privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்வி94 குழந்தைகளைக் கொன்ற குடந்தை தீ விபத்து குற்றவாளிகள் விடுதலை !

94 குழந்தைகளைக் கொன்ற குடந்தை தீ விபத்து குற்றவாளிகள் விடுதலை !

-

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் 9 பேரை விடுதலை செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்பு கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும், பிள்ளைகளை இழந்த பெற்றோர்களுக்கும் இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் அநீதி.

தஞ்சை மாவட்டம் குடந்தையில் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004 ஜூலை 16 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி தீக்கு இரையாகினர். தனியார் பள்ளியின் இந்த கொடூர கொலைக்கு 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட இந்த 25 பேரில் தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன், மாவட்ட தலைமை கல்வி அலுவலர் பழனிச்சாமி, வட்டாச்சியர் பரமசிவம் ஆகியோரை தமிழக அரசே தன் சொந்த பொறுப்பில் விடுவித்தது. இவர்கள் போக ஒருவர் இறந்துவிட்டார்.

மீதமுள்ள 21 பேரில் பதினோரு பேர்களான மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழனிச்சாமி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், பாலசுப்பிரமணியம், ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகர அமைப்பு அலுவலர் முருகன் ஆகியோரை குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது.

மீதமுள்ள 10 பேரில், பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்த லெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்திருந்தது.

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலாஜி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முகமது அலி தீர்ப்பு வழங்கினார்.

மேலும், நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ரூ.51,65,700 அபராதமும், ஜெயச்சந்திரனுக்கு ரூ.50,000, கல்வித்துறை அதிகாரிகள் நன்கு பேருக்கு வெறும் ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

விரைவு நீதிமன்றம் என்பதே குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், 488 பேர் சாட்சிகள், 3,126 பக்க குற்றப்பத்திரிக்கை, 60 ஆவணங்கள் என்று தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இழுத்தடிக்கபட்டு, 2006 -ல் தஞ்சை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தான் செப்டம்பர் 24, 2012 அன்று தான் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இரண்டாண்டு விசாரணைக்குப் பிறகு 30.07.2014 அன்று தான் இந்த தீர்ப்பையே வழங்கியது நீதிமன்றம்.

1989 -ல் ஷாம்செட்பூரில் டாடா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 குழந்தைகள் கருகினர். அதன் பிறகு இந்தியாவையே உலுக்கி எடுத்த குடந்தை வழக்கில் சரியாக பத்து ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட இத்தீர்ப்பிலிருந்தே குற்றவாளிகளை யார் பாதுகாக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

விபத்து குறித்து ஆய்வு செய்த சம்பத் கமிஷன் நடந்த விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு; என்று கூறிய அறிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, “இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 1 லட்சம், காயம் அடைந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 50,000, இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு வீட்டு வசதி பட்டா” என்று ஏற்கனவே வழங்கி விட்டதாக கூறி தனது கருணையை முடித்துக் கொண்டது.

சரியான இழப்பீடு கோரி பெற்றோர் தரப்பில் 2010-ல் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுகுழு அமைக்க உத்தரவிட்டார் நீதிபதி அரிபரந்தாமன். அதனை எதிர்த்து அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு.

அதனை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணா ஆகியோர் அமர்வு 24.04.2014 அன்று மனுவை தள்ளுபடி செய்து, இரண்டு வாரத்துக்குள் நீதிபதி சண்முகம் தலைமையிலான குழு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன் பிறகும் விசாரணை குழு அமைக்காமல் மோசடி செய்து வந்த தமிழக அரசின் அயோக்கியத்தனத்தை எதிர்த்து பெற்றோர் தரப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலர், கல்வித் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ அரசு.

அதன் மீதான விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் ஜோசப் குரியன், ரோகிண்டன், எஃப். நாரிமன் ஆகியோர் அமர்வு தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை ஜூலை 2014 ல் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில் இந்த 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசும், (குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் என்ன ஒரு அக்கறை) தண்டிக்கப்பட்ட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். சிறையில் இருக்கும் போதே பள்ளியின் தாளாளர் சரஸ்வதி கடந்த 2016-ல் இறந்து விட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.எம்.வேலுமணி அமர்வு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளி வைத்தனர். இந்நிலையில் கடந்த 10.08.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பள்ளியின் நிறுவனர் பழனிசாமியின் தண்டனைக்காலமும், சத்துணவு உதவியாளர் வசந்தியின் தண்டனைக் காலத்தையும் குறைத்தும், மற்ற ஏழு பேருக்கு அளிக்கப்பட தண்டனையை ரத்து செய்தும் தற்போது உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பதினோரு பேரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. “முதலில் இந்த வழக்கில் 3 பேரை விடுவித்தனர். பிறகு 11 பேரை விடுவித்தனர். தற்பொழுது அனைவரையும் விடுவித்தால் தன் முகத்தில் வழியும் மலத்தை மக்கள் கண்டுபிடுத்து விடுவார்களோ என்று குற்றவாளிகளில் இரண்டு பேரின் தண்டனையை குறைத்து மற்ற அனைவரையும் விடுவித்துள்ளது நீதிமன்றம்.

