privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்சிறப்புக் கட்டுரை : செல்ஃபி தேசத்திற்கு தெரியாத கிராமங்கள் !

சிறப்புக் கட்டுரை : செல்ஃபி தேசத்திற்கு தெரியாத கிராமங்கள் !

-

த்திய பிரதேசத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போராடி, சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். நாடெங்கிலும் விவசாயப்போராட்டம் கிளர்ந்து எழுந்துவருகிறது. பச்சை பசேலென்று இருக்க வேண்டிய இந்திய கிராமங்கள் இன்றைக்கு களையிழந்து ரத்தக்களறியாக பிணங்களைச் சுமக்கும் மயானமாக மாறி வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாழும் நாம், இந்திய கிராமங்களின் நிலைமையை உணர்ந்திருக்கிறோமா? விவசாயிகள் சந்திக்கும் அவலங்களை பேசியிருக்கிறோமா? கிராமங்களைப் பற்றிய நம்முடைய புரிதல் எத்தகையது?

இந்தியா முழுவதும் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகளை கட்டுரைகளாக எழுதிவரும் வேளாண் நிபுணர் தேவந்தர் சர்மா நகர்ப்புறவாசிகளின் வாழ்க்கை எங்கிருந்து வந்ததது? வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்கள் எப்படி கண்டுகொள்ளப்படாமல் ஒடிக்கப்பட்டிருக்கின்றன? கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடும் வறட்சி நிலவினாலும் பெருநகரங்களான சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு மட்டும் அதிக பயன் பெறுவது ஏன்? என்பதை தன்னுடை புரிதலின் படி எழுதியிருக்கிறார். கட்டுரையாளின் பார்வைபடி நகரங்களில் நாம் காணும் தண்ணீர் தட்டுப்பாடு கிராமங்களின் நிலையை ஒப்பிடும் பொழுது ஒரு பொருட்டாக இருப்பதில்லை என்ற பார்வை கிடைக்கிறது. எனில் விவசாயிகள் அன்றாடம் செத்து மடிகிறார்கள் அது ஏன் நமக்கு உரைக்கவில்லை? விவசாயிகளின் பிரச்சனை எவ்வளவு பாரதூரமாக இருக்கும்? என்ற கோணங்களை நாம் இதிலிருந்து அறிந்துகொள்ள முடியும். படித்து பாருங்கள்.

நகரவாசிகளே ! இந்திய கிராமங்களை உங்களால் கண்டு கொள்ள முடிகிறதா ?

நான் அடிக்கடி பெங்களூருக்கு பயணம் செய்கிறேன். வருடத்திற்கு குறைந்தது நான்கு முறையாவது இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறை பெங்களூருக்கு செல்லும் பொழுது, கர்நாடக மாநிலம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. பெருநகரங்களில் வாழ்க்கை வெறும் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் நிலவும் கடும்வறட்சியின் அறிகுறியைக் கூட காட்டுவதாக இல்லை. இந்த வருடம் கர்நாடக மாநிலத்தின் 176 தாலுகாக்களில், 139 -க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் மோசமாக, கடந்த பதினாறு வருடங்களில் பதினோறு வருடங்கள், கர்நாடகா வறட்சியின் பிடியில் இருந்திருக்கிறது.

வறட்சியால் மக்கள் புலம் பெயர்ந்து காலியாகக் கிடக்கும் கிராமங்கள்

பெங்களூருலிருந்து வெறும் இரண்டு மணிநேர பயண தொலைவில் இருக்கிறது ஆந்திர மாநிலத்தின் அனந்த்பூர் மாவட்டம். ஏப்ரல் 28, 2017 ஆம் தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த அறிக்கை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது, 12 வயது சிறுவன் திவாகர் பள்ளியிலிருந்து நேராக வீட்டுக்கு நுழையும் பொழுதே, ‘என் அப்பா திரும்பி வந்துவிட்டாரா?’ என்று கேட்கிறான். ‘இல்லை, அவர் அடுத்த மாதம் வருவார். வரும் பொழுது பெங்களூரூவிலிருந்து உனக்கு நிறைய விளையாட்டு சாமான்கள் வாங்கி வருவார்’ என்கிறார் திவாகரின் உறவினர் ஈஸ்வரய்யா. வெறுப்படையும் திவாகர் தனது புத்தகப்பையை தூக்கி எறிந்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு தனது மூன்று சக்கர சைக்கிளை எடுத்துக்கொண்டு காலியான தெரு ஓரமாக ஓட்டிச் செல்கிறான். அந்தத் தெரு முழுதுவமே பூட்டிய வீடுகளால் எல்லையற்று நீண்டிருக்கிறது.

