Thursday, June 17, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் கடன் தள்ளுபடி கோரி கார்ப்பரேட்டுகள் வீதிக்கு வருவதில்லையே ஏன் ?

கடன் தள்ளுபடி கோரி கார்ப்பரேட்டுகள் வீதிக்கு வருவதில்லையே ஏன் ?

-

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வங்கிக் கடன் தள்ளுபடிக்காக வீதிக்கு வருவது, சாலை மறியல் செய்வது, பேரணிகள் நடத்துவது, கண்ணீர்புகைக் குண்டுக்கு இலக்காவது, சில சமயங்களில் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியாவது போன்ற நடவடிக்கைகளை விவசாயிகள் ஏன் மேற்கொள்கிறார்கள்? ஆனால் புது தில்லி ஜந்தர் மந்தரில் கடன் தள்ளுபடி கோரி எந்த கார்பரேட் முதலைகளும் தர்ணா நடத்துவதை நாம் பார்ப்பதில்லையே ஏன்?

6 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர விவசாயிகள் கிளர்ச்சியின் விளைவாக மகாராஷ்டிர அரசு ரூ. 30, 500 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய இணங்கியுள்ளது.  முன்னர், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் திருப்பிச் செலுத்தாத வங்கிக் கடன் ரூ. 36, 359 கோடியை உபி அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.  இன்று பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மபி, சட்டிஸ்கர் எங்கும் விவசாயிகள் போராட்டம் பற்றிப் படர்கிறது.  பஞ்சாபின் மோஹாவில், கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை பொறுத்திருந்து வாழ வழியில்லாததால், போராட்டத்தின் போதே ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  இதிலிருந்து விவசாயிகளின் நிலை எவ்வளவு பரிதாபகரமான வகையில் மோசமாக உள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.

கடன் தள்ளுபடிக்கான விவசாயிகள் போராட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது.  விவசாயக் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 16 -இல் வடக்கு பிராந்தியம் முழுவதும் மூன்று மணிநேர சாலை மற்றும் இரயில் மறியலுக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்தன.  இப்போது ஒரு கேள்வி எழுகிறது.  கடன் தள்ளுபடி செய்வது எவ்வளவு அத்தியாவசியமான உடனடித் தேவை என்பதை உணர வைப்பதற்கே தொடர் போராட்டங்களை இவ்வளவு தீவிரமாக நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் ஏன் தள்ளப்படுகிறார்கள்? நாடுமுழுவதும் விவசாயிகள் நித்தம் சாவது பற்றி ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே தெரியாதா? விவசாயம் அவசர நிலையில் உள்ளது.

கடந்த 21 ஆண்டுகளில் 3.18 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் ஏதாவதொரு பகுதியில் 41 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். கடன் திருப்பி செலுத்த முடியாத காரணத்தினாலேயே பெரும்பான்மையான தற்கொலைகள் நிகழ்கின்றன.  உண்மையில் அவர்கள் பலதரப்பட்ட கடன்களின் குவியலுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர்.  வருடாந்திரம் ரூ. 12.60 இலட்சம் கோடிக்கு விவசாயிகள் கடனாளியாவதாக, 2016 நவம்பரில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.  எனவே விவசாயக் கடன் தள்ளுபடி நல்ல அரசியல் மட்டுமல்ல; நல்ல பொருளாதாரமும் கூட.

ஆனால் கடன் தள்ளுபடிக் கொள்கை விவசாயிகளை மட்டும் எவ்வளவு பாரபட்சமாக நடத்துகிறது என்பதைப் பார்க்கும் முன், கார்ப்பரேட்டுகள் அமைதியாக கடன் தள்ளுபடி பெறும் பொழுது விவசாயிகள் மட்டும் ஏன் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் நான் தோல்வியடைந்தேன்.  எதிர்ப்பை ஒழுங்கமைப்பது பற்றிப் பேசுவதற்குக் கூட அவர்கள் (கார்ப்பரேட்) தங்கள் காரை விட்டு இறங்க வேண்டியதில்லை.  கேள்வியென்னவென்றால் விவசாயிகள் வீதிகளிலிறங்கி தோட்டாக்களை எதிர்கொள்ளும் போது தொழிற்துறையினருக்கு மட்டும் சலுகைகள் அளிக்கப்படுகின்றதே?  எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளும், தொழிற்துறையினரும் ஒரே வங்கியிலிருந்து தான் கடன் பெறுகிறார்கள்.  அப்படியிருக்கையில் விவசாயிகள் வீதியிலிறங்கி போராட்டம் நடத்துமளவிற்கு தொல்லை கொடுக்கும் வங்கிகள், கடன் திருப்பி செலுத்தாத தொழிற்துறையினரை அனிச்சமலரைப் போல மென்மையாக கையாள்வதன் காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

உ.பி. -யில் விவசாயக் கடன் தள்ளுபடியை யோகி ஆதித்யநாத் அறிவித்த உடனேயே, எஸ்.பி.ஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, விவசாயக்கடனைத் தள்ளுபடி செய்யும் தலைவர்கள், ‘கடன் திருப்பி செலுத்தும் ஒழுக்கத்தை’ சீர்குலைப்பதாக குற்றஞ்சாட்டினார்.  சில வாரங்களுக்குப் பின், ரூ. 4.85 இலட்சம் கோடி ‘நிலையற்ற’ அழுத்தப்பட்ட கடனால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தொலைத் தொடர்புத் துறைக்கு நிதியுதவி (bail out) வழங்கக் கோரி நிதியமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.  என்னால் புரிந்துக் கொள்ள முடியாதது என்னவெனில், தொலைத் தொடர்புத்துறையில் கடன் திருப்பிச் செலுத்தாதவர்கள் சார்பில் எஸ்.பி.ஐ. தலைவர் ஏன் நிதியுதவி கேட்கிறார்?

பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய மகாராஷ்டிர விவசாயிகள்

கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வழக்கமாக கடைபிடிக்கும் வழியைப் போல, புது தில்லியில் தர்ணாவில் தொலைத் தொடர்புத்துறையின் உயர்பதவிகளிலிருப்போர் ஏன் உட்கார வைக்கப்படுவதில்லை?  கார்ப்ரேட்டுகளின் இறுதி நிலை அறிக்கைக்காக (balance sheet) ஒதுக்கப்பட்டிருக்கும் அதே சுத்திகரிப்பு முறையை (clean-up mechanism) விவசாயிகள் பயன்படுத்தும் பொழுது, கடன்பெறும் ஏழைகளிடமும், பெருநிறுவனங்களிடமும் இவ்வாறுதான் வங்கி அமைப்பு பாரபட்சம் காட்டுகின்றது.

பாரபட்சம் இத்துடன் முடிந்துவிடவில்லை.  விவசாயத்துறை கடன் தள்ளுபடிக்கான நிதி ஆதாரங்களை மாநில அரசுகளே கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கடனில் தள்ளாடும் தொலைத் தொடர்புத் துறைக்கு நிதியுதவி அளிப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தலைமையில் அமைச்சரவைகளின் குழுவை அமைத்துள்ளார். முன்னதாக எஃகு (steel) நிறுவனங்களின் மோசமான கடன் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுக்கப் போவதாக மார்ச் 23 ஆம் தேதி பிஸினஸ் ஸ்டாண்டர்டு செய்தி வெளியிட்டது.  அதன்படி, பிரதமர் அலுவலகமும், நிதி அமைச்சகமும் முன்னணி எஃகு நிறுவனங்கள் மற்றும் கடன் அழுத்தத்திலுள்ள 40 வங்கிக் கணக்குகளுக்கு புதியதாக நிதியுதவி வழங்குவது குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்நிறுவனங்களின் மொத்தக் கடன் ரூ. 1.5 இலட்சம் கோடி.

விவசாயத் துறைக்கு எதிரான நடவடிக்கைகள் இத்துடன் முடிவடையவில்லை.  விவசாயக் கடன் தள்ளுபடியை மகாராஷ்டிரா அறிவித்ததிலிருந்தே, “இது தேசியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும், பணவீக்கத்தை அதிகரிக்கும், வீட்டுக்கடன் தவணையை உயர்த்தும்” என நச்சுப் பிரச்சாரம் செய்து மக்களை தவறாக வழிநடத்த பெரும்பான்மையான தொலைக்காட்சிகள் தங்கள் நேரத்தை அர்பணிப்பதை நான் பார்க்கிறேன்.  விவசாயிகளை குற்றவாளிகளாக வேண்டுமென்றே சித்தரிக்கின்றனர்.  அதே நேரம் கார்ப்ரேட்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் போது இத்தகைய விஷயங்கள் முன்னிலைப்படுத்தப் படுவதில்லை.  உண்மையில் கார்ப்ரேட்டுகளுக்கு நிதியுதவி வழங்குவது பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக முன்வைக்கப்படுகிறது. அதே சமயம், விவசாயக் கடன் தள்ளுபடி, நாட்டின் நிதிச் சரிவுக்கான காரணியாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

அமெரிக்க மெர்ரில் லிஞ்ச் வங்கி (Bank of America Merrill Lynch) அறிக்கைப்படி, 2019 பொதுத் தேர்தலுக்கு முன் சுமார் ரூ. 2.57 இலட்சம் கோடி விவசாயக் கடன் (அதாவது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%)  தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் அதிக அளவில் தள்ளுபடி செய்யப்படும் கார்ப்ரேட் கடன்கள் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று மெர்ரில் லிஞ்ச் நமக்கு ஒருபோதும் கூறுவதில்லை.  அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 2.57 இலட்சம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான மாபெரும் நிதியுதவி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.  ஆனால் தொலைத் தொடர்புத் துறைக்கு ரூ. 4 இலட்சம் கோடி நிதியுதவி வழங்கும் திட்டம் பற்றி மெர்ரில் லிஞ்ச் பேசுவதில்லை, ஏன்?  விவசாயிகளை மோசமாக சித்தரிப்பதன் மூலம் வழக்கமாக பெருமளவிலான கடன்களை திருப்பிசெலுத்தாத கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கவே மெர்ரில் லிஞ்ச் முதன்மையாக முயல்கிறது.

இப்படித்தான் வங்கிகள் விளையாடுகின்றன. இது வெறும் தார்மீக ஆபத்து மட்டுமல்ல; முற்றிலும் ஒழுக்ககேடானதும் கூட. வங்கி அமைப்பின் விதிகள் ஏழைகளுக்கு எதிராக பாகுபாடு காட்டக் கூடாது.

-தேவிந்தர் சர்மா
தமிழாக்கம்: சித்தார்த்தன்

மூலக் கட்டுரை : Why is it that corporate never protest on streets to seek loan waivers?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க