Friday, August 12, 2022
முகப்பு செய்தி கோவணத்தையும் புடுங்கியாச்சு இனி புடுங்க ஒன்னுமில்ல - குருமூர்த்தி ஒப்புதல்

கோவணத்தையும் புடுங்கியாச்சு இனி புடுங்க ஒன்னுமில்ல – குருமூர்த்தி ஒப்புதல்

-

மது பொருளாதாரம் படு பாதாளத்தில் விழுந்திருப்பதாகவும், இதற்கு மேலும் வீழ்ச்சியடைவதற்கு இடம்  இல்லை என்பதால் எப்படியும் மேலே எழுந்து வந்து தான் ஆக வேண்டும் எனவும் ஒரு ‘மேதை’ பேசியுள்ளார். பொருளாதாரம் குறித்து இப்படி ஒரு கேணத்தனமான பார்வைக்குச் சொந்தக்காரர் தெர்மாகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூவாகத் தான் இருக்க முடியும் என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால், பேசியவர் ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்களில் அறிவுஜீவி எனக் கொண்டாடப்படுபவரும், துக்ளக் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி.

”பணமதிப்பிழப்பு நடவடிக்கை – அதன் பாத்திரம், தாக்கம் மற்றும் தொடர்ச்சி” எனும் தலைப்பின் சென்னை பொருளாதாரப் பள்ளியின் (Madras School of Economics) சென்னை சர்வதேச மையம் நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது தான் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளான பணமதிப்பழிப்பு நடவடிக்கை, வாராக்கடன்களை முறைப்படுத்தும் நடவடிக்கை, ஜி.எஸ்.டி மற்றும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை ஏக காலத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டது என்கிறார் குருமூர்த்தி. இவ்வாறான தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளை நமது பொருளாதாரத்தால் தாங்கிக் கொள்ள முடியாததன் விளைவு தான் இப்போது நாடு சந்தித்துள்ள வீழ்ச்சிகளுக்குக் காரணம் என்பது குருமூர்த்தியின் வியாக்கியானம். அதாவது, சங்கரராமன் கொலைக்கு எவன்டா காரணம்? எனக் கேட்டால், சங்கரராமன் தான் காரணம் என்கிறது ஆர்.எஸ்.எஸ் மூளை.

மேலும், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது நிதியமைச்சகத்துக்கும் அதன் இரகசியப் பிரிவுக்கும் இடையே தகவல்தொடர்பு பிரச்சினைகள் (communication error) ஏற்பட்டதால் தான் கருப்புப் பண முதலைகள் தப்பித்துக் கொண்டனர் என்கிறார். சமீபத்தில் தான் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, பொருளாதார வீழ்ச்சிக்கு டெக்கினிக்கல் பிரச்சினையே காரணம் என கருத்து தெரிவித்திருந்தார்.

அடுத்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு குறுங்கடன் வழங்கும் முத்ரா வங்கி திட்டத்தை முதலில் செயல்படுத்தி விட்டு அதன் பின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுத்திருந்தால் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் முன்னேறியிருக்கும் என்று குறிப்பிட்ட குருமூர்த்தி, முத்ரா வங்கிகளுக்கு அனுமதியளிப்பதில் ரிசர்வ் வங்கி தாமதப்படுத்தியதே பணமதிப்பழிப்பு நடவடிக்கை வீழ்ச்சியடைந்ததற்கு முழு காரணம் என்கிறார்.

முத்ரா வங்கி எனப்படும் குறுங்கடன் நிறுவனம் பாரதிய ஜனதாவின் சொந்த சரக்கல்ல. ஏற்கனவே இதே போன்ற குறுங்கடன் வழங்கும் தனியார் கந்துவட்டி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதும், இந்நிறுவனங்களால் குறிப்பாக ஆந்திரா போன்ற மாநிலங்களில் கடன் வாங்கியவர்கள் தற்கொலைகள் செய்ததும் பத்திரிகையாளர் பி.சாய்நாத்தால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் குறுங்கடன் வங்கிகள் துவங்கி வறுமையை ஒழித்ததாக முகமது யூனுசுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது – பின்னர் உண்மையில் இது ஒரு கந்து வட்டி நிறுவனம் என்பதும், இதனால் ஏழைகள் சொல்லொணாத் துயருக்கு ஆளாயினர் என்பதும் அம்பலமானது.

