நீதிமன்ற அவமதிப்பு : பணிய மாட்டோம் ! கூண்டிலேறத் தயார் !

8
16

நாள் : 08.09.2017

“நீட் எதிர்ப்பு போராட்டங்களைத் தடை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்” என்பது பத்திரிகைகளின் தலைப்பு செய்தி.

“நீட் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பதால், பொதுமக்களின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் அதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்” என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியதாக இந்து (ஆங்கிலம்) இணையதளம் கூறுகிறது.
மேலும் “நீட்டின் பெயரால் வன்முறையைத் தூண்டுகின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதியப்பட வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக” அச்செய்தி கூறுகிறது.

இந்த மனு விசமத்தனமானது. அதன்மீது நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து சட்டவிரோதமானது. நீட் எதிர்ப்பு போராட்டங்களில் எங்கே வன்முறை நடந்திருக்கிறது? நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறை என்பது அனிதாவின் மரணம்தான். அந்த வன்முறைக்கு மத்திய மாநில அரசுகளும், அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும் முறைகேடாகவும் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றமும்தான் பொறுப்பு.

“நீட் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது” என்று அல் தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பை, விசாரணையோ விவாதமோ இல்லாமல் ரத்து செய்தது அனில் ஆர் தவே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு. இதற்கு ராஜீவ் தவான் போன்ற வழக்கறிஞர்கள் அப்போதே கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று விமரிசித்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு, தடாலடியாக நீட் தேர்வை திணித்தது மட்டுமின்றி, இவ்வாறு திணிப்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சொன்னபோது, “ஒன்றும் குடி முழுகிவிடாது” என்று தமிழக மாணவர்களை அலட்சியமாக அவமதித்தது உச்ச நீதிமன்றம். அதன் பிறகு இந்தக் கணம் வரை இவ்வழக்கில் நடந்து வருபவையனைத்தும் முறைகேடுகள்தான். வழக்கையே விசாரிக்காமல் தன் விருப்பத்துக்கேற்ப உத்தரவு பிறப்பிக்கும் நிறுவனத்தை காப் பஞ்சாயத்து என்று அழைப்பதே அதன் செயலுக்குப் பொருத்தமானது என்று கருதுகிறோம்.

சேதுக்கால் வாய்க்காக பந்த் நடைபெற்றபோது பொங்கி எழுந்த உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹாவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை நாங்கள் மறக்கவில்லை. ஒருபுறம், ஆதார் அட்டையை திணிப்பதற்கு எல்லாக் கதவுகளையும் மோடி அரசுக்கு திறந்து விட்டுவிட்டு, குதிரை களவு போனபின் லாயத்தைப் பூட்டுவது போல, குடிமக்களின் அந்தரங்க உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டுகின்ற அழகையும் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கையில் கடப்பாரை ஏந்திய சங்க பரிவாரத்துக்கு அமைதியாக பஜனை நடத்துவதற்கு அன்று அயோத்தியில் அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், இன்று சீருடைகளுடன் தெருவில் நிற்கும் எங்கள் பள்ளிப்பிள்ளைகள் மீது வன்முறையைத் தூண்டுவதாக முத்திரை குத்தும்போது, ஒரு ஏளனச் சிரிப்பை மட்டுமே நாங்கள் பதிலாக அளிக்கிறோம்.

கருத்துரிமை உள்ளிட்ட எம் அடிப்படை உரிமைகளை உச்ச நீதிமன்றம் போட்ட பிச்சை என்று நாங்கள் கருதவில்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகள் என்பவையெல்லாம் மக்கள் தமக்குத்தாமே வழங்கிக் கொண்ட உரிமைகள். குற்றவாளிகளைத் தூக்கிலிடும் அறுதி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் உச்ச நீதிமன்றம், இனங்களின் உரிமையையும், மாநிலங்களின் உரிமையையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் கூட தூக்கிலிடும் அதிகாரம் தனக்கு இருப்பதாக கருதிக் கொண்டிருந்தால், அந்தக் கருத்து எங்களுக்கு வியப்பளிக்கவில்லை.

ஏனெனில், அவசர நிலைப் பாசிசத்துக்கு காவடி எடுத்ததுதான் உச்ச நீதிமன்றத்தின் பாரம்பரியம் என்பதை நாங்கள் அறிவோம். உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஜனநாயக விரோத தீர்ப்புகளையும், பார்ப்பனியத்தின் பால் அது கொண்டிருக்கும் பாசத்தையும் நாங்கள் அறிவோம். மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிப்பதோ, உரையாடல் நடத்துவதோ, கருத்தைக் கருத்தால் வெல்வதோ பார்ப்பனியத்தின் பண்பு அல்ல. மற்றவர்களுக்கு கல்வியை மறுத்ததன் மூலம் தமது அறிவின் ‘மேன்மையை’ நிறுவிக்கொண்ட பார்ப்பனியம், இன்று எங்களது கருத்துரிமையை மறுக்கும்பொருட்டு கோழைத்தனமாக உச்ச நீதிமன்றத்தின் தயவை நாடி சரணடைந்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்புதான் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த எங்கள் குழந்தையை காவு வாங்கியிருக்கிறது. முதல் நாள் ஒரு பேச்சு, மறுநாள் ஒரு பேச்சு பேசிய உச்ச நீதிமன்றம்தான் அவள் சாவுக்கு பதில் சொல்லவேண்டும். ஆனால் அந்தக் குழந்தையின் மரணம் குறித்த அக்கறையோ இரக்கமோ நீதிமன்றத்துக்கு இல்லை.

மாறாக, அந்தக் குழந்தையின் மரணத்தால் துயருற்றுக் கொந்தளிக்கும் மக்களை எச்சரிக்கிறது நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுத்துப் பேசும் கட்சிகளும், மக்களும் நீதிமன்றத்தை அவமதிப்பவர்கள் ஆவார்கள் என்றால், எங்களைக் காட்டிலும் ஆகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பை இழைத்தவள் அனிதா.

அநீதியான உங்கள் தீர்ப்புக்கு அடிபணிந்து வாழ்வதை விட சாவதே மேல் என்று அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தையின் நடவடிக்கைதான் எங்கள் அனைவரின் நடவடிக்கையைக் காட்டிலும் தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு.

இறந்து விட்ட காரணத்தினால் அவளுடைய “குற்றம் தணிந்து விட்டதாக”க்கூறி (abated) அனிதாவை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விடுவிக்குமாறு நாங்கள் உங்களிடம் மன்றாடவில்லை. நியாய ஸ்தலத்தின் கருணைக்குத் தகுதியானவர்கள் ஜெயலலிதாக்கள் மட்டுமே என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாங்கள் அறிவோம்.

எனவே, எரியூட்டப்பட்ட அந்தக் குழந்தையின் சாம்பலைக் கூண்டிலேற்றுங்கள். அவளைத் தொடர்ந்து தமிழ் மக்கள் அனைவரும் நீதிமன்ற அவமதிப்புக்காக கூண்டில் ஏறத்தயாராக இருக்கிறோம்.

மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

_____________

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா