Monday, March 27, 2023
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்டெங்கு : சாவின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியுமா ?

டெங்கு : சாவின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியுமா ?

-

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மக்களை மிரட்டி வருகிறது. என்ன ஏது என்று தெரியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். தனியார் மருத்தவமனைகள் கைவிடும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் வந்து சேரும் மக்களுக்கு அங்கே போதுமான வசதிகள் – மருத்துவம் கிடைப்பதில்லை. தொலைக்காட்சியைத் திறந்தாலே ஆங்காங்கே பதிவு செய்யப்படும் மரணங்கள் நம்மை திடுக்கிடச் செய்கின்றன. மருத்துவம் முன்னேறிய  நவீன காலத்தில் நம் மக்கள் ஏன் இப்படிச் சாக வேண்டும்?

“டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அரசின் உதவியை கோரும் நிலையில் பிரச்சினை இல்லை. தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேர காய்ச்சல் பிரிவு செயல்பட்டு வருகிறது” என்கிறார் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர். இவ்விளக்கத்தின் உண்மை நிலை என்ன? வினவு செய்தியாளர்கள் நேரில் சென்று பார்த்தார்கள்.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 24 மணி நேர சிகிச்சை மையம்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேர காய்ச்சல் பிரிவு செயல்பட்டு வருகிறது. ஐந்து போர்வைத் துணிகளை கட்டி கூடாரம் போல் மருத்துவமனை முகாம் ஒன்று  வராண்டாவில் அமைக்கப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருக்க கொஞ்சம் பேர் அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர். உடல்நிலை மோசமாக இருந்தவர்கள் படுத்திருந்தனர்.

வரிசையில் வரும் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார் “பத்மாவதி ஹாஸ்பிட்டல் ஒப்பந்த நிறுவன” செக்யூரிட்டி. இந்த நிறுவனம் ஏ 2 குற்றவாளி சசிகலாவின் பினாமிகளுக்கு சொந்தமானது என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள். இடையிடையே செவிலியர்களுக்கு தெரிந்த நோயாளிகள் மட்டும் அந்த கூடாரத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர். மற்றவர்கள் முறையான வாய்ப்புகளுக்கு காத்திருந்தனர்.

சிகிச்சைக்காக வந்திருந்த பலர் நடுத்தர வயதினர் மற்றும் குழந்தைகள். காலையில் கூட்டம் அதிகம் என்பதால் அவர்களை கவனிக்க 6 செவிலியர்களோடு, இரண்டு மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர்.

முறையான சிகிச்சையளிக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபடும் நோயாளிகள்

அனைத்து நோயாளிகளுக்கும் நிலவேம்பு கசாயம் குடிக்க சொல்லி அறிவுறுத்தினார்கள்.  சிகிச்சைக்காக வந்திருந்த பலருக்கும் ஒரு பதட்டம் இருந்ததை காணமுடிந்தது. டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்போமோ என்ற அச்சம் அதிகமாகவே இருந்தது. அங்கு வந்திருந்த நோயாளிகள் ஒரு சிலர் காய்ச்சலுக்காக தினமும் மருத்துவமனைக்கு வருவதாக கூறுகிறார்கள்.

புதிதாக காய்ச்சலுக்காக வந்திருந்த 50 வயதுடைய பெண் ஒருவர்  செக்யூரிட்டியிடம் சென்று….

“காய்ச்சலுக்கு எங்க பாக்கறது” என்று கேட்க,

அவரோ……… “பக்கத்துல இருக்க  அவரச வார்டுக்கு போயி, (ஒருவர் கையில்  வைத்திருந்த சீட்டை காட்டி….)  இந்த மாதிரி சீட்டு தருவாங்க வாங்கிட்டு இங்க வந்து பாரு” என்றார்.

அந்த அம்மாவோ இடம் தெரியாமல் மீண்டும் கேட்க, எரிச்சலானர் செக்யூரிட்டி. பிறகு அவருக்கு அங்கு நின்றிருந்த நோயாளிகள் உதவினர். புதிதாக வரும் மக்களுக்கு கிழக்கு எது மேற்கு எது என்பது தெரியாது. அவர்களை முறைப்படி வழிநடத்த போதுமான காவலாளிகளோ உதவியாளர்களோ அங்கில்லை.

சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று கொண்டிருந்ததால் வலியுடன் அதிகம் நேரம் நிற்க முடியாமல் கத்த ஆரம்பித்தனர்.  சிகிச்சைக்கு வரும் சிலரை தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை அளித்து சிகிச்சை வழங்கியதாக கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  சத்தம் கேட்டு உடனடியாக வந்த போலீசு சமாதானப்படுத்திய பிறகு தான் நோயாளிகள் அமைதியாகினர். இப்படி தற்காலிக பிரச்சனைகளும் சண்டைகளுமாக அந்த இடம் காய்ச்சலோடு போட்டியிட்டுக் கொண்டு சூடு பிடித்தது.

ஸ்டான்லி-மருத்துவமனையில்-டெங்குவிற்காக-அனுமதிக்கப்பட்டிருக்கும்-நோயாளிகள்.

அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த விஜயலட்சுமி என்ற பெண்மணி நீண்ட நேரமாக முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தார். அவருடைய உறவினர்கள் அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.  அவரிடம் என்ன ஏதுவென்று விசாரிக்கையில், கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவரை விஜயலட்சுமியின் கணவர் மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

சாதாரண காய்ச்சல் தான் என்று சிகிச்சை வழங்கியிருக்கிறார்கள். காய்ச்சல் விடாமல் அடிக்க, பிறகு இரத்தப் பரிசோதனை எடுக்குமாறு மருத்துவர்கள் சொல்ல, ஞாயிற்றுக் கிழமை தான் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள்.

பரிசோதனையில் டெங்கு என்பது உறுதியானதும் மருத்துவமனை நிர்வாகம், விஜயலட்சுமியின் கணவரை கூப்பிட்டு “உங்க மனைவிக்கு ரத்தம் கம்மியா இருக்கு… ரத்தம் ஏத்துற வசதி எங்ககிட்ட இல்ல. நீங்க அரசு ஆஸ்பித்திரிக்கு போங்க” என்று அனுப்பி விட்டது.

இதுவரைக்கும் அந்த ஆஸ்பிட்டலுக்கு 7,000 ரூபா செலவாயிருக்கு.  நா… மேல பணம் செலவு பண்ண கூட தயாரா தான் இருக்கேன்.  ஆனா இங்க அனுப்பி விட்டுட்டாங்க….  இங்க வந்து ரிப்போர்ட் எல்லாம் காட்டுனேன்…  அத பாத்துட்டு அவசர வார்டுக்கு போங்கன்னு சொன்னாங்க. அங்க போனா கீழ போயி பாருங்கன்னு சொல்லுறாங்க…. என்ன பண்றதுன்னே ஒன்னும் புரியல…

இதுக்கு முன்னாடி எம்பொண்ணுக்கு வந்துச்சி… இப்ப என்னோட மனைவிக்கு வந்திருக்கு… வீடு வாசல் அக்கம் பக்கம் எல்லாம் சுத்தமா தான் இருக்கு அப்புறம் எப்படின்னே புரியல….சார்.

நான் மினி வேன் ஓட்டுறேன்.. இப்ப ஒரு வாரமா வேலைக்கு போக முடியல.. கையில காசு கூட இல்ல. வீட்டுல இருந்த நகைய தான் அடமானம் வச்சி பார்த்தேன். இப்ப இன்னும் எவ்ளோ நாள் ஆகும்னு தெரியல.. நா… நோய பாக்குறதா இல்ல பொழப்ப பாக்குறதான்னே தெரியல என்று சொல்லி அழவும் தெம்பில்லாமல் அமைதியானார் அவர்.

ஸ்டான்லி மருத்துவமனை

அதேபோல் இரண்டாவது மாடியில் டெங்குவோடு இதர இனம் புரியாத மர்ம காய்ச்சல்களால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காய்ச்சலுக்கு என்று தனி வார்டு எதுவும் இல்லை. “ஆண்கள் அறுவை சிகிச்சை” பகுதியில் தான் அனைவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 102 இருக்கைகள். ஆனால் அனுமதிக்கப்படிருந்தவர்கள் 107 பேர். அப்போதே அரங்கம் நிரம்பி வழிந்தாலும் மேற்கொண்டு காய்ச்சல் அதிகம் என்று வருபவர்களுக்கு இருக்கை வசதியும் இல்லை.. தனி வார்டுகளும் இல்லை. அதற்குள்ளேயே அனைவரையும் அடைத்து வைக்க வேண்டிய நிலை தான்.

