Tuesday, September 22, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் ரேசன் - கேஸ் மானிய வெட்டு ! புதுச்சேரியில் திரண்ட தொழிலாளி வர்க்கம் !

ரேசன் – கேஸ் மானிய வெட்டு ! புதுச்சேரியில் திரண்ட தொழிலாளி வர்க்கம் !

-

ரேசன், கேஸ் மானியங்களை வெட்டு ! மக்களைப் பலியிடு ! நடப்பது – உலக வங்கி, கார்ப்பரேட்டுக்களின் ஆட்சி !

த்தியில் ஆளும் பாசிச மோடி அரசு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என மக்கள் என்ன தான் கஷ்டப்பட்டாலும், அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல் தனது கார்ப்பரேட் விசுவாசத்தைக் காட்டுவதில் குறியாய் இருக்கிறது. ரேசன் பொருட்களுக்கு நிபந்தனை, கேஸ் மானிய ரத்து என தனது அடுத்த தாக்குதலை மக்கள் மீது தொடுத்திருக்கிறது.

இதனால், வருடம் ஒரு லட்சம் வருமானமுள்ளவர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளவர்கள், மூன்று அறை கொண்ட வீடுள்ளவர்கள், வீட்டில் ஏ.சி. பிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு ரேசன் பொருட்கள் கிடையாது. மொத்தத்தில் யாருக்கும் ரேசன் பொருட்கள் கிடையாது என்பதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறார் மோடி. மேலும், கேஸ் மானியத்தை முழுவதுமாக ரத்து செய்தும், மாதம் ரூ.4 விலையேற்றிக் கொள்ள கேஸ் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தும் அவை செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது மோடி அரசு.

ஏற்கனவே மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், தொழில் இழந்தும், வேலை இழந்தும், கூலி இழந்தும் வீதியில் வீசியடிக்கப்பட்டனர். அற்ப கூலி பெறுபவர்கள் ஜி.எஸ்.டி. என்ற வரியின் மூலம் நடந்த வழிப்பறியால் போண்டியானார்கள். எத்தனை ஏக்கர் நிலமிருந்தாலும், மானிய வெட்டு, வறட்சியால் விவசாயம் இல்லாததால் செத்து வருகின்றனர் விவசாயிகள். இத்தனை மக்களின் உயிரையும் இது நாள் வரை பிடித்து வைத்திருந்தது இந்த ரேசன் அரிசி தான். இனி அதற்கும் வழியின்றி பட்டினியில் தள்ளி மக்களைக் கொல்லப் போகிறது மோடியின் கும்பல். ஏற்கனவே உத்திரவாதமான வேலையோ, கூலியோ இல்லாமல் அல்லல்படும் மக்களுக்கு கேஸ் மானிய ரத்தும், விலை உயர்வும் மேலும் ஒரு சுமையாக மாறும்.

இப்படி நம்மீது தொடுக்கப்படும் தொடர் தாக்குதல்களுக்குக் காரணம், மத்திய மாநில அரசுகள் பின்பற்றும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகளே. எனவே, கொள்கைகள் என்று சொல்லி, கொள்ளையை நடத்துகின்ற, மக்களுக்கு எதிராக மாறிப்போன. இந்த அரசுக் கட்டமைப்பைத் தகர்க்காமல், இந்த கட்டமைப்பைக் கட்டிக் காக்கின்ற ஓட்டுக் கட்சிகளை மாறி மாறி தேர்ந்தெடுப்பதால் மக்கள் பிரச்சினை தீரப்போவதில்லை.

நமது பிரச்சினைகளுக்கான தீர்வு இந்தக் கட்டமைப்புக்கு வெளியில் தான் உள்ளது. எனவே, மக்களுக்கு உண்மையான அதிகாரம் வழங்கும் சமூகத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் படைத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதே நமது முதன்மையான பணியாகக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கி மக்கள் நெருக்கமாக உள்ள கடைவீதி அமைந்துள்ள புதுச்சேரி, வில்லியனூர் கோட்டை மேடு சந்திப்பில் 21.08.2017 அன்று மாலை 05.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது.

நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஆட்சி அல்ல; 1990 -களின் துவக்கத்தில் ஆட்சியாளர்களால் கையெழுத்திடப்பட்ட அடிமை சாசனத்தின் மூலம் உலக வங்கி, பன்னாட்டு கார்ப்பரேட்டுக்களின் ஆட்சி. அவர்களது கோலுக்கு ஆடும் குரங்காகத் தான் இருக்கின்றனர் ஓட்டுக்கட்சிகள். எனவே, இந்தக் கட்டமைப்பில் இதற்கான தீர்வு இல்லை. கட்டமைப்புக்கு வெளியே தான். தேவை ஆட்சி மாற்றம் அல்ல! மக்களின் கைக்கு வரும் அதிகார மாற்றம் தான் என்பதை புஜதொமு-வின் மாவட்டத் தலைவர் தோழர். சரவணன் தனது தலைமையுரையில் பதிவு செய்தார்.

அடுத்து பேசிய புஜதொமு மாநிலப் பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு, கேஸ் மானியம், ரேசன் பொருட்கள் ரத்து மட்டுமல்ல பிரச்சினை, தொழிலாளர் சட்டத்திருத்தம், நீட் தேர்வு, நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகளின் போராட்டம் என இந்த அரசால் மக்கள் படும் துன்பங்களை மக்களின் மொழியில் எதார்த்தமாகப் பேசினார்.

அடுத்து பேசிய புஜதொமு-வின் மாநில இணைச் செயலாளர் தோழர் மகேந்திரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் பதவிச் சண்டை, அதிகாரச் சண்டையைத் தான் ஊடகங்கள் முதன்மைப்படுத்துகிறது, தமிழகமெங்கும் மக்கள் நடத்தும் போராட்டங்களை இருட்டடிப்பு செய்வதை அம்பலப்படுத்தினார்.

இறுதியாகப் பேசிய புஜதொமு-வின் பொதுச்செயலாளர் தோழர் லோகநாதன், வேலை செய்யத் தயாராயிருக்கும் மக்களுக்கு வேலையில்லை. வேலையில் இருப்பவர்களுக்குக் கூலியில்லை. விவசாயிகளால் விவசாயம் செய்ய முடிய வில்லை இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் கேஸ் மானியம் ரத்து, ரேசன் பொருட்கள் ஒழிப்பை திணிக்கிறது மோடி அரசு. முதலாளி களுக்கு ஏற்ற திட்டங்களை வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பொய் சொல்வதும், அத்திட்டங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், ஆர்.எஸ்.எஸ். வானரங்களை வைத்து தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தி மக்களை முட்டாளாக்கும் வேலையைத் தான் செய்து வருகிறது பார்ப்பனக் கும்பல். மோடி பதவியேற்பதற்கு முன்பே, ஒரு மதவெறி பாசிஸ்டான மோடியின் நடவடிக்கைகள் எப்படி என்று உணர்ந்து அம்பலப்படுத்தினோம்.

மோடி மட்டுமல்லாது. நாடாளுமன்ற, சட்டமன்ற ஓட்டுக்கட்சிகளின் ஒவ்வொரு திட்டங்களையும் புரிந்து கொண்டு எதிர்ப்பதற்கு பிரச்சினையின் பின்னுள்ள அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதலை வைத்துத் தான் ஓட்டுப்போடும் தேர்ந்தெடுக்கும் தேர்தல் பாதை மக்களுக்கு எதிராகிப் போனது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தக் கட்டமைப்பை தகர்த்து, மக்களது அதிகாரத்தைக் கொண்ட மாற்றுக் கட்டமைப்பு நிறுவுவதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுமே ஆகும் என வலியுறுத்தி உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு, வரிக்கு மேலே வரியப் போடுற அரசாங்கம், மானத்தை இழந்து வாழ்க்கை வேணுமா, எச்சரிக்கை, எச்சரிக்கை ஆகிய ம.க.இ.க.-வின் புரட்சிகர பாடல்களை தோழர்கள் பாடினர்.

அருகில் உள்ள கடைக்காரர், ஒவ்வொரு முறையும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்ன பேசி என்ன ஆகப் போகிறது என்று நினைத்ததுண்டு. ஆனால், ஒவ்வொரு விசயமும் நச்சென்று இருக்கிறது. பாடல்கள் நிலவும் சூழ்நிலைகளுக்கு மிகவும் பொருத்தமாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கிறது என்றார்.

பறையிசை, முழக்கம், உரைகள், பாடல்கள் ஆகியவை நூற்றுக்கணக்கான மக்களை நின்று கவனிக்க வைத்ததுடன், ஆர்.எஸ்.எஸ். பற்றியும், இந்த அரசின் கட்டமைப்புத் தோல்வியைப் பற்றியும் சிந்திக்க வைத்து மக்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி, தொடர்புக்கு : 95977 89801.

_____________

இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க