Saturday, July 20, 2024
முகப்புசெய்தி"நீட்" தேர்வை நிரந்தரமாக ரத்து செய் ! ஐ.டி. ஊழியர்கள் போராட்டம் !

“நீட்” தேர்வை நிரந்தரமாக ரத்து செய் ! ஐ.டி. ஊழியர்கள் போராட்டம் !

-

நீட்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தெருமுனைக் கூட்டம்

நாள் : 15.09.2017 வெள்ளிக் கிழமை
நேரம் : மாலை 6:00 முதல் 9:00 வரை
இடம் : சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில்

நீட்” தேர்வை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றமும், அதன் ஆதரவாளர்களும் கூறும் காரணங்கள்

 • அதிகரித்துக் கொண்டே போகும் தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்துதல்

 • மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் தரத்தை உயர்த்துதல்

 • நாடு தழுவிய ஒற்றைத் தேர்வு மூலம் மாணவர்களை சேர்ப்பதில் ஒரே வழிமுறையை பின்பற்றுவது

ஆனால் நடைமுறையில்

 • ஏற்கனவே அரசு கல்லூரிகளிலும், சி.எம்.சி போன்ற சேவை நோக்கத்தில் நடத்தப்படும் கல்லூரிகளிலும் கட்டணம் குறைவாகத்தான் உள்ளது. எனவே கட்டுப்படுத்தப்பட வேண்டியது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையும், அரசு கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடை வெட்டி கட்டணத்தை அதிகரிக்கும் அரசின் முயற்சிகளையும்தான்.

 • மேலும், “நீட்” தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்க்கும் போதும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கோடிக் கணக்கில் கட்டணம் வசூலிக்கத்தான் செய்கின்றன.

 • பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை புறக்கணித்து “டிக்” முறையிலான “நீட்” தேர்வை பயன்படுத்தினால், தனியார் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பாடம் நடத்துவதை புறக்கணித்து நேரடியாக மாணவர்களை “நீட்” தேர்வுக்கு தயாரிப்பது ஆரம்பித்துவிடும். இதனால், பள்ளிக் கல்வியின் கல்வியின் தரம் கடுமையாக பாதிக்கப்படும். மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களும் “நீட்” தேர்வின் “டிக்” முறையை வெற்றி கொள்ளும் திறன் படைத்தவர்களாக மட்டும் இருப்பார்களே தவிர உண்மையான அறிவியல் தேடலையும், திறமையையும் வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இது மருத்துவக் கல்வியின் தரத்தை சிதைக்கும்.

 • “டிக்” முறை “நீட்” அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, “தேர்வு தயாரிப்பு” நிறுவனங்களின் சந்தையை கணிசமாக அதிகரிக்கும். தேர்வு தயாரிப்பு நிறுவனங்களுக்கு லட்சக் கணக்கில் பணம் செலவழிக்க முடியும் பணக்காரர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகும். இவ்வாறு “நீட்” பெரும்பான்மை ஏழை மாணவர்களை மருத்துவராவதிலிருந்து ஒதுக்கி வைத்து விடும்.

 • மேலும், அரசு வேலை, தனியார் கார்ப்பரேட் வேலை, சிறு தொழில் என்று ஓரளவு வசதியான நடுத்தர வர்க்க பெற்றோர் கூட தேர்வு “தயாரிப்புக்கு மேலும் மேலும் அதிக பணம் செலவழித்தால்தான் வெற்றி” என்ற போட்டியில் பின்தங்கி, அவர்களது குழந்தைகளுக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும்.

 • “நீட்” தேர்வு முறையை பயன்படுத்தி வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு சமூகநீதி வழங்கும் திட்டங்களை பலவீனப்படுத்தி ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. இதன் மூலம் அதிபணக்கார மேல்தட்டு ஒன்று மட்டுமே தொழில்முறை கல்வி பெறும் நிலை உருவாகி சமூகநீதியின் அடிப்படையே தகர்க்கப்படுகிறது.

 • மேலும், நாடு முழுவதற்குமான ஒற்றைத் தேர்வுமுறை என்பது பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு தேசிய கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழும் இந்தியாவுக்கு பொருத்தமற்றது. மாநில அளவிலான கொள்கைதான் அந்தந்த மாநிலங்களின் தனிச்சிறப்பான தேவைகளை நிறைவேற்ற முடியும்.

தொகுப்பாக, “நீட்” தேர்வு என்பது கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார் மயத்தை அமல்படுத்துவதன் அடுத்த கட்ட நடவடிக்கை. தனியார் பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும், கார்ப்பரேட் மருத்துவமனைகளும் ஏற்படுத்தியிருக்கும் சீரழிவை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். இதை இன்னும் தீவிரப்படுத்துவதை நாம் உறுதியாக எதிர்த்து முறியடிக்க வேண்டும்

எனவே

 • மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு “நீட்” தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

 • இது போன்ற தேர்வு முறைகளை பிற உயர் படிப்பு பிரிவுகளுக்கு விரிவுபடுத்தும் திட்டங்களை கைவிட வேண்டும்.

 • மருத்துவக் கல்விக்கட்டணங்கள் குறைக்கப்பட்டு அரசு வரிப்பணத்தின் மூலம் கல்லூரிகள் நடத்தப்பட வேண்டும். அதுதான் மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவர்களாக வெளிவரும் மாணவர்கள் கிராமப் புறங்களிலும், நகர்ப்புற உழைக்கும் மக்களுக்கும் வணிக நோக்கமின்றி மருத்துவ சேவை வழங்குவது சாத்தியமாக்கும்.

 • மாநிலங்களின் கல்விக் கொள்கை சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும், பிரிவினருக்கும் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கும் வகையில் அமைய வேண்டும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
( ஐ.டி. – ஊழியர் பிரிவு )
தொடர்புக்கு : 90031 98576

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க