சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014 -ம் ஆண்டு டிசம்பர் 1 -ம் தேதி திருமணம் ஒன்றிற்காக நாக்பூர் சென்றிருந்த சமயத்தில் திடீரென அகால மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு மாரடைப்பே காரணமென அப்போது சொல்லப்பட்டது.

எனினும், நீதிபதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது மரணம் இயற்கையானது அல்ல என்று அப்போதே தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக நீதிபதி லோயாவின் உறவினர்களிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடமும் நீதிபதியின் மரணம் குறித்து தகவல் திரட்டிய பத்திரிகையாளர் நிரஞ்சன் டாக்லே, தான் கண்டறிந்தவைகளை கேரவன் இணையப் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
நீதிபதி லோயாவின் மரணம் உண்மையில் சந்தேகத்துக்குரியது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. தேசிய ஊடகங்கள் இது குறித்து கள்ளமௌனம் சாதித்தாலும் சமூக வலைத்தளங்களில் இது பற்றி விவாதிக்கப்படுகின்றது. முதுகெலும்பைச் சில்லிட வைக்கும் இந்த விவகாரத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், குஜராத்தில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சில சம்பவங்களில் இருந்து துவங்க வேண்டியது அவசியம்.
***
கொடூர கொலையாளிகளின் கதை இது. தினத் தந்தியின் எட்டாம் பக்கத்தில் தலைகாட்டும் “கள்ளக் காதல்” கொலை கதையை அறிந்திருப்போம். நக்கீரனிலோ ஜூனியர் விகடனிலோ தலைகாட்டும் கொலைகார ரவுடிகளை அறிந்திருப்போம். ஆனால், இங்கு நாம் பார்க்க இருப்பது வேறு வகையான கொலையாளிகள். அரசியல் பதவிகளுக்காகவும், கேள்விக்கிடமற்ற அதிகாரத்திற்காகவும் தங்களது கொலைகளுக்கு “தத்துவார்த்த” அடிப்படை ஒன்றை உருவாக்கிக் கொண்டதோடு, பெருந்திரளான மக்களை உளவியல் ரீதியில் கொலைவெறியர்களாக உருமாற்றும் வித்தை தெரிந்தவர்கள் இவர்கள் – இந்துத்துவ பாசிஸ்டுகள்.
அவன் ஒரு ரவுடி கும்பலைச் சேர்ந்தவன். அரசியல்வாதிகளின் சார்பாக தொழிலதிபர்களை, குறிப்பாக கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை மிரட்டி பணம் பறிப்பது அந்த கும்பலின் வேலை. ஒரு சந்தர்ப்பத்தில் அவனுக்கும் அவனை இயக்கிய அரசியல்வாதிக்கும் இடையே முரண்பாடு எழுகிறது – பங்கு பிரித்துக் கொள்வதில் இந்த முரண்பாடு தோன்றியிருக்க வேண்டும் என பின்னர் இதை விசாரித்த சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை சொல்கிறது. சம்பந்தப்பட்ட அரசியல்வாதி இந்த ரவுடியை ஒழித்துக் கட்ட தீர்மானிக்கிறார்.
வெறுமனே கொன்று போட்டால் அதில் ஆதாயம் ஏதுமில்லை. அதே நேரம் மாநில அரசின் அதிகாரத்தில் இவரது கட்சி இருந்தாலும் கூட, ரவுடியின் மேல் “கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல்” போன்ற குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல் – அப்படி முறையான நடவடிக்கை எடுத்தால், அவன் உண்மைகளை வெளியிட்டு அரசியல்வாதியின் தொடர்பை அம்பலப்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளது.