இந்த தீர்ப்பை சற்றும் எதிர்பாராத பெற்றோர்கள், செய்வதறியாமல் தங்களின் பிள்ளைகள் நினைவிடத்தின் முன்பு திரண்டு கண்ணீர் விட்டு கதறினர். இந்த அரசும் ஆளும் வர்க்கமும்  தனியார் பள்ளி கொள்ளையர்களுக்கும் ஆதரவாக இருக்கும் பொழுது இதைத் தவிர வேறென்ன அவர்களால் செய்யமுடியும்?

“தீயில் கருகிய எங்கள் குழந்தைகள் தியாக குழந்தைகளாக உள்ளனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையிலாவது நீதி வழங்கியிருக்க வேண்டும். மாறாக விடுதலை செய்துள்ளனர். நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்“ என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

ஊழல் ராணி ஜெயலலிதாவின் சொத்து பறிப்பு வழக்கில் இதே உச்சநீதிமன்றம் எப்படி இழுத்து வாய்தா ராணிக்கு உதவி செய்தது என்பது ஊரறிந்த விசயம். குடந்தை தீ விபத்து வழக்கோ தனியார் கல்வியின் அஸ்திவாரத்தையே சாய்த்துவிடும் என்பதால் நீதிக்கு உத்திரவாதமில்லை.

“இந்த விபத்து நடந்த பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் பரிந்துரைகளை எந்த தனியார் பள்ளியும் மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை. என்பதுதான் கடந்த பத்தாண்டு கால அனுபவம். கட்டண நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட சிங்காரவேலர் கமிட்டியையும் தங்களது கால் தூசுக்கு சமமாக கூட எந்த தனியார் பள்ளி முதலாளிகளும் மதிக்கவில்லை.” மக்களும் வேறு வழியேயில்லாத காரணத்தால் தனியார்மய மோகத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர்.

“பொதுப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தவும், தாய்மொழி வழிக் கல்விக்கு சாவுமணி அடிக்கவும், கல்வித் தந்தைகள் கண்மூடித்தனமாக மக்களை சுரண்டி கொள்ளையடிக்கவும் வழிவகுக்கும் இந்த தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் வலிய வந்து தங்களது பிள்ளைகளை சேர்ப்பதை இந்த தீர்ப்பு எந்த விதத்திலும் குறைத்து விடாது” என்று ஏற்கனவே 2014 -ல் வெளியான தீர்ப்பின் போது வினவிற்கு அளித்த பேட்டியில் கூறினார் மூத்த கல்வியாளர் திரு. எஸ்.எஸ். ராஜகோபாலன்.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் சென்னை உயர்நீதி நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதையே தான் மீண்டும் வலியுறுத்துகிறது. ஆகவே, இந்தத் தீர்ப்பு கல்வித்துறையில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகள், முறைகேடுகள், ஊழல்களை எள் முனையளவும் மாற்றப்போவதில்லை.

இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகளின் மொத்த கல்வி செலவையும் அரசு ஏற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையைச் செய்வதற்கு மேல் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் சிந்திக்க விரும்பவில்லை.

நாடு முழுவதும் அன்றாடம் நம் குழந்தைகளின் பேருந்து பயணத்திலிருந்து, வகுப்பறைக் கொடுமைகள், பாலியல் தொல்லைகள், கொலைகள், தற்கொலைகள் என அனைத்திற்கும் மூல முதற்காரணம் தனியார் மயக் கல்வியும், கொள்ளையுமே. இந்தத் தனியார் மயத்தை ஊக்குவித்து வளர்க்கும் அரசும், அதிகார வர்க்கமுமே முதல் குற்றவாளிகள்.

இவர்களை நீதிமன்றங்கள் ஒரு போதும் தண்டிக்காது என்பதற்கு இத்தீர்ப்பு மற்றுமொரு சான்று. மக்கள் தமது அதிகாரத்தை எடுக்காமல் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்காது என்பதற்கும் மற்றுமொரு நிரூபணம்!

_____________

தனியார்மயக் கொள்கைளுக்கு எதிராக போராடும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு  நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க