Tuesday, June 28, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும் !

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும் !

-

மிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பின் (Joint Action Committee of Tamilnadu Teachers Organisations And Government Employees Organisations)  சார்பாக 2017, ஆகஸ்ட் 22  அன்று நடைபெற்றது.  போராட்டத்தில் தமிழகம் முழுவதும் பல்லாயிரம் ஊழியர்கள், “பாஜகவின் விளம்பரத் தூதரான தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனின்” மிரட்டலையும் மீறி கலந்து கொண்டனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச்செய்து, பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர அரசாணை பிறப்பிக்க வேண்டும்; ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதற்கு முன், சென்ற ஊதிய மாற்றத்தில் ஏற்பட்டுள்ள முரண்களைக் களைந்து, சரி செய்யப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில், எட்டாவது ஊதிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மேலும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் போராட்டம்

எட்டாவது ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்படும் வரை இடைக்கால நிவாரணமாக 20 சதவிகித ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த  5 -ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் கோட்டை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்திருந்தனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது போலீசு.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள மாவட்டங்களில் இருந்து பேருந்து, வேன்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, மீறி வந்தவர்களை போலீசு சுங்கச்சாவடியில் மடக்கி மிரட்டியுள்ளது. இதனையெல்லாம் மீறி ஆயிரக்கணக்கனோர் திரண்டு மிகப்பெரும் ஆர்பாட்டம் நடத்தினர். இருப்பினும் இந்த அடிமை அரசுக்கு உரைக்கவில்லை. இந்த ஆர்பாட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாததால் அடுத்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு காரணம் என்ன?

இந்த போராட்டத்தை இவ்வளவு வீரியமாக நடத்துவதற்கு சி.பி.எஸ் ( CPS- Contributed Pension Scheme) எனப்படும் பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் தான் காரணம். அரசு ஊழியர்களுக்கு எதிராக, அவர்களுடைய பல  ஆண்டுகால உழைப்பை சுரண்டுவதற்கு அரசு கொண்டு வந்த திட்டம்.

கடந்த 2004 -ம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு “பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்” அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே தடுக்கும் போலீசு

சி.பி.எஸ். என்ற இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்தாலும், இதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே அமல்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அதனடிப்படையில் தமிழகத்தில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.

தொடக்கத்தில் இந்த திட்டம் குறித்து பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் ஊழியர்கள் மத்தியில் இல்லாமல் இருந்தது. சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்போடு கணிசமான தொகை திரும்ப கிடைக்கும் என்பதால் யாரும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும் இந்த திட்டம் மோசடியானது என்பதை புதிய ஜனநாயகம் 2012 ஜனவரி மாத இதழில் அம்பலப்படுத்தியது.

தற்பொழுது தான் “பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை” ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாக இந்த கோரிக்கை முன்னுக்கு வந்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, பணியில் இருந்தபோது உயிரிழந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது தான் இந்த அரசின் முதல் மோசடி.

விபத்தில் இறக்கும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று யாருக்கும் ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைவில்லை. எனவே ஜேக்டோ – ஜியா போன்ற அமைப்புகள் இதுபற்றிய ஆய்வினை நடத்தியபோது, 2004 -ம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் செலுத்திய தொகைக்கான கணக்கு என்னவானது என்றே தெரியவில்லை, அதுமட்டுமின்றி பழைய ஓய்வூதிய திட்டம் அளித்த பல்வேறு கொடைகள், பண பலன்கள் எதுவும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை. இது ஒட்டு மொத்த ஊழியர்களுக்கும் அந்த அரசு செய்த நம்பிக்கை மோசடி.

எத்தனையோ போராட்டத்திற்க்கு பின்னரும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படாமல், ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கும்போதும் சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்வதை பார்த்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திணறுகிறார்கள்.

இந்த திட்டத்தை கொண்டு வந்தது யார்?

பாஜக -வின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஆகஸ்ட் 2003 -ல் ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.

விழுப்புரத்தில் நடத்தப்பட்ட போராட்டம்

இதற்கான சட்டம் செப்டம்பர் 2013 -ல்தான் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசால் நிறை வேற்றப் பட்டது. பாஜக, ஓய்வுதிய துறையில் தனியார்மயமாக்கும் முயற்சியை எதிர்க்காமல் ஆதரித்தது. அதற்கு காரணம், இந்த திட்டத்திற்கு “பிள்ளையார் சுழி” போட்டதே பாரதிய ஜனதா என்பதால் தான்.  2014 பிப்ரவரி 1 -ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசிதழில் (கெஜட்டில்) அறிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக A1 ஜெயா அரசு அமல்படுத்தி 6.8.2003 -ல் அரசாணையும் வெளியிட்டது.

மாற்ற முடியாத திட்டமா சி.பி.எஸ்?

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் – 2013 (Pension Fund Regulatory and Development Authority Act – 2013) என்ற இந்தச் சட்டத்தின்3 (4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது. தமிழக அரசு அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதிமுக அமைச்சரோ  “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்கிறார்.

புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ. 4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பி வைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை. மேலும் இந்தப் பணம் அப்படி அனுப்பப் பட்டிருந்தாலும் பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்து சூதாடப் படவேண்டும் என்பதே சட்டத்தின் அம்சம். இவ்வளவு பெரிய பணம் சும்மா முடங்கிக் கிடப்பது முதலாளிகளுக்கு நல்லதல்ல என்றே அரசு இதை கொண்டு வந்தது.

புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று நாடகமாடுகிறார்.

சி.பி.எஸ். திட்டம் யாருக்கு நன்மை?

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.

ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த முறையே ஏமாற்று வேலை என்கிறார்கள் ஊழியர்கள்.

தனியார்மய  தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வரும் இந்திய அரசு, ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீத வருங்கால வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் மைய அரசு தன் பங்காகச் செலுத்தும் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை பா.ஜ.க.வின் தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது.

ஓய்வூதியத் திட்டத்தில் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதிலும் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன.  அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் என்ற மைய அரசு நிறுவனத்திடமும், அந்த நிதியை முதலீடு செய்யும் பொறுப்பு இந்திய அரசு வங்கியிடமும் இருந்து வந்தது.  இந்நிறுவனங்கள் இந்த நிதியைத் திறம்பட முதலீடு செய்யும் ஆற்றல் கொண்டதாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்யும் பொறுப்பில் ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களையும் நுழைய அனுமதித்தது, பா.ஜ.க. கூட்டணி அரசு.

அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கி வரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 1960 -இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாக இருந்தது.  இது, 2004 – 05  இல் 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது.  பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தால்கூட, இச்செலவு 2027 – 28  இல் 0.54 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் காயத்ரி கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.

எனவே, அரசின் நிதிப் பற்றாக்குறையை குறைப்பது என்பது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கமல்ல.  அரசு தனது சட்டபூர்வ பொறுப்பைக் கைகழுவுவதும்;  தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க வருங்கால வைப்பு நிதியைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பதும், அதன் மூலம் இவர்களை லாபம் கொழுக்க வைப்பது தான் இதன் நோக்கம்.

அறவழிப்போராட்டம் தீர்வாகுமா?

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக அரசு தொடுத்திருக்கும் மிகப்பெரிய தாக்குதல் இந்த புதிய ஓய்வுதிய திட்டம். இந்த திட்டத்தின் முன்னோடியான அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் கொட்டியதால்,  1980 -க்கும் 2007 -க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்கப் பங்குச் சந்தை எக்குத்தப்பாக வீங்கியது.  இந்த வீக்கத்தால், தொழிலாளி வர்க்கத்தைவிட, பாதுகாப்பான நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தரகு நிறுவனங்கள் போன்றவைதான் பலனடைந்தன.

குறிப்பாக, தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மட்டும் 2000 -க்குப் பிந்தைய பத்து ஆண்டுகளுக்குள் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி 1,700 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக (85,000 கோடி ரூபாய்) இலாபம் ஈட்டின.  சப்  பிரைம் நெருக்கடியால் அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீக்கம் வெடித்தபொழுது, ஏறத்தாழ 3 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமானமுள்ள அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின், நடுத்தர வர்க்கத்தின் ஓய்வூதியச் சேமிப்பு சுவடே தெரியாமல் மறைந்து போனது.

இது போன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகும் என்பதை எதிர்பார்க்கும் ஆளும் கும்பல், அதற்கேற்றபடியே புதிய ஓய்வூதியச் சட்டத்தில், “தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முடியாது; சந்தையில் திடீர் இழப்புகள் ஏற்பட்டால், சேமிப்புத் தொகையில் ஒரு சிறு பகுதியைத் திருப்பித் தருவதற்குக்கூட உத்தரவாதம் தர முடியாது” என நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதியைப் பிடித்தம் செய்து, அதனை அரசிடம் கட்டாமல், அந்நிதியில் பல்வேறு முறைகேடுகளையும் கையாடல்களையும் தனியார் முதலாளிகள் செய்துவருவது ஏற்கெனவே அம்பலமாகிப் போன உண்மை.  இனி இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படுவதற்கான வாய்ப்பை இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசே  திறந்துவிட்டுள்ளது.

எனவே  இந்த கொள்ளை கும்பலை வீழ்த்துவது எப்படி? கார்ப்பரேட்டுகளுக்கு அடிமை வேலை செய்யும் மோடி, எடப்பாடி அரசை நிலை குலையச் செய்வதன் மூலம் தான் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் தமது உரிமைகளை மீட்பது சாத்தியம்.  அதற்கு அனைத்துப் பிரிவு மக்கள் திரளும் திடப்படவேண்டும். அதற்கான துவக்கமாக செப்டம்பர் 9 அன்று நடக்கவிருக்கும் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அமையட்டும்.

படங்கள், செய்தி: வினவு செய்தியாளர்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க