Tuesday, September 28, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க டெங்கையும் "டெட்பாடி" அரசையும் ஒழிப்பது எப்படி ?

டெங்கையும் “டெட்பாடி” அரசையும் ஒழிப்பது எப்படி ?

-

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கும்பகோணம் மகாமகம் விழாவில், நெரிசலில் சிக்கி, மிதிபட்டு முப்பதுக்கும் மேற்பட்டோர் இறந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், அது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையின்றி, ஜெயாவும் அவரது தோழி சசிகலாவும் மகாமகக் குளத்து “ஜலத்தை” எடுத்து ஒருவர் தலையில் இன்னொருவர் ஊற்றிக்கொண்டு “புனித” நீராடினார்கள்.

அதே அக்கிரமம் எடப்பாடி அரசிலும் தொடர்கிறது. டெங்கு நோய் தாக்கி ஒவ்வொரு நாளும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வரும் வேளையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறார் எடுபிடி எடப்பாடி.  நிலவேம்பு கசாயத்தை ஊற்றிக் கொடுப்பதைக்கூட, அமைச்சர்களை வரவழைத்து, சால்வை போர்த்தி வாழ்த்திப் பேசி, கட்சி விழாவாக நடத்துகிறார்கள், இந்த அருவெறுக்கத்தக்க பிறவிகள்.

நிலவேம்பு கசாயத்தை ஊற்றிக் கொடுப்பதைக்கூட, அமைச்சர்களை வரவழைத்து, சால்வை போர்த்தி வாழ்த்திப் பேசி, கட்சி விழாவாக நடத்துகிறார்கள், இந்த அருவெறுக்கத்தக்க பிறவிகள்.

அமைச்சர்களும் அதிகாரிகளும் தரும் வியாக்கியானங்களில் பொய்யும் முட்டாள்தனமும் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிக் கூண்டிலேற்றும் திமிர்த்தனமும் வாய்க்கொழுப்பும் வழிகின்றன. “காய்ச்சல் கண்டவுடனேயே அரசு மருத்துவமனைக்கு வராமல், சோம்பேறித்தனமாக கடைசி நேரத்தில் வருகிறார்கள். அதுதான் இறப்புக்குக் காரணம்” என்கிறார், ஆர்.கே.நகர் இலஞ்சக் குற்றவாளி விஜய பாஸ்கர்.

சேலம் மாவட்டத்தில் டெங்குவால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பாக எழுந்த விமரிசனங்களுக்கு, “அது பெரிய மாவட்டம் அல்லவா” என எகத்தளமாக பதில் அளிக்கிறார், உணவுத் துறை அமைச்சர் காமராஜ்.

டெங்குவுடன் வேறு பல நோய்த்தொற்றுகளும் இணைந்து வருவதுதான் பிரச்சினையின் தீவிரத்தை அதிகப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை, கழிவுநீர்க் கால்வாய் பராமரிப்பு இல்லை, மலைமலையாய் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற ஊழியர்கள் இல்லை – இதுதான் தமிழகமெங்கும் நாம் காணும் நிலை. ஆனால், “டெங்குவைப் பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் நன்னீரில்தான் வளரும்” என்ற ஒரு விசயத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு, பொதுச் சுகாதாரத்தை சீர்குலைத்து வரும் சுகாதாரத் துறையும் ஊராட்சித் துறையும் பொதுமக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் நோட்டீஸ் கொடுக்கின்றன. வீடு சுகாதாரமாக இல்லையென்றால், ஆறு மாதம் சிறை, ஒரு இலட்சம் அபராதம் எனப் பொதுமக்களை அச்சுறுத்துகிறது எடப்பாடி அரசு.

மதுரை மாநகராட்சியோ குப்பைகளை அகற்றுவதற்குப் பொதுமக்கள் மீது வரி விதிக்க முடிவு செய்கிறது.

ஜூன் மாத இறுதியிலேயே தமிழகத்தைத் தாக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல், அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு பத்து, பதினைந்து பேரைச் சாகடிக்கும் கொள்ளை நோயாக வீரியமடைந்திருக்கிறது. “கொசுக்களின் பெருக்கம் அதிகமாகத் தொடங்கும் ஜூலை மாதத்தில், சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை உள்பட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து கொசு ஒழிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு அப்படியான ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டங்கள் எதுவுமே நடைபெறவில்லை” என அம்பலப்படுத்தியிருக்கிறது, ஜூனியர் விகடன்.

டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த குளித்தலையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி பூஜாவின் உடலை திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட போராட்டம்

இந்த நான்கு மாதங்களில் வேறென்ன நடந்தது? எடப்பாடியோடு பன்னீரைக் கூட்டி வைக்கும் புரோக்கர் வேலை பார்த்தது பா.ஜ.க. அரசு. பா.ஜ.க.வும் எடுபிடி அரசும் இணைந்து மக்கள் போராட்டங்களை முனைப்பாக ஒடுக்கினர். தரமான மருத்துவர்களை உருவாக்கப் போகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வைத் திணித்து அனிதாவைச் சாகடித்த பா.ஜ.க., கொசு ஒழிப்பு மாநிலத்தின் வேலை என்று திமிராகப் பதில் சொல்கிறது. உள்ளாட்சித் துறைக்கு மைய நிதியிலிருந்து தர வேண்டிய 4,000 கோடி ரூபாயை தராமல் வைத்துக்கொண்டு, “உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை?” எனத் தனது அடிமையிடம் கேள்வி கேட்கிறது.

தனது அலட்சியத்தால் மக்களை அகால மரணத்திற்கு தள்ளிவரும் இந்த எடுபிடி அரசு, தன் குற்றத்தை மறைக்க, நிலவேம்புக் குடிநீர் விநியோகம், கொசு ஒழிப்புக்கு 16 கோடி ரூபாய், டெங்கு சிகிச்சையைக் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவருவது என நாடகம் நடத்துகிறது. மறுபுறம் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையையும், மரணமடைந்தோரின் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டுகிறது. மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், இறந்துபோனதாகவும் பொய்ப்பதிவுகளைத் தயாரிக்கச் சொல்கிறது.

எடப்பாடி கக்கூசுக்குப் போனால்கூட, அவருக்குப் பின்னால் ஒரு பெரும் போலீசு படை பாதுகாப்புக்காகப் போகிறது. தமிழக மக்களைத் தொற்று நோயிலிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டமைப்போ சீரழிந்து கிடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் களத்துக்குச் செல்லும் ஊழியர் பணியிடங்கள் பல வருடங்களாக காலியாக உள்ளன. 5,000 மக்கள்தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் இருந்த நிலைமை மாறி, 25 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்றாகிவிட்டது. பரவிக்கொண்டிருப்பது டெங்குவில் என்ன வகை என்ற குழப்பம் நிலவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கொசு உள்ளிட்டு நோய் பரப்பும் பூச்சியினங்களை ஆய்வு செய்யும் பூச்சியியல் துறை இதனை ஆய்வு செய்து கூறியிருக்க வேண்டும். அது பெயர்ப்பலகை அமைப்பாகச் சுருங்கிக் கிடக்கிறது.

ஒருபுறம் செயலின்மை, இன்னொருபுறமோ ஊழல்! மேடவாக்கம் அருகேயுள்ள ஒட்டியம்பாக்கம் பஞ்சாயத்தில் கடந்த நான்கு மாதங்களில் கொசு ஒழிப்புக்காக மட்டும் 43 ஆயிரம் செலவழித்திருப்பதாகக் கணக்கு எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், ஊரில் ஒருமுறைகூட கொசு மருந்து அடிக்கவில்லை என்கிறார்கள், அக்கிராம மக்கள். இப்படித் தமிழகமெங்கும் கொசு ஒழிப்பு என்ற பெயரில் எத்தனை நூறு கோடி ஊழல் நடந்திருக்கும்? கொசு ஒழிப்பு மருந்திலிருந்து காய்ச்சலுக்குக் கொடுக்கப்படும் மருந்து வரை அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் ஒரே படுக்கையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அவலம்.

அரசுக் கட்டமைப்பு இப்படியென்றால், தனியார் மருத்துவமனைகள், தீபாவளி காலத்து ஆம்னி பஸ் கொள்ளை போல இதனைப் பயன்படுத்துகிறார்கள். பரிசோதனைகள் என்ற பெயரில் பல ஆயிரங்களைக் கறக்கிறார்கள். காப்பாற்றுவது கடினம் என்ற நிலை வந்துவிட்டால், ஈவிரக்கமின்றி நோயாளிகளை அரசு மருத்துவமனைக்குத் தள்ளிவிடுகிறார்கள். கொள்ளைநோய் பரவிவரும் இந்தச் சூழலில், தனியார் மருத்துவமனை ஒவ்வொன்றும் டெங்குவுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிடவேண்டும். கொள்ளையிடும் மருத்துவமனைகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, காப்பீடு திட்டங்களின் வழியாக, அவர்களின் கல்லாபெட்டியை நிரப்பிக் கொள்ளும் ஏற்பாட்டை செய்து கொடுக்கிறது, எடப்பாடி அரசு. இந்த அயோக்கியத்தனத்தில் தங்களுக்கும் பங்குண்டு என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார், தமிழிசை.

ஒரு கொள்ளைநோயில் சிக்கி, பிஞ்சுக்குழந்தைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வரும் நிலையிலும் சுகாதாரத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட இந்த அரசின் எல்லா உறுப்புகளும் இரக்கமே இல்லாத வழிப்பறிக் கும்பலாக நடந்து கொள்வதை நாம் காண்கிறோம். இதற்கு எடப்பாடி தலைமையிலான கும்பல் தலைமை தாங்குகிறது. இந்தக் கும்பலின் ஆட்சியைப் பாதுகாத்து வருகிறது மோடி அரசு. சுகாதாரக்கேடு, அசுத்தமான குடிநீர், ஊட்டச்சத்தின்மை போன்ற காரணங்களால், பல்வேறு விதமான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகி நொந்துபோன உடல் மீது டெங்கு தாக்கியிருக்கும் நிலையை ஒத்த சூழல் இது.

செங்கோலை கன்னக்கோலாகப் பயன்படுத்தும் எடப்பாடி அரசும், அதன் பாதுகாவலனான மோடி அரசும், அருகதையே இல்லாத இந்த அரசமைப்பின் துணையுடன் மக்களைத் துயரத்தில் தள்ளி வருகின்றன. இவர்களை ஒழிப்பது எப்படி என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. சென்னை பெருவெள்ளப் பேரழிவு, வறட்சி, டாஸ்மாக், இப்போது டெங்கு.

ஏ.டி.எஸ். வகை கொசுக்களை ஒழித்தால் டெங்குவைக் ஒழித்துவிட இயலும். இவர்களுடைய அதிகாரத்தை ஒழிப்பது எப்படி என்ற கேள்விக்குத்தான் மக்கள் விடை தேடவேண்டும்.

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க