ஆந்திராவின் அனந்த்பூர் மற்றும் இதர கிராமங்கள் எப்படி வெறிச்சோடி கிடக்கின்றன என்பதை வெளிக்கொணரும் பத்திரிக்கையாளர் ஹரிஷ் கிலாயின் கட்டுரை இந்திய கிராமங்களின் அவல நிலையை ஆழமாக படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. ஆனால் யாரும் இது போன்ற செய்திகளில் கவனம் செலுத்த விரும்புவதில்லை.

ஹரிஷ், அனந்தபூர் மாவட்டம் நல்லமடா மண்டலத்தில் உள்ள குட்டபல்லே கிராமத்தை ‘ஒரு பேய் நகரம்’ என்று எழுதுகிறார். பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் இங்கு பூட்டியே கிடக்கின்றன. நீங்கள் இங்கு ஒன்று வயதானவர் நடந்து போவதையோ அல்லது தெருவில் குழந்தைகள் விளையாடுவதை மட்டுமே பார்க்க முடியும்.

அதிதி மாலிக் மற்றும் கீதிகா மந்திரியின் மற்றொரு அறிக்கை இதயத்தைப் பிழியும் கதைகளைச் சொல்கிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் அற்ப வேலைகளைத் தேடி தங்களது பிள்ளைகளை யாருடைய பாதுகாப்பும் இன்றி விட்டுச் செல்கின்றனர். அனந்தபூர் மாவட்டம் கெரடிப்பள்ளி கிராமத்தில் உள்ள 12 வயது பழங்குடியினச் சிறுமி புக்யா சயமுலம்மா தனது இரு தம்பி தங்கைகளுடன் தன்னந்தனியாக வாழ்கிறாள். இவள் பக்கத்து கிராமத்தில் உள்ள ரேசன் கடையிலிருந்து 25 கிலோ அரிசியை சுமந்து வருகிறாள். சென்ற வருடம் குடியால் தன் தந்தையை இழந்த புக்யா, இப்பொழுது தன்னை மட்டுமல்லாது தன் தம்பி/தங்கைகளை பராமரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள். இது ஏதோ பாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படக் காட்சி போன்று தெரியும். ஆனால் இது உண்மை என்பதை மறந்துவிடாதீர்கள்.

கடும் வறட்சியிலும் நீர் கேளிக்கை விளையாட்டுக்கள் ( வொண்டர்லா தீம் பூங்கா )

‘கெரேட்டிப்பள்ளியில் வாழும் மற்றுமொரு பதினைந்துவயது சிறுமி ரமாதேவி தனது பெற்றோர் வேலை தேடி கேரளாவிற்கு இடம்பெயர்ந்துவிட்டதால் தன்னந் தனியாகவே வாழ்கிறாள்’. சமயங்களில் தனது பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாக தெரிவிக்கிறாள் இச்சிறுமி. ஆனால் என் மனதை அரிக்கும் மிகப்பெரிய கேள்வி எதுவென்றால் வேலைக்காக தனது ஒரே மகளை விட்டுச் செல்லும் ரமாதேவியின் பெற்றோர்கள் எவ்வளவு தூரம் துன்பப்பட்டிருப்பார்கள் என்பதுதான். அவர்களுக்கு வேறு வழியில்லை. கண்டிப்பாக எந்தப் பெற்றோரும் தன் பிள்ளைகளை தன்னந்தனியாக விடமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். இது பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஹோம் அலோன் (Home Alone) திரைப்படத்தில் வரும் காட்சி அல்ல! நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் ஏதாவது சிறுவேலை பார்த்து பிழைக்கலாம் என்று தங்களது குழந்தைகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்திருக்கின்றனர். அனந்த்பூர் மாவட்டம் ஆறாவது வருடமாக தொடர்ச்சியாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது.

