privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை

ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை

-

காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனை நுங்கம்பாக்கத்தில் ஆறு மாடி கட்டிடத்தைக் கொண்டு இயங்கி வருகிறது. இம்மருத்துவமனை கடந்த 1978ம் ஆண்டு ஏப்ரல் 27 – அன்று MS.ராமகிருஷ்ணன் என்பரால் தொடங்கப்பட்டது. பிறகு 1984 -ல் நுங்கம்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட இம்மருத்துவமனையை 1999 அக்டோபர் 2-ம் தேதி காஞ்சி காமகோடி மடம் எடுத்து நடத்த ஆரம்பித்தது.

இந்த மருத்துவமனையின் தற்போதைய தலைவர், ஸ்பிக் நிறுவனத்தின் உரிமையாளர் AC.முத்தையா. இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் இம்மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். மேலும், டாபே நிறுவனத்தின் மல்லிகா சீனிவாசன், சன்-மார்க் நிறுவன குழுமத்தின் தலைவர் என்.சங்கர், காக்னிசன்ட் பவுண்டேசன் இயக்குனர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நிர்வாகிகளாக உள்ளனர்.

“ரே ஆஃப் லைட் பவுண்டேஷன்” அமைப்பின் நிறுவனரும், காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பிரியா ராமச்சந்திரன் “கடந்த 15 ஆண்டுகளில் நன்கொடையாளர்கள் மூலமாக திரட்டப்பட்ட நிதியை கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கு 10 லட்சம் முதல் 17 லட்சம் வரை செலவாகும்” என்று ’தி இந்து’ இதழுக்கு சிறிது நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு மிகவும் லாபகரமாகவே இம்மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டால் மட்டும் மருத்துவமனை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி ஊழியர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வருகிறது காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை. இதற்கு எதிராக மருத்துவமனை வாயிலிலேயே தங்களது கோரிக்கைகள் அடங்கிய பேனரை வைத்திருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

இதுகுறித்து காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனையின் ஊழியர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாபுவிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்கள் பின் வருமாறு:

மருத்துவமனை நிர்வாகத்திற்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?

இந்த மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் சுமார் 130 பேர் இருக்கிறோம். இவர்கள் போக ஒப்பந்த தொழிலாளிகளும் இருக்கிறார்கள். இங்கே பணியாற்றக்கூடியவர்கள் பலரும் சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் உயர்த்த வேண்டும். அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31 தேதியுடன் முடிவடைந்து புதிய ஊதிய உயர்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் பத்து மாதமாகியும் இதுவரை சம்பளம் உயர்த்தாமல் எங்களை வஞ்சிக்கிறது நிர்வாகம்.

நிர்வாகத்துக்கும், உங்களுக்கும் என்ன தான் பிரச்சனை இருந்தாலும் சட்டப்படி தானே சந்திக்க வேண்டும்.  அதை விட்டுட்டு வெளியில பேனர் வச்சி மருத்துவமனைய அவமானப்படுத்தலாமா?

எங்களுக்கு அந்த எண்ணம் கிடையாது சார். நாங்க ஒருநாள் இல்ல, இரண்டு நாள் இல்ல. கிட்டத்தட்ட பத்து மாசமா கோரிக்கை வச்சிக்கிட்டு வறோம். கடந்த 2016ம் ஆண்டு எங்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் கூட்டி எடுக்கப்பட்ட முடிவினை 02.11.2016 அன்றே மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவித்து விட்டோம்.

01.09.2016 அன்று பேச்சு வார்த்தையில் ரூ.3,000 தான் தருவோம். மருத்துவனை நஷ்டத்தில் இயங்குகிறது என்றார்கள். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, என்று கூறியதும் “உங்களால் என்ன பண்ண முடியுமோ பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அதனால தான் எங்க கோரிக்கையோட நியாயத்தை மக்கள் கிட்ட சொல்லியிருக்கோம். உடனே பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டு ரூ.3,500 தருகிறோம் என்றார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

போன முறை 6,250 ரூ கொடுத்திங்க, இந்த முறை அதிலிருந்து உயர்த்தி கொடுங்கன்னு கேட்டோம். அதற்கு அவர்கள் முடியாது என்றார்கள். அதனால் பிரச்னையை தொழிலாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

மருத்துவமனையின் ஊழியர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாபு

தொழிலாளர் துறை அலுவலகத்தில் என்ன சொன்னார்கள்?

தொழிலாளர் துறை அலுவலகத்தில் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார்கள். இருபது ஆண்டுகள் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பது சரியல்ல. இரண்டு தரப்பும் பேசி சுமுகமான முடிவெடுத்து கொண்டு 27 -ம் தேதி வரச்சொன்னார்கள். ஆனால் நிர்வாகம் வாய்தா வாங்கியுள்ளது. எங்கள் கோரிக்கையான ரூ.6,250 க்கு மேல் தருவதாக ஒப்புக்கொண்டால் நாங்கள் பேச வருவோம்.இல்லையென்றால் எங்களை கூப்பிடாதீர்கள் என்று கூறிவிட்டோம். மீண்டும் அக்டோபர்,2017, 3 -ம் தேதி பேச்சு வார்த்தை நடக்கிறது.

ஒருவேளை உங்கள் கோரிக்கையை ஏற்காமல் இருக்க மருத்துவமனை நட்டத்தில் கூட இருக்கலாம் இல்லையா?

