராட்டம் கேட்டால் அரசு எப்படி மக்கள் என்ன சாப்பிடலாம் என்பதை முடிவு செய்யலாம் என்கிறார்கள். இப்போது என்னாடா என்றால் யாரும் சாராயம் குடிக்க கூடாது என்று இந்த அயோக்கிய போலி கம்யூனிஸ்ட் வினவு கூட்டங்கள் போராடுகிறார்கள் இவர்கள் யார் மக்களின் உரிமையில் தலையிடுவதற்கு. தலித்துகள் வேலை முடித்து விட்டு அவர்கள் உடல் வலிக்காக சாராயம் குடிக்கிறார்கள் அதை தடுப்பதற்கு இவர்கள் யார், இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

    • அப்புறம் என்னத்துக்கு பி.ஜே.பி காரனுங்க மதுக்கடைக்கு எதிரா போராடுனானுங்க? மதுக்கடைய திறங்கன்னு போராட்டம் நடத்த சொல்லுங்க, அறிக்கை விட சொல்லுங்க.

    • மணிகண்டா..நமக்கு வாதம் பண்ண முடியவில்லை.முடியவில்லை என்றால் வழியில்லை.அது நன்றாக தெரிகிறது.வேறு எதற்க்கு தேவையில்லாமல் சுற்றி வளைக்க வேண்டும்..வயிற்றெரிச்சலில் புழுங்குவது நன்றாக தெரிகிறது மணிகண்டா…உண்மையின் பக்கம் வா நியாயத்தின் பக்கம் வா..மூடத்தனத்திற்க்கு வக்காலத்து வாங்கி ஏன் மூக்குடைபட வேண்டும்!?மாட்டுக்கறி பசுக்கறி கதையெல்லாம் வைத்து உங்களால் ஒன்றும் பண்ணமுடியாது.இன்னும் சொல்லப்போனால் இருக்கும் கொஞ்சநஞ்சத்தையும் இழக்க வேண்டி வரும்.எல்லா மக்களையும் இந்து இந்து என்று ஏமாற்றி திரிகிறீர்களே அதெல்லாம் கூட ஓடிப்போய்விடும்.மாட்டுக்கறியால் பருப்பு வேகவில்லை வேகவைத்த சட்டியே தீஞ்சிபோவது தெரிந்து விட்டதா பொத்திக்கொண்டு போய் மூலையில் உட் காருவ்துதான் நல்லது.

    • மணி சார்,

      என்ன சார் அயோக்கியர்கள்னு எல்லாம் பேசுறீங்க ?.

      மாட்டுக்கறி சாப்பிட மத்திய அரசு எப்படி சார் த்டை போடலாம் ?. அது உடம்புக்கு ரொம்ப சத்து சார். நீங்களும் சாப்பிட்டுப் பாருங்க .. ஹெவி வெயிட் சாம்பியன்கள், பாடி பில்டர்கள் எல்லாரும் அது தான் சார் சாப்பிடுறாங்க.. ஏழை தலித்துகள் உடல் வலி இல்லாமல் உழைக்க மாட்டுக்கறி தினமும் குறைவான விலையில் கிடைப்பது அவசியம் சார்.

      அதை தடை பண்ணுற மோடி தான் சார் லூசுப்பய…

      அப்புறம் சாராயம் உடம்புக்குக் கெடுதின்னு உங்க அப்பா அம்மா உங்களுக்கு சொல்லித் தரலயா சார் ?. தெரிஞ்சு வச்சிக்கோங்க சார்.. சாராயம் லாம் குடிக்கக் கூடாது. உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சாகாவுல இதெல்லாம் சொல்லித் தரலயா சார் ?. அவங்க எங்க சார் இதெல்லாம் செய்யப் போறாங்க.. அவங்களுக்கு நீங்க சொன்ன மாதிரியே தலித்துகள் எல்லாம் தங்கு தடை யில்லாம சாராயம் குடிக்கனும் சார். ஏன்னா அப்ப தான அவங்களை வச்சி முசுலீம்களைக் கொன்னு பிறகு அவங்களையும் உள்ள புடுச்சி போட்டுடலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா பாத்தீங்களா ?.

      அதனால தான் சார், நீங்க இப்போ சாராயத்துக்கு வக்காலத்து வாங்குறீங்க !!.. உங்க ஆர்.எஸ்.எஸ். ஓட அஜென்டா என்னான்னு எங்களுக்கும் தெரியும் சார்!!

      எதாச்சும் மரியாதை குறைவா உங்களைப் பேசிருந்தா மன்னிச்சிக்கோங்க மணி சார்!!

  2. திருச்சி, சிறுகனூர் டாஸ்மாக்கை முதல் நாள் மூடிய தாசில்தார் இரண்டு நாட்கள் கழித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்ற பெயரில் தன் அலுவலகத்திற்கு மக்களை அழைத்து வளவளவென்று பேசி மழுங்கடிக்க முயன்றபோது, மக்கள், ‘எங்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டாம். எப்ப திறந்தாலும் அடித்து நொறுக்குவோம்’, என்று சொன்னார்கள். பின்னர் தாசில்தார் டாஸ்மாக் நிரந்தரமாக மூடப்படும் என்று அறிவித்தார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க