கேரளா கடவுளின் தேசமாக இப்பொழுது அறியப்படுவதில்லை. பாலக்காடு மாவட்டத்தில் வாழும் குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு 10 முதல் 15 பக்கெட் தண்ணீரைக் கொண்டே சமாளித்து வருகின்றனர். மே எட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் சாஜு பிலிப்ஸ் ‘அட்டப்பாடி தொடர்ந்து இரண்டாவது வருட வறட்சியை எதிர்நோக்கியிருப்பதை நமக்கு அறியத் தருகிறார். கேரளா கடந்த 15 வருடங்களில் மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது. கேரளாவில் அனைத்து மாவட்டங்களும் அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டன. இருந்தபோதிலும் நீங்கள் திருவனந்தபுரம், கொச்சி அல்லது கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள எந்த பெரிய நகரங்களுக்கும் பயணம் செய்ய நேர்ந்தால் கேரளா வறட்சியில் பாதித்திருப்பதாகவே உங்களுக்குத் தெரியாது.

ஐந்து நாள் பயணமாக தமிழ்நாட்டின் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட யோகேந்திர யாதவ் “மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை மாநில அரச இயந்திரத்தை முடக்கியிருக்கிறது. இதனால் இம்மாநிலத்தின் விவசாயிகளின் வாழ்க்கை பேரழிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது” என்று சாடுகிறார். இவர் மேலும் கூறும் பொழுது ‘கால்நடைகளின் அழிவு தமிழ்நாட்டில் பஞ்சம் வந்துவிட்டதைக் காட்டும் அறிகுறி’ என்கிறார்.

40,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை இரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் நடத்திய பரவலான போராட்டம் ஊடகங்களில் நல்ல கவனத்தைப் பெற்றாலும் தேசம் முழுமைக்கும் எடுத்துச் செல்வதில் தோற்றுவிட்டது. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம், வேளான் வானியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் எஸ். பன்னீர்செல்வம் IndiaSpend இணையத்திற்கு அளித்த பேட்டியில் ‘இது எதிர்பாராத சூழ்நிலை’ என்கிறார். இவர் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் வறட்சி பாதித்திருப்பதாகக் கூறுகிறார். தற்பொழுது தமிழ்நாடு கடந்த 140 வருடங்களில் சந்தித்திராத வறட்சியை சந்தித்து வருகிறது. இருப்பினும் நீங்கள் சென்னை அல்லது கோவை மாவட்டம் அல்லது ஏதாவது தமிழ்நாட்டின் பெருநகரங்களுக்கு சென்றால் நகரத்தை விட்டு வெறும் இரண்டு கிலோ மீட்டர் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதை உணர முடியாது.

எனக்கு இது மிகவும் புதிரான ஒன்றாக படுகிறது. வறட்சி ஒட்டுமொத்த பகுதிகளையும் பாதிக்கிற பொழுது ஏன் கிராமங்கள் மட்டும் வறட்சியின் கொடூரத்தை அனுபவிக்க வேண்டும் என்று என்றைக்காவது நீங்கள் யோசித்ததுண்டா? ஏன் வறட்சி பெருநகரங்களையும் நகர்புறங்களையும் அரிதாகவே பாதிக்கிறது? கடவுள் கண்டிப்பாக கிராமப்புற பகுதிகளுக்கு மட்டும் வறட்சி தாக்கும்படி ஓரவஞ்சனை செய்துவிடமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். மேலும் தாங்கள் செய்யாத தப்புக்காக கடவுள் கிராமவாசிகளை மட்டும் தண்டிப்பார் என்றும் நிச்சயமாக நான் சொல்ல மாட்டேன். அப்படியானால் வறட்சியின் பாதிப்புகள் பாரதூரமாக கிராமப்புற மக்களை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்?