ரவுடியைக் கொல்வது – அதிலிருந்து அரசியல் ஆதாயம் அடைவது, என ஒரே கல்லில் இரண்டு காய்களை வீழ்த்தத் திட்டமிடுகிறார் அரசியல்வாதி. தனக்கு நெருக்கமான போலீசு அதிகாரிகளைக் கொண்டு போலி மோதல் ஒன்றை அரங்கேற்றும் அரசியல்வாதி, அதில் ரவுடியைப் போட்டுத் தள்ளுகிறார். போலீசைக் கொண்டு, கொல்லப்பட்ட ரவுடி பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு தொடர்புடையவன் என்றும், அவனால் மாநில முதல்வரின் உயிருக்கே ஆபத்து இருந்ததாகவும் கதைகள் எழுதப்படுகின்றன.
கதை இன்னும் முடியவில்லை. கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டு மேலே தொடர்வோம். கதையின் களம் குஜராத். சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் பெயர் அமித்ஷா, இன்றைய பாரதிய ஜனதா தேசியத் தலைவர்; அன்றைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர். அந்த ரவுடி, சோராபுதீன் ஷேக்.
***
“முதல்வரைக் கொல்ல லஷ்கர்-ஏ-தொய்பா (அல்லது ஜெய்ஷ், அல்லது ஐ.எஸ்.ஐ) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் திட்டம் போலீசாருக்குக் கிடைத்தது. தகவலோடு ரோந்து சென்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ________ நிறுத்தினார்கள். அவர் வண்டியை நிறுத்தாமல் போலீசாரின் மேல் துப்பாக்கி பிரயோகம் நடத்தினார். தங்கள் பாதுகாப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டதில் பயங்கரத் தீவிரவாதி ___________ இறந்து விட்டார்”
மேற்படி கதையில் கோடிட்ட இடத்தை ஏதாவது ஒரு முசுலீமின் பெயரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம். 2003 -ல் இருந்து 2006 வரையிலான காலகட்டத்தில் இதே போன்ற கிழிந்து கந்தலான கதைகளைச் சொல்லி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையாக குஜராத் அரசே அறிவித்த போலி மோதல் கொலைகள் 21.
இந்த 21 பேரில் சோராபுதீன் ஷேக்கோ, அவரோடு கொல்லப்பட்ட அவரது மனைவி கௌசரோ இவர்களோடு கொல்லப்பட்ட துள்சிராம் பிரஜாபதியோ இல்லை.

2005 -ம் ஆண்டு நவம்பர் 22 -ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலிக்கு தனது மனைவி கௌசர்பி மற்றும் நண்பர் துள்சிராம் பிரஜாபதியோடு பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார் சோராபுதீன். குஜராத் மாநில ஐ.பி.எஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியா தலைமையிலான போலீசு குழு ஒன்று பேருந்தை மறித்து அதில் பயணித்துக் கொண்டிருந்த இம்மூவரையும் கைது செய்து அழைத்துச் செல்கிறது. சட்டரீதியான நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாத இந்த “கைது” நடவடிக்கையை கடத்தல் என்று சொல்வதே சரியானது.
நவம்பர் 26 -ம் தேதி தனது கணவரிடமிருந்து பிரிக்கப்படும் கௌசர்பி, தனியே ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்படுகிறார். பின்னர் துள்சிராம் பிரஜாபதி ராஜஸ்தான் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறார். அதே நாள் சோராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
அடுத்த சில நாட்கள் பயங்கரமான தீவிரவாதியைக் கொன்ற குஜராத் காவல்துறையின் வீரதீரச் செயல் குறித்து தேசிய ஊடகங்களில் பாராட்டுப் பத்திரங்கள் வெளியாகத் துவங்கின. பின்னர் (25.8.2010 -ல்) இது பற்றி விசாரித்த சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்த வாக்குமூலத்தின்படி அர்ஹாம் எனும் பண்ணை வீட்டில் கௌசர்பி அடைத்து வைக்கப்பட்டார்.
