Saturday, October 23, 2021
முகப்பு புதிய ஜனநாயகம் வீரியரக மிளகாய் : கம்பெனிக்குப் பணமழை ! விவசாயிக்கு கடன் சுமை !!

வீரியரக மிளகாய் : கம்பெனிக்குப் பணமழை ! விவசாயிக்கு கடன் சுமை !!

-

“2020-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்கிறார் மோடி! இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்விக்கு “குறைந்தளவு நிலம், அதிக மகசூல்” (Less land, more crop) என்று ஒரே வரியில் பதில் சொல்கிறார் ‘தேசிய வேளாண்மை ஆணையத்தின் தலைவர்’ எம்.எஸ்.சுவாமிநாதன்!

நிலத்தடி நீர் வற்றிப்போனது, பருவமழைப் பொய்த்துப் போனது, பன்னாட்டு விதைக் கம்பெனிகளின் விதைகள் மட்டுமே சந்தையில் கிடைப்பது ஆகிய காரணங்களால் “குறைந்தளவு நிலம், அதிக மகசூல்” முறைக்கு இயல்பாகவே விவசாயிகள், மாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இத்தகைய நிர்பந்தத்திற்குப் பலியான விவசாயிகளில் ஒருவர்தான் கம்பம் பகுதியைச் சேர்ந்த முருகன். இவருக்கு சொந்தமாக நிலமெதுவும் இல்லை. அவரது அனுபவத்தைக் கேட்போம்.

“ஏற்கனவே தக்காளி, பீன்ஸ்னு அடுத்தடுத்து சாகுபடி செஞ்சதுல, போட்ட முதல் கூட கிடைக்கல. என்னடா பொழைப்புன்னு எனக்கு ஒரே வெறுப்பாகிப் போச்சுங்க! ஆனா, பக்கத்து தோட்டத்து விவசாயி ஒருத்தர் மிளகாய் பயிரிட்டு ஒரு வருசத்துல 20 லட்சம் ரூபாய் லாபம் எடுத்திருந்தார். நம்மால் மட்டும் ஏன் முடியாது? நாமும் அதே மாதிரி மிளகாய் போடுவோம். அவருக்கு கிடைத்த லாபத்துல பாதி கிடைச்சாலும் இருக்குற கடனை அடைத்து விடலாமே என்று யோசித்தேன்.

சைன்ஜெண்டா- HPH1048 வீரிய ரக மிளகாய் விதை போடப்பட்ட வயற்காடு. (உள்ளே )320 ரூபாய்க்கு விற்கப்படும் 10 கிராம் கொண்ட சின்ஜென்டா வீரிய ரக விதை பாக்கெட்.

வெயில், மழை ஆகியவற்றைத் தாங்கி பத்து மாதம் வரை மகசூல் தரும். காய்கள் பருமனாகவும், கலராகவும் இருப்பதால் சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது என்பதால் சக விவசாயிகள் எல்லாரும் “சைன்ஜெண்டாவின்-HPH1048” என்ற வீரியராக விதையை சிபாரிசு செய்தார்கள். 20 லட்சம் லாபமடைந்த விவசாயியும் இதே ரகத்தைத்தான் பயிரிட்டிருந்தார். எனவே நானும் சைன்ஜெண்டா விதையையே வாங்கினேன்.

ஒரு மருந்துக் கம்பெனியில கள அதிகாரியா வேலை செய்யும் நண்பரிடம் கலந்தாலோசித்தேன். “அவர் சொட்டுநீர் போட்டால் கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனாலும் குறைந்த நீரில் பாசனம் செய்யலாம். மேலும் உரங்களை சொட்டுநீரிலேயே கலந்துவிடலாம். கூலியாள் செலவு மிச்சமாகும்” என்று ஆலோசனை கூறினார். ஏற்கெனவே பருவமழையும் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டிவருவதால் நண்பரின் ஆலோசனையின்படி சொட்டுநீர் போட முடிவுசெய்தேன்.

100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் போட்டுவிடுவோம் என்று வேளாண்மைத்துறை அலுவலகத்திற்குப் போனேன். அங்கு, “சிட்டா, பட்டா, அடங்கல், வரைபடம், சிறுவிவசாயி சான்றிதழ், 2 போட்டோ, எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு வாங்க” என்றார்கள்.

அவங்க கேட்டதையெல்லாம் கொண்டுபோன பிறகு, “நாலு அடிக்கு ஒரு நாற்றுதான் நடனும். 16 எம்.எம். ஓஸ்-தான் தருவோம்” என்று கண்டிசன் போட்டார்கள்.