இல்லை. மருத்துவமனை நல்ல லாபத்தில் தான் இயங்குகிறது. இங்கு பணியாற்றக்கூடிய அதிகாரிகளுக்கு லட்சங்களில் சம்பளம் வழங்கப்படுகிறது. லாபம் இல்லையென்றால் எப்படி இவர்களுக்கு அந்த அளவிற்கு சம்பளம் வழங்க முடிகிறது ? அதை குறைத்து கொள்ளலாமே. அதிகாரிக்கு என்றால் பிரச்சனை இல்லை. நாங்கள் கேட்டால் தான் நஷ்டமா? மூன்று வருசத்துக்கு முன்னாடி வந்த ஆடிட்டருக்கு 1.75 லட்சம் சம்பளம். 20 வருசமா இந்த மருத்துவமனையோட வளர்ச்சிக்கு உழைக்கிற எங்களுக்கு சம்பளம் இல்லை. இது வஞ்சனை இல்லையா?

லாபத்தில் இயங்குவதாக எதை வைத்து சொல்லுகிறீர்கள்?

இந்த மருத்துவனைக்கு அப்போலோ, மலர், விஜயா போன்ற பெரிய மருத்துவமனையில் இருந்து கூட குழந்தைகளை சிகிச்சைக்கு அனுப்புகிறார்கள். சாதாரண காய்ச்சல் என்றால் முதல் தடவை வருபவர்களிடம் ரூ.490 வாங்குகிறார்கள்.

அடுத்த முறை வந்தால் ரூ.430. சிறப்பு மருத்துவரை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு தனி கட்டணம். கன்சல்டிங் மட்டும் என்றால் தனி கட்டணம் என்று வசூலிக்கிறார்கள். அதுபோக அறுவை சிகிச்சை என்றால் குறைந்தது ரூ.50,000 இல்லாமல் இங்கு நடைபெறாது. ஓபன் சர்ஜரி என்றால் ரூ.1 லட்சம் வாங்குவாங்க.

கணக்கில்லாத நோயாளிகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில நோயாளிகள் கூட எங்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். அதுபோக மற்ற கல்லூரி மாணவ-மாணவிகள் பயிற்சிக்காக வருகிறார்கள். இவர்களிடம் கட்டணமாக ஒருவக்கு ரூ.3,000 வரை வசூலிக்கிறார்கள்.

எல்லாத்துக்குமே அதிக கட்டணம் தான். இவ்வளவு நாள் வெளியில மருந்து வாங்கிக்க சொல்வாங்க. இப்ப சொந்தமாவே ஹாஸ்பிட்டலுக்கு மெடிக்கலும் வச்சிட்டாங்க. இதனை எல்லாம் கணக்கு போட்டு பாருங்கள் உங்களுக்கே தெரிந்து விடும். இது ஒரு கார்ப்பரேட் மருத்துவமனை அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது.

செவிலியர்கள், தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குகிறார்கள்?

சார் நாங்க எல்லாம் 25 – 30 வருஷமா வேலை செய்யுறோம். இது வரைக்கும் நாங்க வாங்குற சம்பளம் செவிலியர், எலெக்ட்ரிகல் பிரிவு, அலுவலக வேலையாள் என்று ரூ.18,000 லிருந்து அதிகபட்சமாக ரூ. 24,000 தான் சார் வாங்குறோம். ஒப்பந்த தொழிலாளிங்க ஹவுஸ் கீப்பர், வாட்ச்மேன் இவங்களுக்கு எல்லாம் ரூ. 7000 , ரூ. 10,000 தான் கொடுக்கிறாங்க. இந்த பணத்தை கொண்டு எப்படி நாங்க இந்த சென்னையில் வாழறது.

கொஞ்சம் மனசாட்சியோட யோசிங்க. இன்னைக்கு இருக்க விலை வாசில இது கட்டுப்படியாகுமா? எங்க எல்லோருக்கும் வாடகை வீடு தான்.. எப்படி வாடகை கொடுக்கிறது? ஆனா நாங்க மூணு வருசத்துக்கு ஒருமுறை தான் ஊதிய உயர்வு கேக்குறோம். இது கூட உயர்த்தலன்னா என்ன சார் பண்றது?

நீங்க நிறைய சம்பளம் வாங்குறிங்க.. ஆனா இங்க ஒப்பந்த தொழிலாளிகள் ரூ.7000 , ரூ.10,000 தானே சம்பளம் வாங்குறாங்க.. அவங்களுக்காக நீங்க என்ன பண்ணிருக்கீங்க?

அவங்களுக்கும் சேர்த்துத் தான் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். ஒப்பந்த முறைய ஒழிச்சிட்டு நிர்வாகமே ஆளை எடுக்க சொல்லி எங்கள் கோரிக்கையில் சேர்த்து இருக்கோம். அனைவருக்கும் சமமான ஊதியம் கொடுங்கன்னு கேட்டிருக்கோம்.

இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், அலுவலர்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க? அவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள்?

நாங்கள் மருத்துவர்களையும் தொழிலாளர்களாக தான் பார்க்கிறோம். அதனால் தான் மருத்துவர்களை பற்றி நாங்கள் பேசவில்லை. நிர்வாக அதிகாரிகள் தான் எங்கள் பிரச்சனை. அனைவரும் எங்களிடம் நன்றாகவே பேசுவார்கள்.

ஒருவேளை நிர்வாகத்துடன் உடன்பாடு எட்டவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

நாங்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வதாக முடிவெடுத்துள்ளோம்.

அப்படி செய்தால் குழந்தைகள் பாதிக்கப்பட மாட்டார்களா?

அதனால் தான் இவ்வளவு நாள் பொறுத்துக்கொண்டோம். நிர்வாகம் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக எங்கள் போராட்டத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதால் தான் முன்கூட்டியே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். மக்கள் தான் எங்கள் கோரிக்கையின் நியாயத்தை ஆதரிக்க வேண்டும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க