லட்டூர் நகரம் (குஜராத்-கட்ச் பகுதி) விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் கடும் வறட்சி வந்தாலும் ரயில் பெட்டிகளில் தண்ணீர் கொண்டுவரும் அளவுக்கு நிலைமை இருக்காது. தண்ணீர் பற்றாக்குறை மட்டுமல்ல, வறட்சி பல பிரச்சனைகளை கொண்டுவருகிறது. ஆனால் இவை யாவுமே நகரங்களில் உணரப்படுவதில்லை. இதற்கு காரணம் ‘வளர்ச்சியின்’ போக்கில் நிலவும் அசமத்துவத்தின் வெளிப்பாடு தான். என்னுடைய புரிதலின் படி ‘வளர்ச்சி’ பெருநகரங்களை மட்டும் வறட்சியை தாங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நகரத்திற்கும் கிராமத்திற்குமான பாரபட்சம் அப்பட்டமாக தெரிகிறது. அனைத்து முயற்சிகளும் நகர்புற குடிகள் வறட்சியின் தீவிரத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே எடுக்கப்படுகின்றன.

கிராமங்களில் ஓடும் ஆறுகளும் ஓடைகளும் வறண்டு போகலாம், ஆனால் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் நகரங்களில் காலை மாலை சில மணி நேரமாவது குழாய்த் தண்ணீர் வந்துவிடுகிறது. டில்லிக்கு தேவைப்படும் தண்ணீர் ஹிமாச்சல பிரதேசம் ரேணுகா அணைக்கட்டிலிருந்து எடுக்கப்பட்டாலும் மும்பையின் குடிநீர் வழங்கல் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து உறிஞ்சப்பட்டாலும் தங்களது பெரு நகர வாழ்க்கைக்கான விலையை பெருவாரியான கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வைத் தொலைத்து தான் தருகின்றனர் என்பது அறியப்படாமல் இருக்கிறது.

இது தான் நகரங்களில் வாழும் பெரும்பாலானவர்கள் இந்திய கிராமப்புறங்களின் யதார்த்த நிலையோடு ஏன் துண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு முதன்மையான காரணம். இவர்கள் தங்களது உலகங்களில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நகரத்தைவிட்டு சில மைல் தொலைவில் தன் வீட்டு கொல்லைப்புறத்தில் மனிதர்கள் படும் துயரங்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கின்றனர்.

நல்லது! ‘குடிமைச் சமூகம்’ நம்மை இந்தப் பாதையில் தான் வழிநடத்துகிறது. செல்ஃபி எடுக்கும் உலகத்தில் சுயநலமாக இருப்பது அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

-தேவந்தர் சர்மா,

பின் குறிப்பு : கடும் வறட்சி நிலவும் மகராஷ்ட்ரா மாநிலத்தில் ரியஸ் எஸ்டேட் அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானத்திற்கு நாளொன்றுக்கு பல இலட்சம் லிட்டர் தண்ணீர். நீதிமன்றங்கள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது, கோக்கோலாவிற்கு நாங்கள் உபரி நீரைதான் தருகிறோம் என்று தமிழ்நாடு அரசு கூசாமல் பொய்யுரைப்பது, சிப்காட் போன்ற தொழிற்கூடங்களில் அனைத்து நிறுவனங்களும் தண்ணீர் தரும் பொழுது பெப்சிக்கு மட்டும் ஏன் தரக்கூடாது என்று இந்தியாவின் தாராளமயக் கொள்கையின் கொடூரத்தை நீதிபதியே தன் வாயால் போட்டுடைப்பது என்று அனைத்து விசயங்களையும் இதனுடன் கோர்த்து பாருங்கள். வளர்ச்சியின் கபடவேடம் புரியும்! நகரங்கள் மட்டுமல்ல இந்த அரசு ஒரு சிலருக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியும்!

தமிழாக்கம் : தமிழ்வேல்
மூலக்கட்டுரை : How come mega cities like Bangalore never give an inkling of a severe drought in its own backyard?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க