இந்த நோயாளிகளை காய்ச்சல் குறைந்தவர்கள்.. காய்ச்சல் தீவிரமாக இருப்பவர்கள் என்று இரண்டு வகையாக பிரித்திருந்தார்கள்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அரக்கோணத்தைச் சேர்ந்த வள்ளியம்மை. அவருடைய கணவர், மகள், மகன் அனைவரும் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தார்கள். அவர் சாதாரண கூலித்தொழிலாளி. மிகவும் ஏழ்மையானவர்கள் என்பதை விளக்க வேண்டியதில்லை.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் என்று ஊரில் உள்ள தனியார் கிளினிக்கில் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இரண்டு மூன்று நாட்களாகியும் குணமாகாததால் அரக்கோணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது தனியார் மருத்துவமனை. அரக்கோணம் மருத்துவமனையில் ஒருவாரம் சிகிச்சை பார்த்திருக்கிறார்கள். அங்கும் குணமடையவில்லை என்பதால் சென்னையில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பியதால் இங்கே சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏறக்குறைய அங்கே சிகிச்சை பெறுபவர்கள் பெரும்பாலானோர் சாதாரண காய்ச்சல் என்று தனியார் மருத்துவமனைக்கு சென்றவர்கள். அவர்களிடம் முடிந்த அளவிற்கு தனியார் மருத்துவமனைகள்  பணத்தை கறந்து கொண்டு இறுதியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றன. பிறகு ஏன் அரசு மருத்துவமனைகளில் பிரச்சனைகள் ஏற்படாது?

குப்பை மேடாக மாறியுள்ள ஸ்டான்லி மருத்துவமனை

இது குறித்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் ஒருவரிடம் கேட்கையில், “தனியார் மருத்துவமனையைப் பொறுத்த வரை முதற்கட்டமாக சிகிச்சை அளிக்கிறார்கள்.  டெங்கு என்று தெரிந்ததும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் இல்லை என்று அனுப்பி விடுகிறார்கள்.” அரசு மருத்துவமனையில் இருக்கின்ற வசதிகளை கொண்டு நோயாளிகளை குணப்படுத்துகிறோம்.

ஆனால்… அரசு மருத்துவமனையில் தான் அதிக அளவு மரணம் என்ற செய்தி வருகிறதே என்று கேட்டபோது,

“தனியார் மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நோயாளிகள் டெங்கு முற்றிய நிலையில்” தான் அனுப்பி வைக்கிறார்கள். தங்கள் மருத்துவமனை பெயர் அடிபட்டு விடக்கூடாது எனும்போது அனுப்பி விடுகிறார்கள்.  நாங்கள் முடிந்த அளவிற்கு முயற்சி செய்கின்றோம் என்கிறார்.

தரமான சிகிச்சைகளை அளிக்கிறோம் என்று கூவி அழைக்கும் தனியார் மருத்துவமனைகள் உண்மையில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டோரை வைத்துக் கொள்வதில்லை. ஆரோக்கியமாக இருப்போரை மட்டும் வைத்து தொழிலை நடத்தும் இவர்கள்தான் தனியார்மயம் பெற்றெடுத்த மருத்துவ எமன்கள்.

சென்னை தங்கசாலையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் மக்களின் அவலங்களுக்கு குறைவில்லை. நாளொன்றுக்கு மூன்றாயிரம் புறநோயாளிகள் வந்து போகும் இந்த மருத்துவனையில் 24 மணி நேரக் காயச்சல் பிரிவில் ஒரு செவிலியர், ஒரு மருத்துவர் மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். இனி மோடி அரசின் நீட் தேர்வு உபயத்தால் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற சேவையாற்ற எவர் வருவார் சொல்லுங்கள்?

இங்கும் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கென்று தனி வார்டுகள் எதுவும் இல்லை.  நீரிழிவு நோயாளிகள் வார்டை ஒதுக்கி காய்ச்சல் வார்டு என்று 09.10.2017  அன்றுதான் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.

இந்த மருத்துவமனையில் அடிக்கடி தீவிபத்து நடக்கும் என்கிறார்கள் அருகாமையில் இருக்கும் சிறு வணிகர்கள். அதுமட்டுமில்லாமல் இம்மருத்துவனை கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. அதுவும் டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் கட்டிடத்திலேயே ஏராளமான கொசு உற்பத்தி தொழிற்சாலை உள்ளது என்பது ஒரு கொடூரமான உண்மை. கட்டிடத்தின் உள்ளேயே குப்பை கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றியுள்ளார்கள்.