மூணு அடிக்கு ஒரு நாற்றுதானே சார் நடணும். எனக்கு தண்ணீர் குறைவாக இருப்பதால் 12 எம்.எம். ஓஸ் போதும் என்றேன்.

“உங்க சவுரியத்துக்கெல்லாம் கவர்மெண்டுல தரமாட்டாங்க. நாங்க சொல்றத செஞ்சாத்தான் 100 சதவீத மானியம் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டார்கள்.

விசாரித்துப் பார்த்ததில், வேளாண்மை அதிகாரிகள் – சொட்டுநீர் கம்பெனி – அரசியல்வாதிகள் அப்படின்னு ஒரு பெரிய களவாணிக் கூட்டமே இதுக்குப் பின்னால இருக்குனு தெரிஞ்சது! வேறு வழியில்லாமல் சொந்த செலவில் ஏக்கருக்கு 50,000 ரூபாய் செலவழித்து சொட்டுநீர் போட்டுட்டேன்.

10 கிராம் பாக்கட் சைன்ஜெண்டா விதை 320 ரூபாய்! ஒரு ஏக்கருக்கு 14 பாக்கட் வாங்கினேன். நடவு செய்ததிலிருந்து மூன்றுமுறை களையெடுப்பு, வாரத்திற்கு ஒருமுறை 3,000 ரூபாய்க்கு மருந்து, மற்றும் வளர்ச்சி டானிக், 15 நாளுக்கு ஒருமுறை உரம் வாங்க 2,000 ரூபாய், என்று  60 நாட்கள் பம்பரமாகச் சுற்றி செடியைக்  கவனித்தேன். இந்த அறுபது நாள் செலவு மட்டும் 50,000 ரூபாய்! இதுவரை என் குடும்பத்திற்குகூட நான் இவ்வளவு செலவு செய்ததில்லை. இதுநாள் வரை வீட்டில் ரேசன் அரிசிதான் சாப்பிடுறோம். ஆனால் வளர்ந்த செடியில் பூவும் காயுமாக நிறைந்து நின்றதைப் பார்த்தபோது, இந்தக் கவலை எல்லாம் பறந்துவிட்டது! இந்த முறை கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கை மனதில் தோன்றியது!

மிளகாய் தோட்டம்

கம்பெனிக்காரன் சொன்னது போலவே 15 நாளுக்கு ஒரு முறை 50 மூடை (ஒரு மூடைக்கு சராசரியாக 80 கிலோ) அறுவடை செய்தேன். மொத்தமாகக் கொண்டு போனால் மார்க்கட்டில் விலை கிடைக்காது என்பதால் ஒரு நாளுக்கு 10 மூடை வீதம் காய் பறித்தோம். ஆனாலும் மார்க்கட்டில் கிலோ 10 ரூபாய்க்குத் தான் விலை போனது. கடந்த வருடம் இதே சீசனில் 40-60 வரை விலை இருந்தது. முதல் அறுவடையில் 400 கிலோவுக்கு வரவு 4,000 ரூபாய்!   ஒருநாளுக்கு 10 பேர் வீதம், 5 நாளுக்கு 50 கூலியாள் சம்பளம் (150 ரூபாய் வீதம்)  7,500 ரூபாய்! மூடையை மார்க்கட்டுக்கு எடுத்துச் செல்லும் ஆட்டோ வாடகை 150 ரூபாய் வீதம்  5  நாளுக்கு 750 ரூபாய்! 100-க்கு 10 ரூபாய் கமிசன் வீதம் 4,000 ரூபாய்க்கு கமிசனாக  400 ரூபாய்!  ஆக மொத்தம் செலவு  8,650 ரூபாய்! மொத்தத்தில் நட்டம் 4,650 ரூபாய்! இன்னும் 10  மாதம் இருக்கிறதே… ஒருமாதம் விலை கிடைத்தாலும் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடலாம் என்று, என்னை நானே தேற்றிக்கொண்டு, அசராமல் விவசாயத்தைத் தொடர்ந்தேன்.

விலை இல்லை என்பதற்காக உரம்- மருந்து செலவை சுருக்க முடியாது. தொடர்ந்து முறையாக விவசாயத்தைக் கவனித்தால்தான் அதிகவிலை இருக்கும்போது நல்ல மகசூலைப் பெறமுடியும்! ஒரு வழியாக, நண்பரின் சிபாரிசால் சின்னமனூரில் உள்ள ஒரு மருந்துக்கடையில் கடனுக்கு உரம்- மருந்து கிடைத்தது. சம்பளத்திற்கு ஆள் விடாமல் நானே மருந்தடித்தேன்.

