privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்உத்திரப் பிரதேசம் : மரணிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் !

உத்திரப் பிரதேசம் : மரணிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் !

-

சுமன் தேவி படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றார். ஆனால் சரிந்து விழுந்துவிட்டார். அவரது மருமகள்கள் வேலைகளில் முழுமூச்சாக இருக்க அவரது குழந்தைகளோ விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் ஒரு மூங்கில் கழியை பற்றிக்கொண்டு தடுமாறி மெதுவாக எழுந்து நின்றார். எட்டுக் குழந்தைகளுக்கு தாயாகவும் மற்றும் ஒரு பாட்டியாகவும் இருக்கும் 38 வயதே நிரம்பிய அவர் 11 -வது முறையாக கருவுற்றிருக்கிறார்.

சுமன் தேவி

உஷா தேவி, ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர் (Accredited Social Health Activist – ASHA). சுமன் தேவி வசிக்கும் உத்திரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த சலர்பூர் கிராமத்தில் ஒரு ஆஷாவாக(ASHA) அவர் பணி புரிகிறார். இந்தியாவின் சுகாதார அமைப்பைப் பொறுத்தவரையில், கருவுற்றப் பெண்களின் உடல்நலத்தை கவனிப்பது, அவர்களுக்கு அரசு அளிக்கும் விலையில்லாப் பொருட்களையும் மருந்துகளையும் கொடுப்பது, அருகாமை மருத்துவமனையில் நான்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதை உறுதி செய்வது மற்றும் அங்கு மகப்பேறுக்காக அழைத்து செல்வது ஆகியவை ஒரு ஆஷா ஊழியரின் பணிகளாக இருக்கிறது.

சுமன் தேவி கருவுற்றிருப்பது உஷா தேவிக்கு தெரியாது. கருவுற்றப் பெண்களின் பெயர்கள் இருக்கும் பதிவேட்டைத் தவறான இடத்தில் வைத்துவிட்டதாக அவர் கூறினார். “அவர் கருவுற்றதை அறிந்திருந்தால் இரும்புச் சத்து (இரும்பு ஃபோலிக் அமில) மாத்திரைகளை அவருக்கு அளித்திருப்பேன்” என்கிறார்.

கர்ப்ப கால இரத்த சோகை (maternal anaemia), எடைக்குறைவாக குழந்தை பிறத்தல் மற்றும் குறை பிரசவம் ஆகியவற்றை தடுப்பதற்காக கருவுற்றப் பெண்களுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

சுமன் தேவியும் தன் பங்கிற்கு ஆஷா ஊழியரை சந்திக்கவில்லை. அவர் கருவுற்ற அனைத்து காலத்திலும் கூடுதலாக (மருத்துக்கள் உள்ளிட்ட) எதையும் எடுத்துக் கொள்ளவில்லை, மருத்துவர் எவரையும் அவர் பார்க்கவில்லை அல்லது சிசுவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனை செய்து பார்க்கவுமில்லை. சலர்பூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் தான் மருத்துவமனை உள்ளது. கருவுற்றப் பெண்களை மருத்துமனைக்கு அழைத்து சென்று மகப்பேறு முடிந்ததும் குழந்தையுடன் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்துவிடும் உத்திரப்பிரதேச அரசின் மருத்துவ ஊர்தி சேவையை அவர் அறிந்திருக்கவில்லை. மேலும் மருத்துவ ஊர்தி சேவையைப் பெறுவதற்கு கைப்பேசியும் அவரிடம் இல்லை.

இப்படியான மருத்துவ வசதிகள் இருப்பது பொதுவாக உத்திரப்பிரதேசத்தின் தெராய் பகுதி பெண்களுக்கு தெரியாமல் இருக்கிறது. பெண்களின் பேறுகால மரணங்கள் மற்றும் குழந்தை மரணங்களின் எண்ணிக்கை தெராய் பகுதியில் இருக்கும் பஹ்ரைச் மற்றும் பல்ராம்பூர் மாவட்டங்களைப் போல இந்தியாவில் வேறெங்கிலும் பார்க்க முடியாது. பேறுகாலத்தில் சராசரியாக ஒரு இலட்சம் குழந்தைகள் பிறப்பிற்கு 167 பெண்கள் மரணிக்கிறார்கள். ஆனால் ஆண்டு சுகாதார ஆய்வு 2012 – 13 -ன் படி தேவி பதான் பகுதியிலோ பேறுகால மரணங்கள் இலட்சத்திற்கு 366 ஆக இருக்கிறது.