ஒரு மாநிலத் தலைநகரில் உள்ள மருத்துவமனைகளிலேயே இதுதான் நிலைமை என்றால் கிராமப்புற மாவட்ட மருத்துவமனைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. சுகாதாரமும் தனியார் மயம், துப்புறவுப் பணியும் தனியார் மயம் என்றான பிறகு நாம் இந்த அழுக்கை எப்படி ஒழிப்பது? எப்படி சுகாதராத்தைப் பேணுவது?

டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வண்ணம் அலட்சியமாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். எனில் முதலில் உள்ளே போகவேண்டியவர் அவர்தான். மக்களை மிரட்டும் இவர், சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று பெயருக்கு கூட சொல்லவில்லை.

தற்போது முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்குவையும் பெரிய மனதுடன் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளார் அமைச்சர். அதுவும் ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நாளொன்றுக்கு ரூ 2000 ரூபாய் வரையிலும் காப்பீட்டுத் திட்டத்தில் பெறலாமாம். இதன்படி தனியார் மருத்துவமனைகள் இனி ஏழைகளை சேர்த்து டெங்குவே இல்லையென்றாலும் காப்பீடுப் பணம் பெறுவார்கள். மரணத்திலும் கூட தனியார் மருத்துவமனையின் வருமானத்திற்காக கவலைப்படும் இந்த குட்கா ஊழல் அமைச்சரை பெற்றது நம் பாக்கியம்.

கடந்த ஜனவரி 2017 முதல் 12,000 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 400 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதகாவும், நாளொன்றுக்கு 10 பேர் டெங்குவால் இறப்பதாக செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மருத்துவ அவசர நிலையை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் அடிமை எடப்பாடி அரசோ அதனை கண்டுகொள்ளாமல் “டெங்கு ஒழிப்பு தின விழா” நடத்தி கொண்டாடுகிறார். போரடித்தால் எம்ஜிஆர் விழா, சிலீப்பர் செல்களை அடக்கும் திரைமறைவு விழாக்கள் என்று பிசியாக உள்ளது இந்த நீரோக்களது அரசு.

ஸ்டான்லி மருத்துவமனை வெளி பகுதி

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை, மருந்துகள் இல்லை. சென்னையை பொறுத்தவரை கொசு ஒழிப்பு பணியில் மலேரியா துறையை தனியாரிடம் ஒப்படைத்து விட்டது மாநகராட்சி.  தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் செயலற்று போய்விட்டது. சுகாதாரத்தில் திட்டமிடல் இல்லாமலும், பொது சுகாதாரம் பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாமலும் கொள்ளையடிப்பதிலேயே குறியாக செயல்பட்டு வருகிறது தமிழக அரசு. இப்படி கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொழிப்பதற்காக பொது சுகாதாரத் துறையை கொன்று வரும் கயவர்கள் இப்போது டெங்குவிற்காக போராளி வேடம் போடுகிறார்கள்.

இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்.

அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி உறுப்பினர்கள் அனைவரும் இதை சீராக்கும் வரை சுகாதாரத் துறை நிர்வாக வேலைகளையே இடைவிடாமல் செய்ய வேண்டும்.

மலேரியா துறை முற்றிலும் அரசுடமையாக்கப்பட்டு, ஊழியர்கள் நிரந்தரமாக்கப் படவேண்டும்.

தமிழகமெங்கும் உள்ள தற்காலிக துப்புறவுத் தொழிலாளிகள் நிரந்தரமாக்கப்பட்டு, முறையான அரசு ஊதியத்துடன், டெங்கு அழிப்பு சிறப்பு பணிக்காகன சிறப்பு ஊதியம் அளிக்கப்பட்டு களமிறக்கப்படவேண்டும்.

டெங்கு காய்ச்சல் மற்றும் இதர தீவிர காய்ச்சல் நோய்கள் கட்டுப்படும் வரை தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட வேண்டும். மறுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலை உறுதி செய்த பிறகு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்குமாறு கேட்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் பிதுங்கி வழியும் மக்களுக்கு சமூக இயக்கங்கள் – கட்சிகளின் தன்னார்வலர்கள் நேரில் சொன்று உதவ வேண்டும்.

இதை தமிழக அரசோ, மத்திய அரசோ அமல்படுத்த மறுக்கும் பட்சத்தில் மக்களும், இயக்கங்களும் தீவிரமான போராட்டத்தை எடுக்க வேண்டும்.

இல்லையேல் தனியார் மருத்துவமனைகளில் காசை இழந்து அரசு மருத்துவமனைகளுக்கு வந்து  உயிரை விடும் மக்களை நம்மால் காப்பாற்ற இயலாது!