உரக்கடை ரசீதுகளும் (இடது), வயலில் தெளித்துக் காலியான பயிர் மருந்து புட்டிகளும். உரம், பூச்சி மருந்து, வளர்ச்சி டானிக் என அறுபது நாளில் ஆன செலவு மட்டும் ரூ.50,000/-.

தொடர்ச்சியாக கூலியாட்களுக்கு வேலை தராவிட்டால், வேறு வேலைக்குப் போய்விடுவார்கள்… காய் பறிக்கும்போது நமக்கு ஆள் கிடைக்காமல் போய்விடும். ஒரு பெண் ஒரு மூடைதான் காய் பறிப்பார். எனவே 10 பெண்களுக்கு தினசரி வேலை கொடுத்தாக வேண்டும். இதற்காக மீதி ஒரு ஏக்கரில் கத்திரி பயிரிட்டேன். நான், என் அம்மா, மனைவி மூவரும் இலவச வேலையாட்கள்!

திடீரென்று ஒருநாள் வந்த எனது நண்பர், “மழை இல்லாததாலும், அதிக வெயிலாக இருப்பதாலும் மிளகாயில் வைரஸ் பரவுகிறது.  அது வந்துவிட்டால், செடியைக் காப்பாற்றவே முடியாது. எனவே நான்கு நாளுக்கு ஒருமுறை தனியாக ஒரு மருந்து அடிக்கவேண்டும்” என்று சொன்னார். வாரத்திற்கு ஒரு மருந்து என்பதுபோய், நான்கு நாளுக்கு ஒரு மருந்து என்றாகிவிட்டது! மருந்துக்கடையில் கடன் ஏறிக்கொண்டே இருந்தது.

“சாதாரண சம்சாரிகள் எல்லாம் வைரசை சமாளித்து பயிரைக் காப்பாத்த முடியாது. அதனால் மகசூல் குறைந்து, மார்க்கெட்டுக்கு காய் வரத்துக் குறைந்து போகும். எனவே செலவைப் பார்க்காமல் பராமரிப்பவனுக்குத்தான் நல்ல விலை கிடைக்கும்” என்று சக விவசாயிகள் ஆலோசனை சொன்னார்கள்.

இதற்குப் பிறகு நான் மருந்து வாங்க டூவீலரில் போகும்போதெல்லாம் எத்தனை தோட்டத்தில் வைரஸால் மிளகாய் செடி காய்ந்து கிடக்கிறது என்று தேட ஆரம்பித்தேன்! பாதிக்கப்பட்ட தோட்டத்தைப் பார்க்கும்போது  மார்க்கட்டில் மிளகாய் விலை எவ்வளவு அதிகரிக்கும் என்று மனம் கணக்குப் போடத் தொடங்கியது!

ஒரு கட்டத்தில், “ச்சே…அவனும் நம்மள மாதிரி கடன் வாங்கித்தானே வெள்ளாமை வச்ச்சிருப்பான்….அடுத்தவன் நட்டத்துல நாம லாபக் கணக்குப் பார்க்கிறோமே… எவ்வளவு சின்னப் புத்தி நமக்கு” என்று என் மீதே எனக்கு வெறுப்பு வந்து அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்.

7-வது மாதத்தில் தண்ணீர் சுத்தமாக வற்றி விட்டதால், அரை ஏக்கர் மிளகாயையும், அரை ஏக்கர் கத்திரியையும் உழுது அழித்துவிட்டேன். கத்திரியில் ஒரு காய்கூட பறிக்கவில்லை. வெறும் குச்சி மட்டும்தான் இப்போது இருக்கிறது!

சந்தையில் மிளகாயின் விலை அதளபாதாளத்திற்குச் சரிந்து போனதால், விளைந்த தமது மிளகாயை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் ஆந்திர மாநில விவசாயிகள்.

மொத்தக் கணக்குப் பார்த்ததில், பத்து மாதத்தில் 3 லட்சம் ரூபாய்க்கு வருமானம் எடுத்திருக்கிறேன். தினசரி வேலையாள் கூலி, எடுப்புக்கூலி, ஆட்டோ வாடகை, கமிசன் ஆகிய வகையில் மொத்த செலவு 3,45,000 ரூபாய்! உரம் – மருந்து செலவு மட்டும் 2,75,000 ரூபாய்! ஆக மொத்தம், செலவு 6,20,000 ரூபாய்! கடைசியில் 3,25,000 ரூபாய் புதிய கடன் பட்டதுதான் என் குடும்பத்தின் பத்து மாத உழைப்புக்கு கிடைத்த பலன்!