தேசிய குடும்ப நல ஆய்வு 2015 – 16 -ன் படி பிறந்து ஒரு ஆண்டிற்குள் இந்திய அளவில் சராசரியாக ஆயிரத்துக்கு 41 குழந்தைகள் இறக்கின்றன. உத்திரப்பிரதேசத்தில் தான் நாட்டிலேயே மிக அதிகமாக குழந்தைகள் இறக்கின்றன. அதாவது ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 64 குழந்தைகள் இறக்கின்றன.

குழந்தைகளின் இறப்பும் ஈன்ற தாயின் இறப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது:

பன்முறை கருத்தரித்த ஊட்டச்சத்து குறைபாடுடைய தாய் ஊட்டச்சத்து குறைபாடுடைய மகவையே ஈன்றெடுப்பார். இது தாயையும் மகவையும் சேர்த்தே பாதிக்கிறது.

பஹ்ரைச் மற்றும் பல்ராம்பூர் மாவட்டங்கள் தான் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவிலேயே கீழ்மட்டத்தில் இருக்கும் மாவட்டங்கள். இது மென்மேலும் அப்பகுதிகளின் தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.

கோரக்பூரில் அமைந்துள்ள மிகப்பெரிய மருத்துமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 2017, ஆகஸ்டு மாதத்தின் இரண்டே நாட்களில் 30 குழந்தைகள் மடிந்தன – இது போன்று எதாவது கடுமையாக நடந்தாலொழிய இந்த நெருக்கடி நிலை வெளியே தெரியாது. கவனக்குறைவு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மருத்துமனைகளின் மோசமான நிலையில் அல்ல மாறாக அடிப்படை மருத்துவ வசதிகள் கிராமங்களில் இல்லாததில் தான் இருக்கிறது உண்மையான பிரச்சினை.

மாதிரிப்படம்

குழந்தை இறப்புகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் ஏன் தோல்வி அடைகின்றன என்பதற்கு கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் தெராய் பகுதியிலிருந்து வரும் இந்த தொடர் அறிக்கைகள் ஒரு நெருக்கமான தோற்றத்தை தருகின்றன. முறையான சுகாதார அமைப்பிற்குள் கருவுற்றப் பெண்களை கொண்டு வர கையாலாகாத அரசாங்கத்திடம் இருந்து தான் இந்த தோல்வி தொடங்குகிறது.

குழந்தை பிறப்பு மற்றும் இறப்புகள்:

பஹ்ரைச்சின் மாவட்ட அரசு மருத்துவமனையில் 2017, அக்டோபர் மாதத்தில் 49 குழந்தைகள் மடிந்தன. பெரும்பாலான பெண்கள் வீடுகளிலேயே குழந்தைகளை பெறுகிறார்கள். முடிவில் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் குறைபாட்டு பிரச்சினையான ஆஸ்பிக்சியாவினால்(Aphyxia) குறிப்பாக மகப்பேறு சமயத்தில் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துவரும் நேரத்திற்குள் பாதி போராட்டம் முடிந்து விடுகிறது என்று குழந்தைகள் மருத்துவரான கே.கே.வர்மா கூறினார்.

சுமன் தேவியின் குழந்தைகள் அனைத்தும் வீட்டிலேயே பிறந்திருந்தன மேலும் அதில் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உடனடியாக இறந்து விட்டன. குழந்தைகளின் இறப்பிற்கான எந்த பதிவுகளும் கிடையாது மேலும் அவை எப்படி மடிந்தன என்று யாருக்கும் தெரியாது. “வீட்டில் குழந்தைகள் ஒருவேளை இறந்து விட்டால் குடும்பத்தார் வெறுமனே இறுதிச்சடங்கை செய்கிறார்கள்” என்கிறார் ஆஷா ஊழியர் உஷா தேவி. மகப்பேறின் போது பெண்கள் பலரும் குழந்தைகளும் இறக்கிறார்கள் ஆனால் அனைத்தையுமே நாங்கள் தெரிவிக்க முடியாது. ஏனெனில், மிகவும் தாமதமாக தான் சில நேரங்களில் எங்களுக்கு இது தெரிய வருகிறது.