–    வினவு செய்தியாளர்கள்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. என் அன்பான உறவுகளே,
    பயமே ஒரு பெரிய நோய். பயத்தை விரட்டுங்கள். காய்ச்சல் அடிப்பது நல்லது.அவ்வாறு காய்ச்சல் அடித்தால் உங்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது என்று பொருள். மேலும் உடலுக்கு உதவ டெங்கு மற்றும் பிறநோய்களுக்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நிலவேம்புக் கசாயம் அல்லது பப்பாளிச்சாறு குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி கூடி நம் உடலை காப்பாற்றும்.

    என் சொந்த அனுபவத்தை வைத்து சொன்னேன், என் உறவுகளின் நலனிற்காக.

  2. ஆங்கில மருத்துவ முறையில் டெங்குவிற்கு மருந்து இல்லை என்று சொல்கிறார்கள்.ஆனால் காய்ச்சலுக்குத் தரப்படும் மருந்துகளையே தொடர்ந்து கொடுத்துவந்தால்,கூடுதலாக நிலவேம்புக் குடி நீர் மற்றும் பப்பாளி இலைச் சாறு கொடுத்துவந்தால் நாள்பட குணம் ஆகும்.உடலில் நீர்சத்து குறைந்து விடாமல் காய்ச்சிய குடி நீர்,ஆரஞ்சு சாறு,இள நீர் போன்றவற்றை சிறிது இடைவெளியில் கொடுத்துவரவேண்டும்.மூத்திரத்தின் வழியாகத்தான் டெங்கு வைரஸ் வெளியேறுகிறதாக அனுபவம் உள்ள மருத்துவர்கள் கூறுகிறார்கள்.ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை டெங்கு வைரஸ் வேகமாக அழித்துவிடுகிறது.தட்டணுக்கள் ரத்தத்தை உறையவைக்கும் இயல்பு கொண்டவை.தட்டணுக்கள் ஒரு மில்லி ரத்தத்தில் 2 லட்சத்துக்கும் மேல் இருக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவரின் உடல் வாகைப் பொறுத்து குறைந்த அளவு 15 ஆயிரம் வரைகூட பாதிப்பை ஏற்படுத்தாது.ஆனால் மூக்கிலிருந்தும் மலம்கழ்ழ்ழிக்கும் போதும் பல் ஈறுகளிலிருந்தும் ரத்தம் கசியத்தொடங்கினால் அது தான் அபாயகட்டம்.அந்த நிலையிலும் கூட காப்பாற்றலாம்.தட்டணுக்கள் நிறைந்த ரத்தம் அல்லது செயற்கை தட்டணுக்கள் ஏற்றலாம்.ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உடல் இருக்க வேண்டும்.இவ்வாறு ரத்தம் அல்லது தட்டணுக்கள் மட்டும் ஏற்றுவதோ கூடாது என்று சொல்லும் மருத்துவர்களும் இருக்கிறர்கள்.மொத்தத்தில் நீண்ட, பொறுமையான சிகிச்சை தான் டெஙு பாதிப்புக்கு அடிப்படைத் தேவை.வளமையாக டெஙு கொசுக்களின் பெருக்கம் ஜூலை மாத மத்தியில் தொடங்கும்.அப்போதிருந்தே கொசு ஒழிப்பு நடவடிக்கையில் அரசு விழிப்புடன் இறங்கியிருந்தால் கட்டுப்படுத்தி இருக்கலாம்.இவர்கள்தான் எம்.எல்.ஏக்களைக் கட்டுபடுத்துவதைத் தவிர வேறு எந்த வேலையையுமே இதுவரை செயவில்லை.ஆட்சி சவக்குழிக்குப் போகும்வரை செய்யப் போவதும் இல்லை.இப்போது சீன் காட்டுகிறார்கள்.இந்த லட்சணத்தில் மக்களை விழிப்போடு இருக்கச் சொல்கிறார்கள். வியாழக்கிழமை தோறும் டெங்கு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்க வேண்டுமாம்.யாருக்கு விழிப்புணர்வு இல்லை.அரசுக்குத்தான் இல்லை.அதனால் தான் கொசுவிடம் தோற்று கோட்டைக்குள் ஒழிந்துகொண்டிருக்கிறார்கள்.டெங்கு கொசு டெல்லியிலிருந்து ஏசி டிரெயினில் வந்தது என்று சிரிக்காமல் சொல்கிறார் ஒரு அமைச்சர்.கூத்துதான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க