அவருக்கு சௌபே எனும் சூபிரெண்டு பாதுகாப்பாக நியமிக்கப்பட்டார். 26 -ம் தேதியில் இருந்து 28 -ம் தேதி வரை சௌபே, கௌசர்பியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினார். பின்னர் 29 -ம் தேதி மதியம் (சோராபுதீன் கொல்லப்பட்ட அதே நாளில்) கௌசர்பியை ஷாஹிபாகில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றார் சௌபே. அங்கே டி.ஜி வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர் கௌசர்பியுடன் சோராபுதீன் கொல்லப்பட்டார் என்பதைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வாயைத் திறந்தால் கௌசர்பியும் கொல்லப்படுவார் என மிரட்டியுள்ளனர். கணவன் கொல்லப்பட்டதைக் கேட்டு அந்த பெண் அழுது புரண்டுள்ளார். கௌசர்பியை வெளியே விட்டால் தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவார் என போலீசார் அஞ்சியுள்ளனர். டாக்டரும், ஐபிஎஸ் அதிகாரியுமான நரேந்திர அமீன் (துணைக் கண்காணிப்பாளர்) வரவழைக்கப்பட்டு கௌசர்பியின் உடலில் மயக்க ஊசி போட்டுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த கௌசர்பி கொல்லப்பட்டு அவரது உடல் உருத்தெரியாமல் எரிக்கப்பட்டுள்ளது. இன்று வரை கௌசர்பியின் உடல் கிடைக்கவே இல்லை.
இதற்கிடையே ராஜஸ்தான் போலீசின் பிடியில் இருந்த பிரஜாபதிக்கு சோராபுதீன் மற்றும் கௌசர்பியின் நிலை தெரியவருகிறது. தனது உயிருக்கும் உத்திரவாதமில்லை என அவர் பதறியுள்ளார். தேசிய மனித உரிமைக் கமிசனுக்கு கடிதம் மேல் கடிதமாக எழுதித் தன்னைக் காப்பாற்றுமாறு இறைஞ்சியுள்ளார். தன்னை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என எதிர்பார்த்து தனது உறவினர்களிடம் தன்னை அழைத்துச் செல்லும் ரயிலில் யாராவது பயணிக்குமாறு கேட்டுள்ளார்.

எனினும், 2006 -ம் ஆண்டு டிசம்பர் 26 -ம் தேதி விசாரணைக்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு அழைத்து வரும் போது அவரைக் கொன்று விட திட்டம் தீட்டுகின்றனர் குஜராத் போலீசார். விசாரணை முடிந்து டிசம்பர் 28 -ம் தேதி உதய்பூருக்குக் கிளம்பிய பிரஜாபதியை கடத்தும் டி.ஜி வன்சாரா தலைமையிலான குஜராத் போலீசார், அதே நாளில் குஜராத்-ராஜஸ்தான் எல்லையருகே வைத்து சுட்டுக் கொல்கின்றனர். தப்பிச் செல்லும் போது பிரஜாபதி தாக்கியதாகவும், தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதில் அவர் இறந்து விட்டார் எனவும் ஒரு கதையைத் தயாரிக்கின்றனர் குஜராத் போலீசார்.
பிரஜாபதி கொல்லப்பட்ட சமயம் மிக முக்கியமானது. சோராபுதீன் – கௌசர்பி கொலைகளுக்கான சிபிஐ விசாரணை அப்போது தீவிரமடைந்திருந்தது. சிபிஐ அதிகாரி வி.எல் சோலங்கி, சோராபுதீன் – கௌசர்பி கடத்தலை நேரில் கண்ட சாட்சியான பிரஜாபதியை விசாரிக்க அனுமதி பெற்றிருந்தார். பிரஜாபதி கொல்லப்பட்டதற்கு மறுநாள் அவரைச் சந்திக்கும் திட்டத்தோடு இருந்தார் சோலங்கி.