மருந்துக் கடையில் இன்னமும் 50,000 ரூபாய் கடன் நிற்கிறது! அதை அடுத்த விவசாயத்தில் தருகிறேன் என்று சொல்லிவிட்டு வரலாம் என்று கடைக்குப் போயிருந்தேன். அங்கு என்னைப் போலவே ஒரு விவசாயி தவணை சொல்ல வந்திருந்தார். “தம்பி நான் மூணு ஏக்கர்ல மிளகாய் போட்டேன். விலை மட்டும் கிடைத்திருந்தால் கணக்கே வேற! நமக்கு நேரம் சரியில்லையே” என்றவர், “இந்தக் கடைக்காரன் 15 வருசத்துக்கு முன்னால வேறு ஒரு கடையில் சம்பளத்துக்கு வேலை செய்துக்கிட்டு இருந்தான். இன்னைக்கு ஆறு குடோனில் உரம் – மருந்து வச்சு விக்குறான். அவன் காலில் மண் படாமல் பல கோடிக்கு அதிபதியா இருக்கான். நீயும் நானும் கடன்காரனா வந்து இங்க நிக்கிறோம்” என்று கூறிவிட்டு கடையின் படியேறினார். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பிக்பாக்கட்காரனிடம் பறிகொடுத்தவனைப் போல நான் துடித்துப் போனேன்!

முன்னெல்லாம் என் பொண்டாட்டி எப்பப் பாத்தாலும் கடன், கடன்னு வந்து நிக்குறீங்களே தோட்டத்து வருமானத்தை என்ன பண்ணுனீங்க? என்று கணக்கு கேட்டு சண்டை போட்டுக்கிட்டே இருப்பாள். இதுக்காகவே இந்த தடவை வரவு-செலவு பொறுப்பை பொண்டாட்டிகிட்ட கொடுத்துட்டேன். இப்போ வீட்டுல எல்லோரும் என்னை ஒரு நோயாளி மாதிரி பரிதாபமா பாக்குறாங்க! அவமானமா இருக்கு!” என்று முடித்துக் கொண்டார் முருகன்.

***

வீரிய ரகங்களும், நவீன தொழில்நுட்பமும் உற்பத்தியைப் பெருக்கலாம். விளைபொருளின் விலையை தீர்மானிப்பது யார்? உலக வர்த்தக கழக ஒப்பந்தப்படி, அரசு தலையிட்டு விலை நிர்ணயம் செய்வதும் கொள்முதல் செய்வதும் நியாயமற்ற வணிக நடவடிக்கைகள். விலை நிர்ணயம் செய்தால் அந்த விலைக்கு அரசுதான் கொள்முதல் செய்யவேண்டும். தானியக் கொள்முதலையே நிறுத்தி வரும் அரசு, மிளகாயையா கொள்முதல் செய்யும்? அல்லது அரசு நிர்ணயிக்கும் விலையில் மண்டிக்காரனோ, பன்னாட்டு நிறுவனமோ கொள்முதல் செய்யப் போகிறார்களா?

பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான சந்தை உலகளவில் அதிகரித்து வருவதையடுத்து நிறமூட்டியாகவும், கார மணத்திற்காகவும் உலகளவில் மிளகாயின் தேவை அதிகரித்து வருகிறது. மருத்துவத் துறையிலும் மிளகாய் பயன்பட்டு வருகிறது! இத்தேவையை ஈடுகட்டவே சைன்ஜெண்டா நிறுவனம் இந்தியாவின் சந்தையைக் கைப்பற்றி வருகிறது. சைன்ஜெண்டா போன்ற கார்ப்பரேட்டுகளின் வருமானம்தான் மோடி ஆட்சியில் இரட்டிப்பாகி வருகிறது.

-மாறன்
-புதிய ஜனநாயகம் – ஜூலை 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

  1. So nothing wrong with the seeds or fertilizer. Then what went wrong ? Planning ?

    Over supply is the problem here in this scenario.

    State Governments should organize this farming sector like western countries.Especially in planning.

  2. முருகனின் நிலைமைதான் நாடு முழுதும் விவசாயிகளின் நிலைமையா. ..மனசு ரொம்ப வலிக்குது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க