மோடியின் முத்ரா வங்கித் திட்டத்தின் மூலம் சிறு குறு தொழில்முனைவோர் சுமார் பத்து லட்சம் வரையில் கடன் பெற முடியும். ஏற்கனவே இதே போன்ற குறுங்கடன்கள், சுய உதவிக் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சிறு உற்பத்திகளுக்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் ஐ.டி.சி, பதஞ்சலி, யுனிலீவர் போன்ற பகாசுர கார்ப்பரேட்டுகளோடு சந்தையில் மோதி வெல்வது சாத்தியமில்லை. இறுதியில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடன் சுழலில் சிக்கிச் சீரழியும் நிலை தான் ஏற்படும். சுருக்கமாகச் சொல்வதானால், பசியோடிருப்பவனின் வாயைத் தைத்து விட்டு அவன் முன் இலை நிறைய அறுசுவை உணவைப் பரிமாறுவதற்குப் பெயர் தான் முத்ரா வங்கித் திட்டம்.

இந்த திட்டத்தை மட்டும் கொஞ்சம் முன்னரே அமல்படுத்தி விட்டு பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பொருளாதாரம் பிழைத்திருக்கும் என்கிறார் குருமூர்த்தி. அதாவது, வயிற்றில் கத்தியால் குத்துவதற்கு முன்பே கழுத்தை அறுத்திருந்தால் குத்தும் போது வலி தெரியாமல் இருந்திருக்கும் என்பதே குருமூர்த்தி என்கிற ஆர்.எஸ்.எஸ் பொருளாதார நிபுணரின் பரிந்துறை.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீட்டெண்ணை அளவீடு செய்யும் பழைய முறை மோசடியாக திருத்தப்பட்டது . எனவே உண்மையான பொருளாதார வீழ்ச்சி மேலும் படுமோசமான அளவுகளில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதன் பாதிப்புகளை மக்கள் ஏற்கனவே உணரத் துவங்கி விட்டதோடு இந்துத்துவ கும்பலைக் கேள்வி கேட்கவும் துவங்கி விட்டனர். தமது தொண்டர்கள் மக்களிடமிருந்து அசௌகரியமான கேள்விகளை எதிர்கொள்வதாகவும், மக்களிடையே மோடி அரசின் மீது எதிர்ப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 20ம் தேதி பாஜகவை  எச்சரித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு

ஆக, தாம் பதுங்கியுள்ள வளையின் எல்லா பொந்துகளிலும் புகை மூட்டம் பரவி வருவதை உணர்ந்துள்ள பெருச்சாளிகள் பதறியடித்து வெளியேறி ஓடிவருகின்றன. மக்களின் மேல் இந்துத்துவ கும்பல் தொடுத்துள்ள போரை நியாயப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவிகளின் முயற்சி படுகேவலமாக பல்லிளிப்பதையே குருமூர்த்தியின் உளரல்கள் உணர்த்துகின்றன. தேசபக்தி எனும் பொந்தில் இருந்து வெளியேறி ஓடிவரும் ஆர்.எஸ்.எஸ் பெருச்சாளிகளின் மண்டையில் ஒரே போடாகப் போட மக்கள் தயாராக இருக்க வேண்டிய நேரமிது.

மேலும்:
Economy has hit rock bottom, can only revive from here, says Gurumurthy
_____________

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. அந்த மீட்டிங்கில் வினவு கவனிக்க தவறிய விசயம் :

    சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் திரு தினகரன் அவர்களின் கவனத்துக்கு! (நீதி மன்ற தீர்ப்புகளை விமர்சிக்கலாம்..ஆனால் நீதி மன்றங்களை விமர்சிக்ககூடாது என்று சொன்னது நீங்க தானே அய்யா ?)பார்பனர்கள் நீதி மன்றத்தை விமர்சித்து பேச மட்டும் ஏதாவது தனியுரிமை உள்ளதா?

    “””பணமதிப்பு நீக்கத்தின் போது “ஊடகங்கள் கலவரங்களை விரும்பின, உச்ச நீதிமன்றம் கலவரங்களை விரும்பியது”””

    -சென்னையில் பேசிய துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி.

    நன்றி தி ஹிந்து தமிழ் நாளிதழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க