தேசிய குடும்ப நல ஆய்வின் படி பொது நல மருத்துவமனைகளுக்கு செல்லாத 70 விழுக்காடு பெண்கள் பேறுகால பராமரிப்பை (பேறுகால உடல்நல கவனிப்புகள்) பெறுவதில்லை. பஹ்ரைச்சில் வெறும் 4 விழுக்காட்டு பெண்கள் மட்டுமே பேறுகால பராமரிப்பை பெறுகிறார்கள்.

ஒரே ஆஷா ஊழியர், பல்வேறு பணிச்சுமைகள்!

பல்வேறு வகையான சேவைகளுக்கு ஒரேயொரு ஊழியரை அதீதமாக சார்ந்து இருப்பது இந்திய சுகாதார துறையின் ஒரு பெரிய பலவீனமாகும். கருவுற்றப் பெண்களைப் பதிவு செய்வது, மருத்துவமனையில் மகப்பேறை உறுதிச்செய்தல், பிறந்த குழந்தைகளின் உடல்நலத்தை கண்காணித்தல், ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளை பகிர்தல் உள்ளிட்ட பணிகளை உஷா தேவி போன்ற ஆஷா ஊழியர்கள் செய்கிறார்கள். மேலும் அங்கன்வாடி ஊழியர்களும் துணை மருத்துவ தாதிகளும்(Auxiliary Nurse Midwives) ஊட்டச்சத்து திட்டங்களுக்காக, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவதற்கும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கும் இவர்கள் உதவி செய்கின்றனர்.

“வெளிநாடுகளில், குறிப்பிட்ட சேவைகளை அளிப்பதற்கு துறைசார் திறமை கொண்ட ஊழியர்கள் இருக்கிறார்கள்” என்று லக்னோவில் உள்ள டாக்டர் இராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மூத்த மகளிர் மருத்துவரான யசோதரா பிரதீப் கூறினார். “இந்தியாவில், அனைத்து உடல்நல குறிப்புகள், கருத்தடை, தாய்ப்பால் கொடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நோய்த்தடுப்பு குறித்த அனைத்தையும் ஆஷா ஊழியர் ஒருவரே விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று மேலும் கூறினார்.

தன்னுடைய ஆற்றலையும் நேரத்தையும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில் மட்டும் செலுத்த முடியாத ஒரு ஆஷா ஊழியரால் பொது சுகாதார செய்திகளை அவர் வேலை பார்க்கும் சமூகம் முழுக்க திறம்பட கூற முடியாது என்று பிரதீப் வாதிடுகிறார்.

ஆஷா ஊழியர்களுக்கான பொறுப்புகள் பலவாக இருப்பினும் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் என்னவோ சொற்பம் தான். குறைவான ஊதியம் மற்றும் ஊதியம் தாமதமாதலை எதிர்த்து 2017, மே மதம் ஆஷா ஊழியர்கள் உத்திரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தினார்கள். சில மாநிலங்கள் ஆஷா ஊழியர்களுக்கு ஓரளவிற்கு ஊதியம் கொடுக்கின்றன. ஆனால் செய்யும் சேவைகள் மற்றும் கையாளும் நபர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான ஊக்கத்தொகையை ஊதியமாக கொடுக்கும் மாநிலங்களில் உத்திரப்பிரதேசமும் ஒன்று.

சான்றாக, கருவுற்றப் பெண்களுக்கு அனைத்து டெட்டானஸ் தடுப்பூசி மற்றும் போலிக் அமில மாத்திரைகள் கிடைப்பதையும், நான்கு பேறுகால உடல்நல பரிசோதனைகளை எடுப்பதையும் மற்றும் மருத்துவமனையில் குழந்தை பிறப்பையும் உறுதி செய்தால் தான் ஒரு ஆஷா ஊழியருக்கு 600 ரூபாய் கிடைக்கும். மறுபுறம் குடும்பக்கட்டுப்பாட்டிற்கு ஒரு ஆணை சம்மதிக்க வைத்தால் 400 ரூபாயும் ஒரு பெண்ணை சம்மதிக்க வைத்தால் 300 ரூபாயும் ஊக்கத்தொகையாக கிடைக்கும்.