அன்றைக்கு குஜராத் போலீசு அதிகாரி ஜி.சி ராய்கர் என்பவர் அளித்த வாக்குமூலம் மிக முக்கியமானது. குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, போலீசு டைரக்டர் ஜெனரலை அழைத்து பிரஜாபதி விசயத்தை உடனே முடிக்க வேண்டும் என சொன்னதாகவும், சோலங்கியை சரிக்கட்ட உங்களுக்கெல்லாம் துப்பில்லையா என ஆத்திரத்தோடு ஏசியதாக தனது வாக்குமூலத்தில் ராய்கர் குறிப்பிடுகிறார்.
பின்னர் 2007 -ம் ஆண்டு மார்ச் மாதம் இவ்வழக்கின் விசாரணை டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரஜ்னீஷ் ராய் என்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ரஜ்னீஷ் ராய் கொலைக் குற்றங்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட ராஜ்குமார் பாண்டியனின் நெருங்கிய நண்பர். மேலும், டி.ஜி வன்சாரா போன்ற பெரிய அதிகாரிகளிடம் அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு வழக்கை மொத்தமாக ஊத்தி மூட துணை நிற்பார் எனும் நம்பிக்கையில் தான் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ரஜ்னீஷ் ராயிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், ரஜ்னீஷ் ராய் நியாயமாகச் செயல்பட்டார்; முக்கியமாக, அவ்வாறு செயல்பட்டதற்காக அவர் கொல்லப்படவில்லை. இதற்கு அப்போது மத்தியில் காங்கிரசு அரசு இருந்தது என்பதும் கூட ஒரு காரணமாக இருந்திருக்க கூடும். தனது விசாரணை அறிக்கையில் சோராபுதீன், கௌசர்பி, பிரஜாபதி ஆகியோரின் கொலைகளுக்கு அன்றைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவருக்கு நெருக்கமான போலீசு அதிகாரிகளுமே காரணம் என்பதைத் தெளிவாக நிறுவினார்.
பின்னர் 2010 ஜனவரி மாதம் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதே ஆண்டு ஏப்ரல் மாதம், குஜராத் போலீசு அதிகாரி அபய் சுதாசாமா, அமித்ஷா மற்றும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவருமான குலாப்சந்த் கட்டாரியா ஆகியோர், சோராபுதீனுடன் சேர்ந்து தொழிலதிபர்களைக் கடத்திய குற்றங்களிலும் மற்றும் பணயத் தொகை வசூலிப்பதிலும் கூட்டாளிகளாகச் செயல்பட்டனர் என்று சிபிஐ குற்றம் சாட்டியது.
இதற்கு ஆதாரமாக இம்மூவருக்குள் நடந்த 331 தொலைபேசி உரையாடல்களை சிபிஐ முன்வைத்தது. கடத்தல்களில் அமித்ஷாவின் கூட்டாளியாக செயல்பட்ட சோராபுதீன் கட்டுப்படுத்த முடியாதவராக மாறியதாலேயே அவரைக் கொல்லும் முடிவை அமித்ஷா எடுத்ததாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை ஒரே நீதிபதி இறுதிவரை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென உத்தரவிட்டதன் பேரில், வழக்கு விசாரணை சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே 2014 பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது.
***
கடந்த 2014 -ம் ஆண்டு நவம்பர் 30 -ம் தேதி இரவு 11:00 மணி அளவில் தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்த நீதிபதி லோயா, சுமார் 40 நிமிடங்கள் பேசியுள்ளார். அது தான் தனது நெருங்கிய உறவினர்களோடான அவரது கடைசி பேச்சு. அப்போது அவர் நீதிபதி ஒருவரின் இல்லத் திருமணத்திற்காக நாக்பூர் சென்றிருந்தார். சொல்லப் போனால் முதலில் அந்த திருமணத்திற்கு செல்ல வேண்டாம் என்றே அவர் முடிவு செய்திருந்தார். எனினும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.
மறுநாள், அதிகாலை லோயாவின் உறவினர்களுக்கு அவர் இறந்து விட்ட தகவல் சொல்லப்பட்டுள்ளது. லோயாவின் மனைவி மும்பையிலும், சகோதரி லாத்தூரிலும், சகோதரியின் மகள்கள் தூலே, ஜல்காவ்ன் மற்றும் அவுரங்காபாத் நகரங்களிலும் இருந்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து தகவல் சொல்லப்பட்டுள்ளது. தன்னை நீதிபதி பார்டே என அறிமுகப்படுத்திக் கொண்ட தொலைபேசிக் குரல் ஒன்று நீதிபதி லோயாவின் மரணம் குறித்த தகவலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளது.
பிரேதப் பரிசோதனை முடிந்த லோயாவின் உடலை லாத்தூர் நகரில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது பூர்வீகமான கேட்காவ்ன் எனும் இடத்துக்கு அனுப்பப்பட்டதாக குடும்பத்தாருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. வழக்கமாக கேட்காவ்னில் தங்கும் லோயாவின் தந்தை, அன்றைய தினம் தனது மகள் வசிக்கும் லாத்தூரில் இருந்துள்ளார். தன்னை ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என அறிமுகம் செய்து கொள்ளும் ஈஸ்வர் பஹேட்டி என்பவர் நீதிபதி லோயாவின் தந்தையை நேரில் சந்தித்து தான் லோயாவின் உடலை கேட்காவ்னுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
லாத்தூரில் வசித்து வரும் லோயாவின் சகோதரிகளில் ஒருவரான சரிதா மந்தனேவுக்கு டிசம்பர் 1 -ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு தொலைபேசியில் தகவல் சொல்லப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மருமகனை அழைத்துக் கொண்டு நாக்பூர் செல்ல உத்தேசித்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவமனையில் வைத்தே சரிதாவைச் சந்திக்கும் ஈஸ்வர் பஹேட்டி, உடல் கேட்காவ்னுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தகவல் அளித்துள்ளார்.
டிசம்பர் 1 -ம் தேதி இரவு 11:30 மணிக்கு நீதிபதி லோயாவின் உடல் கேட்காவ்னில் கூடியிருந்த குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. உடலைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முதலில், பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்ட உடலின் மேல் பொதுவாக மருத்துவமனையின் கவுனையோ அல்லது வெள்ளைத் துணியைக் கொண்டோ சுற்றியிருப்பார்கள். ஆனால், லோயாவின் உடலில் அவரது உடையே போடப்பட்டிருந்தது. மேலும், கழுத்தருகேயும் தலையின் பின்புறத்திலும் உடைகளிலும் இரத்தக்கறை படிந்திருப்பதை உறவினர்கள் பார்த்துள்ளனர்.
அடுத்து, நாக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனையில், ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் கையெழுத்திட்டு உடலை வாங்கியிருக்கிறார். அப்படி ஒரு சொந்தமே தங்களுக்கு நாக்பூரில் இல்லை என்கிறார்கள் அவரது உறவினர்கள். மேலும், நீதிபதி லோயாவின் செல்போனை மூன்று நான்கு நாட்கள் கழித்து ஈஸ்வர் பஹேட்டி அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளார். அப்படி கொடுக்கப்பட்ட செல்பேசியில் இருந்த எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட தரவுகள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்டிருந்துள்ளது.
நீதிபதி லோயாவின் மரணத்தைத் தொடர்ந்த நிகழ்வுகள் ஏராளமான கேள்விகளை எழுப்புகின்றன.
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் லோயாவை ஆட்டோ ரிக்சா ஒன்றில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக உடனிருந்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர் நிரஞ்சன் டாக்லே அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்த போது அவர் தங்கியிருந்த அரசு விடுதியின் இருபுறமும் சில கிலோமீட்டர்களுக்கு ஆட்டோ ஸ்டேண்ட் ஏதும் இல்லை. அவசர காலத்தில் ஆம்புலன்சை அழைக்காமல் ஏன் ஆட்டோவைத் தேடி அலைய வேண்டும்?
மாரடைப்பு ஏற்பட்டவுடன் குடும்பத்தாருக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? அவர் மருத்துவமனையில் அபாய கட்டத்தில் இருந்த போதும் கூட தகவல் சொல்லப்படாதது ஏன்? பொதுவாக சந்தேகத்துக்குரிய மரணங்களின் போது தான் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் – லோயாவின் மரணம் இயற்கையானதாக, மாரடைப்பினால் ஏற்பட்டதாக இருந்தால் ஏன் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது?
பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி அதிகாலை 4:00 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு 6:15 -க்கு மரணம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தாருக்கு ஐந்து மணிக்கே இறந்து விட்டதாக தகவல் சொல்லப்பட்டது எப்படி? பத்திரிகையாளர் நிரஞ்சன் டாக்லே, பிரேதப்பரிசோதனை நடந்த அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் பேசிய போது அவர்கள், நள்ளிரவே நீதிபதி இறந்து விட்டாரென தன்னிடம் குறிப்பிட்டதாக எழுதியிருக்கிறார். உண்மையில் லோயா இறந்த நேரம் தான் என்ன?
இந்தக் கதையில் தலைகாட்டும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் ஈஸ்வர் பஹேட்டிக்கு நீதிபதியின் குடும்ப நண்பர் அல்ல; அப்படியிருக்க அவருக்கு ஏன் இத்தனை அக்கறை? தனது மருமகன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு அதிகாலை சென்ற நீதிபதியின் சகோதரியை மருத்துவமனையிலேயே வைத்து சந்தித்திருக்கிறார் பஹேட்டி. அவர் அங்கே தான் செல்கிறார் என்பது இவருக்கு எப்படித் தெரியும். இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்படும் பொருட்கள் பிரேதப்பரிசோதனை முடிந்த பின் அவரது உடலுடன் சேர்த்து கொடுக்கப்பட்டு விடும் – அல்லது போலீசார் கையளிப்பார்கள். ஆனால், மூன்று நாட்கள் கழித்து ஈஸ்வர் பஹேட்டி தான் செல்பேசியை கொடுத்துள்ளார்.
அடுத்து மரணத்துக்குக் காரணம் Coronary artery insufficiency என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவரும், நீதிபதியின் சகோதரிகளில் ஒருவருமான பியானி, அறிக்கையில் மரணத்திற்கு காரணமாக குறிப்பிடப்படும் சிக்கல் பொதுவாக இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு, அதிக உடற்பருமன், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இருக்கிறவர்களுக்கே வரும் என்றும், தனது சகோதரனுக்கு அம்மாதிரியான உடற்கோளாறுகள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கிறார். மேலும், தனது சகோதரனுக்கு புகை, குடி போன்ற எந்த பழக்கங்களும் இல்லை என்றும், பல வருடங்களாக தொடர்ந்து தினசரி இரண்டு மணி நேரமாவது டேபிள் டென்னிஸ் விளையாடும் பழக்கமுள்ளவர் என்றும் குறிப்பிடுகிறார்.
லோயாவின் மரணத்திற்கு பின் எழும் கேள்விகளின் பட்டியல் மிக நீண்டது. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், நாம் அவரது மரணத்துக்கு முன் நடந்த சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
(தொடரும்)
செய்தி ஆதாரம் :
- A Family Breaks Its Silence: Shocking Details Emerge In Death Of Judge Presiding Over Sohrabuddin Trial
- Chief Justice Mohit Shah Made An Offer Of Rs 100 Crore To My Brother For A Favourable Judgment In The Sohrabuddin Case: Late Judge Loya’s Sister
- Who killed Sohrabuddin? Debate around judge’s death puts focus back on murders by Gujarat police
- CBI judge BH Loya’s death in 2014: Nothing suspicious, say two Bombay HC judges who were at hospital