“ஊக்கத்தொகை அடிப்படையிலான இந்த அணுகுமுறை காரணமாக அவர்கள் அதிகபட்ச பணத்தை பெறும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறார்கள்” என்று பிரதீப் கூறினார்.

மேலும் ஆஷா ஊழியர்களின் வெளிப்படையான பலன்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது மாறாக அவர்களின் முயற்சிக்கு அல்ல. “சில நேரங்களில் தடுப்பூசி போடுவதற்கும் மகப்பேறுக்காக மருத்துவமனை செல்வதற்கும் தாய்மார்களை(அல்லது கருவுற்றப் பெண்களை) சம்மதிக்க வைக்க நாங்கள் கடுமையாக முயன்றாலும் அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். அதனால் எங்களது முயற்சிகளுக்கு எவ்வித ஊதியமும் கிடைப்பதில்லை” என்று கூறினார் உஷா தேவி. அதனால் பல ஆஷா ஊழியர்கள் அதிகபடியான வேலைகள் எதுவும் செய்வதில்லை என்று மேலும் கூறினார்.

உஷா தேவி மாதமொன்றிற்கு சராசரியாக 500 ரூபாய் சம்பாதிக்கிறார். சில மாதங்களில் அதுவும் இல்லை.

பரிசோதனைகளுக்காகவோ அல்லது மகப்பேறுக்காகவோ மருத்துவமனைக்கு செல்ல பெண்களை சம்மதிக்க வைப்பதும் சில நேரங்களில் நடப்பதுண்டு. அனால் சுகாதார அமைப்பானது இருவரையும் ஏமாற்றி விடுகிறது. சான்றாக விலையில்லா மருத்துவ ஊர்தி சேவை அடிக்கடி வேலை செய்வதில்லை.

உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களுக்கு கருவுற்றப் பெண்களையும் பிறந்த குழந்தைகளையும் ஏற்றி செல்ல 2,270 மருத்துவ ஊர்திகள் உள்ளன. இந்த சேவையைப் பெற விரும்பும் பெண்கள் அவசர எண் 102 -யை தொடர்பு கொள்ள வேண்டும். பிற அனைத்து மருத்துவ நெருக்கடிகளுக்கும் மருத்துவ ஊர்தி அவசர எண் 108 -யை தொடர்பு கொள்ள வேண்டும். அவசர எண் 108 -ன் கீழ் 1,488 மருத்துவ ஊர்திகள் செயல்படுகின்றன. “அவசர எண் 108 -யை கருவுற்றப் பெண்கள் அழைத்தால் போதும் மருத்துவமனைக்கு அவர்கள் எடுத்துச் செல்லப்படுவார்கள்” என்று உத்தரபிரதேச மருத்துவ ஊர்தி சேவையின் பொறுப்பாளரான மருத்துவர் பி.கே. ஸ்ரீவஸ்தவ் கூறினார்.

மிக அதிகமான அழைப்புக்களாலோ அல்லது அலைப்பேசி சமிக்ஞை எதுவும் கிடைக்கவில்லை என்பதாலோ மருத்துவ ஊர்திகள் சில நேரங்களில் கிடைக்காது என்று ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

பெரும்பாலான உத்திரப்பிரதேச பெண்களுக்கு அவசர எண் பற்றி தெரியும் என்று வாதிட்டார் ஸ்ரீவாஸ்தவா. ஆனால் ஸ்க்ரோல் இணையதளம் நடத்திய கள ஆய்வின் படி பெரும்பாலான பெண்களுக்கு அப்படி ஒரு வசதி இருப்பது பற்றி தெரியாது.

மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல மருத்துவ ஊர்தி சேவை கிடைத்தாலும் ஊழல் மற்றும் பிற சவால்களால் வீட்டில் மகப்பேறு பார்ப்பதையே ஸ்க்ரோல் சந்தித்த பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். “மருத்துவமனைக்கு நான் சென்ற போது 200 ரூபாய் கொடுத்தால் தான் சிகிச்சை பார்ப்பேன் என்று ஒரு செவிலியர் கூறியதாக” நகினா கூறினார். குழந்தைக்கு உடை வாங்க வைத்திருந்த பணத்தில் இருந்து செவிலியருக்கு தன்னுடைய கணவர் பர்கத் அலி பணம் கொடுத்ததாக மேலும் கூறினார்.

நகினா

மருத்துவமனை அதிகாரிகள் இந்த ஊழலை அறிந்திருக்கிறார்கள். ஆனால் அதை எதிர்ப்பதில் கையறு நிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். “யாராவது புகார் செய்தாலும் மருத்துவமனை ஊழியர்கள் பணத்தை வாங்கியதற்கும் கேட்டதற்கும் சான்றுகள் இல்லை” என்கிறார் பால்ரம்பூரின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கன்சன்யாம் சிங். “ஒருவேளை நான் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்தால் என்னுடைய தலைவலி இன்னும் அதிகரிக்கும். ஏனெனில் இங்கே ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே இப்போது எங்களால் வழங்கப்படும் சிறு அளவிலான சேவையும் கூட இதனால் நிறுத்தப்படும்” என்று மேலும் கூறினார்.

அரசு மற்றும் சுகாதார அமைப்பை இந்த சமூகம் நம்பவில்லை என்பதை ஸ்ரீவாஸ்தவா ஒப்புக்கொண்டார். இது ஆஷா ஊழியர்கள் தங்களது வேலைகளை நிறைவேற்றுவதை கடினமாக்குகிறது. சான்றாக, சப்ருன் பேகம் கருவுற்றிருக்கும் காலத்தில் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்லவில்லை. மேலும் இரும்பு ஃபோலிக் அமில மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை. “சர்கார் கி டாவை சே அஸர் நஹி பாடா,” என்று அவர் கூறினார். (அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மருந்துகளால் எந்த பயனும் இல்லை.)

ஆஷா ஊழியர்கள் ஒரு பெரிய சமூகத்திற்கும் சேவை செய்ய வேண்டியிருப்பதால் தனிநபர்களிடம் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே இது சமூகத்திடம் அவநம்பிக்கையை மேலும் வளர்க்கிறது. ஒவ்வொரு சுகாதார ஊழியரும் 1000 பேர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான ஆஷாக்கள் அதை விட அதிகமான மக்களை கவனிக்கின்றனர். சான்றாக, உஷா தேவி 1,400 பேர்களை கவனித்துக் வருகிறார்.

ஆஷா ஊழியரின் மதமோ சாதியோ சில நேரங்களில் சவாலாக இருக்கிறது என்று உஷா தேவியின் மேற்பார்வையாளரான பூசாம் சர்மா கூறினார். “முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் இந்து ஆஷா ஊழியர் ஒருவர் சென்று அவர்களை சம்மதிக்க வைப்பது சவாலானது” என்று அவர் மேலும் கூறினார்.

கைவிடப்பட்டு விட்டனரா?

சுமன் தேவி போன்ற கருவுற்றப் பெண்களுக்கு சுகாதார பராமரிப்பு முறையின் சுமூகமான செயல்பாடு என்பது வாழ்விற்கும் சாவிற்கும் இடையேயான வேறுபாடு ஆகும். தன்னுடைய 11-வது கருவை சுமந்திருக்கும் நிலையில் சுமன் தேவி பிழைக்காமலும் போகலாம். “அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார்” என்று அந்த ஆஷா ஊழியர் கூறினார். “லக்டா நஹின் கே ஈ பர் பேஷ்கி” (ஏன் என்று எனக்கு தெரியவில்லை). என்று மேலும் கூறினார்.

மருத்துவ ஊர்தி சேவை, அருகமை அல்ட்ராசவுண்ட் சோதனை வசதி மற்றும் மருத்துவமனை மருத்துவர் – இவற்றை நம்பி தான் மகப்பேறுக்காக செல்லும் போது சுமன் தேவியின் உயிர் இருக்கிறது. ஆனால் இவற்றில் எதிலுமே உறுதி கிடையாது. (ஏனெனில்) முரண்பாடுகள் அனைத்தும் தெளிவாக அவருக்கு எதிராகவே உள்ளது.

– தமிழாக்கம் : சுந்தரம்

மூலக் கட்டுரை :

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க